அம்பாந்தோட்டையை மையப்படுத்தி ராஜபக்சக்கள் உருவாக்கும்

மூன்றாவது புதிய யாப்புக்கான நகல் வரைபில் 13 இல்லை

விவாதத்தில் ரணில், சஜித் ஆகியோரின் கருத்தை அறிந்தே முடிவெடுக்கப்படுமெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2022 பெப். 20 00:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 20 16:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூன்றாவது புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு பதிலாக மாவட்ட சபை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச மாதம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனப் புதுடில்லி 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரானதொரு சூழலில் இலங்கையிடம் அவ்வப்போது கூறி வருகின்றது.
 
வடக்குக் கிழக்கைத் தாயகமாகக் கொண்டு வாழும் முஸ்லிம் மக்களின் அதிகாரப் பங்கீடு எத்தகையதாக இருக்க வேண்டுமென்பது குறித்த உரையாடல்களை தமிழ்த்தரப்பும் முஸ்லிம் தலைவர்களும் மனம் திறந்து உரையாட வேண்டிய காலம் நெருங்கியுள்ளது

அத்துடன் 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முதன் முதலில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேறப்பட்ட தீர்மானத்திலும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான முன்மொழிவு இருந்தது. 2015 இல் இருந்து கடந்த வருடம் மார்ச் மாதம் வரையும் முன்வைக்கப்பட்டிருந்த ஜெனீவா தீர்மானத்தில் 13 முக்கியம் பெற்றிருந்தது.

இந்தவொரு நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13 தொடர்பான அதிகாரப்பரவலாக்கத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதமும் அனுப்பியிருந்தன.

இதன் பின்னணியிலேயே புதிய அரசியல் யாப்பில் இருந்து 13 நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற முறையில் அறிய முடிகின்றது. 13 இல் உள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ரணில், சஜித் மற்றும் ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகள் இதுவரை தமது கருத்தைப் பகிரங்கப்படுத்தவில்லை.

இதனால் யாப்புக்கான நகல் வரைபு பற்றிய விவாத்தின்போது 13 தொடர்பாக ரணில், சஜித் ஆகியோரின் கருத்தை அறிந்தே, புதிய யாப்பில் இணைத்துக் கொள்வதா இல்லையா அல்லது 13 இல் உள்ள அதிகாரங்களை வேறொரு வடிவில் மாற்றியமைப்பதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டுமென கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்ததாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

யாப்புக்கான நகல் வரைபின்போது 13 பற்றிப் பேச வேண்டாம், வேறு புதிய அதிகார மாற்றங்கள் குறித்தே பரிந்துரைக்குமாறு கோட்டாபய ராஜபக்ச தமக்கு நெருக்கமான அரசியல் பிரதிநிதிகளிடம் கூறியதாகச் சஜித் அணி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சென்ற ஜனவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கூறியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 டிசம்பரில் நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய தனது முதலாவது கொள்கை விளக்கவுரையிலேயே ஒரேநாடு ஒரு சட்டம் என்று பரிந்துரைத்தன் மூலம், இலங்கையின் ஒற்றையாட்சியை மீளப் புதுப்பிக்க வேண்டிய சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து முழு இறைமையுள்ள உள்ள நாடாக மாறியபோதே சிங்களவர்களை மையமாகக் கொண்ட, பௌத்த சமயத்தை முக்கியப்படுத்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசு (Unitary State) நிறுவப்பட்டது.

1972ஆம் உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசு ஆகிய பின்னர் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.

சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த முதலாம் குடியரசு அரசியல் யாப்பின் அரச கொள்கைத் தத்துவம் பௌத்த சமயத்தை அடிப்படையாகவும் கொண்டிருந்தது.

பிரித்தானியரால் 1947இல் அமுல்படுத்தப்படட சோல்பரி அரசியல் யாப்பில் தமிழர்களின் பாதுகாப்புக்காகப் பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த 29ஆவது சரம் நீக்கப்பட்ட நிலையில் முதலாம் குடியரசு அரசியல் யாப்பை சிறிமாவோ பண்டாரநாயக்கா உருவாக்கியிருந்தார்.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெற்று 1978ஆம் இரண்டாவது புதிய அரசியல் யாப்பை உருவாக்கியது.

இலங்கையில் எழுதப்பட்ட நெகிழும் தன்மையுடைய அரசியல் யாப்பு நடைமுறையில் இருப்பதால், காலத்திற்குக் காலம் ஆட்சியமைக்கும் கட்சிகள் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு அரசியல் யாப்பு மாற்றங்களை அல்லது யாப்புத் திருத்தங்களை செய்வது வழமை. அதுதான் 1972-78ஆம் ஆண்டுகளில் நடந்தது.

ஆனால் அன்று தொகுதிவாரித் தேர்தல் நடைமுறையில் இருந்ததால் மிகவும் இலகுவாக அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்ற ஜே.ஆர், 1978இல் இலங்கைக் குடியரசுக்கான இரண்டாவது அரசியல் யாப்பை உருவாக்கிப் பிரதமர் ஆட்சி முறையை மாற்றி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்தார்.

அத்துடன் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் மாற்றி, விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார். அந்த யாப்புத்தான் இன்றுவரை 20 திருத்தங்களோடு நடைமுறையில் உள்ளது.

2020 நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச 19ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைத்து, 20ஆவது திருத்தத்தை ஒற்றையாட்சி ஜனாதிபதிக்குரிய முழுமையான சர்வ வல்லமையுடை அதிகாரங்களோடு நிறைவேற்றினார் என்பது வெளிப்படை.

இந்த இடத்திலேதான் மூன்றாவது புதிய யாப்பு உருவாக்கத்துக்கு ஏற்றதாக ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகத்தை கோட்டாபய ராஜபக்ச முன்வைத்து அதற்கான செயலணி ஒன்றையும் உருவாக்கியுமுள்ளார். இதற்கான காரணத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.

இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சிக் கட்டமைப்புக்கான கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும், அர்ப்பணிப்பும் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து, சிவில் சமூக அமைப்புகளிடம் வந்துள்ளன

ஒன்று-- கொழும்பு- கண்டிப் பிரதேசங்களை மையப்படுத்திய சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பம் உருவாக்கிய முதலாவது குடியரசு அரசியல் யாப்பு மற்றும் கொழும்பை மையமாகக் கொண்ட ஜே.ஆர், ரணில் பரம்பரை உருவாக்கிய இலங்கைக் குடியரசுக்கான இரண்டாவது அரசியல் யாப்பு ஆகியவற்றைப் போன்று அம்பாந்தோட்டையை மையப்படுத்திய ராஜபக்ச குடும்பமும் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமெனக் கருதியமை.

அப்படி உருவாக்கப்பட்டால் அதுவே இலங்கைக் குடியரசுக்கான மூன்றாவது அரசியல் யாப்பாகவும் அமையும்.

ஆகவே 1972இல் சிறிமாவோ உருவாக்கிய முதலாவது யாப்பு, 1978இல் ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய இரண்டாவது அரசியல் யாப்பு, 2022இல் ராஜபக்சக்கள் உருவாக்கிய முன்றாவது யாப்பு என்று இலங்கைக் குடியரசின் அரசியல் வரலாற்றில் பதியப்படும்.

இந்த நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி 2016ஆம் ஆண்டு பசில் ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டதெனலாம்.

மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைத்து, 2015இல் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவே பிரதான காரணியாக இருந்தாரென ராஜபக்ச குடும்பத்துக்கு ஏற்பட்ட அசைக்க முடியாத சந்தேகமே 2016இல் புதிய கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

அதாவது பண்டாரநாயக்கா குடும்பம் உருவாக்கிய ஸ்ரீலங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முற்றாகவே வெளியேற வேண்டுமென்ற உணர்வு ராஜபக்ச குடும்பத்துக்கு ஏற்பட்டது.

இரண்டாவது-- ஒரேநாடு ஒரு சட்டம் ஒன்ற செயலணியின் மூலம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமே யாப்பின் மூலமாக உறுதிப்படுத்தியது என்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிப்பது.

ஆகவே இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே ராஜபக்சக்களின் ஆட்சி நகர்ந்து செல்கிறதெனக் கூற முடியும்.

சிங்கள ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும் தங்களுடைய ஊர் பிரதேசம் போன்றவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பை ஒற்றையாட்சி முறைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது என்ற எண்ணக் கருவை அடிப்படையாகக் கொண்டு அரச கொள்கைத் தத்துவத்தை வடிமைக்கின்றனர்.

ஆனால் ராஜபக்ச அரசாங்கம் அதனை வெளிப்படையாகவே செய்கின்றது என்பதையே இந்த ஒரே நாடு ஒரு சட்டம் என்ற வாசகம் எடுத்தியம்புகின்றது.

ஆனால் இது ஈழத் தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதல்ல. ஏனெனில், பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும், முப்பது ஆண்டுகாலப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அதி உச்ச அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையிலான புதிய யாப்பு பெரியதொரு அச்சத்தை ஏற்படுத்தாது.

ஆனாலும் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதுதான் இங்கே பிரதான கேள்வி.

முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டம் மேலும் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமென ஏறத்தாள எழுபது ஆண்டுக்கும் மேலான அரசியல் போராட்டங்கள் நடத்தியும் எதற்குமே அசையாத சிங்கள ஆட்சியாளர்கள், தொடர்ந்தும் வெவ்வேறு வடிவங்களில் சிங்கள பௌத்த தேசியத்தைச் செழிப்படையச் செய்யும் காரியங்களையே முன்னெடுத்து வருகின்றனர் என்பது கண்கூடு.

அதன் மற்றுமொரு வடிவமே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தத்துவத்துடன் கூடிய புதிய யாப்புக்கான நகல் வரைபு. ஆகவே அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தமிழ் மக்களுக்குப் பழகிப்போனதாக இருந்தாலும், ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செயன்முறைகள் 2009 இற்குப் பின்னரான சூழலில் புதியதொரு வடிவத்தில் துணிவோடு வளர்ச்சியடைகின்றன.

இவற்றைத் தடுக்கக் கூடிய பொறிமுறை தமிழ் பிரதிநிதிகளிடம் இல்லை. ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளினால் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட ரத்துச் செய்ய வேண்டுமென அரசதரப்பு எதிர்த்தரப்புச் சிங்கள உறுப்பினர்கள் பலர் ஆரம்பம் முதல் வெளிப்படையாகவே பேசி வருகின்றர்.

2010ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவையும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவையும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தும் 2015இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் பங்கெடுத்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளதால், சுயாட்சிக் கட்டமைப்புக்குரிய கோரிக்கைகள் பலமிழந்துள்ளன.

2010ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவையும் 2015இல் மைத்திரிபால சிறிசேனவையும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தும் 2015இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் பங்கெடுத்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளதால், சுயாட்சிக் கட்டமைப்புக்குரிய கோரிக்கைகள் பலமிழந்துள்ளன

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் குறைந்த பட்சம் அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்போது விகிதாசார முறை பின்பற்றப்பட்டு வந்து. உதாரணமாக அரச நிறுவனம் ஒன்றில் 60பேரை வேலைக்கு எடுக்க வேண்டுமானால், அதில் 40பேர் சிங்களவர்களாகவும் ஏனைய 20பேர் தமிழர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்தக் விகிதாசார முறை கைவிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இன்று பன்னிரெண்டு ஆண்டுகளிலும்கூட அரச நிறுவனங்களுக்கு ஆட் சேர்க்கும்போது விகிதாசார முறை பின்பற்றப்பட்டதில்லை.

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள்கூட தமிழர்கள், முஸ்லிம்கள் ஒருவர்கூட நியமிக்கப்படவுமில்லை. இவ்வாறான சூழலில் ஒரேநாடு ஒரு சட்டத்தை மையமாகக் கொண்டு அமையவுள்ள மூன்றாவது புதிய யாப்பு என்பது தனித்த பௌத்த சிங்கள ஆட்சியை மேலும் தூய்மைப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த இடத்திலேதான், இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சிக் கட்டமைப்புக்கான கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும், அர்ப்பணிப்பும் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து, சிவில் சமூக அமைப்புகளிடம் வந்துள்ளன.

வடக்குக் கிழக்கைத் தாயகமாகக் கொண்டு வாழும் முஸ்லிம் மக்களின் அதிகாரப் பங்கீடு எத்தகையதாக இருக்க வேண்டுமென்பது குறித்த உரையாடல்களை முஸ்லிம் தலைவர்களும் தமிழ்த்தரப்பும் மனம் திறந்து உரையாட வேண்டிய காலம் நெருங்கியுள்ளது.

அத்துடன் தமிழர்களோடு பேசும்போது தம்மை ஒரு தேசிய இனமாகவும், சிங்கள ஆட்சியாளர்களோடு அமைச்சுப் பதவிகளுக்காகப் பேரம் பேசும்போது சிறுபான்மைச் சமூகமாகவும் வெளிப்படுத்தும் இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.