இந்திய- இலங்கை சா்வதேச ஒப்பந்தத்தை மீறி வடக்குக்- கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில்

காஷ்மீர் பிரிப்பு- மகிந்தவுடன் பாகிஸ்தான் தூதுவர் பேசியதன் பின்னணி

ஜனாதிபதித் தேர்தல் மூலம் அமெரிக்கச் சார்புநிலை எடுத்துள்ள மகிந்தவுடன் பேசியதன் பின்னணி?
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 14 15:29
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 12:57
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jammu
#Kashmir
#Pakistan
#Mahinda
#Rajapaksa
இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை சர்வதேசச் சட்டம் ஒன்றை மீறிய செயல் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து தூதுவர் விளக்கமளித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாக தனது அரசியல் கருத்தை வெளியிட்ட முதலாவது தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் பாராட்டியதாகக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
இந்திய அரசியலமைப்பின் 370 வது சரத்தை ரத்து செய்ததன் மூலம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை நீக்கி காஷ்மீர் பிரதேசத்தின் சனத்தொகைப் பரம்பலைத் திட்டமிட்டுக் குறைத்துள்ளதாகவும் தூதுவர் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் கூறியுள்ளார்.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை மகிந்த ராஜபக்வினால் எவ்வாறு பிரிக்க முடிந்தது? இந்த நிலையில் சர்வதேச விதிகளை மீறி காஷ்மீர் மாநிலம் இரு நிர்வாக அலகுகளாக இந்திய அரசினால் பிரிக்கப்பட்டு விட்டது என்ற கவலையை பாகிஸ்தான் தூதுவர் ஷாஹிட், மகிந்த ராஜபக்சவிடம் எந்த அடிப்படையில் வெளிப்படுத்தினார்?

இரண்டு நிர்வாக அலகுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமைக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் இது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு விடயங்களில் கடுமையான தாக்கங்களை உருவாக்குமெனவும் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத், மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

தெற்காசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தோற்றுவிக்க இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியமெனவும் இலங்கை இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தூதுவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பதவி வகித்திருந்தபோது பாகிஸ்தான் இராணுவத்துடன் இலங்கை நெருக்கமான உறவுகளைப் பேணியிருந்தது. அத்துடன் சீனாவுடனும் இலங்கை நெருக்கமான உறவுகளை சமாந்தரமாக வைத்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் ஆதரவுடனேயே கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த நிலையிலும், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத், மகிந்த ராஜபக்சவை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

தவிர்க்க முடியாதவொரு சூழலில் தற்காலிகமாகவேனும் அமெரிக்கச் சார்புநிலை எடுத்துள்ள மகிந்த ராஜபக்சவுடன் பாகிஸ்தான் தூதுவர் காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாகச் சந்தித்துப் பேசியமை குறித்துக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் தமக்குச் சாதகமான பூகோள அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தவிர்க்க முடியாதவொரு சூழலில் தற்காலிகமாகவேனும் அமெரிக்கச் சார்புநிலை எடுத்துள்ள மகிந்த ராஜபக்சவோடு பாகிஸ்தான் தூதுவர் பேசியுள்ளமை தொடர்பாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

பாகிஸ்தான் சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவுகளின் காரணமாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளைப் பேண ஆரம்பித்தது. டொனால்ட் ட்ரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அந்த உறவு மேலும் நீட்சியடைந்தது. காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கக்பட்டமை கூட ட்ரம் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் என்று அவதானிகள் கூறியுமிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமையை அமெரிக்க ஆதரவின்றி இந்திய மத்திய அரசினால் ரத்துச் செய்திருக்க முடியாதென்ற கருத்துக்களும் உண்டு. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பான வேதனையைப் பாகிஸ்தான் தூதுவர் மகிந்த ராஜபக்சவிடம் வெளிப்படுத்தியதன் பின்னணி குறித்து சந்தேகங்கள் எழாமல் இல்லை.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக்- கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு ஜே.வி.பி மூலமாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இரண்டு மாகாணங்களையும் தனித்தனியாகப் பிரித்து விட்டது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு நீடிக்கப்பட்டு வந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்டமாக இல்லை என்று கூறியே இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. ஆனாலும் இந்திய- இலங்கை அரசுகள் செய்த சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை மீறி எவ்வாறு அந்த இணைப்பை இலங்கை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்ய முடியும் என்ற கேள்விகள் அன்று சட்ட வல்லுநர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமையை அமெரிக்க ஆதரவின்றி இந்திய மத்திய அரசினால் ரத்துச் செய்திருக்க முடியாதென்ற கருத்துக்களும் உண்டு

ஆகவே இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விதிகளை மீறி காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாக இந்திய மத்திய அரசினால் பிரிக்கப்பட்டு விட்டது என்ற கவலையை பாகிஸ்தான் தூதுவர் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத், மகிந்த ராஜபக்சவிடம் எந்த அடிப்படையில் வெளிப்படுத்தினார் என்பது குறித்தும் கேள்விகள் உண்டு.

தம்முடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி வடக்குக்- கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை குறித்து இன்று வரை இந்திய மத்திய அரசு இலங்கையிடம் தமது எதிர்ப்பைக்கூட வெளிப்படுத்தவில்லை. அது இலங்கையின் உள் விவகாரம் என்றே அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் சிவ்சங்கர் மேனன் கூறியிருந்தார்.

காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமை சார்க் நாடுகளின் ஒற்றுமைக்கும் ஒத்துழைப்புக்கும் கேடாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையைப் பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று பதின்நான்கு ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னரும் கூட சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசு மீறிவிட்டதாக சார்க் மாநாட்டில் இதுவரை இந்திய அரசு இலங்கை மீது குற்றம் சுமத்தவுமில்லை.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாகப் பாகிஸ்தான் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு விடயங்களில் தாக்கத்தை உருவாக்குமெனவும் சார்க் நாடுகளின் மாநாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்துமென்றும் பாகிஸ்தான் தூதுவர் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத், இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதுவும் அமெரிக்கச் சார்புநிலை எடுத்துள்ள மகிந்த ராஜபக்விடம் கூறியதன் பின்னணி குறித்துக் கேள்விகள் எழாமலில்லை.