உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி - ஜப்பான், இந்தியா இணக்கம்

இந்தோ - பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மூலோபாய நடவடிக்கையெனவும் விபரிப்பு
பதிப்பு: 2019 மே 22 10:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 22 14:18
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#China
#India
#Japan
#Srilanka
#Colombofort
#Easterattacklka
#MinistryofForeignAffairs
#lka
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலையிலும், கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன் கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. இதற்கான பேச்சுக்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு இந்தியா கோரியிருந்தது.
 
ஆனால் இந்தியாவுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம் பிராந்தியத்தில் சீனா செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது. இதனால் ஜப்பான் இந்தோ - பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய அரசின் உதவியுடன் திட்டங்களை வகுத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளார்

இதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கையுடன் சேர்ந்து கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன.

இதற்கு அமெரிக்காவும் விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் சென்ற ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்த அபிவிருத்திக்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில் கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன்களைக் கையாளும் திறன்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ஜப்பான் செய்தித் தளம் ஒன்று கூறுகின்றது.

அத்தோடு தெற்காசியாவைச் சுற்றிக் கடல்போக்குவரத்தை மேலும் அதிகரிப்பது மற்றுமொரு நோக்கமெனவும் அந்த செய்தித் தளம் கூறுகின்றது.

அதேவேளை, பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம் பிராந்தியத்தில் சீனா செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது. இதனால் ஜப்பான் இந்தோ - பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய அரசின் உதவியுடன் திட்டங்களை வகுத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஆகியோர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.

ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கிய இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளையும் இலங்கைக் கடற்படையிடம் கையளிப்பதற்காகவே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.

மத்திய அதிவேக வீதியின் மூன்றாவது கட்டம், ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபத்தியாறு வருடங்கள் பூர்த்தி, கொழும்பு துறைமுகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு இறங்குதுறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி, உள்ளிட்ட பல விடயங்கள் குறித்துப் பேசுவதற்காகவே ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பின் மத்தியிலும் கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன் கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாக அபிவிருத்தி செய்ய்ப்படவுள்ளது.