நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில்

சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா?

மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது
பதிப்பு: 2019 டிச. 07 21:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 11:37
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதை இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது

தமிழர் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாமே முடிவெடுக்க கூடிய முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் மூலமாக அடைவதே தமது நோக்கம் என்று சம்பந்தன் அலய்னா ரெப்லிட்ஸிடம் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு விவகாரம் குறித்துச் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து தான் நம்பியிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் பற்றியே சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்க வேண்டும்.

அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிடம் சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்திக் கூறினாலும், இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான அழுத்தங்களைக் கூட தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவுமில்லை.

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரான நான்கரை ஆண்டுகளில் கூட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்ற எந்தவொரு அழுத்தங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவில்லை. சர்வதேச நாடுகளும் அது பற்றி எதுவுமே பேசவில்லை. சிந்திக்கவுமில்லை.

இவ்வாறானதொரு நிலையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறிக் கொண்டு யாரை வீட்டுக்கு அனுப்பினார்களோ அவர்களுடைய குடும்பமும் நண்பர்களுமே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்று கூறிக் கொண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த அதே சா்வதேச நாடுகள்தான், மறைமுகமாகவும் நேரடியாகவும் செயற்பட்டு 2015 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த அதே ஆட்சியாளர்களை மீண்டும் 2019 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்தில்லை.

இந்த நிலையிலேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் முன்வைக்கவேயில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது

இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று கூடச் சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவுமில்லை.

இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியத்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது. சர்வதேச மத்தியஸ்த்தம் என்றவொரு சிந்தனையைத் தவிர வேறு மாற்றுத் திட்டங்களுக்கு இடமில்லை என்ற எண்ண ஓட்டமே தற்போது தமிழர்களின் மனதில் விஞ்சிக் கிடக்கிறது.

இப்படியானதொரு நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார்.

இலங்கை குறித்த விவகாரத்தில் தமிழர்களுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப பேசியதாகவும் சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின்னரான சூழலில் எவ்வாறான அணுகுமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே விரிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்படுமா அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் கோரப்படுமா என்பது குறித்த சிந்தனைகள் தமிழரசுக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை.

ஆக, தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேசவுள்ளதாகச் சுமந்திரன் கூறுகிறார் என்ற தொனி மாத்திரமே தென்படுகிறது. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.

மறுபுறம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசிப் போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுகின்றார்.

இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்

எனவே சர்வதேச நாடுகளினுடைய தலையீடுகளுக்கான அழுத்தங்களை தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் இடித்துரைப்பதற்கான காலமிது என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளன. சாட்சியமில்லாத போரை இலங்கை அரசாங்கம் நடத்துவதற்குச் சர்வதேச நாடுகளே காரணமாக இருந்ததாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியிருந்தார்.

ஆகவே போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதையும் இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது.

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் காணி அபகரிப்பு, புத்தர் நிலை வைத்தல், விகாரை கட்டுதல் போன்ற தற்போதைய செயற்பாடுகளை, தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களின்போது, மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளின் மாற்று வடிவ நீட்சியாகவே சித்தரிக்கப்படல் வேண்டும்.

எனவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இந்த மாதிரியான அணுகுமுறைகளை உருவாக்கும் செயல்த் திட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தகுதியிழந்துள்ளன. எனவே தமிழச் சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதெனலாம்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற வாரம் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்தியா பேச வேண்டிய தேவையில்லையெனவும் நரேந்திர மோடியிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் கூட தொட்டுப் பார்க்க முடியாதெனச் சம்பந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே கூறியிருந்தார் என்பதையும் இங்கு கவனித்தல் வேண்டும். எனவே இந்த இடத்திலாவது சர்வதேச மத்தியஸ்த்தத்தின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்ற சிந்தனையை எவரும் மறுக்க முடியாது. மறைக்கவும் இயலாது.