இலங்கை ஒற்றையாட்சி அரசின் மற்றுமொரு திட்டம்

தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி

கிழக்கு மாகாணத்தின் அபாய நிலை வடமாகாணத்திலும் உருவாகுமென அச்சம்
பதிப்பு: 2021 மார்ச் 14 11:33
புதுப்பிப்பு: ஜூன் 18 22:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஈழத்தமிழ் அமைப்புகளினால் கோரப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அதனைப் பொருட்படுத்தாமல், இரு தரப்புக்குமான போர்க்குற்ற பொறுப்புக்கூறலை மாத்திரமே வலியுறுத்தி வருகின்றன இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவிதமான பயமும் இன்றி மிகத் துணிவோடு தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்களை அதிகாரபூர்வமாக சிங்களப் பிரதேசங்களில் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இது ஏலவே நடந்து முடிந்துவிட்டதொரு நிலையில் தற்போது வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பை மையப்படுத்திய காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
 
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் என்று சொன்னால், 1948 ஆம் அண்டு முதல் கிழக்கில் இருந்து ஈழத்தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் செயற்கையான சிங்களக் குடியேற்றங்களினால் கிழக்கில் விகிதாசாரம் குறைக்கப்பட்டமை போன்ற விடயங்களும் உள்ளடங்க வேண்டும்

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு திங்கட்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன

கடந்த 4 ஆம் திகதி ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்டபோது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பொது மக்களும் யாழ்.செயலக வாசலுக்கு முன்பாக ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு அவசரஅவசரமாக அனைத்து ஆவணங்களும் அள்ளிச் செல்லப்பட்டன.

காணிச் சீரதிருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களையும் விடக் கூடுதலானது. நேரடியாகவே கொழும்பு நிர்வாகத்தில் இயங்குவதுதான் இந்தக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் படி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அது நடைமுறைக்கு வரவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்கள் பெயரளவிலானவை என்பதையே காணிச் சீர்திருத்த ஆணை்க்குழுவின் செய்ற்பாடுகள் கோடி நிற்கின்றன.

இதனாலேயே மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களையும் தாண்டி வடமாகாணத்தில் தமது கட்டுப்பாட்டில் உள்ள காணிகளுக்குரிய ஆவணங்களைக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு யாழ் செயலகத்தில் இருந்து எடுத்துச் சென்றிருக்கின்றது.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை. அரைவாசி அதிகாரங்கள் கொழும்பை மையப்படுத்திய காணிச் சீர்தருத்த ஆணைக்குழுவிடமே உள்ளன. இந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தியே தாயகப் பிரதேசங்களில் உள்ள ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு அமைவான காணிகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது கட்டுப்பாட்டில் முழுமையாகக் கையகப்படு்த்தி வருகின்றது

13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை. அரைவாசி அதிகாரங்கள் கொழும்பை மையப்படுத்திய காணிச் சீர்தருத்த ஆணைக்குழுவிடமே உள்ளன. இந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தியே தாயகப் பிரதேசங்களில் உள்ள ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு அமைவான காணிகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது கட்டுப்பாட்டில் முழுமையாகக் கையகப்படு்த்தி வருகின்றது.

தாயகப் பிரதேசங்களில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் நோக்கிலேயே 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேசிய காணி ஆணைக்குழு இதுவரை நியமிக்கப்படவுமில்லை.

இதனடிப்படையிலேயே மாகாணங்களுக்குரி காணி அதிகாரங்களையும் மீறி வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபட்டு சிங்களப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியாருக்கு விற்கப்பட்டு வந்தன. சில தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கும் கொடுக்கப்பட்டு வந்தன.

அதேவேளை, பௌத்த விகாரைகளுக்கும் புத்தர் சிலை வைப்பதற்கும் இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் அனுமதியும் வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் வடமாகாணத்திற்குரிய அனைத்து காணி ஆவணங்களும் அநுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லபட்டுள்ளன.

இந்தநிலையிலேயே வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச காணிகளும் பொது காணிகளும் கொழும்பை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் பகிரங்கமாகச் செயற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதான மின்மாற்றியில் திங்கள் இரவு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் வடமாகாணத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலேயே செயலகத்திலிருந்து காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திற்குரிய காணி ஆவணங்கள் அனைத்தும் திருகோணமலை செயலகத்தில் இருந்தாலும் அங்கு சிங்கள அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அரசியல் போராட்டம் 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்றும் இந்த காணி அபகரிப்பு தொடர்கின்றது.

1948ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் 1983ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததால் தமிழ்ப் போராளிகளின் அச்சத்தின் காரணமாகத் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டத்தில் சிங்களக் குடியேற்றம் இலங்கை இரானுவத்தின் ஓத்துழைப்புடன் நடைபெற்றது. சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதற்காக திருகோணமலை மக்கள் அச்சுறுத்தப்பட்டார்கள் இதனால் பலர் பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து வெளியேறினர்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் குடும்பங்கள் தங்களுடைய நில புலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தினரின் தாக்குதல் அச்சத்தினால், தாங்களாவாகவே வெளியேறிவிட்டனர். முஸ்லிம்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் காணிகளில் புத்தர் சிலைகள் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான வரலாற்று ஆதாரங்களும் செயற்கையாகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட தேர்தல் தொகுதி திகாமடுல்ல என சிங்கள பெயரால் அழைக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு சில்வா எனப்படும் சிங்கள அரசாங்க அதிபர் முதல் முதலாக நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்தே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் காணி ஆவணங்கள் திருகோணமலை சிங்கள அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

2006 ஆம் ஆண்டு திருகோணமலை செயலகத்தில் காணிப் பதிவாளராக பணியாற்றிய முரளிதரன் என்பவர் திருகோணமலையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பாதுகாக்க முற்பட்டவேளை அவர் திடீரெனக் காரணம் எதுவுமேயின்றி கொழும்புக்கு இடமாற்றப்பட்டார்.

இன்று திருகோணமலையில் தமிழர்களின் விகிதாசாரம் குறைவடைந்துவிட்டது .சேருநுவர என்ற புதிய சிங்கள பிரதேச செயலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல சிங்களப் பிரதேசங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகளும் அங்குள்ளன.

ஏனெனில் உள்ளூராட்சி சபைகளிலும் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கமும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்கள் இந்தியாவுக்கா சீனாவுக்கா என்ற போட்டிகளும் திட்டமிடப்பட்டுத் தூண்டிவிடப்பட்டுள்ளன.

இதேநிலைமை கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழும் மட்டக்களப்பிலும் தற்போது காணப்படுகின்றன. மட்டக்களப்பின் பல விவசாய கிராமங்களும் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன மட்டக்களப்பில் மைலத்தமடு மற்றும் மாதாவனை ஆகிய மேச்சல்தரை நிலங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன

இன அழிப்பு என்பது வெறுமனே திட்டமிடப்பட்ட படுகொலைகள் மாத்திரமல்ல. பாரம்பரியக் காணிகளை அபகரிப்பது, இன அடையாளங்களை ஒழிப்பது, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தர்களே இல்லாத தமிழர்களின் பிரதேசஙகளில் விகாரைகள் கட்டுவது, புத்தர் சிலை வைப்பது, தமிழர் மரபுரிமைகளை மாற்றியமைப்பது, பாடநூல்களில் ஈழத்தமிழர் வரலாறுகளைத் திரிபுபடுத்திப் பௌத்த வரலாறுகளைத் திணிப்பது போன்றவையும் இன அழிப்புத்தான்

மட்டக்களப்பின் இயற்கை பிரதேசமான பாசிக்குடா சிங்களவர்கள் மயமாகி வருகின்றது .தனியாருக்குக் காணிகள் விற்கப்பட்டு கொழும்பை மையமாக கொண்ட சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மேலும் பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

போர் நடைபெற்ற காலங்களிலேயே கிழக்கு மாகாணம் சிங்கள மயபடுத்தப்பட்டுச் செயற்கையான முறையில் தமிழர்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டது. ஆனால் வடக்கு மாகாணத்தில் போர்நடைபெற்ற காலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை அரசாங்கத்தினால் செய்ய முடியவில்லை.

இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் மிக இலகுவாக காணி அபகரிப்புக்கள் நடைபெறுகின்றன. முன்னர் இராணுவமே காணிகளை அபகரித்தது. தற்போது கொழும்பை மையமாக கொண்டு இலங்கை ஒற்றையாட்சி அரசின் திணைக்களங்கள் மூலமாக காணி அபகரிப்புக்கள் இடம் பெறுகின்றன. அதற்கு இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.

அதன் ஒரு வடிவமே யாழ் செயலகத்தில் உள்ள வடக்கு மாகாணத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமையாகும். மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி ஆவணங்களே எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே அதிகாரப் பங்கீடுகள் அற்றதொரு நிலையில் இன நல்லிணக்கம் யாருக்குத் தேவைப்படுகின்றது? சிங்கள ஆட்சியாளர்கள் கூறுகின்ற நல்லிணக்கத்தின் உண்மைப் பொருள் என்ன என்பதுதான் இங்கே கேள்வி.

குறிப்பாக 1970, 2004 ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மை என்பதை உறுதிப்படுத்துகின்றன. 1970 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான பதினொருபேரில் தமிழர்கள் ஆறுபேரும் முஸ்லிம்கள் நான்கு பேரும் சிங்களவர் ஒருவரும் தெரிவாகினர். 2004 ஆம் ஆண்டில் தமிழர்கள் ஏழுபேரும் முஸ்லிம்கள் ஆறுபேரும் சிங்களவர்கள் மூன்று பேருமாகப் பதினைந்து பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆகவே செயற்கையான அத்துமீறிய குடியேற்றங்களுக்கு மத்தியிலும் தமிழர்களே கிழக்கு மாகாணத்தில் தனிப்பெரும்பான்மை என்பது தெரிகிறது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழ பேசும் மக்களே அறுதிப் பெரும்பான்மையாகவுள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மட்டக்களப்பில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதோடு, சிங்கள விவசாயிகளுக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான மேய்ச்சல்தரை நிலங்களும் பங்கிடப்படுகின்றன.

அதேவேளை, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் 1983 ஆம் ஆண்டில் இருந்து பகுதி பகுதியாக சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாலும் அங்கு எந்தச் சமூகம் பெரும்பான்மையெனக் கூற முடியாது. ஆனாலும் தமிழர்களின் இடப்பெயர்வும் அதன் பின்னரான மீள் குடியேற்றங்களும் உரிய முறையில் இடம்பெற்றிருந்தால், இந்த இரு மாவட்டங்களிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையாக இருந்திருப்பர்.

போர்க்காலங்களில் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த மக்களில் அநேகமானோர் திருகோணமலை, அம்பாறை மாவட்ட மக்களே. அது பற்றிய சரியான மதிப்பீடுகள் கூட அரச அதிகாரிகளினாலோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களினாலோ இதுவரை மேற்கொள்ளப்படவுமில்லை.

இவ்வாறானதொரு நிலையில் இன நல்லிணக்கம் யாருக்கு அவசியமானது என்ற கேள்வி எழுவது இயற்கையானது. ஜெனீவா மனித உரிமைச் சபையில்கூட கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகள் அதாவது காணி அபகரிப்புகள் தனித்துவமாகப் பேசப்படவில்லை. இலங்கை அரசாங்கததின் பொறுப்புக்கூறல் என்று சொன்னால், 1948 ஆம் ஆண்டு முதல் கிழக்கில் இருந்து ஈழத்தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் செயற்கையான சிங்களக் குடியேற்றங்களினால் விகிதாசாரம் குறைக்கப்பட்டமை போன்ற விடயங்களும் உள்ளடங்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் என்பது தனியே போர்க்குற்றம். மனித உரிமை மீறல்களுக்கானதல்ல.

ஆகவே வடமாகாணக் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தோடு கிழக்கில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் காணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அபகரிக்கப்பட்டன என்பது குறித்தும் கொழும்பில் தயாரிக்கப்பட்ட போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் பௌத்த பிக்குமார் கிழக்கில் காணிகளை அபகரித்தமை பற்றியும் ஜெனீவாவில் எடுத்துக் கூற வேண்டும்.

இன அழிப்பு என்பது தனியே இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் மாத்திரமல்ல. மரபுரீதியான கலாச்சாரங்கள் அழிக்கப்படுவது பண்பாடுகள் சிதைக்கப்படுவது. காணிகள் அபகரிக்கப்படுவது மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் பாரம்பரியமாகவும் வாழும் பிரதேசங்களில் செயற்கையான முறையில் மற்றுமொரு இனத்தைத் திட்டமிட்டுக் குடியேற்றிவிட்டுப் பின்னர் அந்த இனத்தைப் பெரும்பான்மையாகக் காண்பிப்பது உள்ளிட்ட பல பலவிடயங்களும் இன அழிப்பு என்பதற்குள் அடங்கும்.

ஆகவே இதனடிப்படையிலேயே இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை கோரப்பட வேண்டும். அதற்கு வடமாகாண காணி அதிகாரங்கள் அள்ளிச் செல்லப்பட்டமை சட்டரீதியான ஆதாரங்களாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் கிழக்கு மாகாணப் பிரச்சனைகளை சர்வதேச வல்லாதிக்கச் சக்திகளும் இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் இணைந்து தவிர்த்தே வந்தன.

இன அழிப்பு என்பது வெறுமனே திட்டமிடப்பட்ட படுகொலைகள் மாத்திரமல்ல. பாரம்பரியக் காணிகளை அபகரிப்பது, இன அடையாளங்களை ஒழிப்பது, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தர்களே இல்லாத தமிழர்களின் பிரதேசஙகளில் விகாரைகள் கட்டுவது, புத்தர் சிலை வைப்பது, தமிழர் மரபுரிமைகளை மாற்றியமைப்பது, பாடநூல்களில் ஈழத்தமிழர் வரலாறுகளைத் திரிபுபடுத்திப் பௌத்த வரலாறுகளைத் திணிப்பது போன்றவையும் இன அழிப்புத்தான்.

குறிப்பாகத் தந்தை செல்வாவினதும் வ.நவரட்ணத்தினதும் தலைமையில் செயற்பட்ட தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் திருகோணமலைத் தீர்மானத்தில் இலங்கை அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்ற கருத்தை முன்வைத்திருந்தது.

பின்னர் தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது பண்பாட்டு இன அழிப்பு நடைறுகிறது என்பதை வலியுறுத்தியிருந்தது. இதற்கிடையில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகளில் காணி விவகாரம் மிக முக்கியமான ஓர் விடயமாக இருந்தது.

வடமாகாணக் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தோடு கிழக்கில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் காணிகள் நேரடியாகவும் முறைமுகமாகவும் அபகரிக்கப்பட்டன என்பது குறித்தும் கொழும்பில் தயாரிக்கப்பட்ட போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் பௌத்த பிக்குமார் கிழக்கில் காணிகளை அபகரித்தமை பற்றியும் ஜெனீவாவில் எடுத்துக் கூற வேண்டும்

ஆனால் அனைத்து உடன்பாடுகளையும் இலங்கை அரசு புறக்கணித்தே செயற்பட்டு வந்திருந்தது என்பது வரலாறு. போர்க்காலத்தின்போது மனிதப் படுகொலைகள் இனப் படுகொலையாக மாறிவிட்டிருந்தபொழுதும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தமிழர்களின் காணிகளையும் பண்பாட்டையும் மரபுரிமைகளையும் குறிவைக்க முடியாத சூழல் நிலவியது.

ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனிதப் படுகொலைகள் இல்லாதுபோயினும் இன அழிப்பின் ஏனைய வடிவங்கள் மிகவும் வேகமாக தலைதூக்கியுள்ளன. குறிப்பாக தமிழர் தாயகத்தின் காணிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

பெருமளவில் மனிதர்கள் படுகொலை செய்யப்படுவதை இனப்படுகொலை என்கிறோம். ஆனால் இது இன அழிப்பின் வரைவிலக்கணத்தின்படி ஓர் அங்கம் மட்டுமே. ஓர் இனக்குழுமத்தின் இருப்பு வேறுவடிவங்களாய் திட்டமிடப்பட்டு ஒரு நோக்கத்தோடு அழிக்கப்பட்டு வருவதும் இன அழிப்பே.

மனிதர்கள் கொல்லப்படுவது பாரதூரமான குற்றம். ஈழத்தமிழா்களைப் பொறுத்தவரை மனிதக் கொலைகள் நடைபெற்ற போர்க்காலத்தில்தான் அவர்கள் ஒரு தேசமாக தம்மைக் கட்டமைத்து சர்வதேச மட்டத்தில் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர். 2009 இல் போரியில் ரீதியான இன அழிப்பு நடைபெற்ற பின்னர் சர்வதேசதத் தளத்தில் மட்டுமல்ல தமது சொந்தத் தாயகத்திலேயே தம்மை ஒரு தேசமாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாத சூழலுக்குள் ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மனித கொல்லப்பட்டால்கூட ஓரிரு தசாப்பதங்களுக்குள் புதிய மனிதர்களை உருவாக்கிவிடலாம். இரண்டாம் உலக் போரில் அணுகுண்டுகளால் அழிவை எதிர்நோக்கிய ஜப்பானிய மக்கள் இன்று சர்வதேச ரீதியான பெரும் பொருளாதாரப் பலமாக எழுந்து நிற்கின்றனர். ஆனால் தேசத்தின் இருப்பையே இழந்துவிட்டால், ஈழத்தமிழர்கள் இப் புமிப் பந்நதில் தம்மை தனித்துவமாக அடையாளப்படுத்த முடியாதவொரு நிலை நிரந்தரமாகவே ஏற்பட்டு விடும்.

மனிதர்களை இழந்தாலும் தேசத்தை மீளுருவாக்கலாம். மண்ணை இழந்தால் தேசத்தை மீள் கட்டமைப்புச் செய்வது பெரும் கடினமாகிவிடும்.