அமெரிக்கா, இந்தியா கூறிய மாற்றம் என்பதை நம்பி 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களின் நிலை-

அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி

நிலைமாறுகால நீதியின் நிலை? மீண்டும் மகிந்த ராஜபக்சவோடு உறவைப் பேணிவரும் சர்வதேசம்
பதிப்பு: 2019 ஜூன் 23 16:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 28 01:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்து தமக்கு இசைவான ஆட்சியாளர்கள் என்று நம்பியே நல்லாட்சி என்று கூறி மைத்திரி- ரணில் கூட்டு உருவாக்கப்பட்டது. மாற்றம் என்ற சூடு காய்வதற்கு முன்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச உருவாக்கிய 18 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஜனாதிபதிக்குரிய சர்வாதிகாரத் தன்மைகள், 2016 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன.
 
அதாவது இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் பலவற்றை இலங்கை நாடாளுமன்றத்திற்கு பரவலாக்கம் செய்வதற்குரிய 19 ஆவது திருத்தச் சட்டம் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களும், தமது நலன்களுக்கான பூகோள அரசியலை இலங்கைத் தீவில் முன்னெடுக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும், இலங்கை ஒற்றையாட்சி முறையில் இருந்து அதிகாரங்கள் பங்கிடப்பட்டால் மாத்திரமே எதுவும் சாத்தியமாகும் என்பதை இனியாவது உணர வேண்டும்

ஆனால் அதன் பின்னரான சூழலில் மைத்திரி- ரணில் ஆகிய இருவரிடையேயும் ஆரம்பித்த அதிகார மோதல், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நிலையை மைத்திரிக்குத் தூண்டியது.

இதனால் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஐம்பத்தொரு நாட்கள் வரை நீடித்தது. பின்னர் பலத்த கண்டனங்கள், இழுபறிகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் மாதம் நான்காம் திகதி மைத்திரியால் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் இன்று வரை அதிகாரமோதல் இருவரிடையேயும் நீடிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது 19 ஆவது திருத்தச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமென மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டமே அரசியல் பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடித்துரைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாற்பதாவது வருட நிறைவு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றியபோதே மைத்திரி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்புத் திருத்தங்களே இலங்கையில் குழப்பங்கள் ஏற்படக் காரணம் என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்துகின்றார். 19 வது திருத்த சட்டத்தின் ஊடாக இலங்கையில் தலைவர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் மைத்திரி விபரித்துள்ளார்.

ஈழப்போரை இல்லாதொழிக்க இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துக்கு உதவியளித்த அமெரிக்கா போன்ற மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும், மாற்றம் என்று கூறி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி இலங்கையில் தாம் எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டதாக, இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக ஆட்சியில் இருந்து கவிழ்த்து விழுத்திய மகிந்த ராஜபக்சவுடன் தற்போது உறவைப் பேணி வருகின்றன

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமென கொழும்பில் செயற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் அப்போது மார்தட்டியிருந்தன. போரின் பின்னரான நிலைமாறுகால நீதியை நிலை நாட்டிவிடலாமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தன.

கொழும்பில் உள்ள அமெரிக்கா, இந்திய உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் வடக்கு- கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, நம்பிக்கையூட்டியிருந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்சவின் கட்சியில் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்த ஒருவரை, அதுவும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் நடந்தபோது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரை, மகிந்தவிடம் இருந்து பிரித்து ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியுடன் கூட்டுச் சேர்த்து ஜனாதிபதியாக்கினால், மாற்றம் ஏற்படுமா என்று ஈழத் தமிழர்கள் அப்போதே சந்தேகம் எழுப்பியிருந்தனர்

அதுமட்டுமல்ல, தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சி என்று கூறும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன், வெளிநாட்டுத் தூதவர்களின் பேச்சை நம்பி, மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார்.

விரும்பியோ விரும்பாமலோ அப்போது பாதிக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு தாயக மக்களில் அனேகமானோர் அமெரிக்க, இந்தியத் தூதுவர்களின் கதைகளை நம்பி மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்திருந்தனர்.

இரண்டு இலட்சம் மேலதிக வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அதாவது அந்த மேலதிக வாக்குகள் தமிழ்- முஸ்லிம் மக்களுடையதென ரணில் விக்கிரமசிங்கவே அப்போது கூறியிருந்தார்.

தமிழ்- முஸ்லிம் மக்கள் எதிராக வாக்களித்ததாலேயே தோல்வியடைந்ததாக மகிந்த ராஜபக்சவும் அன்று கூறியிருந்தார். தனக்கு பெரும்பான்மையாக வாக்களித்த பௌத்த சிங்கள மக்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார் மகிந்த.

சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக இந்த ஆண்டு இரண்டு தடவைகள் மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா சந்தித்துள்ளார். இந்த மாதம் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மகிந்தவைச் சந்தித்திருந்தார்

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த பிரதமராகத் திடீரென பதவியேற்றபோது, இலங்கை அரசியல் தலைகீழாக மாறிவிட்டதாகத் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர்ஜெகான் பெரேரரா, கூறியிருந்தார்.

ஆனாலும், ஈழப்போரை இல்லாதொழிக்க அனைத்து வழிகளிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துக்கு உதவியளித்த அமெரிக்கா போன்ற மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும் இதுவரை உரிய பதிலளிக்கவில்லை.

கடந்த ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலையில் கூட இந்த நாடுகள், 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தாம் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததாக இதுவரை ஒப்பக்கொள்ளவுமில்லை. சிங்கள ஆட்சியாளர்களைக் கண்டிக்கவுமில்லை.

மாறாக 2015 ஆம் ஜனவரி மாதம் ஆட்சியில் இருந்து கவிழ்த்து விழுத்திய மகிந்த ராஜபக்சவுடன், தற்போது உறவைப் பேணி வருகின்றனர். குறிப்பாக இலங்கையுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு உட்னபடிக்கை தொடர்பாக இந்த ஆண்டு இரண்டு தடவைகள் மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா சந்தித்துள்ளார்.

இந்த மாதம் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்திருந்தார். கொழும்புக்கு வந்து சென்ற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அனைவருமே மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கின்றனர்.

ஆகவே மகிந்த ராஜபக்சவிடம் இருந்து மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கி மாற்றம் என்று இவர்கள் அப்போது கூறிய கதைக்கு தற்போது என்ன நடந்தது? கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குப் பின்னர், கொழும்புக்கு வந்து சென்ற அத்தனை வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துச் சென்றதன் பின்னணிதான் என்ன?

மாற்றம் என்ற கதையை நம்பி 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில். இவர்கள் அறிமுகப்படுத்திய மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களின் நிலை என்ன? குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்த தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன?

தாங்கள் நினைத்த மாற்றம் ஏற்படவில்லை என்பதால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்திற்குப் பின்னரான சூழலில் மகிந்த ராஜபக்சவுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டது போன்று, தமிழ் மக்களும் மீண்டும் உறவைப் புதுப்பிக்க வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கின்றனரா என்ற கேள்விகள் மக்களிடம் எழாமலில்லை.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்புக்களும் அதன் சட்டங்களும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தடைக் கற்கல் என்று, கடந்த எழுபது ஆண்டுகளாக கூறப்பட்டு வருகின்றன. அதற்கான ஆயுதப் போராட்டத்தை அழிக்க சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவி செய்து அதன் பின்னரான அரசியல் சூழலிலும் அந்தச் சிங்கள ஆட்சியாளர்களைத் தாங்கள் நம்புவது போன்று தமிழர்களும் நம்ப வேண்டும் என்ற செய்தியைத் தான் சர்வதேசம் சொல்கின்றது.

மாற்றம் என்று கூறி உருவாக்கிய 19 ஆவது திருத்தச் சட்டத்தையே மைத்திரிபால சிறிசேன தற்போது தவறு என்கிறார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக உருவாக்கப்படும் சட்டங்களின் நம்பகத் தன்மை எவ்வாறானதாக இருக்கும்?

இலங்கை ஒற்றையாட்சி முறையில் இருந்து வடக்குக்- கிழக்குத் தமிழ் பேசும் தாயகப் பிரதேசத்திற்கு அதிகாரங்கள் பங்கிடப்படாமல், கொழும்பில் நேர்மையான அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்படாது என்பதை மக்கள் நம்புகின்றனர்

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் அதன் கீழான மாகாண சபை முறைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் அதற்குரிய அதிகாரங்கள் சரியான முறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பிலுள்ளன.

தற்போது மாகாண சபைகளைக் கைவிடும் ஆபத்தும் நேரிட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச ஆதரவுடன் 2016இல் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தையே தவறு என்கிறார் மைத்திரிபல சிறிசேன. அவர் ஜனாதிபதியாக வந்ததே சர்வதேசத்தின் ஆதரவுடன்தான்.

எனவே தங்களுக்கு ஏற்ற பூகோள அரசியல் சிந்தனையோடு மாத்திரம் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் செயற்படுவதைத் தவிர்த்து, இலங்கைத் தீவில முப்பது வருட ஆயுதப் போர் ஏன் நடந்தது என்ற உண்மையைத் தெரிந்தும் தெரியாதது போன்று நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இயல்பாகவே எழுகின்றன.

கண்டியக் கலாசாரத்தை மையப்படுத்திய, பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்துள்ள இலங்கை ஒற்றையாட்சி முறையில் இருந்து வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்துக்கு அதிகாரங்கள் பங்கிடப்படாமல், இலங்கையில் நேர்மையான அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்படாது என்பதை மக்கள் நம்புகின்றனர்.

எனவே பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களும் தமது நலன்களுக்கான பூகோள அரசியலை இலங்கைத் தீவில் முன்னெடுக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும், இலங்கை ஒற்றையாட்சி முறையில் இருந்து அதிகாரங்கள் பங்கிடப்பட்டால் மாத்திரமே மாற்றம் சாத்தியமாகும் என்பதை இனியாவது உணர வேண்டும்.