தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணம் வன்னியில்

போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதிக்கும் நுண்நிதிக் கடன்

நுண்நிதிக் கடன் பிரச்சனையால் வவுனியாவிலும் நெருக்கடி
பதிப்பு: 2019 ஜூன் 29 09:37
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 05 03:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Microfinancecredit
#TamilGenocide
#Tamils
#Mullaituvu
#Mullivaikal
#Vavuniya
#MinistryofFinance
#Srilanka
#lka
போரின் தாக்கத்திலிருந்து தமிழ் சமூகம் படிப்படியாக மீண்டெழுந்துவரும் நிலையில், நுண்நிதிக் கடன் பிரச்சனை, தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் குடும்பத் தலைவிகளை பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி வருவதுடன் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முன்னரே, நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 10 வருடங்களாக பல தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இறுதிக்கட்டப் போரினால் முற்றிலும் அழிந்துபோன முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, நுண்நிதிக் கடனால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

கடன் வழங்குதல் என்ற அடிப்படையில் திருமணமான குடும்பப் பெண்களைக் குழுக்களாகச் சேர்த்து கடனை வழங்கிவிட்டு, பின்னர் குழுவில் உள்ள ஒருவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையாயின் ஏனையவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, குறித்த கடனை அறவிடுவதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் குறிப்பிட்டனர்.

இதுமாத்திரமன்றி கடன் பெற்றோரின் வீடுகளுக்குச் சென்று உடனடியாக அதனைச் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது வட்டிவீதங்களை குறைவாக குறிப்பிட்டு அதனை மக்களுக்கு வழங்கிவிட்டு பின்னர் கடனாளிகள் அது தொடர்பாக மேலதிக பரிசீலனை செய்கின்ற போது நுண்நிதிக் கடனுக்கான வட்டிவீதங்கள் அதிகமாக காண்பிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கில் நுண்கடனால் அதிகளவானோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெரும்பாலானோர் தொழில் வாய்ப்பின்றிய நிலையில் அந்தக் கடனைச் செலுத்துவதற்காக பெரிதும் சிரமப்படுகின்றனர்.

நுண்நிதிக் கடனைச் செலுத்துவதற்காக ஏனைய வங்கிகளிலும் வட்டிக்கும் கடன் பெற்று நுண்நிதிக் கடனைச் செலுத்துவதால், வீடுகளில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

நுண்கடன் ஊடாக மக்களுக்கு நிதி வழங்குவதைக் குறைத்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நுண்நிதிக் கடன் வழங்கிய நிறுவன அதிகாரிகள் கடன் அறவிடுவதற்காக வீடுகளுக்கு வந்து அதிகளவான நேரம் தங்கியிருப்பதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஒருவர் தன்னுடைய கடனையே மீளச் செலுத்த முடியாதுள்ள நிலையில், குழுவில் உள்ள மற்றுமொருவருடைய கடனைச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அது எவ்வாறு முடியும்?

இதனால் உறவுகளிடையே அதிகளவான பிரச்சனைகள் ஏற்படுவதுடன் ஒரு கடனைச் செலுத்துவதற்காக மற்றுமொரு வங்கியில் கடன் பெறுவதனால் அனைத்து இடங்களிலும் கடனாளியாகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

இங்குள்ள மக்களில் அனேகமானோர் கடற்தொழிலை நம்பியே வாழ்கின்றனர். கடலில் வரும் வருமானம் போதாமல் இருக்கின்ற போது பிள்ளைகளின் கல்விக்கான செலவைக் கூட ஈடுகட்ட முடியாதிருக்கின்றது. எனவே இதற்கு விரைவில் உரியதொரு தீர்வு எட்டப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேவேளை வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்கள், வறுமையின் காரணமாக நுண்நிதிக் கடனை மீளச் செலுத்த முடியாது தவிக்கும் குடும்பப் பெண்களின் நிலுவைத் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி வீதத்தை அதிகரித்து கடனாளிகளான பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் செயற்பாடு அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சுட்டிக்காட்டியதாக வவுனியாவில் உள்ள செய்தியாளர் கூறுகின்றார். குடும்ப வறுமை காரணமாக பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது தவிக்கும் பெண்களை நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் நிலுவைக் கடனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் கடன் செலுத்தாத காலப்பகுதிக்கு அதிகரித்த வட்டியோடு எழுதப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மிரட்டிக் கையொப்பம் பெறப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சி நிலவிவரும் நிலையில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் குடும்பங்கள் மற்றும் கூலித்தொழில் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சூழ்நிலையில் நுண்நிதி நிறுவனங்களின் இந்த நடவடிக்கை குடும்பப் பெண்களையும் அவர்களது குடும்பங்களையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் நுண்நிதிக் கடன் சுமையினால் அறுபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குடும்பப் பெண்களின் தற்கொலை நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் குடும்ப சீரழிவுகளைக் குறைக்கும் வகையிலும் அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிதி அமைச்சு 37 நுண்நிதி நிறுவனங்களது 1414 மில்லியன் ரூபாவை இரத்துச் செய்திருந்தது.

நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறைவாகப் பெற்ற கடன் தொகையைத் தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சு அறிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 1096 பெண்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1580 பெண்களும், மன்னார் மாவட்டத்தில் 670 பெண்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 475 பெண்களும் இச்சலுகை மூலம் நன்மை அடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூடும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் அறிக்கையைப் பெறும் மாவட்ட செயலக அதிகாரிகள் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ள குடுப்பப் பெண்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை எனவும் அரசாங்கம் வழங்கிய ஒரு இலட்சம் ரூபா நிதிச் சலுகையைக் கூடப் பெற்றுக்கொடுக்க மாவட்ட செயலகம் முன்வரவில்லை என்பதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் செயற்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.