மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு

இலங்கைப் படையின் முன்னாள் உயரதிகாரி சரத் வீரசேகர கொலை மிரட்டல்- சிவில் சமூக அமைப்புகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரனை நோக்கிய முன் எச்சரிக்கையா?
பதிப்பு: 2018 ஜூலை 18 15:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 18 18:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுவதை முற்றாகவே நிரகரிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ற முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. போருக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனைகள் இருந்ததில்லையென விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறிய பின்னர், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. விஜயகலா சிங்களக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய உரையில் சொல்லப்பட்ட விடங்கள் உண்மையானவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியாயப்படுத்தினார். இதனால் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற 17 ஆம் திகதி அவரை விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர்.
 
அமைச்சராக இருந்தபோது, விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிய நிகழ்வில் கலந்துகொண்டு கைதட்டிய வடமாகாண அரச அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 30 ஆம் திகதி வரை பிறந்த பிள்ளைகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கடந்தவாரம் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமஷ்டி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றமை ஆபத்தானது என்றும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பெர்ன்சேகா கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் அமைதிப்படைக்கு அனுப்பப்படும் இலங்கைப் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது என்றும் இதனால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாவும் 37 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கைப் படைகளின் முன்னாள் உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இந்தக் கொலை அச்சறுத்தலை விடுத்துள்ளார் என்று சிவில் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான மவ்பிம என்ற சிங்கள நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

சரத் வீரசேகர கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் இடம்பெற்றபோதும் அங்கு சென்றிருந்த புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அச்சுறுத்தியிருந்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் ஜெனீவாவில் முரண்பட்ட சரத் வீரசேகர, அவரை அச்சுறுத்தும் வகையிலும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கும் அவர் கடந்தவராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் நலன்களை முன்னெடுப்பதற்காக தீபிகா உடகம சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றுள்ள மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கைத் தேசியவாதத்திற்கு எதிரான தூரோகிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சரத் வீரசேகர கடும் தொனியில் கூறியுள்ளார்.

ஆகவே, ஈழத் தமிழ் மக்கள் சார்ந்து எவர் எதைப் பேசினாலோ, செயற்பட்டாலோ அவர்களுக்கு கொலை அச்சறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களை தேசியத் துரோகிகளாகவும் சித்தரிக்கும் மன நிலை மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையே அவதானிக்க முடிகின்றது.

இந்த மனநிலை, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தைவிட மோசமானது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

இறுதிப் போரில் இலங்கை இராணுவம் தமிழ் இனப்படுகொலைகளில் ஈடுபட்டது என்றும் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் வடமாகாண சபையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன் பின்னரான ஒவ்வொரு உரைகளின்போதும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தி வருகின்றார்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பற்றிப் பேசினால் அதனைப் பயங்ரவாதம் என்றும் இனவாதம் எனவும் சிங்கள அரசியல் கட்சிகள் கூறுவதையும் அவர் கண்டித்தும் வருகி்ன்றார்.

இந்த நிலையில், விக்னேஸ்வரனுக்கு முன் எச்சாரிகையாகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவுக்கு கொலை மிரட்டல் விடக்கப்பட்டிருக்கலாம் என கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தேவநம்பிய தீசன் தமிழ் மன்னன் என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்தார். ஆனால் தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், இலங்கையின் மூலப் பெயர் சிங்கலே என்றும் தெரிவித்திருந்தார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது கறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகர பற்றிய பின்னணிக் குறிப்பு---

சரத் வீரசேகர 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு மாகாண கடல் பிரதேசத்தின் இலங்கைக் கடற்படைத் தளபதியாக பதவி வகித்திருந்தார். இலங்கைக் கடற்படையின் கெடட் அலுவலராகவும் பதவி வகித்திருந்தார்.

அமெரிக்காவின் நியுபோட் ரோடே தீவில் அமைந்துள்ள புகழ் பெற்ற கடற்படைக் கல்லூரி, இந்தியாவின் புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கடற்பணியாட் பாடநெறிகளில் பட்டமும் பெற்றுள்ளார்.

ஹவாயில் உள்ள பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் நிலையம், அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசியில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் திறமுறை கற்கைகளுக்கான கிழக்குத் தெற்காசிய நிலையம் ஆகியவற்றிலும் கல்வி கற்றுள்ளார்.

பௌத்த தத்துவத்தில் ஏம் ஏ (M.A) எம்பில் (M.Phil) பட்டங்களைப் பெற்றுள்ளார். ஐக்கிய இராஜ்ஜயத்தின் கப்பலோட்ட ரோயல் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் உள்ளார்.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கட்டளைத் தளபதியாக பதவி வகித்தபோது, அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு எதிராக தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை மோசமான முறையில் அடக்கினார்.

1993ஆம் ஆண்டு பூநகரியில் இலங்கை இராணுவம் சுற்றிவளைக்கப்பட்டபோது, நானுாறு இராணுவத்தினரைக் காப்பாற்றியிருந்தார். இதற்காக ரணவிக்கிரம வீர என்ற விருதையும் பெற்றிருந்தார்.

அதேவேளை, இந்தியாவில் இயங்கும் மனிதநேய அமைப்பு ஒன்றின் மூலமாக இலங்கையின் மனிதநேய செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஒருவர் என்ற அடிப்படையில், ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகளில் சரத் வீரசேகர கலந்துகொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.