இலங்கை ஒற்றையாட்சி அரசின் வியூகம்

பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

கூட்டாச்சி அமைந்தால் சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி நிதியுதவியளிக்கும் வாய்ப்புமுள்ளது
பதிப்பு: 2020 ஜூன் 11 15:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 11 17:54
main photo main photo
- -அ.நிக்ஸன்-
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
 
மகிந்த
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும் நிதி நெருக்கடிகளை ராஜபக்ச அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. கொரேனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட முடக்க நிலையினாலும் நிதி நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு சென்றவாரம் கலந்துரையாடியிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட படம் இது.
அரசு ஒன்று தனது நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதும், அனைவருக்கும் ஆட்சியில் சம பங்கு வழங்க வேண்டுமென்பதும் அரசியல் விஞ்ஞானக் கோட்பாட்டுகள் என்பதோடு அது சர்வதேச நியமங்களுமாகும். சட்ட அறிஞர் டைசியின் சட்ட ஆட்சி பற்றிய கருத்துக்கூட, ஜனநாயக நாடொன்றில் ஏற்புடையதே.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று அரசியல் யாப்பில் கூறப்பட்டிருந்தாலும், அதன் தன்மை செயற்பாட்டில் இல்லையென்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் கூறியிருக்கின்றனர். ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, சிங்கள முற்போக்குச் சக்கதிகள் பலர் அவ்வாறு கூறியிருந்தனர்.

குறிப்பாக 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இடதுசாரிச் சிந்தனையுடைய அனைத்துச் சிங்கள முற்போக்குவாதிகளும், இலங்கையின் ஜனநாயகம் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். ஆனால் 1972 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாகுவதற்குக் காரணமாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவை இந்தச் சிங்கள முற்போக்கு்ச் சக்திகள் அன்று பெரியளவில் விமர்சித்திருக்கவில்லை.

தமிழர்களின் அரசியல் உரிமைக்கான பாதுகாப்பு இந்த யாப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில சிங்கள முற்போக்குச் சக்திகள் மாத்திரமே அன்று கண்டித்திருந்தன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியை, அன்று கடுமையாக விமர்சித்த சிங்கள முற்போக்குச் சக்திகள், சிறிமாவின் மகள் சந்திரிகா 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது வரவேற்றிருந்தனர்.

சிறிமாவோடு அன்று முரண்படிட்டிருந்த மாக்கசியச் சிந்தனையுடைய சிங்கள முற்போக்காளர்கள் சிலரும் சந்திரிகாவின் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துச் சொல்லியிருந்தனர். இலங்கையில் ஜனநாயக மறுமலர்ச்சி என்றும் இவர்கள் வர்ணித்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்திலேதான் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லையென்றும் இதனாலேயே விடுதலைப் புலிகள் அன்று அதனை நிராகரித்ததாகவும் சந்திரிகா அப்போது கூறியிருந்தார். ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தையும் சந்திரிகா நியாயப்படுத்தியுமிருந்தார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்புக்குள் ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்றவொரு நம்பிக்கை மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் உருவானது. 1972இல் இருந்து இன்று வரை சிங்கள முற்போக்குச் சக்திகள் செய்த அறுவடை இதுதான்.

கொழும்பை மையப்படுத்திய மேல்மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா 18 மாதங்களிலேயே பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்றியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதவிக்கு வந்தது. அதனை வரவேற்ற உயங்கொட தேவா, விக்ரர் ஐவன் போன்ற சிங்கள முற்போக்காளர்கள், பின்னர் சந்திரிகாவின் ஆட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. இலங்கை அரசியல் யாப்பில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான சரத்துகள் பற்றியும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம். ஆறாவது திருத்தச் சட்டம் போன்றவற்றையும் நீதித்துறையின் சுயாதீனமற்ற தன்மைகள் பற்றியும் அவர்கள் பேசத் தயங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்று குற்றம் சுமத்திய இந்த விமர்சனங்கள், நீடித்து வந்தவொரு நிலையிலேதான், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்துதான் ராஜபக்சக்களின் ஆட்சி முதன் முதலாக மலர்ந்தது.

ஆரம்பத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோட்டாபய ராஜபக்ச மகிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் நியமிக்கப்பட்டுப் பின்னர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்கிறார். பசில் ராஜபக்ச முக்கிய பொறுப்புள்ள அமைச்சராகிறார். 2007 ஆம் ஆண்டு இளைய மகன் ஜோசித ராஜபக்ச இலங்கைக் கடற்படையில் இணைகிறார். 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முத்த மகன் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.

2009ஆம் ஆண்டு மேமாதம் பெற்ற போர் வெற்றியோடு 2010 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மகிந்த ராஜபக்ச மீண்டும் இரண்டாவது தடவையாக ஆட்சியமைக்கிறார். 2015 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்று அரசாங்கத்தை அமைக்க முற்பட்டபோதுதான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோடு கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய பொது எதிர்க்கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தை அமைக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்;கின்றனர். நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தை மேற்படி சிங்கள முற்போக்குச் சக்திகள் வரவேற்றிருந்தனர். புதிய அரசியல் கலாச்சாரம் என்று கதைசொல்லிச் சித்தரித்திருந்தனர். பேராசிரியர் உயங்கொட தேவா, விக்கிரர் ஐவன், ஜெகான் பெரோ, மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணாண்டோ போன்றவர்கள் பெருமைப்பட்டனர்.

அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்களின் ஆட்சி கவிழ்ந்தது என்று சிங்கள முற்போக்குச் சக்திகள் மகிழ்ந்தன. மைத்திரிபால சிறிசேனவை நெல்சென் மண்டேலா என்று சம்பந்தன் புகழாரம் சூட்டியிருந்தார்.

ஆனால் நடந்தது என்ன? 1972இல் சிறிமாவின் பௌத்த தேசியவாத நோக்கிலான முதலாம் குடியரசு அரசியல் யாப்பை விமர்சிக்க விரும்பாத சிங்கள முற்போக்குச் சக்திகள், 1978இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த முற்போக்கான சிங்களவர்கள், எந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து 2015இல் நடத்திய மைத்திரி- ரணில் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்கள் என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஏனெனில் மைத்திரி- ரணில் முரண்பட்டுக் குழப்பமடைந்தபோது கூட இந்த சிங்கள முற்போக்குச் சக்திகள் அமைதிகாத்தனர். 2015இல் மகிந்தவைக் கவிழ்த்து மைத்திரி- ரணில் ஆட்சியைக் கொண்டு வந்தமைக்கான வேகம் முற்றாகவே இல்லாமல் போனது.

ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் பற்றிய கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் நீத்துப் போகச் செய்யப்பட்டதாகச் சிங்கள அரசியல் தலைவர்களினால் கருதப்பட்டவொரு சூழலிலேதான், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது

அதாவது சிங்கள முற்போக்குச் சக்திகள் எனப்படுவோர் அல்லது இடதுசாரிச் சிந்தனை என்று காண்பிக்கும் சிங்கள முற்போக்காளர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அவ்வப்போது எழுச்சிபெறும் தருணங்களில் புதிய அரசியல் மாற்றம் என்ற சித்தரிப்புகளோடு திசைதிருப்பிச் சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றினர் என்று யாராவது கூறினால், அதனை எவரும் மறுக்க முடியாது.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவார் என்ற ஊகங்கள் 2018 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே எழ ஆரம்பித்தன. அப்போதெல்லாம் இந்தச் சிங்கள முற்போக்குச் சக்திகள் கொதித்தெழவில்லை. அமைதிகாத்தனர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று- 1994இல் சந்திரிகாவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தியபோதும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் கதிரைகளில் அமைத்தியபோதும் கூறிய சித்தரிப்புகள், புனைவுக் கதைகள் போன்று, 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கூற முடியாமல் போய்விட்டது. ஏனெனில் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவும் தீவிர பௌத்த தேசியவாதி என்பது அவர்களுக்குப் புரியும்;.

இரண்டாவது- 1994இல் சந்திரிகாவை ஆட்சியில் அமர்த்தியிருக்கவிலிலையென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் அதிகாத்துப் பொருளாதாரம் மேலும் சரிவடைந்திருக்கும். போரையும் தற்காலிகமாக நிறுத்தியிருக்க முடியாது.

2015இல் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்றிருக்கவில்லையானால். சர்வதேச அரங்கில் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் தீவிரமடைந்திருக்கும். சிலவேளை தமிழ் இனப்படுகொலை என்றுகூட ஜெனீவா மனித உரிமைச் சபையில் விமர்சிக்கப்பட்டிருக்கலாம்.

மைத்திரி- ரணில் அரசாங்கமே ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி ராஜபக்ச குடும்பத்தையும் இலங்கையின் இறைமையையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பையும் காப்பாற்றியிருந்தது. இதனை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டிருந்தார்.

ஆகவே ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் பற்றிய கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் நீத்துப் போகச் செய்யப்பட்டதாகச் சிங்கள அரசியல் தலைவர்களினால் கருதப்பட்டவொரு சூழலிலேதான், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் மீண்டுமொரு சித்தரிப்புக் கதைகளைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி 2015இல் நல்லாட்சியெனக் கூறப்பட்டது போன்றதொரு அரசாங்கத்தை மீண்டும் அமைக்க வேண்டியதொரு நிலை இந்த சிங்கள முற்போக்குச் சக்திகளுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை என்ற கருத்தும் இருந்தது. சமஸ்டி ஆட்சியே நிரந்த அரசியல் தீர்வு என்று கூறிய ஜெகான் பெரேரா, நிமல்கா பெர்ணாண்டோ போன்றவர்கள் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது இலங்கை ஒற்றையாட்சியாட்சி அரசியலமைப்புக்குள் அரசியல் தீர்வை முன்வைக்கலாமென்று கூறியிருந்தார்கள்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இவர்களின் கருத்துகள் வெளிவந்திருந்தன. பேராசிரியர் உயங்கொட தேவா கூட அமைதியாகவே இருந்தார். அரசியல் கருத்துக்களை அவர் இந்தக் காலப்பகுதியில் பெரியளவில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. மைத்திரி- ரணில் ஆட்சியில் நிலைமாறுகால நீதி ஏற்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்கூட அந்தப் பேச்சைக் கைவிட்டிருந்தன.

மாறாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து மரணச் சான்றிதழ் மற்றும் மாததாந்தக் கொடுப்பனவுகளை வழங்குவது பற்றிய பேச்சுக்களையே நடத்தியிருந்தன. போரின் பக்கவிளைவுகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோரி மக்கள் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த ஜனநாயகப் போராடடங்களைக் கூட நிறுத்துவதே இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் நோக்கமாக இருந்தது.

இந்திய- சீன எல்லைகளில் போர்ப்பதற்றம், அமெரிக்காவை மையப்படுத்திய மேற்குலகநாடுகளின் கொரோனாவுக்குப் பின்னரான அரசியல், பொருளாதார நிலை, உள்ளடங்கலாக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியமே இலங்கைத் தேசியத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனை

இவ்வாறானதொரு சூழலிலேதான் ராஜபக்சக்களின் ஆட்சியை 2015இல் கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள்கூட 2020இல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதை எதிர்க்கவில்லை.

ஏனெனில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு, ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்றவொரு நம்பிக்கை மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் உருவானது. 1972இல் இருந்து இன்று வரை மேற்படி சிங்கள முற்போக்குச் சக்திகள் செய்த அறுவடை இதுதான்.

ஆகவேதான் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் இலங்கையில் வருவதில் பிரச்சினை இல்லையென்று கருதிய இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள், தற்போது மைத்திரி- ரணில் அரசாங்கம் போன்று கோட்டாபய- ரணில் அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தாமாகவே முற்படுகின்றன என்ற கருத்துக்கள் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனை இல்லையனெ ஐக்கியதேசியக் கட்சி மறுத்திருந்தாலும், ஈழத்தமிழ் மக்கள் விவகாரம் குறித்த விடயங்களில் ரணில் விக்கிரமசிங்கவோடு கோட்டாபய ராஜபக்ச தொடர்புகளைப் பேணுகிறார் என்றவொரு தகவலும் உண்டு. கோட்டா- ரணில் உறவு பற்றி எதிரணியே கூறுகிறது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் சர்வதேசத்தில் தீவிரமான பேசுபொருளாக இருந்த ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தை, 2015இல் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு தணிக்கை செய்தார் என்பது கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்கு தெரியும். அவர் கட்சி அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதியுமல்ல. எனவே இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் என்ற அடிப்படையில் பௌத்த தேசியவாத சிந்தனையோடு ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லாமலில்லை.

தேசிய அரசியல் எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு பூகோள அரசியல் சூழலுக்கு ஏற்ப இலங்கையை நகர்த்திச் செல்ல வேண்டுமென்பதை மகிந்த ராஜபக்சவும் அறியாதவரல்ல.

அத்தோடு கட்சி அரசியலைத் தவிர்த்து பௌத்த தேசிய இயக்கம் ஒன்றினால் இலங்கையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே மகாநாயக்கத் தேரர்களின் விருப்பமும்கூட. ஆகவே இந்த இடத்திலேதான் முரண்பாட்டில் ஓர் உடன்பாடு என்ற அரசியலை முன்னெடுக்கக்கூடிய நிலையும், அதற்குச் சர்வதேசம் ஒத்துழைப்பையும் நிதியுதவிகளையும் வழங்கக் கூடிய வாய்ப்புகளும் இல்லாமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி போன்று தனிச்சிங்களக் கட்சியாகவே மாறியுள்ளது. குறிப்பிட்ட சில தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே இணைந்துள்ளனர். ஆனால் சஜித் பிரரேமதாச தலைமையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஓரமாகச் சென்று கூட்டுச் சேர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி என்றவொரு புதிய அரசியல் அணியை உருவாக்கியுள்ளன.

ஆகவே கோட்டாபய ராஜபக்சவைப் பொறுத்தவரை, தமிழ் முஸ்லிம் கட்சிகள் கூட்டு இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைப்பதில் பிரச்சினை இருக்காது. ஓப்பாசாரத்துக்காகவும் உலகத்துக்குக் காண்பிக்கவும் ஒரு சில தமிழ் முஸ்லிம்களை அரசாங்கத்தில் இணைக்கலாம் அல்லது அது கூடத் தேவைப்படாது. அப்படித் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லையென்றாலும் இந்தியாவோ அமெரிக்காவோ கேட்கப் போவதுமில்லை.

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலன்களுக்கு ஏற்ப இலங்கையில் எந்த வழியிலாவது அமைதி நிலவினால் போதுமென்பதுதான் ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகள், வல்லரசு நாடுகளின் நிலைப்பாடு. பேர்க்குற்றம் என்பதற்காக ராஜபக்சக்களைத் தண்டிக்க வேண்டுமென்பது அவர்களின் நிகழ்சி நிரலில் முக்கியமானதல்ல.

கட்சி அரசியலைத் தவிர்த்து பௌத்த தேசிய இயக்கம் ஒன்றினால் இலங்கையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே மகாநாயக்கத் தேரர்களின் விருப்பமும்கூட. ஆகவே இந்த இடத்திலேதான் முரண்பாட்டில் ஓர் உடன்பாடு என்ற அரசியலை முன்னெடுக்கக்கூடிய நிலையும், அதற்குச் சர்வதேசம் ஒத்துழைப்பையும் நிதியுதவிகளையும் வழங்கக் கூடிய வாய்ப்புகளும் இல்லாமில்லை

இந்த இடத்திலேதான் சிறிமா அரசாங்கத்தை 1972இல் கண்டிக்காத விமர்சிக்காத இடதுசாரிகள், சிங்கள முற்போக்குச் சக்திகள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் கண்டித்து விமர்சித்து வந்தததையும் 2015இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் புகழ்ந்து தள்ளிப் பின்னர் அமைதிகாத்துத் தற்போது கோட்டா- ரணில் கூட்டாச்சி அரசாங்கம் வரலாமென்ற தகவல்கள் வெளியான பின்னரும்கூட வாய்மூடி இருப்பது பற்றி ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துள்ளது. மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியோடுதான் நேரடி உறவும் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு தயாராகவும் இருக்கிறது.

ராஜபக்சக்கள் ஆட்சியமைத்தாலும் அரசியல் தீர்வுக்காக ஆதரவு வழங்க முடியும் என்ற தொனியில் சம்மந்தன் நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார். இதன் பின்னணியிலும் தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் கோட்டா- ரணில் கூட்டு அரசாங்கம் பற்றிய தகவல்கள் எழுந்திருக்கலாம்.

ஏனெனில் தமிழ் இனப்படுகொலை இல்லை என்பதையும் சர்வதேச விசாரணைகள் முடிவடைந்து விட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார். சமீபத்தில் சுமந்திரன் சிங்கள இணையத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்கூட ராஜபக்சக்களின் அரசியலைத் திருப்திப்படுத்தும் ஒன்றாகவே அமைத்திருந்தன. சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட சத்திய வாக்காகவும் அந்த நேர்காணலைக் கருதலாம்.

இந்திய- சீன எல்லைகளில் போர்ப்பதற்றம், தென்சீனக் கடலில் பதற்றம், அமெரிக்காவை மையப்படுத்திய மேற்குலகநாடுகளின் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னரான அரசியல், பொருளாதார நிலை, உள்ளடங்கலாக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியமே இலங்கைத் தேசியத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனை என்ற அடிப்படையில் இவற்றை நோக்கலாம்.