இலங்கை ஒற்றையாட்சியின் செயற்பாடு

விஜயகலா பேசியதைத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை- ஆனால் கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு

விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து இடைநிறுத்தவும்- ரணில்
பதிப்பு: 2018 ஜூலை 03 23:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 04 14:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து, முன் சிந்தனையில்லாத தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை தென்னிலங்கையில் உள்ள சில பிரதான சிங்கள அரசியல்வாதிகளுக்குப் புரியும். ஆனாலும், அவசர அவசரமாக விஜயகலாவை அமைச்சுப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டு, இலங்கைச் சட்ட மா அதிபர் மூலமாக விசாரணை நடத்த எடுக்கப்பட்ட முடிவு பௌத்த சிங்கள பேரினவாத கண்ணோட்டத்துடன் அமைந்ததாகவே கருதப்படுகின்றது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மேலும் பாதுகாக்கும் நேக்கில் கட்சி வேறுபாடுகள் இன்றி சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்று சேர்ந்து எடு்க்கும் நடவடிக்கை என இலங்கை நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.
 
விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் கூறிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் யாரும் பெரிதாக பேசிக்கொள்ளவே இல்லை. மாறாக விஜயகலா அவ்வாறு கூறியதையிட்டு தமிழ் மக்கள் வாய் விட்டு நகைச் சுவையாகச் சிரிக்கின்றனர்.

விஜயகலாவின் உரை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மீறியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைச் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது நோக்கம் என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருள் பாவனையும் அதன் மூலமான வன்முறைச் சம்பவங்களின் பின்னணியிலும் இலங்கைப் பொலிஸாரும் இலங்கைப் படையினரும் செயற்படுவதாக பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் போதைப் பொருள் பாவனை தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருக்கவில்லை என்று சொன்னார்.

அத்துடன், 2009 இற்குப் பின்னரான சூழல் நிலை பற்றிக் கூறும்போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கம் மீதும் அவர் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கியிருந்தார்.

விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியமை குறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் குழப்பங்கள், மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுமுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் மோதல்களையடுத்தே விசாரணை நடத்துமாறு இலங்கைச் சட்டமா அதிபருக்கு சபாநாயகர் பணிப்புரையும் விடுக்க நேரிட்டது.

இந்த நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசரமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகவே, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்பங்கள். மோதல்கள் அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையுடன் இடம்பெற்றது எனவும், தமிழர் என்ற காரணத்தினால் சிங்கள அரசியல் கட்சிகள் இவ்வாறு செயற்பட்டதாகவும் நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் ஆயுதப் போராட்டம் தொடர்பாக கூறிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் யாரும் பெரிதாக பேசிக்கொள்ளவே இல்லை.

மாறாக விஜயகலா அவ்வாறு பேசியதையிட்டு தமிழ் மக்கள் வாய் விட்டு நகைச் சுவைாயகச் சிரிக்கின்றனர்.

சிங்கள அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்று கட்சிக்கு விசுவாசமாகச் செயற்படுவார்களே தவிர, தமிழ் மக்களின் சுயாநிர்ணய உரிமையை பெறுவது தொடர்பாக அவர்களால் மூச்சுக் கூட விட முடியாது என்றும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அது அனுபவப் பாடம்.

இருந்தாலும் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கமும் இலங்கை நாடாளுமன்றமும் எடுக்கும் நடவடிக்கை என்பது, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை என்பதை அப்படியே கோடிட்டுக் காண்பிப்பதாக கொழும்பு அரசியல் தகவல்களும் கூறுகின்றன.

விஜயகலா மகேஸ்வரனை அவ்வாறு கூறவைத்து தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளை பெறும் நோக்கமாக இருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.