தற்போதைய ஜெனீவா வரைபில் தாக்கம் செலுத்த முடியாவிடினும்

இன அழிப்புக்கு நீதிகோரும் குரல்கள் பிரித்தானிய நாடாளுமன்றில் ஓங்கி ஒலித்தன

ஈழத்தமிழர் அறம்சார் போராட்ட அரசியலின் எதிர்கால நம்பிக்கை குறித்த அறிகுறி
பதிப்பு: 2021 மார்ச் 18 23:46
புதுப்பிப்பு: மே 06 17:35
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் இலங்கை நிலைமை தொடர்பான தீர்மான வரைபில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதித் தவணையும் முடிந்து இரண்டு நாட்களின் பின்னரே பிரித்தானியப் பாராளுமன்றில் வியாழனன்று விவாதம் வந்தது. இதனால் உடனடிப் பலன் இல்லாவிடினும் ஈழத்தமிழர்கள் தொடரவேண்டிய இன அழிப்பு நீதிக்கான போராட்டத்தின் திசை எது என்பது நிரூபணமாகியுள்ளது. இது உலகளாவிய ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் ஒரு படிப்பினை. சர்வதேச சக்திகளுடன் இணக்க அரசியல் புரிவதை விடவும் இன அழிப்பு நீதிக்கான அறம் சார்ந்த போராட்ட அரசியலையே ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறை என்பது ஐயந்திரிபற வெளிப்பட்டிருக்கிறது.
 
Ambihai Seevaratnam
இன அழிப்பு நீதிகோரி நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலண்டனில் பதினேழு நாட்கள் தொர்ச்சியாக உண்ணாவிரதத்தை முன்னெடுத்த ஐம்பத்துமூன்று வயதுடைய புலம்பெயர் ஈழத்தமிழப் பெண்மணி அம்பிகை சீவரத்தினம்
இரண்டு தரப்புகளும் புரிந்த போர்க்குற்றம் மற்றும் மானுடத்துக்கெதிரான குற்றங்கள் என்ற போர்வையிலேயே இலங்கை மனித உரிமை விவகாரத்தை அணுகவேண்டும் என்ற மாயையை சர்வதேச இணக்க அரசியல் ஈழத்தமிழர்களுக்குள் கடந்த 12 வருடங்களாகப் படிப்படியாக விதைத்துவிட்டிருந்தது.

இந்த மாயையைப் போக்க ஒரு போராட்டம் ஈழத்தமிழர்களுக்குத் தேவைப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் தான் புலம்பெயர் ஈழத்தமிழப் பெண்மணி அம்பிகை தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அம்பிகை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் தனிப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கும், போராட்டத்தை முடித்துவைத்தவர்கள் இறுதியில் மேற்கொண்ட இணக்க அரசியல் அறிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கும் அப்பால், அவரது போராட்டம் ஒரு திசையைத் துல்லியமாகக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு போராட்ட அரசியல் தொடர்பான நம்பிக்கையைப் புதுப்பித்திருக்கிறது.

பதினேழு நாட்களாக அம்பிகை துணிச்சலாக முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்தியிருந்த எழுச்சி பிரித்தானியாவில் இணக்க அரசியலுக்குள்ளும் இராஜதந்திர மாயைக்குள்ளும் செத்துக்கிடந்த புலம்பெயர் அமைப்புகளை மீண்டும் 2009 இல் போன்று தட்டி எழுப்பி நிறுத்தியுள்ளது என்பது வியாழனன்று நிரூபணமாகியுள்ளது.

ஏற்பட்டுள்ள எழுச்சியானது ஒரு தனிமனித முயற்சியின் விளைவு மாத்திரம் அல்ல. ஈழத்தமிழரிடையே பிரித்தானிய அரசு தொடர்பாக நீறுபூத்த நெருப்பாக இருந்த கோபமே வெளியான பூச்சியவரைபோடு சுவாலையாக மாறி வெளிப்பட்டிருக்கிறது.

ஜெனீவாவில் நடைபெறும் தற்போதைய அமர்வுடனும் நடந்தேறியிருக்கிற உடனடிப் பலனற்ற நாடாளுமன்ற விவாதத்தோடும் இந்த எழுச்சி அடங்கிப்போய் மீண்டும் நீறு பூத்துவிடக்கூடாது.

UK Parliament debate
விவாதத்தை முன்னெடுத்த பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனா
2009 இல் இருந்து நீறுபூத்திருந்த கோபமே தூங்கிக் கிடந்த தமிழ் அமைப்புகளைத் தட்டியெழுப்பி அரசியற் கட்சிகளை தமிழர் சார்பாகத் திருப்பவைத்திருக்கிறது. புலம்பெயர் ஈழத்தமிழரிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சியை அடுத்த பதினைந்து மாதங்களுக்குள் பிரித்தானியாவில் அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்துவதற்கான ஆற்றல் அவரது போராட்டத்தை நெறிப்படுத்தியவர்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. அறத்தின் பாற்பட்ட இந்தக் கோபத்தை அறிவுபூர்வமாக பிரித்தானிய அரசியலுக்குள் எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்பதே அடுத்த கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும்.

வியாழனன்று பிரித்தானிய நாடாளுமன்றில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரும் குரல்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களிற் பலர் எழுப்பியுள்ளனர். தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனா இந்த விவாதத்தைக் கொண்டுவந்திருந்தார்.

பிரித்தானியாவில் வதியும் அரை மில்லியன் வரையான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைத்தீவில் தமக்கு நடைபெற்றது இன அழிப்பு என்ற குற்றச்சாட்டை போர் முடிந்து 12 வருடங்களின் பின்பும் தொடர்ந்தும் வலிமையாக முன்வைத்துவருகிறார்கள் என்றும் அதற்கான சர்வதேச விசாரணையை அவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்பதையும் மக் டொனா உணர்வுபூர்வமாக முன்நிறுத்தி உரையாற்றினார்.

அவரின் கருத்தை பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆமோதித்து உரையாற்றினர்.

பதில் சொல்லவேண்டிய ஆளும் கட்சியான கொன்ஸர்வேடிவ் கட்சியின் வெளிநாட்டமைச்சரோ அல்லது பொதுநலவாயத்துக்கும் தென்னாசியாவுக்குமான இராஜாங்க அமைச்சரான விம்பிள்டன் பிரபு அஹ்மத்தோ சமுகமளித்திருக்கவில்லை.

UK Parliament debate
விவாதத்தில் பதிலளித்த பிரித்தானியாவின் ஆசியாவுக்கான இராஜாங்க அமைச்சரும் வேல்ஸ் பகுதிக்கான கொன்ஸவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நைஜல் அடம்ஸ்
எனினும் பிரித்தானியாவின் ஆசியாவுக்கான இராஜாங்க அமைச்சரும் வேல்ஸ் பகுதிக்கான கொன்ஸவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நைஜல் அடம்ஸ் எழுப்பப்ட்ட கேள்விகளிற் சிலவற்றுக்கு மட்டும் பதில்களை வழங்கினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களிற் சிலர் பெப்ரவரி மாதப் பூச்சிய வரைபிலிருந்து மார்ச் 12ம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள இறுதி வரைபில் கணிசமான முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வாதிட முற்பட்டனர். குறிப்பாக குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பது என்ற விடயத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

எனினும் இது எதிர்பார்க்கப்பட்ட சிரியா தொடர்பான சர்வதேச சுயாதீனப் பொறிமுறை போன்ற ஒன்று அல்ல, வெறும் உயர்ஸ்தானிகரின் அலுவலகப் பொறிமுறை மட்டுமே. கேட்டது வேறு, கிடைப்பது வேறு என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமது கருத்தை ஈழத்தமிழர்கள் சார்பாக உரத்து ஒலித்தனர்.

Changes to draft
ஆதாரங்களைச் சேகரிப்பது என்ற சொல்லும் மனித உரிமை மற்றும் தொடர்புடைய குற்றங்கள் என்ற மாற்றங்கள் மாத்திரம் நடைமுறைப் பத்தி ஆறில் சேர்க்கப்பட்டுள்ளன. இன அழிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமன்றி, இது ஒரு சுயாதீனமான, பக்கசார்பற்ற பொறிமுறையும் அல்ல, வெறும் உயர்ஸ்தானிகரின் அலுவலகப் பொறிமுறை மட்டுமே. கேட்டது வேறு, கிடைப்பது வேறு.

Changes to draft
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூல மற்றும் எழுத்துமூல அறிக்கையிடல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தூதுவர் நியமிக்கப்படவில்லை. இது அடுத்த கண்துடைப்பு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்று உச்சரிப்புத் தவறாமல் பலர் அழுத்தமாகத் தமது கருத்தை வெளியிட்டடது ஈழத்தமிழர் பலருக்கு மன ஆறுதலைத் தந்திருக்கிறது என்று பிரித்தானியா வாழ் செயற்பாட்டாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துவெளியிட்டனர்.

இலங்கையில் ஒற்றை ஆட்சித் தன்மையைத் தனது காலனித்துவ காலத்தில் திணித்துவிட்ட பிரித்தானியாவுக்கு இலங்கைத் தீவில் நடந்தேறியுள்ள குற்றங்களுக்குச் சர்வதேச நீதியை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு உண்டு என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்தியம்பினார்.

இலங்கையில் உள்ள தூதரலாயத்தில் ஏன் இன்றும் பிரித்தானியா பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை வைத்திருக்கிறது. அவர் உடனடியாகத் திருப்பி அழைக்கப்படவேண்டும் என்று இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் குரலெழுப்பினார்.

உண்ணாவிரதம் மேற்கொண்ட அம்பிகையின் பெயரைப் பலரும் குறிப்பிட்டனர்.

ஐ.நா. மன்று ஊடாக குற்றவியல் நீதிக்கான ஆதாரங்களைத் தொகுக்கும் சர்வதேச சுயாதீனப் பொறிமுறையைக் கொண்டுவருவது சிரமம் என்றால் பிரித்தானியாவே அதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொறிமுறைக்கு வெளியில் ஏன் முன்னெடுக்கமுடியாது என்றும் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற குரலும் எழுந்தது.

பலரும் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் இன, மத ரீதியான அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டினார்கள்.

UNHRC 46 Session
ஜெனீவாவில் பதியப்படவேண்டிய வரைபுக்கான இறுதித் தவணை முடிந்து இரண்டு நாட்களின் பின்பே பிரித்தானியப் பாராளுமன்றில் விவாதம் வந்தது. உடனடிப் பலன் இல்லாவிடினும் ஈழத்தமிழர்கள் தொடரவேண்டிய இன அழிப்பு நீதிக்கான போராட்டத்தின் திசை வியாழனன்று உறுதியாகியது. இது உலகளாவிய ஈழத்தமிழருக்கு ஒரு படிப்பினை.

ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறை தவறியதாக வரலாறு எழுதப்படக்கூடாது என்றார் ஒருவர்.

இலங்கையில் போர்க் குற்றமிழைத்த தளபதிகள் அரச பதவிகளில் இருக்கிறார்கள் என்பதும் ஜனாதிபதியே குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் என்பதையும் பலரும் எடுத்துரைத்தனர். சவேந்திர சில்வா, கமல் குணரட்ணா ஆகியோரின் பெயர்கள் பலரிடம் இருந்து வெளிப்பட்டன.

ஐ.நா. அமைதிப்படைப் பணியில் இருந்து இலங்கை இராணுவத்தினர் புறக்கணிக்கப்படவேண்டும் என்றனர் சிலர். மேலும் சிலர் பொருளாதார மற்றும் வாணிபத் தடைகளை பிரித்தானியா இலங்கை மீது விதிக்கவேண்டும் என்று வாதாடினர்.

புவிசார் அரசியலின் தாக்கத்தைச் சுட்டிக்காட்டிய ஒருவர் இலங்கைத் தீவில் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாயிருப்பதை சீனாவின் உயிகுர் முஸ்லிம்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்றார் ஒருவர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு தென் ஆசியாவுக்கான இராஜாங்க அமைச்சர் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. எனினும் அவர் சார்பாகப் பதிலளித்த ஆசியாவுக்கான இராஜாங்க அமைச்சர் நைஜல் அடம்ஸ் இலங்கையைத் தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவையின் அட்டவணைக்குள் வைத்திருப்பதற்கே தாம் பெரும்பாடு படவேண்டியிருப்பதாகக் கூறிய அதேவேளை விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என்றும் வருணித்தார். இலங்கை பிரித்தானியாவின் நட்பு நாடு என்றும் அவர் வர்ணித்தார். அதேவேளை பொறுப்புக்கூறலும் முக்கியமானது என்றார் அவர். இலங்கைத் தரப்புகள் தொடர்பான தடைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.

மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இலங்கை தொடர்பான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறையை வலுப்படுத்தும் வகையில் தீர்மானத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். உண்ணாவிரதி அம்பிகை இரண்டு நாட்களுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார் என்பதைத் தான் சபைக்குத் தெரியப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

விவாதத்தை ஆரம்பித்து வைத்திருந்த மக் டொனா இறுதியாகவும் இரண்டு நிமிடங்கள் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் போதாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் இலங்கை அரசு கடும் நடவடிக்கைளை மட்டுமே விளங்கிக்கொள்ளும் என்று இடித்துரைத்தார்.

பிரித்தானியாவில் கட்சி அரசியலை ஈழத்தமிழரின் போராட்ட அரசியல் மீண்டும் ஒருதரம் உலுப்பியிருக்கிறது.

எனினும், பூச்சிய வரைபின் குறைந்த மாற்றங்களின் போதாமை குறித்த கோபத்தையும் எழுச்சியையும் பொருத்தமாக ஆற்றுப்படுத்துவது காலத்தின் தேவையாகிறது.

[விவாதத்தை பிரித்தானிய பாராளுமன்ற இணையத்தளத்தில் முழுமையாக ஒளிவடிவில் பார்வையிடலாம், ஹன்சாட்டில் எழுத்துவடிவிலும் வாசிக்கலாம்.]