இலங்கை அரசு என்ற கட்டமைப்பைச் சுத்தம் செய்வதற்காக நடத்தப்படும் கையொப்பமிடும் போராட்டம்-

பயங்கரவாதத் தடைச் சட்டத் தந்தையின் வாரிசு, சுமந்திரனிடம் கையளித்த கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியாக மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களின் விசித்திர நிலைப்பாடு!
பதிப்பு: 2022 மார்ச் 11 00:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 21:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பதே தனது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதத்தை சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமே கையளித்திருக்க வேண்டும். ஏனெனில், சிங்களவர்களை மையப்படுத்திய இலங்கை அரசு என்ற கட்டமைப்பே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முழு அதிகாரமும் கொண்டிருக்கின்றது. மாறாகச் சுமந்திரனோ தமிழரசுக் கட்சியோ அல்ல.
 
இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்பது தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கான அகிம்சை வழிப் போராட்டங்களை அடக்குவதற்கே என்று குறிப்பிட்டு வாதிடுவதற்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குத் தயங்கம் உண்டென்பது பகிரங்கமாகத் தெரிந்த உண்மை

ஆகவே சஜித் பிரேமதாசாவும் அவருடைய 54 உறுப்பினர்களும் முன்னர் அங்கம் வகித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது. அமுல்படுத்தப்பட்டிருந்த இச் சட்ட மூலத்தை நீக்குவதற்கான முழுப் பலத்தையும் நேர்மையான விருப்பத்தையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பதே தமது கட்சி நிலைப்பாடு எனக் குறிப்பிட்டுக் கடிதம் ஒன்றை ஆட்சி அதிகாரம் இல்லாத தமிழரசுக் கட்சியிடம் கையளித்து விட்டு, அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலை அறவே கைவிட வேண்டும்.

வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டுச் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ற புதிய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்யவேண்டும் என சஜித் பிரேமதாச அந்தக் கடிதத்தில் பரிந்துரைத்துமுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரிக் கையொப்பமிடும் போராடடம் ஒன்றை நடத்திவரும் சுமந்திரன், சமயத் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட முக்கியமான சிங்களப் பிரதிநிதிகளிடமும் கையொப்பங்களைப் பெற்று வருகின்றார்.

ஆனால் கையொப்பமிடும் சிங்கள சமயத் தலைவர்கள் எவரும் போர் நடைபெற்றபோது இந்தச் சட்டமூலம் தமிழர்களுக்கு ஆபத்தானது என்ற கருத்தை எந்தவொரு இடத்திலுமே அன்று பதிவு செய்திருக்கவில்லை.

சந்திரிகா பதினொரு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தபோது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியே தமிழ் இளைஞர், யுவதிகளை ஆயிரக் கணக்கில் கைது செய்துமிருந்தார். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றிருந்த செம்மணிப் புதைகுழி விவகாரம் முக்கியமான இன அழிப்பு என்றே பலரும் பேசுகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை 1979 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் முக்கியமானதொரு சட்டமாக அன்று கொண்டு வந்ததே ஐக்கிய தேசியக் கட்சிதான். அப்போதுகூட சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்தச் சட்டமூலத்தை எதிர்க்கவேயில்லை.

ஈழத் தமிழர்கள் தமது அரசியல் விடுதலைக் கோரிக்கையை வலியுறுத்தி வடக்குக் கிழக்கில் அகிம்சைப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சட்டம் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஜே.ஆர்.ஜயவர்ததன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அன்று தமிழ் மக்களுக்கு எதிராக, இன ஒடுக்கல் வேலைத் திட்டங்களை கன கச்சிதமாக மேற்கொள்ளவே இந்தச் சட்டத்தை உருவாக்கியிருந்தது என்பதும் கண்கூடு.

பின்னர் தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சந்திரிகா உள்ளிட்ட அனைத்துச் சிங்கள ஆட்சியாளர்களும் இந்தச் சட்டமூலத்தைப் பயன்படுத்தியே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கருவறுத்தனர் என்பதும் பட்டவர்த்தனம்.

சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச 1989 ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஜனாதிபதியாக இருந்தபோது. இச் சட்டத்தைப் பயன்படுத்தியே பல தமிழ் இளைஞர் யுவதிகளை விசாரணைகள் இன்றிச் சிறையில் அடைத்தார்.

ஆகவே தற்போது முகத்தை மாற்றி சஜித் தலைமையில் உருவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு மனச்சாட்சி இருக்குமானால், இச் சட்டத்தை நீக்க வேண்டிய முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களும் சுமந்திரனின் செயற்பாடுகளைக் கண்டித்து அச்சாப்பிள்ளை அரசியல் நடத்துகின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரதான நகர்வுகளின்போது அவர்கள் மதில்மேல் பூனைபோன்றிருப்பதே பெரும் ஆபத்து என்பதை மக்கள் தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர்

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் ஈழத் தமிழர்கள் வாழ முடியுமென்ற நம்பிக்கையை உருவாக்கித் தமிழர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும், சஜித், ரணில் சாயல் கொண்ட தமிழரசுக் கட்சி, முக்கியமாக அதன் பேச்சாளர் சுமந்திரன் அந்தச் சட்டத்தை நீக்குவதற்காக ஆரம்பித்துள்ள கையொப்பமிடும் போராட்டம், இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றே பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அரசியலில் ஈடுபடும் சஜித் பிரேமதாச பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்று கூறி, அதுவும் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருப்பதன் மூலம், சுமந்திரன் நடத்தும் போராட்டத்தின் அரசியல் பின்னணி வெளிப்படுகின்றது.

அதாவது சிங்கள அரசியல் கட்சிகளை நியாயப்படுத்திக் கொண்டு வெறுமனே ராஜபக்ச குடும்பம் மாத்திரமே போர்க் குற்றவாளிகள் எனவும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் காண்பிப்பதன் மூலமாக பௌத்த சமயத்தை மையமாகக் கொண்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பைச் சுமந்திரன் சுத்தம் செய்கின்றார் என்பது இங்கே வெளிப்படையாகின்றது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் யாப்புக்களே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையை மறுதலித்துக் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணத்தின் இணைப்பையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் புறக்கணித்து ஈழத்தமிழர்களின் மரபுரிமைகளையும் அழித்து வருகின்றன என்பதே யதார்த்தமாகும்.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை உறுதிப்படுத்தக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை நேர்மைகளை வெளிப்படுத்தியுமிருக்கவில்லை.

இதன் பின்புலத்தில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பின்னர், 1982 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு தடைச் சட்டமான ஆறாவது திருத்தச் சட்டம் பிரிவினைக்கு எதிரானதாகும்.

ஆனால் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேசுவதற்கு ஆறாவது திருத்தச் சட்டம் தடையில்லை என்பதே சட்டவல்லுநர்களின் கருத்தாகும். பங்கரவாதத் தடைச் சட்டம்கூட சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசத் தடையில்லை.

ஆகவே ஈழத் தமிழர்கள் பற்றிச் சிங்கள மக்களிடம் தவறான நச்சு உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கும் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென்று கோருவதற்குத் தமிழரசுக் கட்சிக்கு முடியாமல் இருக்கும் ஒரு சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான சுமந்திரனின் கையொப்பமிடும் போராட்டம் எதனைக் காண்பிக்கின்றது என்ற பலமான கேள்விகள், சந்தேகங்கள் விஞ்சிக் காணப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்பதே தற்போது தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு எதிரான மற்றுமொரு பிரதான பயங்கர ஆயுதமாகும்.

இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்பது தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கான அகிம்சை வழிப் போராட்டங்களை அடக்குவதற்கே என்று குறிப்பிட்டு வாதிடுவதற்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குத் தயங்கம் உண்டென்பது பகிரங்கமாகத் தெரிந்த உண்மை.

ஆகவே ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோராமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியுள்ளதன் பின்னணியிலேயே சுமந்திரன் நடத்தும் கையொப்பமிடும் போராட்டத்தை அவதானிக்க வேண்டும்.

தனது நிலைப்பாட்டையும் தனது அரசியல் பின்னணியையும் தனிப்பட்ட முறையில் சுமந்திரன் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகின்றார். அதனைப் பகிரங்கமாவே பலரும் விமர்சிக்கின்றனர். குற்றம் சுமத்துகின்றனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோராமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியுள்ளதன் பின்னணியிலேயே சுமந்திரன் நடத்தும் கையொப்பமிடும் போராட்டத்தை அவதானிக்க வேண்டும்

ஆனால் தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களும், மற்றைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் சுமந்திரனின் செயற்பாடுகளைக் கண்டித்து அச்சாப்பிள்ளை அரசியல் நடத்துகின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரதான நகர்வுகளின்போது. தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் மற்றைய தமிழத்தேசியக் கட்சிகளின் தலைவர்களும் மதில்மேல் பூனைபோன்றிருப்பதே பெரும் ஆபத்து என்பதை மக்கள் தற்போது உணரவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி நிவாரண அரசியல், சலுகை அரசியலில் ஈடுபட்டு வரும் கொழும்பை மையமாகக் கொண்ட பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளுக்கான தமிழ் முகவர்கள் தமக்குரிய வாக்குகளை அதிகரிக்கும் ஆபத்துக்களே நிறைந்திருக்கின்றன.

சுமந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.