இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த

‘அச்சாப்பிள்ளை’ அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்

நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல்
பதிப்பு: 2020 செப். 25 10:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 01:36
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்ற அனுமதி வழங்கவில்லையென்றால், 2004ஆம் ஆண்டில் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்புச் செயற்பாடுகள் ஏன் ஞாபகத்தக்கு வரவில்லை?

இது தொடர்பாகக் கண்டனம் வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தகவல்) நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதைத் தடுக்க முடியாதென்பதும், அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உணர்வுகளைத் தடுக்க முடியாதென்ற தொனியில் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அதேவேளை, தடையுத்தரவு தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட முற்பட்டபோது சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தடைவிதித்தார்.

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளதால் அந்த விவகாரம் தொடர்பாக நரடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை வெளியிட முடியாதென அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சிறப்பு அறிக்கை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை அரசியலமைப்பில் நாடாளுமன்றத்திற்குரிய நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் சரத்துகளை மேற்கோள் காண்பித்து அவசர நிலமையின்போது கட்சித் தலைவர் ஒருவர் சிறப்புரையாற்ற முடியுமெனச் சுட்டிக்காட்டினார்.

அதனை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் நியாயப்படுத்தி சபாநாயகர் தடை விதித்தமை தொடர்பான தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஜே.வி.பி உறுப்பினர்களும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

ஆனால் தியாகி திலீபன் தொடர்பாகவோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் பயணம் குறித்தோ சிங்கள உறப்பினர்கள் எதுவுமே கூறவில்லை. மாறாகக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவசர நிலமையில் சிறப்பு அறிக்கை வெளியிடுவதற்கு கஜேந்திரகுமாருக்கு இருக்கின்ற நாடளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழான சிறப்புரிமைக்கு ஆதரவாக மாத்திரமே குரல் கொடுத்தனர்.

அதாவது உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமை குறித்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவான உரிமை பற்றியே அவர்கள் வாதிட்டு நியாயப்படுத்தினர்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பாகவும் திலீபன் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் நிலையில், அல்லது அந்தப் போராட்டம் நியாயமானது என்பதையோ கஜேந்திரகுமாருக்காக ஆதரவுக் குரல் கொடுத்த சிங்கள உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வரலாற்று ரீதியான உண்மை. ஆனால் சுமந்திரன் ஆதரவாகப் பேசினர் என்பது அவருடைய மனச்சாட்சியாகக் கூட இருக்கலாம்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அதுவும் ஒற்றையாட்சியை மேலும் மேலும் உறுதிப்படுத்த முற்படும் நாடாளுமன்றத்தில், அதன் அரசியல் யாப்பு விதிகளை மேற்கோள் காண்பித்து ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையிலா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் போட்டியிட்டது என்ற கேள்விகள் எழாமலில்லை

எவ்வாறாயினும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அதுவும் ஒற்றையாட்சியை மேலும் மேலும் உறுதிப்படுத்த முற்படும் இந்த நாடாளுமன்றத்தில், அதன் அரசியல் யாப்பு விதிகளை மேற்கோள் காண்பித்து ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையிலா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் போட்டியிட்டது என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஏனெனில் முன்னணியைப் பொறுத்தவரை அதுவும் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீது கொள்கைசார் நம்பிக்கை ஒன்று அநேகமான மக்களிடம் இருந்தது; இருக்கிறது. ஆகவே நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை வெளியிட சபாநாயகர் மறுப்புத் தெரிவித்ததுமே, பதிலுக்கு அரசியலமைப்பு விதிகளை மேற்கோள்காட்டிப் பேசியது போன்று ஏன் சபையில் எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விகளும் மறுபுறத்தில் எழுகின்றன.

உதாரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை 20ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபைச் சமர்ப்பிப்பதற்கு எதிராகத் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து சபை நடுவாகச் சபாநாயகர் ஆசனத்துக்கு முன்பாக வந்து நின்று சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அவ்வாறு போராட்டம் நடத்தியபோது அரசாங்கத்தரப்பு குழப்பத்திற்கு மத்தியிலும் குறித்த நகல் வரைபை அரசாங்கம் சமர்பித்தமை என்பது வேறு. ஆனால் தமது எதிர்ப்பை சஜித் அணி வரலாற்றில் பதிவு செய்துள்ளது. அதன் மூலம் உலகத்துக்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பையும் வெளிப்படுத்தியு்ள்ளது.

ஆகவே குறைந்த பட்சம் அவ்வாறான எதிர்ப்புச் செயற்பாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீலிபன் நினைவேந்தல் தடை விவகாரத்தில் ஏன் நாடாளுமன்றத்திற்குள் வெளி்ப்படுத்தவில்லை? இரண்டு உறுப்பினர்கள்தான் என்றாலும் கூட சபைக்கு நடுவாக வந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால், தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் அந்த எதிர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருக்கும்.

ஆகவே குறைந்தது 12 தமிழ் உறுப்பினர்கள் சபைக்கு நடுவாக நின்று திலீபன் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தால், சபாநாயகர் என்ன செய்திருப்பார்? சிங்கள உறுப்பினர்களால் என்ன செய்திருக்க முடிந்திருக்கும்?

கஜேந்திரகுமாருக்குச் சிறப்புரை நிகழ்த்த இடமளிக்கவில்லை என்று குரல் கொடுத்த சஜித் அணி மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் சபைக்கு நடுவாக வந்து நின்று போராட்டத்தில் இணைய வாய்ப்பில்லை என்பது வெளிப்படை. ஆகவே அவர்களின் அந்தக் கபட நாடகத்தையும், நீலிக் கண்ணீரையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்தியிருக்கலாமல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தை ஏன் நழுவ விட்டார்கள்?

சிங்கள ஆட்சியாளர்களின் ஏமாற்றுத் தந்திரங்களை வெளிப்படுத்தி எழுபது ஆண்டுகளாக ஆளும் கட்சியாகவும் எதிர்க் கட்சியாகவும் மாறி மாறிப் பதவி வகித்து இப்படித்தான் ஏமாற்றினார்கள் என்பதை முன்னணி வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிட்டமைக்கான நோக்கங்களில் இதுவும் ஒன்றுதானே?

ஆகவே அப்படியொரு எதிர்ப்புச் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் ஈடுபடவில்லை? 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன். பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் சமாதானப் பேச்சுக்களின்போது இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்பதைக் கண்டித்து அவ்வப்போது சபை நடுவாக வந்து எதிர்ப்புக் கோசங்களை எழுப்பிச் சபை நடவடிக்கைகளையே செயலிழக்கச் செய்திருந்தார்கள் என்பது வரலாறு.

இவர்கள் மூவரும் சபைக்கு நடுவாகச் சென்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்களே என்று நினைத்து விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் சபைக்கு நடுவாக வந்து நின்று கூலிக்கு மாரடிப்பது போன்று அன்று கோசம் எழுப்பியிருந்தார்கள். அப்படித் தமிழரசுக் கட்சியை இறங்கி வர வைத்தமை கூட கஜேந்திரகுமார். கஜேந்திரன் ஆகியோருக்கு அன்று பெரு வெற்றியாகவே இருந்தது.

ஆகவே அப்போது அப்படியெல்லாம் எதிர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட முடிந்ததென்றால், இன்று ஏன் தீலிபன் விவகாரத்தில் சபைக்குள் போராட முடியாமல் போனது என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாகவே இவர்கள் அவதானிக்கப்பட்டனர்.

கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் அப்படிச் சபைக்குள் செயற்பட்டிருந்தால் கஜேந்திரகுமார் பேசியபோது ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரனும் தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து சபைக்குள் போராடியிருப்பார்களா இல்லையா என்பதைக் கூடப் பரீட்சித்துப் பார்த்திருக்கலாம்.

இந்தியத் தூதரகம் நடத்துகின்ற விருந்துபசாரத்துக்குச் செல்ல முடியுமென்றால் ஏன் அந்தத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த முடியவில்லை?

ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சி முன்னர் நடத்திய அரசியலைப் போன்றதொரு அச்சாப்பிள்ளை அரசியலைத் தான் நடத்துகின்றது என்ற கருத்துக்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்த அச்சாப்பிள்ளை அரசியலை எதிர்பார்த்து இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பவுமில்லை.

இதேவேளை, தமிழரசுக் கட்சி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி செல்வச்சந்திதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இது வரவேற்கக் கூடியதுதான்.

ஆனால் இவர்களிடம் சில கேள்விகள் உண்டு-- யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏன் நடத்த முடியாது? இந்திய- இலங்கை அரசுகளிடம் அரசியல் விடுதலை கோரியே திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு. ஆகவே அவ்வாறான போராட்டத்துக்கு ஏன் இவர்கள் தயாராகவில்லை?

ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்படியொரு போராட்டத்தை நடத்த முற்படவில்லை அல்லது விரும்பவில்லை? இந்தியத் தூதரகம் நடத்துகின்ற விருந்துபசாரத்துக்குச் செல்ல முடியுமென்றால் ஏன் அந்தத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த முடியவில்லை?

கொழும்பு காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் நடத்தினால் நிச்சயமாக இலங்கைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்று தெரியும். ஆகவே அவ்வாறு தெரிந்தும் போராட்டம் ஒன்றை நடத்தி ஏன் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை? அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் பொலிஸார் கைது செய்து அடைப்பார்கள் ஆகவே சிறைச்சாலைகள் நிறையும். ஆகவே அவ்வாறு சிறைச்சாலைகள் நிறையக் கூடிய போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏன் நடத்தவில்லை?

வெறுமனே தேர்தல் அரசியல் மட்டும்தான் என்பதே இங்கு வெளிச்சமாகிறது. அதற்காகவே தமிழ்த் தேசியம் பேசப்படுகின்றது என்ற உண்மைகள் தற்போது மக்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டன. கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கத்தைத் திருப்திப்படுத்திக் கொண்டு தேர்தல் அரசியல் மூலமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அதன் வசதிகள், சலுகைகள் போன்ற வரப்பிரசாதங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் செயன்முறைகள் மாத்திரமே தமிழ்ப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரிடம் தற்போது விஞ்சிக் காணப்படுகின்றன.

பூகோள அரசியல் சூழலுக்கு ஏற்ப ஜனநாயக வழியாலான அகிம்சைப் போராட்டங்களை நடத்த எவரும் தடை விதிக்க முடியாது. அந்தப் போராட்டங்களை சட்டங்களால் கூடத் தடுக்க முடியாது. வேண்டுமானால் சிறைச்சாலைக்குள் இருந்து போராட்டம் நடத்துவதை பயங்கரவாதமாக இலங்கை அரசாங்கம் சித்தரிக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளினால் அவ்வாறு கூற முடியாது. தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்களின் அரசியல் விடுதலைக்காகச் சிறையில் இருந்து போராடியவர் நெல்சன் மண்டேல என்பது உலகம் அறிந்த உண்மை.

அது போன்றதொரு அரசியல் போராட்ட முறையை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் 2009ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சாதாரண கட்சி அரசியல் முறைக்குள் அகப்பட்டது மாத்திரமல்லாது, தேர்தல் அரசியல் முறையினாலேயே அரசியல் விடுதலையைப் பெறலாம் அல்லது இலங்கை நீதித்துறையின் மூலம், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் சட்டங்களின் மூலம் அரசியல் விடுதலையைப் பெற முடியும் என்ற தவறான அணுகுமுறையை தமிழரசுக் கட்சி கற்பித்தது கற்பித்தும் வருகின்றது.

அதனை அப்போதும் இப்போதும் கண்டித்து மக்கள் மத்தியில் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தற்போது அந்த அரசியல் செயன்முறைகளிலேயே தஞ்சமடையத் தயாராகிறது. அதனையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த அரசியலைத் தான் முன்னணி செய்யும் என்றால், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பயணிப்பது மேலானது. இறுதியாகத் தொக்கி நிற்கும் சில விடயங்களுக்குப் பதில் தாருங்கள்--

அதாவது 2004ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வாராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இலங்கை நாடாளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்பு்ச் செயற்பாடுகள், விவாதங்களையே நடத்தவிடாமல் சபை நடவடிக்கைகளைச் செயலிழக்கச் செய்திருந்தன.

அந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. தமிழ்த்தேசிய அச்சு ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. 2006ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று நாடாளுமன்ற சபா மண்டப வாசலில் செல்வராஜா கஜேந்திரன் தீபம் ஏற்றினார்.

அதனால் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு ஓடி வந்து அதில் பங்குபற்ற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு ஏற்றப்பட்ட தீபங்களை நாடாளுமன்றப் பொலிஸார் பின்னர் தட்டி விழுத்தியமை வேறு. அப்படித் தட்டி விழுத்தியதைக் கூட வெற்றியாகவே அன்று தமிழ் அச்சு ஊடகங்கள் சித்தரித்திருந்தன.

ஆகவே திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்ற அனுமதிக்கவில்லையென்றால், 2004ஆம் தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்புச் செயற்பாடுகள் ஏன் ஞாபகத்துக்கு வரவில்லை? எனவே அச்சாப்பிள்ள அரசியலுக்கு எவரும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு முன்னணியும் உதாரணமாவிட்டதே என்று யாரும் கவலைப்பட்டால் அந்த கவலையை இனிமேல் யாராலும் சமாதானப்படுத்த முடியாது.

எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே ஒவ்வொரு நினைவேந்தல் நிகழ்வுகளின்போது மாத்திரம் கண்ணீர் விட்டழுவதும் அதனை மனித உணர்வுகளோடு மாத்திரம் ஒப்பிட்டுப் பேசுவதுமே தமிழ்த் தேசிய அரசியலாகத் தற்போது மாறி வருகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அவ்வாறுதான் வியாக்கியாணம் சொல்ல முற்படுகின்றன. அதற்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமுங்கிவிட்டதா என்ற கேள்விகளிலும் சந்தேகங்களிலும் உண்மை இல்லாமலில்லை.