புவிசார் நலன் நோக்கில் கொழும்புடன் பேரம் பேசியுள்ளதால்,

தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி

இந்தியாவோடு இணைந்து பயணிக்குமாறு சுமந்திரனுக்கு அமெரிக்காவில் வகுப்பெடுத்தமையும் தற்போது கசிந்துள்ளது
பதிப்பு: 2022 பெப். 14 10:49
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 22:27
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. நிதி மாத்திரமே இலங்கையின் குறிக்கோள் என்பது வல்லாதிக்க நாடுகளின் பிரதான அவதானிப்பு. அத்துடன் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படை நிலைப்பாட்டோடுதான், இலங்கை கன கச்சிதமாகச் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இந்த வல்லாதிக்க நாடுகள் நன்கு அறிந்திருக்கின்றன.
 
அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர் யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் 13 இற்கு எதிராகச் சட்டத்தரணி சுமந்திரன் காரசாரமாகப் பேசியமைகூட விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையே

கூடுதலான நிதியைக் கொடுத்தே இலங்கையை, இந்தியா தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்பது பகிரங்கமாகத் தற்போது வெளிப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி புதுடில்லிக்குச் சென்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor) அஜித் டோவாலைச் சந்தித்திருந்தார்.

அஜித் டோவாலைச் சந்தித்த செய்தி, இந்திய ஊடகங்களில் தாமதித்தே கசிந்திருந்தன.

இந்தியாவின் ஜேம்ஸ் பொன்ட் (James Bond) என அழைக்கப்படும் அஜித் டோவால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்குரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளதோடு இந்தியாவின் இரண்டாம் நிலை உயர் அதிகாரியுமாவார்.

குறிப்பாக இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கான வியூகங்களை வகுப்பதில் பிரதமர் நரேந்திரமோடிக்குச் சமமான ஒருவர்.

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் ஆகிய ஐவருமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைில் முக்கியமானவர்கள்.

இவர்கள் ஐவரும் இந்தியாவின் சர்வதேச அரசியலை (International politics) ஒருசேரத் தீர்மானிக்கின்ற உயர்பீடமாவர். இவர்களில் ஒருவரையேனும் இலங்கை அமைச்சர் ஒருவர் சந்திப்பது உயர்மட்டச் சந்திப்பாகவே கருதவேண்டும்.

இந்தியாவின் சர்வதேச அரசியலானது புவிசார் அரசியலையும் (Geopolitics) பாதுகாப்பு உறவுகளையும் (Security Relations) வர்த்தக உறவுகளையும் (Trade Relations) ஏனைய இராஜதந்திர உறவுகளையும் (Diplomatic Relations) உள்ளடக்கியுள்ளது.

இலங்கை அமைச்சர்கள் இந்தியாவுக்குச் செல்லும்போது இடம்பெறும் சந்திப்புகள் பரஸ்பரமாக (Reciprocal) அமைந்திருந்தால், உதாரணமாக இலங்கை நிதிமைச்சர் இந்திய நிதியமைச்சரையும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்தால், அந்தச் சந்திப்புகள் பரஸ்பரமானவை என்ற வகையில் முக்கியத்துவம் பெறும்.

மேற்குறிபிடட ஐவருக்குள் எவரையும் சந்தித்தாலும் இந்தப் பரஸ்பரத் தன்மையில் எந்தக் குறையும் இருக்காது. மாறாக இந்த ஐவரில் வேறொருவரைச் சந்தித்தால் அந்தச் சந்திப்புக்குப் பரஸ்பரத் தன்மையைவிட கூடிய முக்கியத்தும் இருப்பதாகவே கருதப்பட வேண்டும்.

ஆனால் இதற்கு மாறான அபிப்பிராயத்தை இந்திய ஊடகங்கள் ஊடாக உருவாக்குவது கபட நோக்குள்ளதாகவே கருத இடமுண்டு.

குறிப்பாகப் பசில் ராஜபக்ச அஜித் டோவாலைச் சந்தித்தபோதும், பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கவில்லை என்றும் அவருடைய பயணம் தோல்வி என்ற கோணத்திலும் சில இந்திய ஊடகங்களும், சில இந்திய அரசியல் பத்தி எழுத்தாளர்களும் தொடர்ந்து சித்திரித்து வருகின்றனர்.

பசில் ராஜபக்ச இலங்கையின் நிதியமைச்சர் மாத்திரமே, ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவின் சகோதரர் என்பதற்காக வல்லரசு நாட்டின் பிரதமரான நரேந்திரமோடி சந்திக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

கொழும்பு கேட்பதை டில்லி தனது புவிசார் அரசியல். பொருளாதார நலன் நோக்கில் கொடுப்பதால், தமிழ் மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்து உருவாகி விடக்கூடாதென்ற விவகாரம் புதுடில்லியினால் அடக்கி வாசிக்கப்படுகின்றது. இந்தியா, இலங்கையை பறக்கணிக்கின்றது என்ற செய்தியை பரப்புவதன் மூலம் தமிழ் மக்கள் இந்தியாவைத் தொடர்ந்தும் நம்ப வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பும் உண்டு

இருந்தாலும் இந்தியாவின் சக்தி மிக்க மேற்குறிப்பிட்ட ஐவரில் ஒருவரான அஜித் டோவால் சந்தித்திருக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியமானது.

இந்தச் சந்திப்பிலேதான் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னரானதொரு சூழலிலேதான் இந்தியா மீது இலங்கை அதீத நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றது.

அதாவது அச்சம் கலந்தவொரு பின்னணியில் இந்தியாவின் காலில் இலங்கை விழுந்திருக்கின்றதெனலாம்.

இலங்கை அரசாங்கம் என்ற முறையில் தமது கொள்கை, கடன்களைப் பெறுவதுமட்டுமல்ல. முதலீடுகள், வர்த்தக உறவுகள், மூலதனம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்துவதாக வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.

பசில் ராஜபக்ச டிசம்பர் மாதம் புதுடில்லிக்குச் சென்றபோது, த சண்டே மோனிங் என்ற ஆங்கில நாளிதழ் பீரிஸ் கூறியிருந்த இக் கருத்தை வெளியிட்டிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்புக்கு வருகை தந்திருந்த அஜித் டோவால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தபோது ஐம்பது மில்லியன்களை மாத்திரமே வழங்க இணங்கியிருந்தார்.

பாதுகாப்பு, உள்ளக விவகாரங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து உரையாடியதன் அடிப்படையில் இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவியை வழங்கியதாக என்.டி.ரி.வி செய்தி இணையத்தளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முதலாக கொழும்புக்குப் பயணம் செய்திருந்த இந்தியாவின் இரண்டாவது உயர் நிலை அதிகாரி அஜித் டோவால்.

இந்தோ- பசுபிக் விவகாரம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் செயற்பாடு எப்படி இருக்க வேண்டுமென்பதில், கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தபோது அச்சுறுத்தும் தொனியில் அஜித் டோவால் பேசியிருந்தார் என்றும், ஆனாலும் அதற்குக் கோட்டாபய ராஜபக்ச மசியவில்லை என்றும் உள்ளகத் தகவல்கள் கூறியிருந்தன.

அந்துடன் இந்த நிதித் தொகைபோதாது என்ற இலங்கையின் முணுமுணுப்பின் பிரகாரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்ச்சியாகப் பேசியதனாலும், இந்தோ- பசபிக் பாதுகாப்பு விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இந்தியாவும் இலங்கையோடு பேரம் பேசியதன் பின்னணியிலுமே, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பசில் ராஜபக்ச புதுடில்லிக்குச் சென்று கூடுதல் நிதியுதவிகளைப் பெறுவதுபற்றிய இணக்கத்தைப் பெற்றிருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, கடந்த டிசம்பர் மாதம் டில்லிக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்சவை நரேந்திரமோடி சந்திக்கவில்லை என்றும் இலங்கைக்கு அது தோல்வி என்ற தொனியிலும் சில இந்திய ஊடகங்களும் இந்தியப் பத்தி எழுத்தாளர்களும் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் வெளியிட்டதன் பின்னணியில், ஈழத்தமிழர்களைத் திருப்தியடையச் செய்யும் இராஜதந்திரம் உட் பொதிந்திருக்கின்றதெனலாம்.

அதாவது இந்தியா, இலங்கையை பறக்கணிக்கின்றது என்ற விடயத்தைப் பரவச் செய்வதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியாவைத் தொடர்ந்தும் நம்ப வேண்டும் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.

அழுத்திச் சொல்வதானால், கொழும்பு கேட்பதை புதுடில்லி தனது புவிசார் அரசியல், பொருளாதார நலன் நோக்கில் கொடுப்பதால், தமிழ் மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்து நிலை உருவாகிவிடக்கூடாதென்ற விவகாரம் புதுடில்லியினால் அடக்கி (அமத்தி) வாசிக்கப்படுகின்றது.

ஆனால் கூடுதலான நிதியுதவிகளை வழங்கிப் புவிசார் அரசியல் நலன் அடிப்படையில் இலங்கையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நகர்வுகளையே இந்தியா முன்னெடுத்து வருகின்றது என்பதே வெளிப்படை.

அதாவது 2009 இன் பின்னரான பன்னிரென்டு ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் இந்தியா குறித்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கு மாறாக இலங்கைக்கு கூடுதல் நிதிகளை வழங்கிப் புவிசார் அரசியல் அடிப்படையில் உறவைப் பேணுகின்றோம் என்ற குற்ற உணர்வு இந்திய மனச் சாட்சிக்குப் புரிகின்றது.

ஆனால் அதனை மூடி மறைக்கவே இலங்கையை இந்தியா புறக்கணிக்கின்றது போன்ற தொனியிலான செய்திகள் புதுடில்லிக்கு வேண்டப்பட்ட சில இந்திய ஊடகங்களினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

அதேபோன்று சென்ற ஆறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் சென்ற வெளியுறவு அமைச்சர் பேராசியர் பீரிஸ், வெறும் கையோடு இலங்கை திரும்பினாரென இந்திய அரசியல் பத்தி எழுத்தாளர் சிவா பரமேஸ்வரன் எழுதிய கட்டுரை ஒன்று கனடா உதயன் பத்திரிகையில் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது.

ஒருபுறம் இந்திய ஊடகத்துறையினர் இலங்கை அமைச்சர்களின் பயணங்களை அடக்கி வாசிக்க முற்படுவதும், அதேவேளை அமெரிக்காவிலும் இலங்கையிலும் தமிழர் பிரதிநிதிகளாகத் தம்மை வெளிப்படுத்துவோர், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எழுந்து நின்று வாசிப்பதுமாக தமிழ் அரசியல் பரப்புக் கையாளப்பட்டு வருகின்றது

இதே பத்தி எழுத்தாளர்தான், அதே பத்திரிகையில் வெளியான வேறொரு கட்டுரையில் 13 கிழிந்த வேட்டியென்றாலும் தற்போதைக்குத் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்திடுகிறார். 13 ஐ எதிர்க்கும் தமிழ்த்தரப்பையும் கிணடல் அடிக்கிறார்.

ஆகவே இலங்கைக்குக் அதிகளவு நிதிகள் வழங்கித் தமது புவிசார் அரசியல் நோக்கங்களைப் பெற முற்படுவதை தமிழர்கள் அறிந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே, பசில் ராஜபக்சவையும் பேராசிரியர் பீரிஸையும் இந்தியா கண்டுகொள்ளவில்லை என்ற தொனியிலான செய்திகள் கட்டுரைகளுக்கு சில இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதும் பட்டவர்த்தனம்.

ஆனால் இந்தியாவின் தலைமைத்துவம் இலங்கைக்குப் பாரிய சக்தி என்று பேராசிரியர் பீரிஸ், டில்லியில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், அனுராதபுரத்தில் இடம்பெற்ற பெரும் மக்கள் கூட்டத்தில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார்.

அது மாத்திரமல்ல 2.4 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு இந்திய வழங்கவுள்ளதென கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோர் கூடியிருந்த மேடையில் நின்று, பெரும் திரளான மக்கள் மத்தியில் கூறியிருக்கிறார். ஆகவே இலங்கை இந்தியாவிடம் இருந்து கூடுதல் நிதிகளை மேலும் மேலும் பெறவுள்ளது என்பதையே பீரிஸ் மூலமாக அதிகாரபூர்வமாக அறிய முடிகின்றது.

அத்துடன் இந்தியா ஊடாகவே இலங்கை போன்று சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டிருக்கும் வறுமை நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதென கடந்த ஆண்டு யூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற ஜீ-7 மாநாட்டிலும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே பிரித்தானியா கொண்டு வந்த 46/1 தீர்மானத்திலும் 13 கொண்டுவரப்பட்டிருந்தது.

தொடர்ந்து இலங்கையைத் தமது நிலைப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், பிரித்தானியா ஊடாக அமெரிக்கா மிரட்டல் விடுகிறதே தவிர, தமிழ் மக்களுக்கான செயற்பாடாக அது அமையுமென எதிர்பார்க்க முடியாது.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும், அமெரிக்கச் செனட் சபையின் முன்னாள் உறுப்பினருமான பெப் கெரி (Pep Kerry) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரை கொழும்பில் சந்தித்திருக்கிறார்.

அதாவது சொல்வதைச் செய்ய வேண்டும். இல்லையேல் இந்தியா இணங்கிய நிதி உதவித் திட்டங்களோடு கூடிய ஆட்சி மாற்றம் ஒன்று வரும் என்ற செய்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருக்கின்றது என்று கருதலாம்.

ஆகவே இம்முறை மனித உரிமைச் சபை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை கடுமையானதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டாலும், இலங்கைக்குத் தற்போது இந்தியா மேலும் வழங்கவுள்ள நிதிகளின் அடிப்படையில் மனித உரிமைச் சபையில் இலங்கைக்குக்கு ஆறுதலடையக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

இந்தியா மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம். மற்றும் அமெரிக்கா, பிரித்தானியாவும் இலங்கைக்குக் கூடுதல் நிதிகளை வழங்ககக்கூடிய சமிக்ஞைகள் உறுதியாகவே தென்படுகின்றன.

இந்தவொரு நிலையில், பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் பீாிஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் பெருமையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

பசில் ராஜபக்ச கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டத்திற்கான இணக்கம் ஏற்பட்டது என்றும், அவற்றில் ஒரு பில்லியன் உதவித் தொகைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவே பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

புதுடில்லியில் இருக்கும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொடவும், இந்தியாவுடனான தற்போதைய உறவு இலங்கைக்கான முக்கிய காலகட்டம் என்று கூறியிருக்கிறார். இந்தியச் செய்தியாளர் நிருபமா சுப்பிரமணியனுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் அந்தஸ்துள்ள தூதுவர் மிலிந்த மொறகொட இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் சீன ஆதிக்கம் இலங்கையில் நிரந்திரமாகிவிடக்கூடாதென்ற உத்தியின் பிரகாரம், இலங்கையை அமெரிக்க- இந்திய அரசுகள் கையாளுவதற்கு வசதியாகவே ஈழத்தமிழர்கள் இலங்கை ஒற்றையாட்சிக்குள் வாழ்வதற்கான சூழலும் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

13 பற்றிய பேச்சை செல்வம் அடைக்கலநாதன் அணி ஆரம்பித்தபோது, சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான அணி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தது.

அதாவது இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமென்ற கோணத்தில் மென் இராஜதந்திர அழுத்தம், சுமந்திரன் அணிக்கு அமெரிக்காவில் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தற்போது உள்ளகத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கசிந்திருக்கின்றன. அங்கு சுமந்திரன் அணிக்கு வகுப்பெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்திலேதான் தாயகம் திரும்பிய சுமந்திரன், செல்வம் அணியின் கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் பங்குபற்றித் தன்னளவில் சில மாற்றங்களைச் செய்து கோரிக்கையின் தன்மையை மேலும் மெருகூட்ட விளைந்திருக்கிறார்.

அதாவது தான் பங்குபற்றியதாலேயே தமிழ் மக்களுக்குச் சாதகமான முறையில் கடிதத்தில் மாற்றம் செய்ய முடிந்தது. இல்லையேல் 13 மாத்திரமே கோரப்பட்டிருக்கும் என்றவொரு பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

எது எவ்வாறாயினும் சுமந்திரனும். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஊடான அதிகாரப் பரவலாக்கத்தையே வலியுறுத்தியிருந்தியிருந்தார்.

ஆரம்பத்தில் உடன்பட மறுத்த இரா.சம்பந்தன்கூட, பின்னர் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடிதத்தில் கைச்சாத்திட்டமைக்கு அமெரிக்க அழுத்தமும் காரணம் என்ற தகவல் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர் யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் 13 இற்கு எதிராகச் சட்டத்தரணி சுமந்திரன் காரசாரமாகப் பேசியமைகூட விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையே.

2.4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டத்திற்கான இணக்கம் ஏற்பட்டது என்றும், அவற்றில் ஒரு பில்லியன் உதவித் தொகைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவே பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்

அதேவேளை பீரிஸ் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, அமெரிக்காவில் இருக்கும் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் உருத்திரகுமாரனும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரை 1.4 இல் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பதான திரிபுபடுத்தப்பட்ட கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றுவந்த சுமந்திரனும் அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனும், இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்ற புள்ளியில் இணைகிறார்கள்.

இதே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை என்று 13 ஐ எதிர்க்கும் கஜேந்திரகுமாரும் கூறிவருகிறார். உருத்திரகுமாரனும் 13 ஐ எதிர்க்கிறார்.

ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள 1.4 இல் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் (Areas of historical habitation) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாகத் தமிழர்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசம் (Traditional homeland of the Tamils) என்று கூறப்படவில்லை.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள 1.4 பகுதியை அப்படியே தருகின்றோம் "1.4 Also recognising that the Northern and the Eastern Provinces have been areas of historical habitation of Sri Lankan Tamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups"

அதாவது ஏற்கனவே வடக்குக் கிழக்கில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்கள், ஏனைய இனக்குழுமங்கள் (other ethnic groups) என்பதற்குள் உள்ளடக்கப்பட்டு அவர்கள் அங்கு தொடர்ந்து வாழ முடியும் என்பதையே 1.4 உள்ளடக்கியுள்ளது.

ஒருபுறம் இந்திய ஊடகத்துறையினர் இலங்கை அமைச்சர்களின் பயணங்களை அடக்கி வாசிக்க முற்படுவதும், அதேவேளை அமெரிக்காவிலும் இலங்கையிலும் தமிழர் பிரதிநிதிகளாகத் தம்மை வெளிப்படுத்துவோர், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எழுந்து நின்று வாசிப்பதுமாக தமிழ் அரசியல் பரப்புக் கையாளப்பட்டு வருகின்றது.

தமிழர்கள் சுயமாகத் தமது தேசிய அரசியலைத் தமக்குள் விவாதித்து வெளிப்படைத் தன்மையோடு ஒரேகுரலாக வலுவான கூட்டுக் கோரிகையை முன்வைக்க வேண்டிய காலகட்டமிது.