இலங்கைக்கு வரும்

சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில்லை

சீன அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை- மன்னாரிலும் தடுப்பு முகாம்
பதிப்பு: 2020 மார்ச் 15 22:42
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 16 00:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பரிசோதனைகளும் இன்றி நேரடியாகக் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளைச் சோதனையிட்டுப் பின்னர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சீனாவுக்கு அடுத்ததாகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள், சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
 
இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களை மாத்திரமே மையமாகக் கொண்ட சீன அரசின் பல நிபந்தணைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பட்டிருந்த இலங்கை, தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான சீனப் பிரஜைகளை விமான நிலையத்தில் எந்தவிதமான பரிசோதனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென்ற அழுத்தங்களுக்கும் உட்பட்டுள்ளதாகவே விமர்சகா்கள் கருதுகின்றனர்

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் கூடுதலாக ஏற்பட்டுள்ள சீனாவில் இருந்து வரும் சீனப் பயணிகள் எவருமே கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் நேரடியாகவே அவர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வீடுகள், விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிலைய அதிகாரியொருவர் கூறினார்.

தமது பிரஜைகளை விமான நிலையத்தில் சோதனையிட வேண்டிய அவசியம் இல்லையென சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்குக் கூறியதாகவும் அதனால் இலங்கைக்கு வரும் சீனப் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனால் இலங்கையில் குறிப்பாக சீன அதிகாரிகள், பணியாளர்கள், மற்றும் தொழில் புரியும் சீனப் பிரஜைகள் அதிகமாக வாழும் கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கலாமென கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரியொருவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருந்து இலங்கைக்குக் வரும் அனைத்துச் சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ள இலங்கை, சீன விமானத்திற்கு அனுமதியளித்துள்ளதுடன் அந்த நாட்டுப் பிரஜைகள் கொழும்புக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதன் நோக்கம் குறித்துக் கேள்விகள் எழாமலில்லை.

இந்த விடயம் தொடர்பாக பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் மௌனமாக இருப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, சீனாவில் இருந்து கொழும்புக்கு வந்து நேரடியாக வவுனியாவுக்குச் சென்று அங்குள்ள தமது வீட்டில் தங்கியிருந்த சீனக் குடும்பம் ஒன்று இலங்கைப் பொலிஸாரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவல் அடிப்படையிலும், மக்களின் கடும் அழுத்தங்களினாலுமே பொலிஸார் அந்தச் சீனப்பிரஜைகளைத் தனிமைப்படுத்தியதாக வவுனியாத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அந்தப் பிரஜைகள் தற்போது கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படும் நபர்களை தாயகப் பிரதேசமான மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருந்து இலங்கைக்குக் வரும் அனைத்துச் சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ள இலங்கை, சீன விமானத்திற்கு அனுமதியளித்துள்ளதுடன் அந்த நாட்டுப் பிரஜைகளும் கொழும்புக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதன் நோக்கம் குறித்துக் கேள்விகள் எழாமலில்லை

மன்னார் மாவட்டத்தில்இயங்காமல் இருக்கும் மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள காமன்ஸ் கட்டிட தொகுதியிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே மட்டக்களப்பு, வவுனியா போன்ற தாயகப் பிரதேசங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்மைக்குத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும் அவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகின்றமை இன அழிப்பு நடவடிக்கையா என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல், பொருளாதார நலன்களில் அக்கறை கொண்டுள்ள சீன அரசு, இலங்கை அரசாங்கத்துக்குப் பல்வேறு நிதியுதவிகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் சீன அரசின் பல நிபந்தணைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பட்டிருந்த இலங்கை, தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான சீனப் பிரஜைகளையும் விமான நிலையத்தில் எந்தவிதமான பரிசோதனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென்ற சீன அரசின் அழுத்தங்களுக்கும் உட்பட்டுள்ளதாகவே விமர்சகா்கள் கருதுகின்றனர்.

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் வேகமாகப் பரவ ஆரம்பித்ததையடுத்து சீனப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த தடை நீக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. சீனர்கள் இலங்கைக்குக் வருவதற்கு எந்தவிதமான தடையுமின்றி அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை நிதியுதவிகளை மையமாகக் கொண்ட காரணங்களாக இருக்கலாமெனக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.