இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்

கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்- 19 நிதியமும்

2005 இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது போன்றதொரு நிலை ஏற்படுமா?
பதிப்பு: 2020 ஏப். 10 22:55
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 23:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த ஊரான அம்பாந்தோட்டைப் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை என்ற பெயரில் நிதியம் ஒன்றை அமைத்திருந்தார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா பதவி வகித்திருந்தார்.
 
நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எழும் கேள்விகளில் நியாயம் இருக்கலாம்

அப்போது சந்திரிகாவுடன் ஏற்பட்டிருந்த அரசியல் முரண்பாடுகள், மோதல்கள் காரணமாக, மகிந்த ராஜபக்ச அரசியல், பொருளாதார வேலைத் திட்டங்கள் பலவற்றை தன்னிச்சையாவே செய்து வந்தார். சந்திரிகாவும் மகிந்தவோடு பிரதமர் என்ற முறையில் கூட எந்தவொரு ஆலோசனைகளும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்குப் பிடித்திருந்த மூத்த அமைச்சர்களுடன் மாத்திரமே கலந்துரையாடித் தன்னுடய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்திருந்தார்.

இவ்வாறான சூழ் நிலையிலேதான் சுனாமிப் பேரவலம் ஏற்பட்டபோது இலங்கையுடன் சர்வதேச நாடுகள் தொடர்பு கொண்டு உதவிகள் வழங்குவது குறித்துக் கலந்துரையாடி வந்தன. சந்திரிகா மாத்திரமே இந்தத் தொடர்புகள் அனைத்தையும் பேணி வந்தார்.

பிரதமர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்புக்கு வந்து சென்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளைக் கூடச் சந்திப்பதற்கு சந்திரிகா அனுமதிக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகளுடன் சமதானப் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது.

நோர்வேயின் சமாதானத் தூதுவர்கள் வெளியுறவு அமைச்சர்கள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், யப்பான் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் அடிக்கடி கொழும்புக்கு வந்து சென்ற காலமும் அதுவே. சமாதானத் தூதுவர் எரிக்சொல்கெய்மைக் கூட மகிந்தவினால் அப்போது சந்திக்க முடிந்திருக்கவில்லை. சில பிரதிநதிகள் மாத்திரமே மகிந்த ராஜபக்சவை சம்பிரதாகபூர்வமாகச் சந்திருந்திருந்தனர்.

இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்கிருந்த அத்தனை செல்வாக்குகளையும் பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச தனித்துச் செயற்பட ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கூடதென்ற நோக்கிலேயே சந்திரிகா மகிந்தவைப் புறக்கணித்துச் செயற்பட்டிருந்தார் என்பதை அப்போது கண்கூடாகக் காண முடிந்து.

எனவே இவற்றையெல்லாம் அறிந்தவொரு நிலையிலேதான் மகிந்த ராஜபக்சவின் முதற்கட்ட நடவடிக்கையாக கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியம் ஆரம்பிக்கப்பட்டதெனலாம். கிட்டத்தட்ட அப்போதைய சூழலில் ஆயிரம் மில்லின்கள் இந்த நிதியத்துக்குக் கிடைத்திருந்தன. இதனால் மகிந்தவின் செல்வாக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அதிகரித்திருந்தது.

சந்திரிகாவின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவே வருவார் என்ற நம்பிக்கையும் ஒரு வகையான அச்சமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அப்போது பலமாக இருந்தது. அத்துடன் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்துக்குச் சேரும் நிதிகளும் மகிந்தவுக்கான ஆதரவுத் தளத்தைக் கட்டியம் கூறியிருந்தன

அப்போது செயலாளராக இருந்த தற்போதைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காலம் சென்றவர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க. டி.எம்.ஜயரட்ன, மற்றும் மூத்த அமைச்சர்களான நிம்ல சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டோர் சந்திரிகாவுக்கு விசுவாசமாக இருந்தாலும் மகிந்த ராஜபக்சவுடனும் நட்பைப் பேணி வந்தனர்.

ஏனெனில் சந்திரிகாவின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவே வருவார் என்ற நம்பிக்கையும் மகிந்த மீதான ஒரு வகையான அச்சமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அப்போது பலமாக இருந்தது. அத்துடன் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்துக்குச் சேரும் நிதிகளும் மகிந்தவுக்கான ஆதரவுத் தளத்தைக் கட்டியம் கூறியிருந்தன.

ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவு செய்துவிட்டனர். சந்திரிகா கட்சித் தலைவராக இருந்தும் மகிந்த வேட்பாளராகத் தெரிவு செய்ய்ப்படுவதை அப்போது தடுக்க முடியாமல் போய்விட்டது.

வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்குரிய வேலைத் திட்டங்களை மகிந்த ஆரம்பித்தார். இங்கேதான் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்தின் நிதி தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதனை அப்போது ஜே.வி.பி கூட கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதிக் கதிரையில் இருத்தி நோர்வேயின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமாதானப் பேச்சைக் குழப்பி போரை ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஜே.வி.பியின் பிரதான இலக்காக இருந்தது.

பௌத்த பிக்குமாருக்கும் மாகாசங்கத்தினருக்கும் ஜே.வி.பியின் அதே நோக்கமே பிரதானமாக இருந்ததால், மகிந்த ராஜபக்சவின் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்திற்குரிய நிதிகள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது என்ற விவகாரம் அப்போது சூடுபிடித்திருக்கவில்லை.

சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கடசி கூட பெரியளவில் பேசவில்லை. மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னரே இந்த விவகாரம் மெதுவாக வெளிப்பட ஆரம்பித்தது.

அப்போது பிரதம நீதியரசராக இருந்தவர் சரத் என் சில்வா, இவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். இதனால் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி தொடர்பாக வழக்கைத் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராகவே உயர் நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. மகிந்த ராஜபக்ச காப்பாற்றப்பட்டார். ஆனாலும் பின்னர் ஓய்வு பெற்ற நீதியரசர் சரத் என் சில்வா, மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக் கொண்ட நிலையில், கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்துக்கான தீர்ப்பை அப்போது மகிந்தவுக்குச் சாதகமாகவே வழங்கியதாகக் கூறியிருந்தார்

கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் நிதி தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாக மாற்றுக் கொள்கை மையம் போன்ற பல அமைப்புகள் அப்போது குற்றம் சுமத்தியிருந்தன. சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரின் பெயர்களில் சில பொது அமைப்புகள், மனித உரிமைச் சட்டத்தரணிகள் சிலர் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்தில் ஊழல் மோசடி என்று குற்றம் சுமத்தி இலங்கை உயர் நிதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது பிரதம நீதியரசராக இருந்தவர் சரத் என் சில்வா, இவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். இதனால் இந்த வழக்கைத் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராகவே உயர் நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. மகிந்த ராஜபக்ச காப்பாற்றப்பட்டார். ஆனாலும் பின்னர் ஓய்வு பெற்ற நீதியரசர் சரத் என் சில்வா, மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக் கொண்ட நிலையில், கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்துக்கான தீர்ப்பை அப்போது மகிந்த ராஜபக்சவுக்குச் சாதகமாகவே வழங்கியதாகக் கூறியிருந்தார்.

ஊழல் நடந்தது என்று தீர்ப்பு வழங்கியிருந்தால் மகிந்த இப்போது சிறையில் இருந்திருப்பார் என்றும் சரத் என் சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். தற்போது சரத் என் சில்வா மீண்டும் மகிந்தவுடன் ந்ண்பராகிவிட்டார் என்பது வேறு கதை.

ஆகவே இங்கே சொல்ல வருவது என்னவென்றால், கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியம் சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் மில்லியன் கணக்கில் நிதிகளைச் சேகரித்துப் பின்னர் தன்னுடைய அரசியல் தேவைக்காகவே மகிந்த பயன்படுத்திருந்தார் என்பது வெளிப்படையாகிறது.

இவ்வாறானதொரு சூழலிலேதான் மகிந்த ராஜபக்ச தற்போது பிரதமராகவும் அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றனர். இந்தவொரு நிலையிலேயே தற்போது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. சுனாமிப் பேரலையின் போது உலக நாடுகள் உடனடியாக உதவி செய்திருந்தன. ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை. ஏனெனில் உலக நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் பெருமளவு உயிரிழப்புகளும் பொருளாதாரப் பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த ரைவரஸ் தொற்றினால் இலங்கையில் பெருமளவு உயிரிழப்புகள் இல்லை. ஆனாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். இதனாலேயே சீனா, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கமும் கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு என்ற பெயரில் நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் இந்த நிதியத்துக்கு நிதியைச் செலுத்த முடியும். தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டத்தினால் தொழில்களை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலருக்கும் உதவியளிக்கும் நோக்கில் இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 609 மில்லியன்கள் இந்த நிதியத்துக்குச் சேர்ந்துள்ளன. வியட்னாம்- அமெரிக்க பௌத்த சம்மேளனத்தின் தலைவர் திக் வின் லீ 15,000 அமெரிக்க டொலர்களை இந்த நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிகளைப் பலர் கையளிக்கின்றனர்.

ஆனால் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்திற்குச் சேர்ந்த நிதி மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது போன்று, கோவிட்- 19 நிதியத்தின் நிதியும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமராக மகிந்த ராஜபாக்சவும் பதவி வகிக்கின்றனர். 2005 இல் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்திற்குரிய நிதி பயன்படுத்தப்பட்டபோது மகிந்த ராஜபக்ச பிரதமராக மாத்திரமே பதவி வகித்திருந்தார்.

கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் திருடப்பட்டது என்று தற்போது மகிந்தவுடன் நண்பராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பந்துல குணர்த்தன, நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு முழுவதும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதி ஊழல் தொடர்பாகவே ஐக்கிய தேசியக் கட்சியினால் பேசப்பட்டிருந்தது.

ஆனால் கோவிட் 19 நிதியம் உருவாக்கப்பட்ட சூழல் அவ்வாறானதாக இல்லை. மாறாக ராஜபக்சக்களுக்குச் சாதகமான பலமான அரசியல் சூழல் ஒன்றே காணப்படுகின்றது. இந்த நிலையில் கோவிட் 19 நிதியத்துக்குச் சேரும் நிதிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கும், வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பயன்படுமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானது.

இருந்தாலும் இந்த நிதி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகவே பயன்படுமென அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இலங்கையின் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டதல்ல என்று சட்ட வியாக்கியாணம் கொடுக்கப்பட்டு வந்தாலும், கெல்ப்பிக் அம்பாந்தோட்டை நிதியத்தின் மோசடி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை மகிந்தவுக்குச் சாதகமாக மாற்றியமைத்ததை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சரத் என் சில்வாவே போட்டுடைத்துள்ளார்.

எனவே நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எழும் கேள்விகளில் நியாயம் இருக்கலாம்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பில் பல ஊழல் மோசடிகள் நடந்திருப்பதை இலங்கை நாடாளுமன்றக் கன்சாட் அறிக்கைகளை வாசித்தாலே புரியும். கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்துக்குரிய நிதி, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் திருடப்பட்டது என்று தற்போது மகிந்தவுடன் நண்பராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பந்துல குணர்த்தன, நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு முழுவதும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதிய ஊழல் தொடர்பாகவே ஐக்கிய தேசியக் கட்சியினால் பேசப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை ஒன்பது பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். 190 பேர் தொற்றுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டத்தினால் சுயதொழில் முயற்சியாளர்கள், கூலித் தொழிலாளர்கள். சில தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு பலர் தொழில்களை இழந்துள்ளனர்.

2004 இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் அம்பாந்தோட்டையில் மாத்திரம் நான்காயிரம் பேர் உயிரிழந்தும் பல்லாயிரக்காணக்கானோர் காணாமல் போயும் காயமடைந்தும் இருந்தனர். எனவே இவர்களுக்காக உருவாக்கப்பட்ட கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியத்தில் இருந்த நிதி உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கோவிட்- 19 நிதியத்தின் நிதி உரிய முறையில் பகிர்ந்நதளிக்கப்படுமா என்ற சந்தேகங்களில் மாற்றுக் கருத்திருக்காது.