ரசிய- உக்ரெய்ன் போர்-

இன ஒடுக்கலை மூடிமறைக்கும் மேற்குலக ஜனநாயகம்

ஈழ மற்றும் பாலஸ்தீன அரசியல் விடுதலைக் கோரிக்கையும் இதே அணுகுமுறையில்தான் கையாளப்பட்டிருந்தது
பதிப்பு: 2022 மார்ச் 14 10:29
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 12:14
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதாவது அமெரிக்கச் சார்பு நாடுகள் கூறுகின்ற ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்குள் ரசியா இல்லை என்ற கருத்தியலின்படியே, உக்ரெயன் மீது ரசியா நடத்தும் போரைச் சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் ரசியாவில் தற்போது கம்யூனிசச் சாயல் மாத்திரமே உண்டு. ரசியாவும் ஒரு வகையான முதலாளித்துவமுறை (Capitalism) கொண்ட பேரரசுதான். ஜனநாயகக் கட்டமைப்பு இருப்பது போன்றதொரு தோற்றப்பாடுகளும் ரசியாவில் உள்ளன. ஆனால் ரசிய- சீன உறவு கம்யூனிச அடிப்படையிலானதல்ல. அமெரிக்கச் சார்பு நாடுகளை எதிர்க்கும் மையம் கொண்ட இராணுவ அரசியல் அது. பொருளாதாரப் பிணைப்புகளும் இந்த இரு நாடுகளிடம் உண்டு.
 
2009 இல் வன்னியில் இறுதிப் போர் ஆரம்பமானபோது, அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மூடப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்கூட தனது அலுவலகத்தை மூடிவிட்டு வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிக் கொழும்புக்குச் சென்றது. சா்வதேச் சாட்சியங்கள் இன்றி வன்னியில் போர் நடத்தப்பட்டது

பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவுடன் ரசியா வைத்துள்ள உறவு பாரம்பரியமானது. அரசியல், பொருளாதார, மற்றும் அவ்வப்போது இராணுவ நோக்கிலும் அந்த உறவு ஒத்திசைவாகக்கூடியது.  ஆனால் இந்தியா அமெரிக்காவோடு வைத்துள்ள உறவைப் போன்றதல்ல ரசியாவுடனான உறவு. அது இந்தோ- பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையிலானது.    

இந்தவொரு நிலையில் உக்ரெயன் மீது ரசியா ஆரம்பித்துள்ள போரை ஈழத்தமிழர்களின் சமூகவலைத்தளங்கள் ஈழப்போர்க் காலத்துடன் ஒப்பிட்டு வர்ணிக்கின்றன.      

பலர் ரசியாவுக்கு எதிராகவும் வேறு சிலர் உக்ரெய்னுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் பெருமளவு ஈழத்தமிழர்கள் இரண்டு நாடுகளையுமே ஆதரிக்கவில்லை. இருந்தாலும் அமெரிக்கச் சார்புத் தமிழர்கள் சிலர் உக்ரேய்னை வசைபாடுகின்றனர்.

ஈழப்போர் தொடர்பாக ரசியா எந்தவொரு கருத்தையுமே தெரிவிக்காமல் அவ்வப்போது இலங்கைக்கு மாத்திரம் ஆதரவு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்களில் வேறு பல தமிழர்கள் ரசியாவையும் ஆதரிக்கவில்லை.

ஆனாலும் போர்க் காலத்தில் இந்த இரு நாடுகளும் இலங்கைக்கு உதவியளித்திருக்கின்றன என்பதையே தமிழர்களின் சமூகவலைத்தள பதிவுகள் கூடுதலாகக் காண்பிக்கின்றன. . 

உக்ரெய்னை ஆதரிக்கும் அமெரிக்கச் சார்ப்பு நாடுகள் தமது ஜனநாயகக் கட்டமைப்பு வட்டத்திற்குள் நின்றுகொண்டு, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.  அதேபோன்று, உக்ரெய்ன் டான்பாஸ் பகுதியில் வாழும் சுமார் 60 இலட்சம் ரசிய மக்கள் மீது உக்ரெய்ன் அரசு இன அழிப்பு மேற்கொள்ள எடுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கச் சார்பு நாடுகள் உடந்தையாகவே இருக்கின்றன.  

உக்ரெய்ன் டன்ஸ்பாஸ் பிரதேசத்தில் இப்போதும் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே ரசியா உக்ரெய்ன் மீதான தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. சுமார் அறுபது இலட்சம் ரசிய இன மக்கள் வாழும் உக்ரெய்ன் டன்ஸ்பாஸ் பகுதியில் ரசிய இன தீவிரவாதக் குழுக்களுக்கும் உக்ரெய்ன் இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 14 ஆயிரம் ரசியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   உக்ரெய்னில் ரசியாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஜனாதிபதி விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) 2014ஆம் ஆண்டு பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். அதற்குப் பதிலடியாகவே உக்ரெய்ன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரேமியாவை ரசியா கைப்பற்றியது. அன்றில் இருந்தே உக்ரெய்னில் உள்நாட்டுப் போரும் ஆரம்பித்து.  உக்ரெய்னில் ரசிய மக்கள் வாழும் டன்ஸ்பாஸ் பகுதியையும் ரசியா தனி நாடென்று பிரகணடப்படுத்தியுமுள்ளது. ஆகவே உக்ரெய்னில் வாழும் ரசிய மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலேயே ரசியா, உக்ரெய்ன் எல்லைகளில் படைகளைக் குவித்தது.  

இதனால் ரசிய மக்கள் வசிக்கும் டன்ஸ்பாஸ் பகுதிகள் மீது உக்ரெய்ன் இராணுவ ஆதரவுக் குழுக்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியது. 

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு உக்ரேன் அரசுடன் ரசியா பேச்சுவார்த்தை நடத்தி ஜேர்மனி, பிரான்ஸ் முன்னிலையில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரசிய இனமக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டு, டன்ஸ்பாஸ் பகுதியில் வாழும் ரசிய மக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை உக்ரெய்ன் ஏற்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. 

பாதுகாப்புடன் ரசிய இனமக்கள் வாழும் வகையில் உக்ரெய்ன்- ரசிய எல்லைப்புறக் கொள்கையை உருவாக்க வேண்டுமெனவும் ரசியா முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.   டன்பாஸ், லுகான்ஸ்க் பகுதிகளுக்கான பாதுகாப்பையும் ரசியா- உக்ரெய்ன் நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய உறவைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென்பது ஒப்பந்தத்தின் பிரதான உள்ளடக்கமாக அமைந்தது.

ரசிய இனமக்கள் மீது உக்ரெய்ன் நடத்திய இன அழிப்புகளை அமெரிக்கா-இங்கிலாந்து போன்ற நாடுகள் பார்த்துக் கொண்டிருந்தன. எதுவுமே பேசவில்லை. தடுக்க முற்படவுமில்லை

இதை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புச் சங்கம் (Organization for Security and Cooperation -OSCE) எனும் குழு மேற்பார்வை செய்ய வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தடுத்தன. அந்த ஒப்பந்தம் உதாசீனம் செய்யப்பட்டது. உக்ரெய்ன் இராணுவம் மற்றும் அங்குள்ள உக்ரெய்ன் தேசிய இனவாதக்  குழுக்கள் ரசிய இன மக்களுக்கு எதிராகச் செயற்பட்டன. 

அதன் பின்னணியில் அமெரிக்கா- பிரித்தானிய போன்ற நாடுகளும் செயற்பட்டதாக ரசியா குற்றம் சுமத்தியது.

இதனால் ரசிய மக்கள் வாழும் டான்பாஸ், லுகான்ஸ்க் பகுதிகளில் உக்ரெய்ன் அரச படைகள் குவிக்கப்பட்டு அந்த மக்களின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ரசிய மக்கள் ஒடுக்கப்பட்டனர். இன ஒடுக்குமுறை ஒன்று அங்கே இடம்பெறுகின்றன. ஆனால் அதனை அமெரிக்கச் சார்பு சர்வதேச ஊடகங்கள் மூடி மறைத்தன.

இவ்வாறானதொரு நிலையில், அறுபது இலட்சம் ரசிய மக்கள் வாழும் டான்பாஸ், லுகான்ஸ்க் பகுதியைக் காக்கவேண்டுமென ரசியா தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் உக்ரெய்ன் அரசு ரசியாவின் கோரிக்கையை செவிமடுக்கவேயில்லை. அமெரிக்கச் சார்பு நாடுகளின் துணிவோடு ரசியாவைப் புறந்தள்ளியது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரசிய இன மக்கள் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. 

இத்தனைக்கும் சோவியத் யூனியன் நாடாக இருந்தபோது உக்ரெய்ன், ரசியாவின் பாரம்பரிய பூமியாகக் கருதப்பட்டுச் சிறப்புச் சலுகைகளோடு உக்ரெய்ன் பிரதேசம் இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து 13 தனி நாடுகளாக மாறியபோது உக்ரெய்னும் தனிநாடாகத் தன்னைப் பிரகடணப்படுத்தியது.

இதனால் உக்ரெயனில் இருந்த ரசியாவின் இராணுவ வளங்களும் உக்ரெய்னுடன் சென்றுவிட்டன. இதன் பின்புலத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரெய்ன் அமெரிக்கசார்பு நிலை எடுத்ததோடு, பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் வழி வகுத்துச் செயற்பட்டது. இந்த இடத்திலேதான் அமெரிக்காவை மையப்படுத்திய நேட்டோ இராணுவ அணியோடு சேரவுள்ளமை தொடர்பாக உக்ரெய்ன் அறிவித்தது. 

ஆனால் உள்நாட்டுப் போர் நடைபெறும் நிலையில், நேட்டோவுடன் உக்ரெய்ன் இணைய முடியாதென அமெரிக்காவும் அவ்வப்போது ஒப்பாசாரத்துக்காகக் கூறியிருந்தது. 

டான்பாஸ் பகுதி ரசிய மக்கள் 1994 ஆண்டு தம் பகுதிக்கு உரிய ஆட்சி அதிகாரப்பகிர்வைக் கோரினர். தங்கள் ரசிய மொழி ஆட்சிமொழியாக வேண்டுமென்றும் வாதிட்டனர். கூட்டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டுமென வற்புறுத்தினர். இதற்காகப் பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. 

அந்தப் பொதுவாக்கெடுப்பு 90 வீதம் வெற்றியடைந்தது. ஆனாலும் அனைத்துக் கோரிக்கைளும் உக்ரெய்ன் அரசினால் புறக்கணிக்கப்பட்டன.

டான்பாஸ் பகுதியின் பொருளாதார வளர்ச்சி நிராகரிக்கப்பட்டது. உக்ரெய்ன் அரசு, ரசிய மக்கள் வாழும் டான்ஸ்பாஸில் எந்தவொரு அபிவிருத்திகளையும் செய்யவில்லை.

உக்ரெய்னின் தேசியவாத, பெரும்பான்மை மன ஆதிக்க நிலையே இதற்குக் காரணமானது. உக்ரெய்ன் இனவாதக் குழுக்கள் மேலும் மேலும் உருவாகி டான்பாஸ் பகுதி ரசிய மக்களை அச்சுறுத்த ஆரம்பித்தன. அந்த இனவாத குழுக்களுக்கு உக்ரெய்ன் அரசு ஆதரவும் கொடுத்தது. 

ஆனால் அமெரிக்கச் சார்பு மேற்குலக மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் ரசியாவின் படைக் குவிப்புகளை மாத்திரமே ஊதிப் பெரிப்பித்தன.

ரசிய இனமக்கள் மீது உக்ரெய்ன் நடத்திய இன அழிப்புகளை அமெரிக்கா-இங்கிலாந்து போன்ற நாடுகள் பார்த்துக் கொண்டிருந்தன. எதுவுமே பேசவில்லை. தடுக்க முற்படவுமில்லை. 1990களில் ஆரம்பித்த இந்த மோதலைத் தீர்க்கவே 2015 இல் மேற்படி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் OSCE எனப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்புச் சங்கம் உரிய முறையில் செயற்படத் தவறியது.  பிரித்தானியா,ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட அமெரிக்கச் சார்பு ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்காவும் விரும்பியிருக்கவில்லை. 

இதனாலேயே உக்ரெய்ன் படைகள் ரசிய மக்களை இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட வசதியாக இருந்தது. அமெரிக்கச் சார்பு நாடுகளினால் ரசிய மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுந்தன. 

இதன் பின்னணியிலேயே  உக்ரெய்ன் மீது ரசிய படையெடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்தக் காரணங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு, உக்ரெயன் அமெரிக்காவை மையப்படுத்திய நேட்டோ அணியில் இணையவுள்ளதாலேயே ஆத்திரமடைந்து ரசியா போரை ஆரம்பித்ததாக அமெரிக்கச் சார்பு சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இதேபோன்ற நிலைதான் ஈழத்தமிழர்களுக்கும் 2002 ஆம் ஆண்டு நடந்தது.   

அதாவது 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் இலங்கையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின்போது இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையோன போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட போர் நிறுத்தக் கண்காப்புக்குழு, உரிய முறையில் செயற்படத் தவறியமையே 2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் உருவாகக் காரணமாகியது.

போர் நிறுத்தக் கண்காணிப்புன் குழுவில் அங்கம் வகித்திருந்த அமெரிக்கச் சார்பு நாடுகளான நோர்வே, சுவீடன், நெதர்லாந்து. உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாகச் செயற்பட்டன..  ஆனால் மீண்டும் போர் ஆரம்பித்தும் புலிகள் மீதே பழி விழுந்தது. புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை என்று அமெரிக்கச் சார்ப்பு மேற்குலக ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

2009 இல் வன்னிப் பிரதேசத்தில் இறுதிப் போர் ஆரம்பமானபோது, அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மூடப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்கூட தனது அலுவலகத்தை மூடிவிட்டு வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிக் கொழும்புக்குச் சென்றது. சா்வதேச் சாட்சியங்கள் இன்றி வன்னியில் போர் நடத்தப்பட்டது. 

இதேபோன்றுதான் 1992 ஆம் ஆண்டு இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தப்பட்டு நோர்வேயின் ஊடாகச் சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருந்த அமெரிக்கா, பின்னர் பலஸ்தீனத்தைக் கைவிட்டது. இதனால் மீண்டும் போர் ஆரம்பித்து, பாலஸ்தீனத் தலைவர் யாசீர் அரபாத்தும் முடக்கப்பட்டார். 

இதனால் கமாஸ் இயக்கம் எழுச்சி பெற்று போரில் வெற்றியீட்டிப் பாலஸ்தீனத்தில் ஆட்சியும் அமைத்தது. ஆனால் இன்றுவரைகூட அமெரிக்கச் சார்பு ஐரோப்பிய நாடுகள் பாலஸ்த்தீன பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. வெறுமனே இஸ்ரேல் அரசைக் கண்டித்துக் கொண்டு மாத்திரம் இருக்கின்றன.

ஆகவே அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தங்களை ஜனநாயகவாதிகளாகக் காண்பித்துக் கொண்டு பேரரசுக்குரிய இன ஒடுக்கல் அணுகு முறைகைளையே உலத்துக்கு விதைக்கின்றன. இதனையே இலங்கை போன்ற சிறிய நாடுகளும் பின்பற்றுகின்றன. இஸ்ரேலும் அதற்கு விதிவிலக்கல்ல. 

ஈழத்தமிழர்கள் இந்த அரசியலை அறிய வேண்டும். வெறுமனே அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை நம்பிக் கொண்டிருக்காமல் உலக அரசியல் ஒழுங்கை அறிந்து தமிழ்த் தேசியத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை வழியில் தொடர் போராடங்களை வேண்டும் என்பதையே ரசிய- உக்ரெய்ன் போர் உணர்த்தி நிற்கின்றது

ரசியாவை கம்யூனிச நாடாக வர்ணித்து, அங்கு ஜனநாயகம் இல்லை எனக்கூறிக் கொண்டு உக்ரெய்ன் மூலம் நகர்த்தப்படும் அணுகுமுறை, எதிர்கால உலகத்துக்குப் பிழையான அரசியல் சித்தாதத்தங்களையே போதிக்கின்றன.

உக்ரெய்ன் அரசை ரசியாவுடன் போருக்குத் தூண்டி, உக்ரெய்ன் மக்களையும் பலிக்கடாவாக்கி ரசியாவிடம் என்னென்ன ஆயுதங்கள் இருக்கின்றன என்பது பற்றிய கணக்கெடுப்பு ஒன்றைத் தற்போது செய்து கொண்டிருக்கின்றது இந்த அமெரிக்கா. ரசியாவைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் போர் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.   உக்ரெய்னில் பாதிக்கப்பட்ட ரசிய மக்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் போன்று தமது தேசிய அங்கீகாரத்துக்காக உலகில் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இன மக்கள் பற்றியும், இந்த அமெரிக்கச் சார்பு நாடுகளுக்கு அக்கறையே இல்லை. 

தமது பூகோள அரசியல், பொருளாதார லாபங்கள் மாத்திரமே அமெரிக்கச் சார்ப்பு நாடுகளுக்கும் அதன் ஊடகங்களுக்கும் அவசியமாகின்றன. 

இதனை உக்ரெய்ன் புரிந்துகொள்ள வேண்டும். ரசியப் பிராந்தியத்தில் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திய பின்னர் உக்ரெய்னையும் இந்த அமெரிக்கச் சார்ப்பு நாடுகள் கைவிட்டு விடும் என்பதை உணர வேண்டும். 

ஈழத்தமிழர்களும் இந்த அரசியலை அறிய வேண்டும். வெறுமனே அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை நம்பிக் கொண்டிருக்காமல் உலக அரசியல் ஒழுங்கை அறிந்து தமிழ்த் தேசியத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை வழியில் தொடர் போராடங்களை வேண்டும் என்பதையே ரசிய- உக்ரெய்ன் போர் உணர்த்தி நிற்கின்றது.