வெந்நீரூற்றுக் காணிச் சர்ச்சை தொடர்பான வழக்கு கைமாறியது

கன்னியா பற்றிய தொல்லியல் வர்த்தமானி சட்டவலு அற்றது - சுமந்திரன்

தாதுகோபுரம் அமைக்குமாறு உத்தரவிட மைத்திரிக்கோ கரு ஜெயசூரியவுக்கோ அதிகாரமில்லை
பதிப்பு: 2019 ஜூலை 22 22:45
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 21:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#kanniya
#kanniya_belongs_to_tamils
#கன்னியா
ஆதாரமற்ற அடிப்படைகளில் கன்னியா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவுக்கு அமைவாக தனியார் காணியையும் சுவீகரிக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்பொருள் திணைக்களமே தனியார் காணி என்பதை ஒத்துக்கொள்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வாதிட முயல்கிறார். தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் தலையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கோ சட்ட ரீதியான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையெனவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் திங்களன்று தெரிவித்தார்.
 
கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கன்னியாவில் சைத்தியம் எனப்படும் புத்ததாது இருந்ததாக பிரித்தானியர் மேற்கொண்ட தொல்லியல் அளவீடுகள் எவற்றிலுமே குறிப்பிடப்படவில்லையே, இந்த நிலையில் அங்கு புத்ததாது இருந்தாகத் தற்காலத்து இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் எந்த ஆதாரத்தைக் கொண்டு கூறுகின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அதே கேள்வியே தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் சிதைவுண்ட பிள்ளையார் ஆலயத்தின் அடித்தளம் இடிக்கப்பட்டு புத்ததாதுக் கோபுரம் கட்டப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில் தலையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கோ சட்ட ரீதியான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையென அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் யாப்பையே மீறிச் சட்டவலுவற்றுச் செயற்பட்ட ஒருவர் கன்னியா விவகாரத்தில் அவரது செயலகம் நீதிக்குப் புறம்பாகத் தலையிட்டதால் அதுவும் சட்டவலு அற்றதாகவே அமையும் என்று அழுத்தமாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களம் தொல்லியல் திணைக்களமாக இயங்கவில்லை. மாறாக புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் ஒரு தரப்பாகவே அது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது குறித்துத் தமது ஆழமான ஆட்சேபனையைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளதாகவும் ஆனால் நிலைமையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், இதனாலேயே சட்ட வழிமுறைகளை நாடவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே, கன்னியா தொடர்பான வழக்கை கொழும்பில் உள்ள பிரபலமான கந்தையா நீலகண்டன் நிறுவனம், தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் தாமதமுற்றிருந்ததாகக் காணி உரிமையாளர் விசனமடைந்திருந்தார்.

எனினும், இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் இந்து கலாசார மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனுடன் காணி உரிமையாளருக்கு ஏதோ புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டதாகக் குறித்த நிறுவனத்துக்குக் கருத்துச் சொல்லப்பட்டிருந்ததாலும், வழக்குக்கான ஆதாரங்களை முறைப்படி தயாரிப்பதற்கு அந்த நிறுவனத்துக்கு நேரம் தேவைப்பட்டிருந்தமையாலும், காணி உரிமையாளருக்கும் நீலகண்டன் நிறுவனத்துக்கும் இடையில் தொடர்பாளராக இருந்த இந்து மாமன்றத்தின் பிரதிநிதி தொடர்பிலிருந்து விடுபட்டுப் போயிருந்தமையாலும் காலதாமதங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கொழும்பில் உள்ள தகவலறிந்த சட்டத்துறை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

தொல்பொருள்
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் இருந்த பிள்ளையார் ஆலயக் காணி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்திற்குரியது எனக் கூறப்பட்டு 2018-08-17 அன்று வெளியிடப்பட்ட இலங்கை வா்த்தமானி அரச இதழ்

அதேவேளை, குறித்த நிறுவனத்திடம் இருந்த வழக்கைத் தனது அரசியலுக்காக சுமந்திரன் பயன்படுத்த விழைகிறார் என்றும் அந்தத் தரப்புகள் குற்றம் சுமத்தின.

ஆக, இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை உற்று நோக்கி சுமந்திரனிடம் நேரடியாகக் தொடர்பு கொண்டு அவர் தரப்பு விளக்கங்களையும் கோரவேண்டியதாயிற்று.

மாவட்ட நீதிமன்றத்தில் அல்லவா வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டுமென்ற வாதத்தை சிலர் முன்வைத்திருப்பது பற்றி அவரிடம் வினவியபோது, அந்த அணுகுமுறை சட்டரீதியாகத் தவறானது என்றார் அவர்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கன்னியாவில் சைத்தியம் எனப்படும் புத்ததாது இருந்ததாக பிரித்தானியர் மேற்கொண்ட தொல்லியல் அளவீடுகள் எவற்றிலுமே குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அங்கு புத்ததாது இருந்தாகத் தற்காலத்து இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் எந்த ஆதாரத்தைக் கொண்டு கூறுகின்றது என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன், அதே கேள்வியையே தாமும் எழுப்பவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டத்தரணி சுமந்திரன் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலனை செய்த திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தற்காலிகக் கட்டளையில், குறித்த காணியில் எந்தவிதமான கட்டுமான வேலைகளையும் மேற்கொள்ள வேண்டாமென இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அனுமதிச்சீட்டு விற்றுப் பணம் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்து சமயக் கோயில் பரிபாலன சபையினர் குறித்த காணிக்குள் சென்றுவர ஒரு தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களம் தொல்லியல் திணைக்களமாக இயங்கவில்லை. மாறாக புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் ஒரு தரப்பாகவே அது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா கணேஷன் கோகிலரமணி, குறித்த பிரதேசத்தில் பிக்குமார் சிலர் மேற்கொண்ட அடாவடித்தனமான செயற்பாடுகள் குறித்து, திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி சுமந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நான்கு இடை நிறுத்தக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி உதயகுமார் பிரஷாந்தினியின் தயார்ப்படுத்தலில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருக்கிறார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறும்.

இந்த இடைக்காலத்தில், இரகசியமாக இடிப்புவேலைகளோ அல்லது வேறு ஏதாயினும், உட்புகுத்தல் காரியங்களோ நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அங்கிருக்கும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களின் பொறுப்பாகிறது.

அண்மையில் கன்னியாவில் நடந்தேறிய மக்கள் போராட்டமே இந்த இடைக்காலத் தடையுத்தரவுக்காகச் சுமந்திரனைச் செயற்படவைத்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டியாகவேண்டும்.