காலம் பிந்தி வெளியான உண்மை

சவேந்திர சில்வாவைத் தடை செய்த பொம்பியோ, கோட்டா கொடுத்த பரிசைக் கைவிட்டார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் விபரங்கள் அம்பலம்
பதிப்பு: 2022 ஏப். 09 16:42
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 22:33
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜோ பைடன் நிர்வாகத்துக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளராகப் பதவி வகித்திருந்த மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வழங்கிய சுமார் இரண்டாயிரத்து இருநூறு அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள பரிசுப் பொருள் ஒன்றை தான் எடுத்துக் கொள்ளாமல் இராஜாங்கத் திணைக்களத்திடமே ஒப்படைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த மைக் பொம்பியோ, இலங்கைக்கும் வருகை தந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போதே இந்தப் பெறுமதியான பரிசுப்பொருள் வழங்கப்பட்டிருக்கின்றது.
 
பரிசுப் பொருளை மறுப்பின்றிச் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக் கொண்ட மைக் பொம்பியோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாக அந்தப் பரிசுப் பொருட்களை கையளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உலக அளவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள இராஜாங்கச் செயலாளர்கள் மற்றும் உயர் நிலை இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பற்றிய விபரங்கள் அதன் பெறுமதிகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட ஒரு சில நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பரிசுப் பொருட்களை தனிப்பட்ட முறையில் வழங்கியிருக்கின்றனர். அது பற்றிய விபரங்களே குறித்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கை மின் அஞ்சல் மூலம் தங்களைப் பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மட்டத்திலான சிலருக்கு மாத்திரமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கச் செயலாளர்கள் மற்றும் அமெரிக்க உயர் நிலை இராஜதந்திரிகள் எந்தவொரு நாட்டுக்குச் செல்லும்போதும், அங்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒழுக்க விதியாகும்.

அதற்கமைவாகவே மைக் பொம்பியோ கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பரிசுப் பொருளை இராஜாங்கத் திணைக்களத்திடம் கையளித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் கையளிக்கப்படும் பரிசுப் பொருட்கள் கையூட்டாகவே கருதப்படும் என்ற நோக்கில் மைக்பொம்பியோ அவ்வாறு இராஜாங்கத் திணைக்களத்திடம் கையளித்திருக்கலாம்.

2009 இல் இறுதிப் போர் நடைபெற்றபோது 58 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே, மைக் பொம்பியோ கொழும்புக்கு வந்திருக்கின்றார். இத் தடையினால் இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தியும் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியிலேயே சுமார் இரண்டாயிரத்து இருநூறு அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள பரிசுப் பொருளை மைக் பொம்பியோவிடம் கோட்டாபய ராஜபக்ச கையளித்திருக்கிறார் போலும்.

உணவுப் பரிமாறுதல்களின்போது பயன்படுத்தப்படும் பெறுமதிமிக்க கிண்ணங்களே பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டிக்கின்றன. ஆனால் அந்தக் கிண்ணங்களைக் கைவிட்டுத் தன் வேலையை மாத்திரம் கவனித்திருக்கிறார் மைக் பொம்பியோ.