இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம்

வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியானார்

மகிந்தவுக்குப் பக்கபலமாகச் செயற்படும் அமெரிக்காவும் கண்டனம்!
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 19 22:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 20 10:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#ShavendraSilva
#Slarmycommander
#warcrime
#tamils
#srilanka
#lka
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் (Major General) சவேந்திர சில்வா இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழழை இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்த நியமனத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் படையின் பிரதானியாகப் (Army Chief of Staff) பதவி வகித்திருந்த சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் உக்கிரமடைந்திருந்தபோது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.
 
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக 1996 ஆம் ஆண்டு செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, கடந்த ஆண்டு யூன் மாதம் இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

Savendira Silva
இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக இன்று திங்கட்கிழமை பதவி உயர்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தின் பிரதானியாகப் (Army Chief of Staff) பதவி உயர்வு வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியிருந்தார். மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலா என்று சம்பந்தன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக சர்வதேச அரங்கில் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்த சவேந்திர சில்வாவை 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இராணுவத் தளபதியாக எந்தவிதமான தயக்கங்களும் இன்றி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதிப் பதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இதனால் வடக்குக்-கிழக்குத் தாயக மக்கள் கடும் விசனமடைந்திருந்த நிலையிலும் தமிழரசுக் கட்சி அமெரிக்க, இந்தியா ஆகிய நாடுகளின் வாக்குறுதிகளை நம்பி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சவேந்திர சில்வாவும் இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு அமெரிக்கர, இந்தியர போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.

மகிந்த ராஜபக்சவை பதவி கவிழ்த்துவிட்டுப் புதிய அரசியல் கலாசாரம் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. ஈழத் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அன்று அமோக ஆதரவு வழங்கியிருந்தது.

ஆனால் நான்கு ஆண்டுகள் சென்ற நிலையில் மைத்திரி - ரணில் அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த யூலை மாதம் கூறியிருந்தார். சட்டத்தரணி சுமந்திரனும் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்தியாவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்துக் கொண்டதாகவும் சுமந்திரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் சென்ற நிலையில் அவருடைய நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளது. அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் பின்னணியாகச் செயற்பட்ட கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னாவும் இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீது தமிழ் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஈழத் தமிழ் மக்களினால் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தி அழகு பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா, சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத் தளபதியாகப் பதவியேற்றமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளமை குறித்துக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திர சில்வா, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நண்பராகவும் உள்ளார்.

சரத் பொன்சேகா இலங்கை இராணுவத் தளபதியாக பதவி வகித்திருந்தபோதே சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் சர்வதேச அரங்கில் ஏற்பட்ட எதிர்ப்புகள் சர்ச்சைகளையடுத்து இலங்கை இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா, மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்த்தப்பட்டு இன்று இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் என்பதன் வெளிப்பாடாகவே சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு அமைந்துள்ளதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய 137 பக்கங்களைக் கொண்ட ஆவணம் ஒன்று தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த ஆவணத்தில்,சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவற்றுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வீர விக்கிரம பதக்கம், உத்தம சேவா பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய விருதுகளை சவேந்திர சில்வா பெற்றுள்ளார்.