ஈழத் தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட

தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் காலமானார்

ஈழத்தமிழ்ப் படைப்புக்களை நூலாக்கியவர்
பதிப்பு: 2021 மே 05 15:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 07 08:33
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வல்லாதிக்க நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தது. இந்த நாடுகள் தலையிடாமல் இருந்திருந்தால், இன்று சர்வதேச அரங்கில் தமிழ் இனத்துக்கு என்றொரு இடம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தமிழ் நாட்டில் துணிவோடு வெளிப்படுத்தியவர்தான் தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் கோவிந்தசாமி இளவழகன். தமிழகத்தைச் சேர்ந்த உணர்வு மிக்க தலைவர்கள் என்று கூறப்படுவோர் தம் அரசியல் லாபத்திற்காக வடவரோடு இணங்கியும், பதுங்கியும், தன்னல உணர்வு மேலோங்கி இருந்தமையும் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததென்றும் பகிரங்கமாகவே கூறியவர் இளவழகன்.
 
யாழ்ப்பாண அகராதி என்னும் மானிப்பாய் அகராதி (இரண்டு தொகுதிகள்) மற்றும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளி விழா தமிழ் பேரகராதி (மூன்று தொகுதிகள்) ஆகிய அகராதிகளை ஒரே நேரத்தில் வெளியிட்ட பெருமை இவருக்குரியதாகும்

தமிழர் மருத்துவக் களஞ்சியம் வெளியிடுதல், தமிழ்க் குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்கப் பன்முகச் செய்திகளை உள்ளடக்கிய குழந்தைகள் கலைக் களஞ்சியம் தமிழ்மண் பதிவாகவும், சுவடாகவும் தமிழ்- தமிழ் அகராதி, ஆங்கிலம்- தமிழ் அகராதி பிறமொழிச் சொல் கலவாத தனித்தமிழ் நடையில் உருவாக்கும் திட்டங்களையும் வகுத்துச் செயற்பட்டு வந்ததொரு நிலையில் இளவழகன் சென்ற செவ்வாய்க்கிழமை நான்காம் திகதி இயற்கை எய்தினார்.

கொவிட் 19 நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகிச் சென்னை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்தாகச் சென்னையில் இருந்து வெளிவரும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளவழகன் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உரத்தநாடு குடிக்காடு கிராமத்தில் 03.07.1948 ஆம் ஆண்டு பிறந்தார். பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்ட இவருடைய சொந்தப் பெயர் அப்பாவு.

ஆனால் 1960 களில் தஞ்சாவூரில் இரு தமிழ்ப் புலவர்களினால் நடத்தப்பட்ட திருக்குறள் போட்டிகள் மற்றும் தமிழ்த்துறை சார்ந்த போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்றியதால், தனது பெயரை இளவழகன் என்று மாற்றினார்.

இது பற்றிச் சிறகு என்ற தமிழ் இணையத்தள சஞ்சிகைக்கு இளவழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலில் விரிவாகக் கூறியுள்ளார்.

அந்தக் காலத்தில் தஞ்சாவூரில் இருந்த இரண்டு தமிழ்ப் புலவர்களே தனது பெயர் மாற்றத்துக்குக் காரணம் எனவும் இளவழகனார் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் போதே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகவும் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டவராகவும் இவர் திகழ்ந்தார்.

இளவழகன் இலக்கியப் படைப்பாளியோ, எழுத்தாளனோ அல்ல. அரசியல் விமர்சகரும் அல்ல. மாறாகப் பழந்தமிழ் நூல்களையும், உலக மொழிகளில் தமிழ் மொழி மேன்மை பெற்றது என்பதையும் வெளிப்படுத்தும் நோக்கில் தமிழியல் ஆய்வு நூல்களை அடுக்கடுக்காக வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.

உலக அளவில் தமிழர்களுக்கென்றொரு தனி அரசு இருக்க வேண்டுமென்ற பேரவா இவரிடம் இருந்தது. இதனாலேயே தமிழ் மொழிக்கான சர்வதேச அந்தஸ்த்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், தமிழ் இதழியல் ஆய்வு நூல்களை வெளியிடுவதில் இவர் அக்கறை செலுத்தியிருந்தார்.

பாடசாலைப் பருவத்தில் ஏற்பட்ட தமிழ்மொழி உணர்வால் இளமைப் பருவத்தில் தனது சொந்த ஊரான உரத்த நாட்டில் தமிழர் உரிமைக் கழகம் என்ற அமைப்பை நிறுவித் தமிழ்மொழிக்கும் தமிழின மேம்பாட்டிற்கும் கடுமையாக உழைத்தார். அத்துடன் பாவாணர் படிப்பகம் என்ற ஒரு படிப்பகத்தை நிறுவி இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றினார்.

1965 இல் மத்திய அரசு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தியது. இதனை எதிர்த்துத் தமிழகம் தழுவிய அளவில் மாணவர் போராட்டம் நடந்தபோது, உரத்த நாட்டுப் பகுதியில் இவர் தலைமை ஏற்று இந்தி மொழியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.

அப்போது இளவழகனார் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டதால், இவர் கைது செய்யப்பட்டு 48 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய இத் தியாகத்துக்காகத் தமிழ்நாடு அரசு இவருக்குத் தமிழ்மொழிக் காவலர் என்ற விருது வழங்கிக் கௌரவித்தது.

மொழிக்காகவும், இனத்திற்காகவும் பெரும் பங்காற்றிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் தொகுத்து காலவரிசையில் பொருள் வழி பிரித்து ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என நினைத்தே தமிழ்மண் என்ற பதிப்பகத்தை இளவழகன் நிறுவினார்

பாவாணர் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களினால் நிறுவப்பட்ட உலகத்தமிழ்க் கழகத்தில் இணைந்து மாவட்டப் பொருளாளராகப் பதவி வகித்தபோது, தமிழ் நாட்டில் இலக்கியத்துறை சார்ந்த அனைவரினதும் தொடர்புகள் இவருக்குக் கிடைத்தன.

1982 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளோடு இவருக்குத் தொடர்புகள் ஏற்பட்டன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த சிந்தனைகளில், இவர் மிகுந்த தெளிவோடு செயற்பட்டிருந்தார். சர்வதேச அரங்கில் பேசப்படுகின்ற ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில், பழ நெடுமாறனுடன் இணைந்து உலகத்தமிழ் பேரமைப்பின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துக் கொண்டு இறக்கும்வரை ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டுவதற்குத் தூணாக இருந்தவரும் இவர்தான்.

மொழி, இனம் சார்ந்த நூல்களை வெளியிட்டு வந்த பதிப்பகங்களில் குறிப்பாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், மாணிக்கவாசகர் பதிப்பகம், பூம்புகார் பதிப்பகம், பாரி நிலையம் பதிப்பகம் என இருந்த முற்போக்குப் பதிப்பகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமான நூல்களை பதிப்பித்தலிலும் ஆர்வம் கொண்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பமும் தமிழ், தமிழர் வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும்.

இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் மொழிக்காகவும், இனத்திற்காகவும் பெரும் பங்காற்றிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் தொகுத்து காலவரிசையில் பொருள் வழி பிரித்து ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என நினைத்தே தமிழ்மண் என்ற பதிப்பகத்தை இளவழகன் நிறுவினார்.

தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் இந்தப் பணியை முழுமையாக எவரும் இதுவரை செய்யவில்லை என்றே பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். பாவாணர் நூற்றாண்டு விழாவில் மொழி நூல் கதிரவன், தேவநேயப் பாவாணர் எழுதிய 53 நூல்களையும் ஒரே நேரத்தில் இவர் வெளியிட்டார். இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அன்று பெரிய வரவேற்பும் கிடைத்தது.

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் 25 தொகுப்புகளையும், அறிஞர் அண்ணாவின் படைப்புகள் 110 தொகுதிகளாக பதிப்பித்தவர் இவர்தான்.

இவ்வாறான தமிழியல் நூல்களைப் பதிப்பிக்கும்போது வியாபார நோக்கம் இருக்கவேகூடாது என்பதில் இவர் உறுதியாக இருந்தார். தொல்காப்பியம் முழுபாகத்தையும், சங்க இலக்கியம் முழுவதையும் இவர் நூலாக வெளியிட்டார். ஈழத்தில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்த ந.சி.கந்தையா என்ற அறிஞன் எழுதிய 66 நூல்களை இவர் வெளியிட்டார்.

1955 ஆம் ஆண்டு திரு.சாமிநாத சர்மா, என்ற வரலாற்று அறிஞர் எழுதிய சீன வரலாறு, ரஷ்ய வரலாறு, துருக்கி வரலாறு, இத்தாலிய வரலாறு போன்ற வரலாற்று நூல்களையும் இவர் வெளியிட்டார்.

இங்கு சிறப்பு என்னவென்றால் 1955 ஆம் ஆண்டு பொது வாழ்வில் ஈடுபட்ட பெரியோர்கள் அனைவரும் இந்த வரலாற்று நூல்களைப் படித்து, மேடையில் இக்கருத்துகளை பேசியும் வந்தார்கள்.

வரலாற்றறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய 78 நூல்களையும் 31 தொகுதிகளாக வெளியிட்டமை இளவழகனின் மாபெரும் பணியாகும்.

தமிழ் உலகில் வாழ்ந்து மறைந்த பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரின் 40 இற்கும் மேற்பட்ட நூல்களையும் இவர் வெளியிட்டார்.

1965 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி என்னும் மானிப்பாய் அகராதி (இரண்டு தொகுதிகள்) மற்றும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளி விழா தமிழ் பேரகராதி (மூன்று தொகுதிகள்) ஆகிய அகராதிகளை ஒரே நேரத்தில் வெளியிட்ட பெருமை இவருக்குரியதாகும்.

தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் எழுதிய 54 நூல்களையும் ஒரே நேரத்தில் 24 தொகுதிகளாக வெளியிட்டவரும் இவரே.

புழக்கத்தில் இல்லாத பல நூல்களைத் தேடிப்பிடித்தும் இவர் பதிப்பித்திருக்கிறார். சங்க இலக்கிய நூல்களில் ஒவ்வொரு பதிப்பகத்தாரும் ஒரு குறிப்பிட்ட நூல்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இளவழகன் அனைத்து சங்க இலக்கியம், இலக்கணம் சார்ந்த அனைத்து நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து நூலை வாசிப்போருக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் வெளியிட்டிருக்கிறார்.

1907 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிசை நூலான கருணாமிர்த சாகரத்திரட்டும், 1917 இல் வெளியான கருணாமிர்த சாகரத்திரட்டு முதல் புத்தகமும், 1946 ஆம் ஆண்டு வெளியான கருணாமிர்த சாகரத்திரட்டு இரண்டாம் புத்தகம் உட்பட மூன்று புத்தகங்கள் மிகவும் சமீபத்திலேயே வெளியிடப்பட்டன.

தஞ்சை தமிழிசை முதல் புத்தகம் (1917), கருணாமிருத சாகரம் இரண்டாம் புத்தகம் (1934) கருணாமிருத சாகரத் திரட்டையும் (1907) சேர்த்து ஏழு தொகுதிகளாக, மு.ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக் களஞ்சியம் ஆகியனவும் மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த உணர்வு மிக்க தலைவர்கள் என்று கூறப்படுவோர் தம் அரசியல் லாபத்திற்காக வடவரோடு இணங்கியும், பதுங்கியும், தன்னல உணர்வு மேலோங்கி இருந்தமையும் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததென்றும் பகிரங்கமாகவே கூறியவர்

பி.ராமநாதன் என்ற தமிழ் அறிஞர் மொழிபெயர்த்துள்ள உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் என்ற நூலில், செக்கொசுலேவியாவின் தமிழ் அறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் தொடர்பான பின் இணைப்பை இளவழகன் சேர்த்துக் கொண்டார்.

கமில் சுவலபில் என்ற அறிஞருடன் இளவழகன் கடிதத் தொடர்பிலும் இருந்துள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்த மேலை நாட்டு அறிஞர்கள் என்ற தலைப்பில் புத்தகத்தை விரைவில் வெளியிடவிருந்த சூழலிலேயே இவர் இயற்கை எய்தியுள்ளார்.

இவருடைய இழப்பு தமிழக மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். இவருடைய மறைவு குறித்து வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எவரும் இதுவரை இரங்கல்கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை.

சினிமா பிரபலங்கள் கொவிட்- 19 நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தால் கண்ணீர் வடிக்கும் ஈழத்துத் தமிழ் முகநூல் அன்பர்களுக்கும் இவருடைய வரலாறு தெரியவில்லை.