தமிழ் பேசும் தாயகமான கிழக்கு மாகாணத்தில்

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஜனாதிபதி செயலணி- இன அடையாளங்கள் அழிக்கப்படும் ஆபத்து

இலங்கை ஒற்றையாட்சி அரச நிறுவனங்களை களமிறக்கியுள்ள சிங்கள அரசியல் தலைவர்கள்
பதிப்பு: 2020 ஜூன் 04 22:09
புதுப்பிப்பு: ஜூன் 06 19:14
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பதினொருபேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதி செயலணிக்குழுவில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதிகாரபூர்வமாக கண்டனங்கள் எதனையுமே வெளியிடவில்லை. பௌத்த மகா சங்கத்தின் ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தச் செயலணி அமைக்கப்பட்டது
 
கிழக்கு
இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதிக்கான பௌத்த சமய ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்ற மே மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பதினொரு பேர் கொண்ட செயலணி ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. கிழக்கில் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளமிடப்பட்ட பிரதேசங்கள் அடங்கிய ஆவணக் குறிப்பு ஒன்றை தேரர் ஒருவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கும்போது எடுக்கப்பட்ட படம் இது
இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த பிக்குகள், இலங்கை இராணுவ அதிகாரி, வர்த்தகர், பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக பதினொருபேர் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தபோது இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் வடக்குக் கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, துறைசார்ந்த தமிழ்- முஸ்லிம் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேண்டுமெனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.

ஆனால் கோட்டாபய ராஜபக்ச சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத் தொல்பொருள் ஆராச்சித் திணைக்களத்திற்கு முற்றுழுமுதாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து அரசாங்கம் செயற்படுவதாகக் காண்பிக்க வேண்டியதொரு தேவை ராஜபக்ச அரசாங்கத்துக்கு உள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவையும் பெற வேண்டுமென்ற நோக்கில் வடமாகாணத்திற்கு இப்படியானதொரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்து இந்தச் செயலணி அமைக்கப்பட்டதாகத் தமிழர்கள் கருதிவிடவும் முடியாது.

குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பொத்துவில், புல்மோட்டைப் பிரதேசங்களை இலக்குவைத்தே இந்தச் செயலணி அமைக்கப்பட்டதெனச் சிலர் கருதலாம். இந்தச் செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பனமுரே திலகவன்ச தேரர், புல்மோட்டையில் விகாரை ஒன்றை அமைக்க முற்பட்டிருந்தார். முஸ்லிம் மக்களின் கடும் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டிருந்தது.

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கோட்பாடடை உடைப்பதற்கு கிழக்கில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்த சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் திட்டங்கள், தற்போது முஸ்லிம்களையும் இலக்கு வைப்பதற்குப் பிரதான மூல காரணம் ஒன்று உண்டு

ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் பனமுரே திலகவன்ச தேரருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுத் தற்போது அங்கு விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போதே அங்கு விகாரை மற்றும் புத்தர் சிலைகள் அமைக்கும் பணிகள் முஸ்லிம்களின் எதிர்ப்புகளின் மத்தியிலும் இடம்பெற்றிருந்தன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் சென்ற மே மாதம் 15 ஆம் திகதி பொத்துவில் கடற்கரை விகாரையின் பாதுகாப்பு இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மே மாதம் 14 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் விகாரையின் பாதுகாப்பு இலங்கைக் கடற்படையிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி ஜனாதிபதி செயலணி பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2018 ஆம் ஆண்டு இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன.

அப்போது ஆளுநராக இருந்த ரோகிதபோகொல்லாகம உள்ளிட்ட அதிகாரிகளைக் கொழும்பில் சந்தித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு, இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் காணி அபகரிப்புத் தொடர்பாக முறையிட்டிருந்தது. இதனால் காணி அபகரிப்பும் கைவிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அங்கு காணி அபகரிக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை 2014 ஆம் ஆண்டு புல்மோட்டை அரிசிமலையில் புனிதபூமித் திட்டத்தின் கீழ் தோட்டக் காணிகளை அபகரிக்க முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனால் பலர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் ஐநூறு ஏக்கர் காணிகளையே பௌத்த தேரர்கள் இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு அபகரிக்க முற்பட்டனர். அங்கு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சிறிய விகாரை ஒன்று கட்டப்பட்டிருந்தது.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பௌத்த விகாரைகள் இருந்ததாக தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர்களான பத்மநாதன், புஸ்பரெட்ணம் ஆகியோர் கூறுகின்றனர். அதுவும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தர்களாக இருந்த தமிழர்கள் பலர் மகாயான பௌத்த சமயத்தையே பின்பற்றியிருந்தனர். சிங்களவர்கள் தேரவாத பௌத்த சமயத்தையே இன்று வரை பின்பற்றுகிறனர்

அதனை மையமாகக் கொண்டே அந்தப் பகுதியைப் புனித பூமியென தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் பிரகடனப்படுத்திருந்தது. அதேபோன்று திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்திலும் புத்த தாதுக் கோபுரம் ஒன்றை நிறுவுவதில் கடந்த ஆண்டு சர்ச்சை ஏற்பட்டுத் தற்போது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசம் தமிழ் மக்களின் பூர்விக வழிபாட்டுப் பகுதியாகும். இந்த நிலையில் அங்கு பலாத்காரமாகப் பௌத்த பிக்கு ஒருவர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தங்கியிருந்து வருகிறார்.

திருகோணமலை சேருநுவர பிரதேச செயலகத்தை மையமாகக் கொண்டே சிங்களக் குடியேற்றங்கள் புனித பூமித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரிப்பு என்ற தமிழ்க் கிராமமே சேருநுவர என்ற சிங்களப் பெயராக ஜே.ஆர் காலத்தில் மாற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான திருகோணமலையின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த கொட்டியாரப்பற்று தமிழ் பேசும் மக்களின் மரபுவழிப் பிரதேசமாகும்.

தற்போது வெருகல் பிரதேச செயலகம் , சேருநுவர பிரதேச செயலகம் ஆகிய மூன்று பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் நோக்கில் அமைக்கப்பட்ட சேருநுவர பிரதேச செயலகம், 16 கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்டுள்ளது.

இதேபோன்று இலங்கைத்துறை என அழைக்கப்படும் முகத்துவாரம் என்ற தமிழ்க் கிராமத்தில் பாரம்பரியமாக மக்கள் வழிபட்டு வந்த குஞ்சிதபாத மலை பாலமுருகன் ஆலயம் இராணுவத்தின் உதவியோடு இடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தமிழ்க் கிராமம் லங்கா பட்டுன என்ற பெயராலேயே தற்போது அழைக்கப்படுகின்றது.

அத்தோடு பனித பூமித் திட்டத்தின் கீழ் லங்கா பட்டுன சமுத்திரகிரி என்கிற பௌத்த விகாரை கட்டப்பட்டு அங்கு பௌத்த பிக்கு ஒருவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். முகத்துவாரம் கிராமத்துக்கு அருகாக உள்ள வாழைதோட்டம் என்ற தமிழ் கிராமும் கிசல்கேடோவதா என்ற சிங்களப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்துக்கு அருகாகவுள்ள கல்லடி என்கிற மற்றுமொரு தமிழ் கிராமத்தில் அமைக்க்ப்பட்டிருந்த ஸ்ரீ மலை நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு பஷனா பப்பாத ராஜமஹா என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறானதொரு நிலையில் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து அமைக்கப்பட்டுள்ள மேற்படி செயலணி தனியே முஸ்லிம் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டதாகக் கருதி தமிழர்கள் அமைதியாக இருந்துவிட முடியாது.

கல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேச செயலகத்தை அமைக்கும் முயற்சியில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் சில பௌத்த பிக்குமார் செயற்படுவது கூட கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயம்தான்.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரான சூழலில் தமிழ் முஸ்லிம் உறவைப் பிரிக்கக் கையாளப்பட்ட இந்திய- இலங்கை அரசுகளின் தந்திரோபாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எடுபட்டது போன்று, தற்போதைய சூழலில் முஸ்லிம்களிடம் இருந்து மேலும் தமிழர்களை அந்நியப்படுத்தும் திட்டத்திற்குள் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுவிடக் கூடாதென்பதுதான் தமிழ் பேசும் மக்களின் கருத்தாக இருக்கும்.

1948 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்குக் மாணங்களை குறிப்பாகத் கிழக்கு மாகாணத்தைச் சிங்கள மயமாக்குவது என்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் திட்டம் 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் ஆரம்பிக்கப்பட்டுக் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், இலங்கை அரச நிறுவனங்களின் செயற்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதையே இந்தச் செயலணி கோடிட்டுக் காண்பிக்கிறன.

1948இல் திட்டமிடப்பட்டதை 1983இல் ஜே.ஆர் அரசியல் ரீதியாக ஆரம்பித்தார். இன்று கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரச நிறுவனங்களின் ஊடாகச் சட்டரீதியான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்

ஆகவே கோட்டாபய ராஜபக்ச நியமித்த இந்தச் செயலணி, எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்துக்குமான தொல்பொருள் ஆராய்ச்சிகள் பற்றிய விடயங்களை தமிழர்களின் ஆதரவுகள், ஆலோசனைகள் எதுவுமேயின்றி மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. (ஏலவே அவ்வாறுதான் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன)

குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் இந்தச் செயலணியே வடமாகாண தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய விவகாரங்களையும் மேற்கொள்ளும் என அரச வர்த்தமானி இதழ் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கோட்பாடடை உடைப்பதற்கு கிழக்கில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்த சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல் திட்டங்கள் தற்போது முஸ்லிம்களையும் இலக்கு வைப்பதற்குப் பிரதான மூல காரணம் ஒன்று உண்டு. அதாவது மொழியால் இரண்டு சமூகங்களும் ஒன்று சேர்ந்துவிட்டால் கிழக்கில் தமிழ் பேசும் சமூகம் பெரும்பன்மையாக மாறிவிடும் என்ற அச்சமானதொரு நிலைதான்.

இதனாலேயே கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பௌத்த குருமார் சிலரும் ஆதரவு வழங்கியிருந்தனர். கலாச்சாரத்தால் தமிழ் மக்களை தங்களோடு இணைத்துவிட வேண்டுமென மிக இலகுவாக சிங்கள பௌத்த பேரினவாதம் கருதியிருக்கலாம்.

கிழக்கில் பௌத்த சின்னங்கள், மரபுரிமைகள் இருப்பதாகப் புனைவுகள் செய்யப்பட்டு சில பிரதேசங்கள் அடையாளமிடப்பட்டிருந்தன. ஆனாலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பௌத்த விகாரைகள் இருந்ததாக வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன் உட்பட பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதுவும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தர்களாக இருந்த தமிழர்கள் மகாயான பௌத்த சமயத்தையே பின்பற்றியிருந்தனர். ஆனால் சிங்கள மக்கள் தேரவாத பௌத்த சமயத்தையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர். ஆகவே கிழக்கில் பௌத்த சின்னங்கள் இருந்தாக அடையாளமிடப்பட்ட பிரதேசங்கள் மகாயான பௌத்த சமயத்தைப் பின்பற்றிய தமிழர்களுடையது என்ற முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும்.

ஆனால் அந்த வரலாற்று ஆராய்ச்சிகள் எதனையுமே செய்யாமல் அல்லது தொல்லியத்துறைப் பேராசிரியர்களான பத்மநாதன், புஸ்பரட்ணம் போன்றவர்களின் ஆலோசனைகள் எதுவுமேயின்றித் தன்னிச்சையாகக் கொழும்பை மையப்படுத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் இன ரீதியான வேறுபாடுகளையே காண்பிக்கும்.

இனமொன்றின் கலாச்சாரங்கள் பண்பாடுகளை அழித்தல் வரலாறுகளைத் திரிபுபடுத்தல், மரபுவழி அடையாளங்களை மாற்றுதல், பொருளாதாரச் சுரண்டல்கள், நில அபகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதும் இன அழிப்பு என்ற வரையறைக்குள் வரும்.

திருகோணமலை சேருநுவர பிரதேச செயலகத்தை மையமாகக் கொண்டே சிங்களக் குடியேற்றங்கள் புனித பூமித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

ஆகவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இன்று வரை ஒரு தசாப்த காலத்தின் பின்னரான சூழலில், வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பின் கீழ் அந்தப் பிரதேசத்திற்குரிய மரபுவழி உரிமைகளும் நிலவுரிமைகளும் ஒவ்வொரு அரச திணைக்களங்கள் மூலமான செயற்பாடுகளினால் கபளீகரம் செய்யப்படுவதாகவே மக்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க இந்திய நாடுகளின் ஒத்துழைப்போடு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நல்லாட்சி எனத் தம்மைத்தாமே கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலேயே, கொழும்பை மையப்படுத்திய அரச திணைக்களங்கள் கபளீகரத் திட்டங்களை சட்டத்தால் அமுல்படுத்தியது என்ற கருத்துக்களும் உண்டு.

ஜனாதிபதி செயலணியில் அங்கம் பெறுவோரின் விபரங்கள் வருமாறு

1. எல்லவால மேதானந்தா தேரர்

2. பனமுரே திலகவன்ஷh தேரர், வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பிரதான மத குரு

3. மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன : பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

4. டாக்டர் சேனரத் பண்டாரா திசாநாயக்க: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்

5. செல்வி சந்திரா ஹெரத் : காணி ஆணையாளர்

6. செல்வி A.L.S.C. பெரேரா பிரதம நில அளவையாளர்

7. பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா சிரேஷ்ட விரிவுரையாளர், களனி பல்கலை கழகம்

8. பேராசிரியர் கபில குணவர்தன: மருத்துவ பீடம் , பேராதெனிய பல்கலை கழகம்

9. தேசபண்டு தென்னகூன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

10. H.E.M.W.G. திசனாநாயக்க: கிழக்கு மாகாண காணி ஆணையாளர்

11. திலித் ஜெயவீரா: பணிப்பாளர் , தெரன சிங்கள ஊடக வலையமைப்பு