இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்-

இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும்

இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்கள் தொல்லை கொடுக்கக் கூடாதென்பது இந்தியாவின் நிலைப்பாடு
பதிப்பு: 2021 ஜன. 08 23:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 06 17:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார்.
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது கொழும்புக்கு வந்து செல்லுகின்ற இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இந்தியத் தேசிய பாதூப்புச் செயலாளர்கள் என அனைவருமே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியே கூறிச் சென்றிருக்கின்றனர் என்பது வரலாறு

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கொழும்பில் தனிப்பட்ட முறையில் நடத்திய கலந்துரையாடலின்போது கடல்சார் கூட்டுப் பாதுகாப்புப் பற்றியே பேசியிருப்பர் என்பது வெளிப்படை. வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் 13 பற்றிப் பேசியிருக்கலாம்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் அஜித் டோவால் கடந்த டிசம்பர் மாதம் கொழும்புக்கு வந்து பேசியதன் தொடர்ச்சியே ஜெய்சங்கரின் வருகையும். அதாவது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தி, மற்றும் கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பற்றிய விடயங்களே அவரது கொழும்பு வருகையின் பிரதான நோக்கமெனலாம்.

வந்த இடத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜெய்சங்கர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் உரையாடியிருக்கிறார். அவ்வளவுதான். இது ஒன்றும் ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியல்ல.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்ற வாசகம் மன்மோகன் சிங் காலத்தில் இருந்தே இந்தியாவினால் கூறப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலேபோய் கூறுவதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா ஜனாதிபதியாக பதவியேற்றபோதும், இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஞாபகப்படுத்தியிருந்தது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது கொழும்புக்கு வந்து செல்லுகின்ற இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இந்தியத் தேசிய பாதூப்புச் செயலாளர்கள் என அனைத்து இந்திய இராஜதந்திரிகளும் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியே கூறிச் சென்றிருக்கின்றனர் என்பதும் வரலாறு.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது மாத்திரம் இந்தியா இந்தப் 13 பற்றி எதுவுமே பேசவில்லை. ஆனால் பேச்சுகளின் போது எடுக்கப்படுகின்ற முடிவுகள், மற்றும் வன்னிக்குச் சென்று பேசுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் புதுடில்லிக்குத் தெரியப்படுத்தியதாகச் சமாதானத் தூதுவராகச் செயற்பட்டிருந்த எரிக்சொல்கேய்ம். சமீபத்தில் லண்டனில் இடம்பெற்ற கருத்தரங்கில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதுமட்டுமல்ல புலிகள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டமை தவறு எனவும் சொல்லியிருந்தார்.

சமாதானப் பேச்சுக்காலம் பற்றி இங்கு கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அன்றில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து சென்றது வரை, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் இந்தியா எப்படிச் செயற்பட்டிருந்தது என்பது தொடர்பாகவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இந்தியா வாய்ப்பாடாக வைத்திருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதுமே கட்டுரையின் நோக்கமாகும்.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலமே இலங்கைத் தீவில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு அதனைச் செயற்படுத்துவதற்காக அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை.

13 ஆவது திருத்தச் சட்டத்தோடு ஈழத்தமிழர்கள் அமைதியடைந்து விட வேண்டும். இந்தோ- பசுபிக் பிராந்தியத்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையைத் தங்கள் பக்கம் வைத்திருக்க வேண்டுமானால், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாதென்பது இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளேதான் 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுமிருந்தது. ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்காக அதிகாரப் பங்கீடுதான் அன்று கோரப்பட்டிருந்தது. இன்று வரை கோரிக்கை அதுதான். அதாவது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தீர்வு என்று தமிழர்தரப்பு அடித்துக் கூறி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த புதிய அரசியல் யாப்புக்கான பரிந்துரைகளில்கூட சுயநிர்ணய உரிமை பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தன் தங்கள் வரைபை ஜெய்சங்கரிடம் சென்ற வியாழக்கிழமை கொழும்பில் வைத்துக் கையளித்துமிருக்கிறார்.

ஆனால் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வந்தது வரை இந்திய மத்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில்கூட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னால் இந்தியா நின்றது, இப்போதும் நிற்கின்றது என்பதும் தெரியாததல்ல. மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் புதுடில்லிக்குச் சென்றிருந்தபோது 13 பிளஸ் என்றொரு கதையைக் கூறியிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தீர்வுத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியிருந்த சம்பந்தன், அந்தத் திட்டம் தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியால்கூடத் தொட்டுப் பார்க்க முடியாதென்றும் சம்பந்தன் அடித்துக் கூறியிருந்தார்.

ஆனாலும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றியடைந்து மாகாண சபையின் ஆட்சியையும் நடத்தியிருந்தமை வேறு கதை.

13 ஆவது திருத்தச் சட்டத்தோடு ஈழத்தமிழர்கள் அமைதியடைந்து விட வேண்டும். இந்தோ- பசுபிக் பிராந்தியத்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையைத் தங்கள் பக்கம் வைத்திருக்க வேண்டுமானால், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாதென்பது இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. இந்திய அரசின் பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து செல்லுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்த நிலைப்பாடு வெளிப்படும்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் மன்மோகன் சிங், நரேந்திரமோடி ஆகிய இந்தியப் பிரதமர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறைந்தது ஐந்து தடவை சந்தித்திருக்கிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோரையும் குறைந்தது ஏழு தடவைகள் சந்தித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை இலங்கை அரசு எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை நடைமுறையில் இல்லை. 18, 19 ஆவது திருத்தச் சட்டங்களும் அந்தத் திருத்தச் சட்டங்களை ரத்துச் செய்து 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாகவும் மாகாணங்களுக்குரிய பொலிஸ் ஆணைக்குழு முறை செயலிழந்துள்ளது. காணிக் கொள்கைக்காக மாகாணங்களை உள்ளடக்கிய தேசிய காணி ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை.

மாகாண சபைகளுக்குரிய தொல்பொருள் ஆராய்சித் திணைக்களம் கொழும்பின் தலையீட்டால் செயலிழந்துள்ளது. கோவிட்-19 பரவலைத் தடுக்கும் ஏற்பாடுகளின் கீழ் மாகாணங்களிடம் இருந்த சுகாதாரத் திணைக்களச் செயற்பாடுகளும் தற்போது கொழும்பை மையப்படுத்தியுள்ளன.

முதலமைச்சருக்கான நிதியம்கூட இதுவரை உருவாக்கப்படவில்லை. இப்படி மாகாணங்களுக்கான பல சட்டங்கள், விதிகள் எங்கே என்றுகூடத் தெரியாது.

மாகாணங்களுக்கான ஒவ்வொரு அதிகாரங்களும் வாத்தமானி அறிவித்தல் மூலம் அல்லது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மூலம் கையாளப்படுகின்றன. ஆகவே காகம் கொத்தித் தின்று விழுத்திவிட்டுச் சென்ற பப்பாப்பழம் போன்றதுதான் தற்போதைய 13 ஆவது திருத்தச் சட்டம். அப்படிக் கொழும்பு கோதி எடுத்த அதிகாரங்களை மீளவும் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக ஜெய்சங்கர் கொழும்பில் சம்பந்தனிடம் சொல்லியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் மன்மோகன் சிங், நரேந்திரமோடி ஆகிய இந்தியப் பிரதமர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறைந்தது ஐந்து தடவை சந்தித்திருக்கிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோரையும் குறைந்தது ஏழு தடவைகள் சந்தித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை இலங்கை அரசு எந்தவொரு மாற்றத்தையுமே செய்யவில்லை

ஆனால் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் தமிழ் இன அழிப்புத் தொடர்பான தீர்மானங்கள் எதனையும் கையளிக்க வேண்டாமென்ற தொனியிலேயே 13 பற்றி ஜெய்சங்கர் பேசியிருக்கிறார் போலும். ஏனெனில் 30/1 தீர்மானம் 13 பற்றியும் சொல்கிறது.

அத்துடன் 13 குறித்து கோட்டாபய ராஜபக்சவோடு ஜெய்சங்கர் காட்டமாகப் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. ஆகவே இலங்கை இந்தியாவின் செல்லப்பிள்ளை என்ற முறையில் மிகவும் கீழ் இறங்கிச் செல்லும் இந்த அணுகுமுறை சிங்கள ஆட்சியாளர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமைந்திருக்கிறது.

இந்தியாவும் 13 பற்றி சொல்லிக் கொண்டே இருக்கட்டும், ஆனால் இந்தியாவுக்குத் தேவையான இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய ஒத்துழைப்பை மாத்திரம் வழங்கிவிட்டு அற்பசொற்பமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அப்படியே அமுக்கிவிடுவோம் என்ற தொனியில் சிங்கள ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றமைதான் வரலாறு.

13 ரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கூறிய மிலிந்த மொரகொட டில்லியில் தூதுவராகவும், 13 தேவையில்லையெனச் சொல்லுகிற இராணுவ அதிகாரியான சரத் வீரசேகர அமைச்சராகவும் இருக்கின்ற அரசாங்கத்தில், 13 பற்றி ஜெய்சங்கர் சொன்னதற்குச் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பாராட்டியமைதான் வேடிக்கை.

அதுவும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னுக்குப் பின் முரண்பாடாகச் செயற்படுகிறார் சுமந்திரன்.