ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்தோடும், தற்போதைய அரசியல் நகர்வுகள்
பதிப்பு: 2020 ஜூன் 19 13:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 21:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நுழைந்துவிடுமென நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய த ஷொக் டொக்ரின் (The Shock Doctrine) என்ற நூலில் கூறுகிறார். அதாவது உதவி என்ற பெயரில் ஒரு நாட்டில் வாழும் இனங்களிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அது ஆயுத மோதலாகக் கூட மாறிவிடலாம் என்பது ஒன்று, மற்றையது அந்த நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபடுவது அல்லது புதிய கட்சிகள் உருவாகுவது போன்றவற்றைக் குறிக்ககுமென அர்த்தப்படுத்தலாம்.
 
2015இல் நல்லிணக்கம் என்ற பொய் முகமூடியொன்றை உலகத்துக்குக் காண்பிக்கப் புறப்பட்டு, இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று சிதறுப்பட்டுக் கிடக்கின்றன. சர்வதேச உதவிகளைப் பெற்று தமிழர்களின் அரசியல் இருப்புக்கு ஆபத்தை விளைத்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது கட்சி அரசியல் தனித்துத்தைத் தொலைத்துத் தமக்குள் முரண்பாடுகளை மாத்திரமே அறுவடையாக்கியுள்ளன

இங்கே இலங்கையை எடுத்துக் கொண்டால், கடந்த எழுபது ஆண்டுக்கும் மேலான ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தில் 1983ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தலையிட்டிருக்கிறமை வெளிப்படை. ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே அந்தத் தலையீட்டுக் காரணம்.

1983இல் கெரில்லா முறையிலான ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியபோது, வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இராணுவம் சுற்றிவளைப்புச் செய்து ஐம்பது இளைஞர்களைக் கைது செய்தால், அவற்றில் ஐந்து போராளிகளாவது இருப்பார்கள் என்று ஜனாதிபதி றீகன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க உளவுத்துறை ஜே.ஆருக்கு ஆலோசணை வழங்கியதாக ஒரு கதை உண்டு.

இதே காலப்பகுதியில்தான் இந்தியாவும் இலங்கை மீது தலையிடுகிறது. அமிர்தலிங்கம் புதுடில்லிக்குச் சென்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியைச் சந்திக்கிறார். இந்திராகந்தியின் செயலாளர் பார்த்தசாரதியோடும் கலந்துரையாடுகிறார். அப்போது இந்தியாவைத் தாண்டியே அமெரிக்கா இலங்கையோடு உறவு வைத்திருந்தது. இப்போதுள்ள பூகோள அரசியல் நிலைமைபோன்று அப்போதிருக்கவில்லை.

குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலை அப்போது அமெரிக்காவை மையமாகக் கொண்டேயிருந்து. இதன் காரணமாகவே அப்போது இந்திராகாந்தி ஈழப்பேராளிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்திருந்தார். இதுவே இந்தியாவுக்கும் ஈழப் போராளிகளுக்குமான உறவுக்கும் பிரதான காரணமாகியது.

றீகன் தலைமையிலான அமெரிக்கா என்றொரு சக்தி இலங்கையில் கால் பதிப்பதற்கு எதிராகவே ஈழப்போராளிகளுக்கு இந்தியா இடமளித்திருந்தது. அமெரிக்காவின் பக்கம் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழப் போராளிகள் சென்றுவிடக் கூடாதென்ற உள்நோக்கமும் இந்தியாவுக்கு இல்லாமலில்லை.

இலங்கையில் ஏதோவொரு காரணத்தின் அடிப்படையில் 1983இல் ஏற்பட்ட அமெரிக்கத் தலையீடு இன்று வரை இலங்கையில் நீடித்து வருகிறது. அத்துடன் ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னரான சூழலில், அமெரிக்க இந்திய உறவும் வலுப்பெறுகிறது. அதற்குச் சீனாவின் துரித வளாச்சியும் பிரதான காரணம் எனலாம்.

1999. 2000ஆம் ஆண்டுகளில் புலிகளின் மரபுவழித் தாக்குதல் திறன் மேலும் அதிகரித்து வந்ததொரு நிலையிலேயேதான், 2002ஆம் ஆண்டு நேர்வேயின் அனுசரனையோடு அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன

1983ஆம் வரை முரண்பட்டிருந்த அமெரிக்க இந்திய உறவு, இலங்கையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னரான சூழலிலேயே இந்திய அரசு விரும்பியோ விரும்பாமாலே அமெரிக்காவுடன் உறவைப் பலப்படுத்த வேண்டியதொரு அரசியல் சூழல் உருவானதெனலாம்.

1983இல் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனவெறிக் கலவரத்துக்குப் பின்னர் முதன் முறையாகக் கூடிய இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய நிதி அமைச்சர் ரொனி டி மெல், ஈழப்போராளிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் உதவியளிக்காதென நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அவ்வாறே அமெரிக்கா ஈழப் போராளிகளுக்கு உதவியளிக்கவில்லை. ஆனால் இந்தியா தொடர்ந்து உதவியளித்திருந்தது.

ஆனால் அமெரிக்காவையும் இலங்கையையும் தம் பக்கம் வைத்திருப்பதற்கேற்ற முறையிலேயே இந்தியாவின் அந்த உதவி அமைந்திருந்தது என்ற கருத்துக்கள் அப்போது தமிழ்த் தரப்பிடம் இருந்தன. ஐம்பது இளைஞர்களைக் கைது செய்தால் அதில் ஐந்து போராளிகளாவது இருப்பார்களென அன்று கூறிய அமெரிக்கா, முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடக்கும் வரையும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவிகள், நிதியுதவிகள் எனப் பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தன.

அதேநேரம் 1987ஆம் ஆண்டு வடரமராட்சியில், இலங்கை இராணுவம் நடத்திய ஒபரேசன் லிபரேசன் தாக்குதல் வரை விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவியளித்திருந்தது. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சமாதானத்தை உருவாக்க அமைதிப்படை என்ற பெயரில் வந்திறங்கிய இந்திய இராணுவத்தோடு புலிகள் மோத ஆரம்பித்ததும் அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன.

1986ஆம் ஆண்டு ஏனைய போராளிகளை ஒதுக்கிப் பின்னர், புலிகள் தனியொரு இயக்கமாக நின்று போராடியபோதும்கூட இந்தியா உதவியளித்திருந்தது. ஆனாலும் புலிகள் இயக்கம் பற்றிய முன்னெச்சரிக்கை ஒன்றுடனேயே அந்த உதவிகள் அமைத்திந்தன.

அதேபோன்று ஈழப் போராட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய அச்சமானதொரு தூர நோக்குடனேயே, ஏனைய இயக்கங்களை புலிகள் அன்று ஒதுக்கியிருந்தார்கள் என்பதும், அவ்வாறு ஒதுக்கிய பினரான சூழலில் தனியொரு இயக்கமாக நின்று போராடியபோதும்கூட இந்தியா பற்றிய முன்னெச்சரிக்கையுடனேயே புலிகளின் போராட்டச் செயற்பாடுகளும் அமைந்திருந்தன என்பதும் கண்கூடு.

அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கில் தரையிறங்கி முகாம் அமைத்தபோதுசூட புலிகள் அதனை விருப்பியிருக்கவில்லை. 1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ் கோட்டையின் முன்பாக நின்று மக்கள் மத்தியில் உரையாற்றியிருந்த புலிகளின் அப்போதைய அரசியலதுறைப்; பொறுப்பாளர் தியாகி திலிபன் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்தக் கோட்டையில் இருந்து போத்துக்கேயரைக் கலைக்க ஒல்லாந்தரோடு சேர்ந்து போராடியிருந்தோம். பின்னர் ஒல்லாந்தரைக் கலைக்கப் பிரித்தமானியரோடு சேர்ந்து போராடினோம், பின்னர் பிரித்தானியரைக் கலைக்க சிங்களவர்களோடு கூட்டுச் சேர்ந்தோம். பின்னர் சிங்கள இராணுவம் முகாம் அமைத்திருந்தது.

இப்போது இந்திய இராணுவம் முகாமிட்டுள்ளது. இந்தக்கோட்டை எப்போது எமது கைக்கு வருகின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்குச் சுதந்திரம்' இவ்வாறு தலிபன் கூறியிருந்தார்.

தமிழர்களின் அரசியல் போராட்டத்தை ஒடுக்க 1983இல் அமெரிக்காவிடம் உதவி கோரியபோதும் 2009இல் அமெரிக்கா, இந்தியா. சீனா, ஜப்பான் என்று பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியபோதும் அந்த உதவிகள் கிடைத்தபோதும் பெற்ற மகிழ்ச்சி இன்று இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் நிம்மதியைக் குலைத்திருக்கிறன

ஆகவே அரசியல்தீர்வு என்று கூறிக் கொண்டு இலங்கையை ஒன்பது மாகாணங்களாகப் பிரிந்து இந்திய ஆதரவோடு வழங்கப்பட்ட மாகாணசபையைக் கடுமையாக விமர்சித்திருந்த புலிகள், இந்திய இராணுவத்துக்கு எதிரான போரை ஆரம்பித்தனர். நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த திலீபன் மரணித்ததும் போர் ஆரம்பமானது.

அன்றில் இருந்து புலிகளுக்கு எதிராகச் செயற்பட்ட இந்தியா, 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களுக்கே எதிரான மன உணர்வுடன் இலங்கையோடு கைகோர்த்திருந்தது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும்; தீர்மானம் எடுப்பவர்களும் ஈழத் தமிழர்கள் குறித்த ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் இலங்கை அரசுடனான கூட்டுச் செயற்பாடாகவே முன்னெடுத்திருந்தனர்.

1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் உலகம் முழுவதிலும் இஸ்லாமியப் போராளிகள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பொதுமக்களை இலக்கு வைத்துக் குண்டுத் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருந்தனர்.

இதனால் அப்போதைய பூகோள அரசியல், பொருளாராத நகர்வுகளுக்கு எதிராக இருக்கக் கூடியதான ஆயுதப் போராட்டங்களை முதலில் ஒடுக்க வேண்டுமமென்ற ஒரே சிந்தனையின் கீழ் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் கூட்டுச் சேர்ந்தன. இலங்கை அரசாங்கத்துக்குப் புலிகளை அடக்க இது சாதகமாக இருந்தது.

1983இல் அமெரிக்கா மாத்திரம் உதவியளித்திருந்த நிலையில் போராளிகளை அன்று அடக்க முற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலையும், உலக அளவில் ஆரம்பித்த இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதல்களும் சாதகமாகவிட்டன. குறிப்பாக இந்தியாவும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டது.

ஆனாலும் உதவிகள் எதுவுமேயின்றி ஈழ மண்ணில் உள்ள சொந்த வளங்களை மனித மூளையையும் பயன்படுத்திப் புலிகள் இயக்கமும் மரபுவழி இராணுவமாக வளர்ச்சியடைந்து வந்தது. இதனால் சரி. பிழை என்ற விமர்சனங்களையும் கடந்து தமிழச் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காகப் போராடுகின்ற இயக்கம் என்றதொரு தோற்றப்பாடு உலகத்தின் கண்களில் நியாயமாகத் தென்பட்டது. இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் புலிகளோடு போசவேண்டும், அரசியல்தீர்வை முன்வைக்க வேண்டுமென்ற அழுத்தங்களைக் கொடுத்திருந்தது.

1999. 2000ஆம் ஆண்டுகளில் புலிகளின் மரபுவழித் தாக்குதல் திறன் மேலும் அதிகரித்து வந்ததொரு நிலையிலேயேதான், 2002ஆம் ஆண்டு நேர்வேயின் அனுசரனையோடு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதே காலத்தில்தான் பிரிந்திருந்த தமிழக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாகின்றன.

ஈழப் போராட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய அச்சமானதொரு தூர நோக்குடனேயே, ஏனைய இயக்கங்களை புலிகள் அன்று ஒதுக்கியிருந்தார்கள். அவ்வாறு ஒதுக்கிய பினரான சூழலில் தனியொரு இயக்கமாக நின்று போராடியபோதும்கூட இந்திய பற்றிய முன்னெச்சரிக்கையுடனேயே புலிகளின் போராட்டச் செயற்பாடுகளும் அமைந்திருந்தன

1983இல் ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிதான் 2002இல் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டது. அதுவும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடுதான். 1983இல் ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக இருந்தது. இந்தியா தமிழ் போராளிகளுக்கு ஆதரவாக இருந்தது.

2002இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது இந்தியா இலங்கைக்கே கூடுதல் ஆதரவாக இருந்தது. ஈழத்தமிழர் உள்ளிட்ட இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவைக் கேட்டுத்தான் செயற்பட்டுமிருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவோடு சேர்ந்து பயணிக்க வேண்டிதொரு கட்டாய நிலை அமெரிக்காவுக்கு இருந்தது. இரண்டாவது, இலங்கையை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடாமல், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ஈர்த்துவிட வேண்டுமென்ற நோக்கம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. இப்படியானதொரு பூகோள அரசியல் சூழல் 1983இல் இருந்திருக்கவில்லை.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை மையமாக் கொண்ட இந்தப் பூகோள அரசியல் நிலையை மேலும் சாதகமாக்குவதற்கு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியா அமெரிக்க. ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மேலும் வசதியாகவே இருந்தன. 1983இல் ஐக்கிய தேசியக் கட்சியை மாத்திரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவுக்கு, முள்ளிவாய்க்கால் போரின் பின்னரான சூழலில், இந்தியாவின் ஒத்துழைப்போடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தியொன்றையும் வகுக்க முடிந்தது.

அதுதான் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி உருவான மைத்திரி- ரணில் அரசாங்கம். நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கமே ஈழத்தமிழர் விகாரத்தைக் குறிப்பாகப் போர்க்குற்றம். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை இராணுவத்தையும் காப்பாற்றியிருந்தது. குறித்த இரு பிரதான சிங்களக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சியமைத்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே சீனாவுடனான உறவை அதிகளிவில் பேணி வந்தது.

1983இல் ஐக்கிய தேசியக் கட்சியை மாத்திரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவுக்கு, முள்ளிவாய்க்கால் போரின் பின்னரான சூழலில், இந்தியாவின் ஒத்துழைப்போடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தியொன்றையும் வகுக்க முடிந்தது. அதுதான் 2015ஆம் ஆண்டு உருவான மைத்திரி- ரணில் அரசாங்கம்

ஆனாலும் 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்;றியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி, சீனாவோடும் உறவைப் பேண ஆரம்பித்திருந்தது. பௌத்த கலாச்சார உறவுகள் அதற்குக் காரணம் என்று ரணில் விக்கிரமசிங்க அப்போது கூறியிருந்தார்.

2015ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமெரிக்கா. இந்தியாவோடு உறவுகள் இந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை சீனாவோடு கூடுதலாலன உறவுகளைப் பேணியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் உதவிபுரிகின்றன. ஆனாலும் சீனாவோடு இணைந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளோடும் இலங்கை சமாந்தரமாகவே பயணிக்க வேண்டியதொரு அவசியம் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். நல்லாட்சி எனப்படும் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டதே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் முயற்சியினாலேதான்.

அப்படியிருந்தும சீன உறவு ரணிலுக்குத் தேவைப்பட்டிருந்தமைக்கு பௌத்ததேசியவாதச் சிந்தனையே காரணமெனலாம். மேற்படி இரு பிரதான கட்சிகளும் பௌத்ததேசியச் சிந்தனையின் அடிப்படையில்தான் சீனாவோடு உறவுகளைப் பேணி வந்தன என்பதும் வெளிப்படை. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களை இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டுமென்ற உதவிக்காக மாத்திரமே அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும் இலங்கை உறவுகளைப் பேணியிருந்தது என்பது நிதர்சனம்.

பொருளாதார உதவிகளும் மற்றுமொரு நோக்கம். ஆனால் இவ்வாறு உதவிகளைப் பெற்று ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்புக்கு ஆபத்தை விளைத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்று பிளவுபட்டுக் கட்சி அரசியல் தனித்துவம் எதுவுமேயின்றி முரண்பாடுகளை மாத்திரமே அறுவடையாக்கியுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2016 ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 56 மூத்த உறுப்பினர்கள் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன என்ற கட்சியை மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தி உருவாக்கினர். 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 99 முத்த உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணியை உருவாக்கினர்.

1983ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஆரம்பித்த போர் 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியில் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச அரங்கில் இனப்படுகொலை என்ற தீர்மானத்தோடு ஈழத்தமிழர்களுக்குக் குறைந்த பட்சம் சமஸ்டி முறையிலான அரசியல்தீர்வேனும் வந்துவிடுமோ என்றவொரு சந்தேகமும் அச்சமும் சிங்கள அரசியல் தலைவர்களிடம் உருப்பெற்றது.

இதன் காரணமாகவே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டதெனலாம். ஆனால் 2016இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டது. 2020இல் ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டது. தற்போது இராணுவ நிர்வாகியொருவரின் கையில் இலங்கையின் ஆட்சி உள்ளது.

இரு பிரதான கட்சிகளும் பிளவுபட்டுப் புதிய அரசியல் அணிகளை உருவாக்கியுள்ள நிலையில், அரசியல்வாதியே அல்லாத, கட்சி அரசியலில் ஈடுபடாத கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருப்பதை அனுபவமுள்ள சிங்கள அரசியல்வாதிகள் பலரும் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இதுவரையும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது பௌத்த இனவாதமே. தனியே தமிழர்களுக்கு எதிரான இனவாதம் மாத்திரமல்ல முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்த்துடனேயே அவர்களின் அரசியல் நகர்கிறது.

கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் பலரும் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இதுவரையும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது பௌத்த இனவாதமே. தனியே தமிழர்களுக்கு எதிரான இனவாதம் மாத்திரமல்ல முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்த்துடனேயே அவர்களின் அரசியல் நகர்கிறது

ஆகவே நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் அமெரிக்கா பற்றிக் கூறியதை சிங்கள அரசியல் தலைவர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை ஒடுக்க 1983இல் அமெரிக்காவிடம் உதவி கோரியபோதும் 2009இல் அமெரிக்கா, இந்தியா. சீனா, ஜப்பான் என்று பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியபோதும் அவ்வாறே அந்த உதவிகள் கிடைத்தபோதும் பெற்ற மகிழ்ச்சி இன்று இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் நிம்மதியைக் குலைத்திருக்கிறது.

இந்த நிம்மதிக்குலைவைத் தொடரவிடாமல் தடுப்பது எப்படி? அல்லது மீண்டும் எந்த அடிப்படையில் இழந்துபோன நிம்மதியைக் கண்டுபிடிப்பது என்பது பற்றிச் சிங்கள அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது வெறுமனே தமிழர்களுக்கு மாத்திரம் போதிப்பதல்ல 2015இல் இலங்கையில் மீள் நல்லிணக்கம் என்ற பொய் முகமூடியொன்றை உலகத்துக்குக் காண்பிக்கப் புறப்பட்டு, இன்று இரு பிரதான சிங்களக் கட்சிகளும் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

கட்சி அரசியலே இல்லாமல் தனியொருவரின் கைகளில் ஆட்சி பறிபோனதற்காண காரணம் பற்றி இனிமேலும் சிந்நதிக்கத் தவறினால், அல்லது மீண்டும் மீண்டும் சிங்களப் பௌத்த பேரினவாத இன்பத்துக்குள் முழ்கிக் கிடந்தால் இலங்கைத் தீவில் நிம்மதி என்பது வெகுதூரம் நோக்கிய சிந்தனையே.