உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை - இலங்கையுடனான

பாதுகாப்பு ஒப்பந்தம் - அமெரிக்கத் தூதுவர் பௌத்த பீடாதிபதிக்கு விளக்கம்

இலங்கையின் ஒற்றயைாட்சித் தன்மைக்குப் பாதிப்பில்லையெனவும் கூறியுள்ளார்
பதிப்பு: 2019 மே 24 22:38
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 25 21:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தீவிரமாக கரிசனை செலுத்தி வருகின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை இராணுவத்துக்கு அதிகளவு உதவி செய்யவும் இந்தோ- பசுபிக் கடற்பகுதியில் சீன - இலங்கை கூட்டுப் பாதுகாப்பு மற்றும் உதவிகள் குறித்து சீனா தொடர்ச்சியாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துடன் பேசி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவும் இலங்கையுடன் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களைச் செய்வது குறித்துப் பேசி வருகின்றது. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், மாற்றமடையாத வகையில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
 
குறிப்பாக அமெரிக்கா தொடர்பாக பௌத்த குருமாருக்குள்ள அச்சங்களைப் போக்கும் வகையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் செய்யவுள்ள ஒப்பந்தங்கள் எதுவும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தாதென்றும், இலங்கையுடன் அமெரிக்கா எதிர்காலத்தில் செய்யவுள்ள உடன்படிக்கைகளினால், இலங்கையின் சுயாதீனம் பாதிக்கப்படாதெனவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், மல்வத்துப் பீட மகா நாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மல்வத்துப் பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சந்தித்தார்.

அமெரிக்க இலங்கை உறவுகள் தொடர்பாக விளக்கமளித்த தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இலங்கையில் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியுள்ளார்.

இந்தோ - பசுபிக் பிராந்தியங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியோடு பல ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எதுவுமே இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பாதிக்காதென்றும் இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் பேணப்படுமெனவும் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மல்வத்துப் பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் எடுத்துக் கூறியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பாக மகாநாயக்கத் தேரர்கள் ஏலவே சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். மைத்திரிபால சிறிசேனவுடன் பேசியுமிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச சமீபத்தில் கண்டி மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்திருந்தபோது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்துக் கேட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மல்வத்துப் பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்ததாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மகிந்த ராஜபக்சவையும் சென்றவாரம் சந்தித்து பேசியிருந்தார். இலங்கையுடன் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்தே பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறியிருந்தன.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுடன் சென்றவாரம் செய்து கொண்ட சீன - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக மல்வத்துப் பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் பாராட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.