ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டமை

இந்தியாவின் உள் விவகாரமா? மோடியைப் பாராட்டும் ரணில்

மகாநாயக்கர்களும் வரவேற்பு - பின்னணியில் அமெரிக்காவின் பக்கபலம்!
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 09 14:28
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 10 21:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jammukashmir
#Ladakh
#US
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் (Union) பிரிக்கப்பட்டு இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களும் கண்டியை மையப்படுத்திய பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவினால் பரிந்துரைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த நிலையில் நரேந்திரமோடி அரசு தன்னிச்சையாகப் பிரிந்துள்ளமை ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த மற்றுமொரு அடியாகவும் சிங்களத் தேசம் கருதுகின்றது.
 
ஜம்மு காஷ்மீர் (Jammu kashmir) மாநிலம் ஜம்மு என்றும் காஷ்மீர் எனவும் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் லடாக் (Ladakh) பிராந்தியம், அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயற்படுவதை மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராட்டியுள்ளார்.

We the Citizens என்ற புதுடில்லியில் செயற்படும் இந்துத்துவா அமைப்பின் செல்வாக்குப் பெற்ற அரசார்பற்ற நிறுவனம் 35ஏ என்ற பிரிவை ரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி 2014 ஆம் ஆண்டு புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த நிறுவனம் சோனியா காந்தியை மையப்படுத்திய காங்கிரஸ் மற்றும் வலது சாரி அமைப்புகளின் ஆதரவையும் பெற்றிருந்தது

நரேந்திர மோடி அரசின் இந்த முடிவைப் பாராட்டியுள்ள அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், லடாக் பிரதேசம் விரைவில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் லடாக் தனி நிர்வாக அலகாகப் பிரிக்கப்பட்டதை தனது ருவீற்றர் தளத்தில் பாராட்டியுள்ளார். எழுபது சதவீதம் பௌத்த மக்கள் வாழும் லடாக் பிரதேசம் என்றும் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜம்மு காஷ்மீர் இரண்டு தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை இந்தியாவின் உள் விவகாரம் என்றும் கூறுகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நரேந்திர மோடி அரசு அந்த சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் 35 ஏ பிரிவு அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பின் 370 சரத்தைப் பயன்படுத்தி எப்படி ரத்துச் செய்ய முடியுமெனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டதை எந்த அடிப்படையில் இந்தியாவின் உள்விவகாரம் எனக் கூற முடியுமென்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வாழும் மக்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் இந்திய அரசியலமைப்பின் 35ஏ சட்டவிதி சகல விதமான உரிமைகளையும் வழங்குகின்றது. இந்தச் சலுகைகளை காஷ்மீர் மக்கள் மாத்திரமே அனுபவிக்க முடியும். வெளி மாநிலத்தவர்கள் எவருக்குமே அங்கு உரிமை கிடையாது.

இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மறுக்கும் உரிமை காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு இருந்தது. இப்படியான சலுகைகளை அரசியலமைப்பின் பிரிவு 35ஏ வழங்கியிருந்தது.

இந்த உரிமை 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு வழங்கப்பட்டது. ஆனால் வி த சிட்டிசென்ஸ் (We the Citizens) என்ற புதுடில்லியில் செயற்படும் இந்துத்துவா அமைப்பின் செல்வாக்குப் பெற்ற அரசசார்பற்ற நிறுவனம் 35ஏ என்ற பிரிவை ரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி 2014 இல் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக (Ally) அமெரிக்கக் காங்கிரஸில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பின்னாலில் பாக்கிஸ்தான் சீனாவுடன் மேற்கொண்ட நெருக்கமான உறவுகளினால் தற்போது கூட்டாளி என்ற அந்ததஸ்த்தை அமெரிக்கா நிராகரிக்கவுள்ளது. இந்த நிலையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்திய அரசை முக்கியப்படுத்தி இந்தியாவைக் கூட்டாளியாக்க அமெரிக்க ட்ரம் நிா்வாகம் எடு்க்கும் முயற்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் பின்னணியிலும் காஷ்மீர் பிரிக்கப்பட்டிருக்கலாம்

இந்த அரசசார்பற்ற நிறுவனம் இந்துத்துவா அமைப்புக்கு மாத்திரமல்ல சோனியா காந்தியை மையப்படுத்திய காங்கிரஸ் மற்றும் வலது சாரி அமைப்புகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியையும் இந்த நிறுவனம் வெளிப்படையாகவே ஆதரித்திருந்தது.

இதன் பின்னணியிலேதான் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரித்து இந்திய மத்திய அரசின் ஆளுகைக்குள் கொண்டு வருவோமெனக் கூறியிருந்தது.

இதனடிப்படையில் நரேந்திரமோடி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்துள்ளது. 1947 ஆம் ஆண்டிலேயே நேரு 35 ஏ பிரிவை பரிந்துரைத்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் 1954 ஆம் ஆண்டுதான் 35 ஏ பிரிவு அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது. தனிநாடு கோரி காஷ்மீரில் இடம்பெற்ற கலவரங்களைக் கட்டுப்படுத்தவே நேரு அன்று சுயநிர்ணய உரிமையை வழங்கும் முடிவுக்கு வந்திருந்தார்.

ஆனாலும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த ராஜேந்திர பிரசாத். இந்திய அரசியலமைப்பில் இருந்த 370 சரத்தைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கவோ மறுக்கவோ இந்திய மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளது என்ற புதிய விதி ஒன்றைப் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் 370 பிரிவில் திருத்தம் செய்ய வேண்டுமானால் இந்திய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். எனினும் வாக்கெடுப்பு எதுவுமேயின்றி இராஜேந்திரப் பிரசாத் திருத்தத்தை முன்மொழிந்து 370 பிரிவில் இணைத்துக் கொண்டார்.

இவ்வாறு இணைக்கப்பட்டமை இந்திய அரசியலமைப்புக்கு முரணானது என அப்போது வாதிடப்பட்டிருந்தது. எனவே இராஜேந்திரப் பிரசாத் 370 பிரிவில் மேற்கொண்ட திருத்தங்களைப் பயன்படுத்தியே நரேந்திரமோடி அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரித்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

அதுவும் மக்களால் தெரிவு செய்யப்படாத மாநில அரசு ஒன்று ஜம்மு காஷ்மீரில் இல்லாத நிலையில் அந்த மாநில அரசின் இணக்கம் எதுவுமேயின்றி ஆளுநரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ஜம்மு காஷ்மீர் இரண்டு நிர்வாக அலகுகளாக நரேந்திரமோடி அரசினால் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெரியவொரு ஜனநாயக நாடு என்று பொதுவாகக் கூறப்படுவது வழமை. ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு முரணான செயல் என்றே புதுடில்லியில் உள்ள உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

நரேந்திரமோடி அரசின் இந்தச் செயற்பாடுகளை சிங்கள ஆட்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் தாம் விரும்பியவாறு இந்து சமூத்திரப் பிரந்தியத்தில் இலங்கை அரசை முக்கியத்துவம் உள்ளதாக மாற்ற முற்படும் சிங்கள ஆட்சியாளர்களின் முயற்சிக்கு இந்தியா இடமளிக்குமா என்பது கேள்விதான்

ஜம்மு காஷ்மீர் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று நரேந்திரமோடியின் முஸ்லிம் எதிர்ப்புணர்வு. இரண்டாவது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய பூகோள அரசியல் தேவைப்பாடுகள்.

இங்கே காங்கிரஸ் அரசாங்கம் பதவியில் இருந்திருந்தாலும் தமது பூகோள அரசியல் நலன்சார்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புணர்வு இருந்திருந்திருக்காது. அதற்கு வேறு அணுகுமுறை கையாளப்பட்டிருக்கும்.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காகவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரித்ததாக நரேந்திரமோடி அரசு தற்போது கூறுகின்றது. ஆனால் பிரிக்கப்பட்ட லடாக் திபெத் பிரதேசத்திற்கு அருகில் உள்ளது.

இதனால் சீன அரசு கடும் கோபமடைந்துள்ளது. லடாக் பிரதேசம் இந்திய மத்திய அரசின் ஆளுகைக்குள் சென்றதை சீனா விரும்பவில்லை. அத்துடன் காஷ்மீர் பிரிக்கப்பட்டதால் பாக்கிஸ்தான் அரசும் ஆத்திமடைந்துள்ளது.

ஆகவே தற்போது சீனா- பாக்கிஸ்தான் உறவுகள் வலுவடைந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டதால் மேலும் மோதல்கள் ஏற்படக் கூடிய ஏது நிலை உருவாகலாமென அவதானிகள் கூறுகின்றனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வெளியே ஏனைய மாநிலங்களிலும் தீவிரவாதத் தன்மைகள் ஏற்படலாம் என்றும் அது இந்திய மத்திய அரசுக்கு மேலும் தலையிடியைக் கொடுக்குமெனவும் அவதானிகள் கருதுகின்றனர்.

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக (Ally) அமெரிக்கக் காங்கிரஸில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பின்னார் பாக்கிஸ்தான் சீனாவுடன் மேற்கொண்ட நெருக்கமான உறவுகளினால் தற்போது கூட்டாளி என்ற அந்தஸ்த்தை அமெரிக்க நிராகரிக்கவுள்ளது.

இந்த நிலையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்திய அரசை முக்கியப்படுத்தி இந்தியாவைக் கூட்டாளி ஆக்க அமெரிக்கா ட்ரம் நிா்வாகம் எடு்க்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே அமெரிக்கா. இந்தியா. அவுஸ்திரேலியா, ஜப்பான் என்ற நான்கு நாடுகள் கூட்டாக இணைந்து புதிய இராணுவ அணி ஒன்றை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கியிருந்தன.

இதன் தலைமைத்துவப் பொறுப்பு இந்தியாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலேதான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் நரேந்திரமோடி அரசின் இந்தச் செயற்பாடுகளை சிங்கள ஆட்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் தாம் விரும்பியவாறு இந்து சமுத்திரப் பிரந்தியத்தில் இலங்கை அரசை முக்கியத்துவம் உள்ளதாக மாற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் முயற்சிக்கு இந்தியா இடமளிக்குமா என்பது கேள்விதான்.