தாயக, புலம்பெயர் ஈழத்தமிழர்களைக் குறிவைத்துச் செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா

இந்தியா தொடர்பாக தப்புக்கணக்குகள் போடும் தமிழக, ஈழ, புலம்பெயர் தமிழர்கள்

இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக தென்னாசியாவை மையப்படுத்தி வியூகங்களை விரைவுபடுத்துகின்றன
பதிப்பு: 2021 ஜூலை 27 10:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 01 14:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனும் இந்தோ பசுபிக் இராணுவ வியூகத்தில் இணைந்திருக்கும் இந்தியா, ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் உருவாக்கியது. பதிலடியாக இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா ஜூலை மாதம் உருவாக்கியது.
 
ஆசியான் (ASEAN) நாடுகளுக்கான உலகின் பிரமாண்டமான பொருளாதாரக் கூட்டாக Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பதை 2020 நவம்பரில் ஆரம்பித்துள்ள சீனாவின் நகர்வுக்குள் ஜப்பான் பங்குபெறும்போதும் இந்தியா அதில் பங்கேற்காது விலகி இருந்து கொண்ட சூழலில், அடுத்த நகர்வாக தென்னாசியாவை சீனாவின் பொருளாதார வியூகம் அணுக ஆரம்பித்திருக்கிறது

ஆசியான் (ASEAN) நாடுகளுக்கான உலகின் பிரமாண்டமான பொருளாதாரக் கூட்டாக Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பதை 2020 நவம்பரில் ஆரம்பித்துள்ள சீனாவின் நகர்வுக்குள் ஜப்பான் பங்குபெறும்போதும் இந்தியா அதில் பங்கேற்காது விலகி இருந்து கொண்ட சூழலில், அடுத்த நகர்வாக தென்னாசியாவை சீனாவின் பொருளாதார வியூகம் அணுக ஆரம்பித்திருக்கிறது.

ஆசிய நாடுகளுக்கான வறுமை நிவாரணம் உள்ளிட்ட நிதியுதவிகளை இந்தியா மூலமாகச் செய்வதற்கு கடந்த மாதம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஜி 7 மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தவொரு நிலையில், சீனா இந்தப் புதிய China-South Asian Countries எனும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் குவாட் வியூகம் கடலைக் கருவாய்க் கொண்டிருக்க, சீனாவின் பதில் வியூகம் இந்தியாவின் வட எல்லையில், தரையில், மிகவும் பலமானதாக மாறிவிட்டது.

பூட்டான் என்ற ஒரு சிறிய நாட்டை விட வடபுலத்து நில எல்லையில் தனது வியூகத்துக்குள் வேறு நாடுகளைக் கொண்டுவர இயலாது திணறும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தெற்கில், இந்து சமுத்திரத்தில், கடல் வியூகத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க-இந்திய மற்றும் குவாட்டின் கையே தற்போதைக்கு ஓங்கியிருக்கிறது.

ஆனால், குறிப்பாக தென்னிந்தியக் கடல் எல்லையில் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசும் அதன் தற்போதைய ஆட்சியாளர்களுமே சீனாவுக்கு இருக்கும் ஒரே ஒரு பலமான பிடி.

ஒரு தீவாக இந்தியாவின் தென்கோடிப் புறத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசு மட்டுமே சீனாவுக்கு இருக்ககக் கூடிய நட்பு நாடாக இருப்பதான ஒரு தோற்றப்பாடு நிலவுகிறது.

ஆயினும், தற்போதைக்கு அது பொருளாதார ரீதியிலானது மட்டுமே.

அதேவேளை, இராணுவ ரீதியிலான ஓர் வியூகத்துக்குள்ளும் இலங்கைத் தீவைக் கொண்டுவரும் நோக்கம் சீனாவுக்கு நிச்சயமாக இருக்கும். ஆனால் அது இன்னும் நடந்தேறவில்லை என்பதை குறிப்பாக இங்கு நாம் அவதானிக்கவேண்டும்.

அப்படியிருந்தபோதும் சீனாவின் நகர்வுகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசு இந்தியாவைச் சீண்டும் வகையில் நேரடியாகப் பங்கெடுக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஆனால், பெருத்த சவால்களை எதிர்கொண்டு இலங்கை ஒற்றையாட்சி அரசு மேற்கொள்ளும் இந்தத் தெரிவுகள் குறித்து தமிழர் தரப்பில் பலர் மீண்டும் மீண்டும் மேலெழுந்தவாரியாகத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

பூட்டான் என்ற ஒரு சிறிய நாட்டை விட வடபுலத்து நில எல்லையில் தனது வியூகத்துக்குள் வேறு நாடுகளைக் கொண்டுவர இயலாது திணறும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது

இந்தியா ஈழத்தமிழர்களை நட்புச் சக்தியாக அங்கீகரித்து, தனது அணுகுமுறையை மாற்றியமைத்து, இலங்கை அரசைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஈழத்தமிழர்களுக்குச் சார்பான ஒரு மெய்நடப்பு நிலையை மீண்டும் தோற்றுவிக்கும் என்றும் அதுவே இந்தியாவுக்கு இருக்கும் ஒரே ஒரு தெரிவு என்பதுமே அந்தத் தப்பான கணக்கு.

ஆனால், இலங்கை ஒற்றையாட்சி அரசு வைத்திருப்பது தமிழ்த் தரப்புகளிடம் காணப்படுவது போன்ற மேலெழுந்தவாரியான சாதாரண ஒரு கணக்கல்ல; கணிப்பும் அல்ல.

அது ஒரு சமன்பாடு!

மாலைதீவு சீன சார்பு நிலையைக் கைக்கொண்டு எந்தவகையான சிக்கல்களை எதிர் நோக்கியது என்பதையும் சிங்கள ஆட்சியாளர்கள் நன்கு அறிவர்.

இலங்கைத் தீவு விவகாரத்தில், இந்தியாவை ஈழத்தமிழர்கள் அல்ல, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மாத்திரமே காப்பாற்ற முடியும் என்பதை இந்தியாவுக்கே உணர்த்துவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது இலங்கைத் தரப்பின் அந்தச் சமன்பாடு.

இதனால், அமெரிக்கா தன்னுடன் பேரம் பேசி, அமெரிக்காவினூடான இராணுவ வியூகத்துக்கு உட்பட்டதாக இலங்கை தொடர்பான இந்தியத் தெரிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமெரிக்காவிடமே தற்போதைய இலங்கை அரசாங்கம் கையளிக்க விரும்புகிறது. இதுவே இலங்கை வகுத்திருக்கும் சமன்பாட்டின் சூத்திரம்.

தன்னோடு இந்தியா ஊடாக அன்றி அமெரிக்கா நேரடியாக இணக்கத்துக்கு வரவேண்டும் என்பதே அந்தச் சமன்பாடு.

இந்தியா குறித்த அணுகுமுறை பற்றிய தெளிவு இலங்கை அரச தரப்பிடம் ஈழத்தமிழர் தரப்பை விடவும் கூடுதலாக இருப்பதாகவே தெரிகிறது.

தென்வியூகத்தில் தனது கோடிக்குள் மீண்டும் இந்தியா தோல்வியடைந்துவிடும் என்ற அவசர எடுகோள்களை ஈழத் தமிழர்கள் மேற்கொள்வது நல்லதல்ல. இம்முறை இந்தியாவை அமெரிக்காவே காப்பற்றப்போகிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் புதிய அமெரிக்க ஜனாதிபதி பைடனின் நிர்வாகத்தில் எவ்வாறான வியூகங்களைச் சீனா குறித்து அமெரிக்கத் தலைமையின் கீழ் இணைந்து வகுக்க உள்ளன என்பது பற்றிய அவதானிப்பில் தமிழர்கள் கூர்மையாக இருக்கவேண்டும்.

வடக்குக் கிழக்கில் உள்ள ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான கடற் பிரதேசங்கள், வளங்கள் போன்றவற்றை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குக் குத்தகைக்குக் கையளிக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுவதை தென்னிலங்கையில் சிங்களக் கடும்போக்குத் 'தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்' கண்டிக்க முற்படுகின்றமை சிங்கள பௌத்த தேசிய நலன்சார்ந்தது.

வடமாகாணக் கடற் பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் அமெரிக்கா. இந்தியா போன்ற நாடுகளிடம் கையளித்து, வேண்டுமானால் சீனாவுக்கும் அங்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உடைப்பதே கோட்டாபய, ரணில் விக்கிரமசிங்க போன்ற சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கம்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்களின் இந்த நோக்கமும் 'தேசப்பற்றுள்ள' தேசிய இயக்கம் போன்ற சிங்கள அமைப்புகளின் எதிர்ப்பும் வெவ்வேறு கோணத்தில் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது என்ற அடிப்படைச் சிந்தனை ஒன்றுதான்.

அமெரிக்கா தன்னுடன் பேரம் பேசி, அமெரிக்காவினூடான இராணுவ வியூகத்துக்கு உட்பட்டதாக இலங்கை தொடர்பான இந்தியத் தெரிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமெரிக்காவிடமே தற்போதைய இலங்கை அரசாங்கம் கையளிக்கக விரும்புகிறது. இதுவே இலங்கை வகுத்திருக்கும் சமன்பாட்டின் சூத்திரம். தன்னோடு இந்தியா ஊடாக அன்றி நேரடியாக அமெரிக்கா இணக்கத்துக்கு வரவேண்டும் என்பதே சமன்பாடு

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பிரதேசங்களில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்குவதும். இலங்கைத் தீவின் முதலீட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளுக்கு இடமளிப்பதும் இலங்கைத் தீவின் இறைமைக்கு உட்பட்டது என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாதம். சிங்களவர்களின் பொருளாதார நலன்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற முறையிலும் அது அமைந்திருக்கும்.

ஆனால் தமிழர் பிரதேசங்களை இவ்வாறான நோக்கில் சிங்கள ஆட்சியாளர்கள் அணுகவில்லை. நிலத் தொடர்பைப் பிரித்துத் தாயகக் கோட்பாட்டை உடைத்தல் என்ற இலங்கை ஒற்றையாட்சியின் சிந்தனைகளை உள்வாங்கியே அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் வடக்குக் கிழக்கில் தங்கள் புவிசார் நலன்களை நிறைவேற்றுகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அமெரிக்க நட்பு நாடுகளையும் இணைத்துக் கொண்டு ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் மூலம் கொழும்பு போட் சிற்றியில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்களையும் இலங்கை வரவழைக்கக் கூடிய சூழல் நிறையவே இருக்கிறது.

ஆகவே, புவிசார் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகள் தற்போதும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாகவே நீக்கம் செய்யும் வகையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வசதியாக அமைந்துள்ளன.

இதை எதிர்கொள்வதற்கான மாற்றுத் திட்டமிடலே ஈழத்தமிழர்களுக்கான இன்றைய தேவை.

இந்தியாவின் முன் முட்டிக்காலிலோ, அஷ்டாங்கமாகவோ விழுவது அல்ல!