காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

ஜெனீ்வாவை திருப்திப்படுத்தி இலங்கைப் படையினரைக் காப்பாற்ற முயற்சி- உறவினர்கள் குற்றச்சாட்டு

மைத்திரி- ரணில் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்றும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 ஜூலை 09 10:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 09 23:27
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அறியும் அலுவலகம், ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் செயற்படுவதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். போரின் போதும், போரின் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பற்றிய தகவல்களை பெறுவதை விட, இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்த அலுவலகம் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இறுதிப் போரின்போது சரணடைந்த மற்றும் இலங்கைப் படையினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் பற்றிய விபரங்களைக்கூட இந்த அலுவலகம் இதுவரை பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை குறித்த அலுவலகம் பெற்று வருவதாகவும், ஆனால் உடனடியாக அனைத்தையும் செய்து முடிக்க முடியாதெனவும் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

திருகோணமலை, கிளிநொச்சி. முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கு குறித்த அலுவலகத்தின் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து விபரங்களைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜெனவீவாவில் நடைபெறவுள்ள அடுத்த அமர்வுக்கு முன்னர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் பொறிமுறைகளையே குறித்த அலுவலகம் மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் உறவினர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

போரின் பக்கவிளைவுகளுக்குக் கூட இயல்பான முறையில் தீர்வை முன்வைக்க இலங்கை அரசினால் முடியவில்லை. ஆகவே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழர் தேசத்தையும் அங்கீகரிப்பதற்கு மேற்குலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சனிக்கிழமை மாலை யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இவ்வாறு கூறியுள்ளனர்.

108 தேங்காய்களை உடைத்தும் கற்பூர தீச்சட்டிகளை எடுத்தும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி வவுனியாவில் 500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தும் உறவினர்கள், யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதுடன் அடையாள உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை, கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அறியும் அலுவலகப் பிரதிநிதிகள், தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடத்தவுள்ள விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்பதை வெளியுலகத்துக்கு காண்பிக்கும் நோக்கில், பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவுள்ளதாக சங்கம் கூறியுள்ளது.