இலங்கை ஒற்றையாட்சி அரசின் 20ஆவது திருத்தத்தி்ற்கு ஆதரவளித்த தமிழ் உறுப்பினர்கள்-

பேரம் பேசும் அரசியலைக் கூடச் செய்ய முடியாத கையறு நிலை

அரசின் இன அழிப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக மாத்தரமே இவர்களால் துணைபோக முடிகிறது
பதிப்பு: 2020 ஒக். 24 22:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 25 00:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருபது தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். வடக்குக் கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களே இந்த 28 உறுப்பினர்களும். கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் யோசைனக்கு இந்த 28 உறுப்பினர்களில் 19பேர் எதிராக வாக்களித்தனர்.
 
வெறுமனே வாக்களித்துவிட்டு இலங்கை அரசாங்கம் சொல்வதையே செய்கின்றனர். தமிழ்த் தேசியச் சிந்தனையை மழுங்கடிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திட்டமிடும் அபிவிருத்திகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களுடன் கூடிய அபிவித்திருத்திகளுக்கவே இவர்கள் துணைபோகின்றனர்

எதிரணியில் உள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் அரவிந்தகுமார் உட்பட அரசதரப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களுமாக ஒன்பது பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

அரசதரப்பில் டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சுதந்திரக்கட்சி உறுப்பினர் அங்கஜன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுரேன் ராகவன் ஆகியோரே 20 ஆவது திருத்த வரைப்புக்கு ஆதரவாக வாக்களிக்களித்தனர்.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோரே எதிராக வாக்களித்தனர்.

எதிரணியில் இருந்து ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமாரோ அல்லது அரசதரப்பில் இருக்கும் மேற்படி உறுப்பினர்களோ ஆதரவாக வாக்களிக்க முன்னர் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான உத்தரவாதங்களையும் பெறவில்லை.

அவிருத்தி அரசியல் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புகள் மற்றும் சலுகைகளைப் பெற்றிருக்கும் இந்தத் தமிழ் உறுப்பினர்கள், வடக்குக் கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகள் தொடர்பகவோ அல்லது இலங்கை ஒற்றையாட்சியின் அரச திணைக்களங்கள். கூட்டுத்தாபனங்களில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய உறுதிமொழிகளையோ அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை.

வெறுமனே வாக்களித்துவிட்டு அரசாங்கம் சொல்வதையே செய்கின்றனர். தமிழ்த் தேசியச் சிந்தனையை மழுங்கடிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திட்டமிடும் அபிவிருத்திகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களுடன் கூடிய அபிவித்திருத்திகளுக்கவே இவர்கள் துணைபோகின்றனர். குறைந்த பட்சம் பேரம் பேசும் அரசியலைக்கூட இவர்களினால் செய்ய முடியவில்லை.

இதேவேளை, மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அதாவது எட்டாவது ஆவது பாராளுமன்றத்தில் 28 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்தனர். 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு 29 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதுகூட எந்தவொரு உறுதிமொழியுமின்றியே வாக்களித்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டு ஆசனங்களைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்துகொண்டே அவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 156 வாக்குகளினால் நகல் வரை, இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக அங்கீகரிக்கப்படுவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன சபையில் இரவு 8 மணிக்கு அறிவித்தார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியினால் இந்த திருத்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு புதன்கிழமையும் வியாழக்கிழமையும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் பெறப்பட்டன.

ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான இஷக் ரஹ்மான், ரஹீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைசால் ஹாசீம், நசீர் அகமட், ஏச்.எம்.எம் கரீஸ், எம்.எஸ்.தௌபீக், மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தயான கமகே, பதுளை மாவட்ட உறுப்பினர் அரவிந்த குமார் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகியோர் நகல் வரைப்பு எதிராகவே வாக்களித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து இரண்டுபேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நான்குபேரும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டு பேருமாக எட்டுப்பேர் எதிர்த்தரப்பில் இருந்து ஆதரவாக வாக்களித்ததாலேயே நகல் வரைபு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேறியது.

இல்லையேல் அரசாங்கத்தரப்பில் 148 வாக்குகள் மாத்திரமே பெறப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான குறித்த நகல் வரைபு தோல்வியடைந்திருக்கும். ஆகவே அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று எதிரணியில் இருந்த குறித்த எட்டுப்பேருடனும் பேரம் பேசியே ஆதரவாக வாக்களித்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

வாக்கெடுப்புக்கு முன்னர் மாலை 6.30க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கும் எதிரணி உறுப்பினர்கள் சிலரோடு சந்திப்புகள் நடைபெற்றிருந்தன. குறிப்பாக ரிசாட் பதியுதின், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சி உறுப்பினர்கள் ஆதராவாக வாக்களிக்க முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளியேறினார். அரசாங்கத்துடன் முரண்பட்ட நிலையிலேயே அவர் வெளியேறியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் நகல் வரைப்புக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

எவ்வாறாயினும் 156 வாக்குகள் ஆதரவாகவும் 65 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டு 91 மேலதிக வாக்குகளினால் குறித்த நகல் வரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.

அதேவேளை, நகல் வரைபின் 17 ஆவது பிரிவில் உள்ள இரட்டைக் குடியுரிமை தொடர்பாக தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எதிர்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கோரியிருந்தார்.

இதனால் குறித்த 17ஆவது பிரிவுக்கு மாத்திரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் பெறப்பட்டன. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நகல் வரைபுக்கு ஆதரவாக 156 வாக்குகள் பெறப்பட்டிருந்த நிலையில் 17ஆவது பிரிவுக்கான வாக்கெடுப்பில் மேலதிகமாக ஒரு வாக்கை வழங்கியவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஷாரப்.

ஆகவே முஸ்லிம் உறுப்பினர்கள் பலர் கோட்டாப ராஜபக்சவின் திட்டங்களுக்குத் துணைபோகக் கூடியவாறு 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். ஒரேயொரு முஸ்லிம் அமைச்சர் உள்ள இந்த அரசாங்கத்தில், அதுவும் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான அலி சப்ரி என்பவர் மாத்தி்ரமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்.

முஸ்லிம் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்த்தரப்பில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருக்கின்றமை தொடர்பாக முஸ்லிம் மக்கள் பலர் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றர்.

இதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளும் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்களது எண்ணிக்கை விபரங்களும் வருமாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10

தமிழ் முற்போக்கு கூட்டணி 06

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 02

ஈ.பி.டி.பி 02

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 01

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 01

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 01

ஐக்கிய மக்கள் சக்தி 01

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 04