பொருளாதார நெருக்கடி பற்றிய உரையாடல் என்ற போர்வையில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வகட்சி மாநாடாக அனைத்துக் கட்சிகளோடும் பேசத் திட்டம்

13ஐ நடைமுறைப்படுத்தக்கூட சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் ஏற்பாடா என்று அவதானிகள் கேள்வி
பதிப்பு: 2022 மார்ச் 19 23:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 20 16:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
அமெரிக்க- இந்திய அரசுகளின் நகர்வுகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் பற்றி உரையாடவிருந்த நிலையில், சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சென்ற 15 ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையிலேயே சந்திப்புத் திடீரென பிற்போடப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சந்திப்பதென கூறப்பட்டிருந்தது. இந்தவொரு நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துக் கோட்டாபய ராஜபக்ச உரையாடவுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
 
ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் பத்தோடு பதினொன்றாகச் சர்வகட்சி மாநாட்டில் 13 பற்றியும் பேசும் நிகழ்ச்சி நிரல் இருக்குமானால், அதனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஏற்குமா இல்லையா என்பது குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை

இதற்காவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கும் திட்டம் ஒத்திவைப்பெனக் கூறிக்கொண்டு கைவிடப்பட்டதாக என்ற கேள்விகளும் உண்டு.

இலங்கைத்தீவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி உயர்வுகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்டவுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப்பபோவதில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமென முடிவு செய்திருப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கத்தின் ஏனைய பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தனிததுச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆனால் அரசாங்கத்தின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதியோ, பிரதமரோ கலந்துரையாடாமல் சர்வகட்சி மாநாடு கூட்டப்படுகின்றது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு மாத்திரமே கலந்துரையாடப்பட்டது எனவும் ஏனைய சில பங்காளிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு சர்வகட்சி மாநாடு பற்றிக் கலந்துரையாடப்பட்டதாகக அரசாங்கத்தரப்பு கூறுகின்றது.

பிரதான எதிர்கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் ரணில் விக்கிரமசிங் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சிங்கள எதிர்கட்சிகள் மௌனமாக இருப்பதாகவே கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு பற்றி ஆராய சர்வகட்சி மாநாடு கூட்டப்படுகின்றதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதால் எழுந்த உள்ளக எதிர்ப்பைச் சமாளிக்க சர்வகட்சி மாநாடு கூட்டப்படுகின்றதா என்பது குறித்தே அவதானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சர்வகட்சி மாநாட்டில் 13 பற்றியும் பேசினால் அல்லது மாநாடு முடிவடைந்த பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் கோட்டாபய ராஜபக்ச தனியாப் பேசினால்கூட, அது ஈழத்தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடியாகவே கருத வேண்டும்

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திபாரெனக் கூறபட்டிருந்தவொரு நிலையிலேயே, சர்வகட்சி மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற 17 ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு பில்லியன் நிதி உதவிக்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுடன் புதுடில்லியில் கைச்சாத்திட்டிருந்தார்.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் பல இந்திய முதலீடுகள் மற்றும் இந்தியத் திட்டங்களுக்கும் இலங்கை அனுமதியும் வழங்கியிருந்தது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென சிங்கள பௌத்த அமைப்புகளும் இராணுவ சேவையில் இருந்து தற்போது அமைச்சராகப் பதவி வகிக்கும் சரத் வீரசேகர மற்றும் புதுடில்லியின் தூதுவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த கொறகொட ஆகியோர் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்த நிலையில், தமிழர் பிரதேசங்களில் இந்தியத் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் பின்னணியில் அமெரிக்க- இந்திய அரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ப 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்த இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க ஏற்பாடும் செய்திருந்தது.

தமிழரசுக் கட்சியை மையப்படுத்தி ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதமும் அனுப்பியிருந்தன.

ஆனால் இனப்பிரச்சனைத் தீர்வு விவகாரம் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவே கூடாதென பௌத்த அமைப்புகளும் கடும்போக்கு பௌத்த சிங்கள அமைப்புகளும் மற்றும் பல சிங்கள அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதன் பின்னணியில் இலங்கைத்தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாடு என்ற போர்வையில் பத்தோடு பதினொன்றாத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அழைத்துப் பேசவுள்ளாரா என்பது குறித்தே அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்க மாகாண சபை முறை உருவாக்கப்பட்டபோது, சிங்கள மக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே, அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கைத்தீவை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்துச் சிங்கள மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலும் மாகாண சபை முறைய உருவாக்கியிருந்தார் என்பது கண்கூடு.

ஆகவே இப் பின்னணியின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துவது பற்றிப் பேச சர்வகட்சி மாநாடு என்ற போர்வையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அழைத்துப் பேசவுள்ளாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

அதாவது 13ஐ தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் நிராகரித்து விட்டாலும், அதனை நடைமுறைப்படுத்தக் கூடத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனி மரியாதை கொடுத்துவிடக் கூடாது என்ற ஜே.ஆர் காலத்துச் சிந்தனை வந்துவிட்டதா என்ற கேள்விகளே விஞ்சிக் காணப்படுகின்றன.

ஆனால் இது குறித்து அறிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு கேட்க முடியவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கத்தில், பத்தோடு பதினொன்றாகச் சர்வகட்சி மாநாட்டில் 13 பற்றியும் பேசும் நிகழ்ச்சி நிரல் இருக்குமானால், அதனைத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஏற்குமா இல்லையா என்பது குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாநாட்டுக்குச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் பௌத்த அரசியல் 1987 இல், இலங்கைத்தீவை ஒன்பது மாகாணங்களாக வகுத்தபோதே ஆரம்பித்தது

சர்வகட்சி மாநாடு முடிவடைந்த பின்னர் கோட்டாபய ராஜபக்சவுடன் 13 பற்றிப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இது ஈழத் தமிழர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் செயற்பாடு என்றே பலரும் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த கோரிக்கைகளின் தரம் உயர்வாக இருக்க வேண்டுமென்றும், அமெரிக்க- இந்திய அரசுகளின் அறிவுறுத்தல்களுக்கு (Instruction politics) அமைவாக இருக்கக்கூடாதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (கூர்மை செய்தித் தளம் அது பற்றிய பல கட்டுரைகளை பிரசுரித்திருந்தது)

சிலவேளை சர்வகட்சி மாநாட்டில் 13 பற்றியும் பேசினால் அல்லது மாநாடு முடிவடைந்த பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் கோட்டாபய ராஜபக்ச தனியாகப் பேசினால்கூட, அது ஈழத்தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடியாகவே கருத வேண்டும்.

அத்துடன் 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு கோரி நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பிய ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் வெட்கப்பட வேண்டும். அறிவுறுத்தல் அரசியலுக்குள் விழுந்ததன் அவமானங்களை உணரவும் வேண்டும்.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழர்களின் விவகாரம் முக்கியமற்ற தன்மைக்கு மாறியதற்கும், வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினை மற்றும் ஜனநாயகத்துக்கான கோரிக்கையாக மாற்றமடைந்தமைக்கும் தமிழரசுக் கட்சி காரணமாக இருந்ததன் விளைவுகளை இதன் பின்னராவது புரிந்துகொள்ள வேண்டும்.

நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் என்னென்ன விடயங்கள் குறித்துப் பேசப்படும் என்ற நிகழ்சசி நிரல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறும் என்பது உறுதியென கொழும்பு உயர் மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.