இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம்

இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

ராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம்
பதிப்பு: 2021 பெப். 25 15:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 18:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா ஒரு வல்லாதிக்க நாடு என்பதையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்கள் தன்னிச்சையாகவே செயற்படுகின்றனர். அவ்வப்போது இராஜதந்திர ரீதியாக அவமானப்படுத்தியுமிருக்கின்றனர். உதாரணங்கள் பல இருந்தும் கொழும்பில் இந்திய அப்பலோ மருத்துவமனை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இலங்கை தனதாக்கிக் கொண்டதைப் பிரதானமாகக் கூறலாம். இந்தியாவோடு செய்யப்பட்ட பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டமை பற்றிய உதாரணங்களும் உண்டு.
 
ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு விட்டுக்கொடுத்தல் அல்லது இலங்கை சொல்வதைக் கண்டிப்பதுபோன்ற தோற்றப்பாட்டைக் காண்பித்துக் கொண்டு இலங்கையிடம் பின்கதவால் வந்து மண்டியிடும் வல்லாதிக்க நாடுகளின் பலவீனமான அணுகுமுறையே சிங்கள ஆட்சியாளர்கள் இறுமாப்படையக் காரணமாகிறது

இந்துமா சமுத்திரத்தில் இந்தியா ஒரு பிரதான நாடு. ஆனால் சீனா இந்துமா சமுத்திரத்தில் தன்னையும் ஒரு நாடாக செயற்கையாகக் காண்பித்துள்ளது. இது இந்திய மத்திய அரசின் இராஜதந்திரப் பலவீனம் என்று சொல்வதைவிட ஈழத்தமிழர் விவகாரத்தைத் துணிவோடு கையில் எடுக்கத் தவறியதன் விளைவுதான் இன்றைய இந்திய அரசின் இந்த அவல நிலை.

இந்திய இராஜதந்திரத்தை எப்படியும் ஏமாற்றிவிடலாம். அல்லது தமக்குச் சாதகமாக மாற்றிவிடலாம் என்ற சிந்தனைப் போக்கு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இருந்தே தொடர்கின்றது. இன்று கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் இந்திய இராஜதந்திரம் தோற்கடிக்கப்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றது. அதில் உண்மையும் இல்லாமல் இல்லை. திருகோணமலை எண்ணெக் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது என்ற பேச்சும் கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திக்கான ஒப்பந்தம் கைவிடப்பட்டதையும் சில உதாரணங்களாக எடுத்துக் கூற முடியும்;.

ஆனால் இந்தியா தமது தொப்புள் கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பலர் இன்று வரை நம்புகின்றனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியில் இந்தியா தனது ஆளுகையைச் செயற்படுத்தினால் என்ன என்று விரும்பும் ஈழத்தமிழர்கள் பலர் இருக்கின்றனர்.

ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார் என்பதைக் காரணம் கூறி இன்று வரை ஈழத்தமிழ் மக்களை இந்தியா பழிவாங்குகிறதா என்ற கேள்விகள் சந்தேகங்களும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்று வரை நிலவுகின்றது.

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா ஏன் இன்று வரை அங்கீகரிக்கத் தயங்குகின்றது என்ற ஆதங்கமும் அவ்வாறு அங்கீகரித்தால் இந்தியாவுக்கு ஏதும் பிரச்சனை இருக்கின்றதா என்ற கேள்விகளும் எழாமல்லில்லை. ஆனால் இன்று இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு இலகுவான தீர்வை எட்ட வேண்டுமானால், ஈழத்தமிழ் மக்களை ஒரு தேசமாக இந்தியா அங்கீகரிப்பதோடு தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் அதிகாரங்களையும் அதிகரிப்பதே சிறப்பான ஏற்பாடாகும்.

தேசிய இனம் ஒன்றை ஒரு தேசமாக அங்கீகரிப்பது என்பது தனி நாடல்ல. அது அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையையும் சுயாட்சியுடன் கூடிய தன்னாட்சிக்கும் வழி சமைக்கும் ஒரு ஏற்பாடு மாத்திரமே.

ஐக்கிய அமெரிக்காவில் எவ்வாறு ஐம்பது மாநிலங்கள் சுயாட்சியோடு இயங்குகின்றதோ அவ்வாறே ஐக்கிய இலங்கைத் தீவிற்குள் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் ஒரு தனி சுயாட்சி அரசாகவும் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் தனித்த தேசிய சமூகமாகவும் அங்கீகரிக்கப்பட்டு வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு

இலங்கைத் தீவிற்குள் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் ஒரு தனி சுயாட்சி அரசாகவும் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் தனித்த தேசிய சமூகமாகவும் அங்கீகரிக்கப்பட்டு வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு

அதன் மூலமே சிங்கள ஆட்சியாளர்களை சீனாவின் பக்கம் செல்ல விடாமலும் இலங்கையின் பல பிரதேசங்களில் சீனா ஆதிக்கம் செலுத்தாமலும் தடுக்க முடியும் என்பதோடு, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தன்னை திடமாகவும் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் அந்தப் பொறுப்பில் இருந்து இந்தியா தவறுவது ஏன்? இந்தக் கேள்விகளோடு சீனாவோடு நட்புக்கொண்டாலென்ன என்ற கிண்டலான சிந்தனைப் போக்குகளும் வடக்குக் கிழக்கில் எழ ஆரம்பித்துள்ளன.

கடந்த எழுபது ஆண்டுகால ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களில் இந்தியா உரிய முறையில் செயற்படாது இலங்கைக்குச் சாதகமாகச் செயற்பட்டு ஈழத்தமிழ் மக்களை இந்தியா ஏமாற்றியுள்ளது என்று யாரும் கூறினால், அதனை மறுக்கவும் முடியாது. நோர்வேயின் ஏற்பாட்டோடு இடம்பெற்ற பேச்சுக்கள் கூட இறுதியில் குழப்பமடைந்தமைக்கு இந்திய இராஜதந்திரமே காரணம் என்ற கருத்துக்களும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்றுவரை நிலவுகின்றது.

இந்தப் பின்புலத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இந்தியா இலங்கை குறித்து எடுக்கப்போகும் முடிவும் ஏலவே தெரிந்ததுதான். ஆகவே இந்தியா மீது ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பதா அல்லது வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஏற்று இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் அடங்கிப்போவதா என்பது பற்றிய விசப் பரீட்சைக்கு ஈழத்தமிழர்கள் முகம்கொடுக்க வேண்டியதொரு அபாய நிலை உருவாகியுள்ளது.

ஈழத்தமிழ் மக்களைக் கைவிடமாட்டோமென்று பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது கூறியிருந்தார். இந்திரா காந்திகாலத்தில் இருந்தே இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாசகங்களை ஈழத்தமிழ் மக்கள் கேட்டுச் சலித்துவிட்டனர். எதுவுமே நடந்ததில்லை.

சிங்கள ஆட்சியாளர்களின் ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராகவே வடக்குக் கிழக்கில் தமிழ் இளைஞர்கள் முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தனர். அவ்வாறு ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலை இயங்கங்களை ஜனநாயக வழிக்கு வாருங்கள் என்று அழுத்தமாகக் கேட்ட அளவுக்கு, அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு மற்றுமொரு இனம் மீது பயங்கரவாத செயலில்ஈடுபட வேண்டாமென்றோ, இன அழிப்புச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுமென்றோ இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் பகிரங்கமாகச் சிங்கள ஆட்சியாளர்களை நோக்கிக் கேட்கவில்லை. ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் அவ்வாறான அழுத்தங்கள் இதுவரை இல்லை.

போர் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 11 ஆண்டுகள் கடந்துவிட்டதொரு நிலையிலும் வல்லாதிக்க நாடுகள், சிங்கள ஆட்சியாளர்களை செல்லப்பிள்ளையாகவும் அவர்களைக் கோவப் படுத்தாமலும் காத்துக் கொள்கின்றன. அவ்வாறே ஈழத்தமிழ் மக்களும் சிங்கள ஆட்சியாளர்களைக் கோவப்படுத்தக்கூடாது என்றே அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகள் எதிர்பார்க்கின்றன. அதற்கேற்றவாறு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் இந்த நாடுகள் கட்டிப்போட்டுள்ளன.

இதன் காரணமாகவே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் இலகுவாகச் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்தமயமாக்கலும் நாள்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இது பற்றி இந்தியா வெளிப்படையாக ஒருபோதும் கண்டித்ததில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கண்டித்ததேயில்லை.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை விவகாரத்தைக் கையாளும் பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளும் தமது பரிந்துரையில், சிங்களக் குடியேற்றங்கள். புத்தர் சிலை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் எதனையும் நிறுத்துமாறு கோரவுமில்லை. கண்டிக்கவுமில்லை.

எதற்கெடுத்தாலும் சிங்கள ஆட்சியாளர்களின் மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பதற்கு காரணம், வல்லாதிக்க நாடுகளின் இலங்கை குறித்த பலவீனமான வெளியுறவுக்கொள்கையே

இலங்கைத்தீவில் கொவிட்- 19 நோய்த்தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை அவர்களின் சமய நடைமுறைகளுக்கு மாறாக எரியூட்டப்படுகின்றமைக்கு உறுப்பு நாடுகளின் பரிந்துரையில் கண்டனம், கவலை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழப் போரில் உயிர்நீத்த மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கமும் இலங்கைப் படையினரும் மறுப்புத் தெரிவிக்கின்றமை தொடர்பாகத் தமது பரிந்துரையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் பரிந்துரையில்கூட அவ்வாறான கண்டனங்கள் இல்லை. ஆகவே ஈழத்தமிழர் விவகாரம் என்பது இந்தியாவை மையப்படுத்திய பிரித்தானிய அமெரிக்க நலன்களுக்கு ஏற்றவாறே கையாளப்பட்டு வருகின்றது என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது. எனவே ஜெனீவா மனித உரிமைச் சபைக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் சமர்ப்பித்துள்ள பொது ஆவணம்கூட வலிதற்றதாக்கப்படுமென்பது கண்கூடு.

அந்தப் பொது ஆவணம்கூட தமிழ் இன அழிப்புத் தொடர்பாகத் தெளிவாகக் கூறவில்லை என்பதுவேறு. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் சார்பான குறைந்த பட்சக் கோரிக்கையைக்கூட மனித உரிமைச் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் புறம்தள்ளும் நிலை என்பது இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆகவே தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒரு தேசமாகச் சிந்தித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே நின்று தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டாலேயன்றி ஈழத்தமிழர்களினால் புவிசார் அரசியலை வெற்றி கொள்ள முடியாது. அதேபோன்று அமெரிக்கா, இந்தியா. பிரித்தானிய போன்ற வல்லாதிக்க நாடுகளும் இலங்கை தொடர்பான தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யாமல் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் வெற்றிகொள்ளவும் முடியாது.

எதற்கெடுத்தாலும் சிங்கள ஆட்சியாளர்களின் மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பதற்கு காரணம், வல்லாதிக்க நாடுகளின் இலங்கை குறித்த பலவீனமான வெளியுறவுக்கொள்கையே.

அதாவது ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு விட்டுக்கொடுத்தல் அல்லது இலங்கை சொல்வதைக் கண்டிப்பதுபோன்ற தோற்றப்பாட்டைக் காண்பித்துக் கொண்டு இலங்கையிடம் பின்கதவால் வந்து மண்டியிடும் வல்லாதிக்க நாடுகளின் பலவீனமான அணுகுமுறையே சிங்கள ஆட்சியாளர்கள் இறுமாப்படையக் காரணமாகிறது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நடப்பது இதுதான்.