காலிமுகத்திடலில் போராட்டம்

இலங்கை அரச கட்டமைப்பை மாற்றுவதே நோக்கம் என்றால், சிங்கள மக்கள் பகிரங்கமாக அழைக்க வேண்டும்

மலையகத் தமிழ், முஸ்லிம் இளைஞர்களின் கவனத்துக்கு- அமைச்சுப் பதவிகளுக்காக மாத்திரம் பலியாகக்கூடாது
பதிப்பு: 2022 ஏப். 13 15:54
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஏப். 22 23:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள். இரண்டாவது பெருமளவு அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தி 1986 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளியமை. குறிப்பாக 1947 இல் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல். பொருளாதாரத் திட்டங்கள் இனவாத நோக்கில் அமைந்தமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்களப் பேராசிரியர் அசோக லியனகே கொழும்புரெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி எழுதிய தனது கட்டுரையில் கூறுகின்றார்.
 
1986 இல் இருந்து தேயிலை ஏற்றுமதி வருமானத்தை கீழ் இறக்கும் இனவாத திட்டமும், முப்பது வருட போரும் அதன் பின்னர் வடக்குக் கிழக்கில் சிங்கள மற்றும் இராணுவ மயமாக்கலும் 2009 இன் பின்னரான முஸ்லீம்களின் வர்த்தகச் செயப்பாட்டைத் திட்டமிட்டு அழித்தமையுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை சிங்கள புத்திஜீவிகள் பலரும் சிங்கள அரசியல் கட்சிகளும் இன்றுவரை ஏற்கத் தாயராக இல்லை

இலங்கைத்தீவின் மொத்தத்தேசிய உற்பத்தியில் மூன்று துறைகளில் மாத்திரமே கூடுதல் வருமானம் கிடைக்கின்றது. ஒன்று- தேயிலை ஏற்றுமதி, இரண்டாவது- தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி, மூன்றாவது- சுற்றுலாத்துறை. இந்த மூன்றிலும் 1986 வரை அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுத்தது தேயிலை ஏற்றுமதி.

1986 ஆம் ஆண்டு தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியை ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முதன்மைப்படுத்தும் உத்தியைக் கையாண்டதால், தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை ஏற்றுமதி வருமானம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாசா ஆட்சியில் 1992 ஆம் ஆண்டுதான் தேயிலைத் தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் தேயிலை ஏற்றுமதியில் பெறப்படும் வருமானம் ஏற்ற இறக்கத்தில் அமைந்தது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2021 ஆண்டு அறிமுகப்படுத்திய ஓகானிக் கம் (Organic gum) அதாவது கரிம விவசாய முறையினால் (சேதனப் பசளை) தேயிலை உற்பத்தி, மற்றும் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் சரிவடைந்தது.

இதன் பின்புலத்திலேயே தேயிலை ஏற்றுமதி உலக அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சென்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குறுட்டு நியாயம் ஒன்றை வெளிப்படுத்தியிருந்தார்.

வேறு குடிபானங்களின் வருகையினால் தேயிலை நுகர்வு உலக அளவில் குறைவடைந்துள்ளது என்ற கற்பிதங்கள் உண்டு. ஆனாலும் 1986 ஆம் ஆண்டில் இருந்து தேயிலை உற்பத்தியை காலத்துக்குக் காலம் நவீனமயப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வர்த்தக உத்திகள் இலங்கையினால் உரிய முறையில் வகுக்கப்பட்டவில்லை.

மாறாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்தியமையே இலங்கையின் பொருளாதாரச் சரிவுக்குப் பிரதான காரணம் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்கத் தயாரில்லை.

அதாவது தேயிலை நுகர்வு குறைவடைந்து விட்டது என்று காரணத்தைக் கண்டு பிடித்துத் தேயிலை ஏற்றுமதிக்கு இனரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைப்பதிலேயே மாறி மாறி பதவிக்கு வரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கவனம் செலுத்தியிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகூட ஆறு ஆண்டுகால போராட்டத்தின் பின்னரே கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெறப்பட்டது. அதுவும் சம்பள உயர்வு வழங்கப்படக்கூடாதென்று 180 இற்கும் அதிகமான மனுக்கள் கிடைத்ததாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அப்போது தெரிவித்திருந்தார். (அவை அனைத்தும் இனரீதியான அனாமதேயக் கடிதங்கள்)

ஆண்டுக்கு 1.3 பில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் சுமார் இரண்டு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் முறை பற்றிக் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் ரோமாயா ஒபோகாடா கவலை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேயிலை றப்பர் தோட்டங்களுக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டிருந்தார்.

இலங்கைக்கு டொலர்களை அதாவது அதிகளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் தேயிலை உற்பத்தியின் இன்றைய நிலை குறித்து ரோமாயா ஒபோகாடா கவலை வெளியிட்டிருந்தார்.

அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலை ஏற்றுமதியில் ராஜபக்ச அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தாமை அல்லது உரிய திட்டங்கள் செய்யப்படாமை குறித்த பல முறைப்பாடுகளையும் ரோமாயா ஒபோகாடா பெற்றிருந்தார்.

அதன்போதுதான் அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதிக்கான மூலப் பொருட்களையும் முடிவுப் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஆண்டுக்கு 280 மில்லியன் வரை செலவிடப்படுவதாக வரவு செலவுத் திட்ட அறிக்கை காண்பிக்கின்றது. அது மாத்திரமல்ல தைத்த ஆடைகள் உற்பத்திக்கான மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்ய சீனாவிடம் இருந்து 150 கோடி டொலர் கடனாகப் பெறப்படவுள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோகண்ண நேற்றுச் செய்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

ஆனால் தேயிலை உற்பத்திக்கு வளமாக்கிகள், மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. பிற செலவுகள், தோட்டத் தொழிலாளர் சம்பளங்களைத்தவிர வேறு செலவுகள் எதுவுமேயின்றி மொத்த வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பது தேயிலை ஏற்றுமதிதான்.

ஆகவே தேயிலை உற்பத்தியை நவீன மயப்படுத்தி மேம்படுத்தாமல் செலவுகளை ஏற்படுத்தி வருமானத்தை ஈட்டும் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதித் தொழிலையே 1986 இல் இருந்து, (கூடுதலாகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக) அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.

இன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 33 சதவீதம் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மூலமே பெறப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு ஆண்டு அறிக்கை காண்பிக்கின்றது.

தேயிலை ஏற்றுமதி குறைவடைந்தமைக்கான காரணங்களும் அந்த ஆண்டு அறிக்கையில் சொல்லாமல் சொல்லப்படுகின்றது. அதாவது அறிக்கையைத் தயாரித்த அதிகாரியின் மனட்சாட்சி கொஞ்சமாவது உறுத்தியிருக்கிறது.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பெரிய வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை என்பதை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள், வரைபடங்களை அவதானிக்கும்போது தெரிகின்றது. இன அடிப்படையிலான பாகுபாடுகள் வெளிப்படுகின்றன

ஆகவே தைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கான உற்பத்திக்குரிய மூலப் பொருள், முடிவுப்பொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய செலவிடப்படும் மில்லியன் கணக்கான நிதியைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே மற்றுமொரு ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை பரிந்துரைக்கும் தொனியும் அவ்வாறுதான் தொட்டுச் செல்கின்றது.

சுற்றுலாத்துறை வருமானம் 2009 இறுதிப் போரின் பின்னரான காலத்தில் அதிகரித்திருந்தாலும் கொவிட்-19 அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகளினால் அந்த வருமானமும் இல்லாமல் போய்விட்டது. சுற்றுலாத் துறை வருமானங்கள் ஒருபோதும் சம அளவில் போதியதாக இல்லையென கடந்த ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவுத் திட்ட அறிக்கையின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதேவேளை, இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் 2017- 2020 ஆம் ஆண்டுக்களுக்கான பொருளாதார முயற்சி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வடமத்திய மாகாணம் உள்ளிட்ட வேறு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.

வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட எட்டு சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்காக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் சர்வதேசக் கண்காட்சி நடத்தப்பட்டது.

இருந்தாலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க மேற்கொண்ட இம் முயற்சிகள் பெரிய வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை என்ற கருத்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள், வரைபடங்களை அவதானிக்கும்போது தெரிகின்றது. இன அடிப்படையிலான பாகுபாடுகளும் வெளிப்படுகின்றன.

இவை இலங்கைப் பொருளாதாரக் கட்டமைப்பின் தொடர்ச்சியான பலவீனங்கள், தோல்விகளை எடுத்துக் காட்டும் சில உதாரணங்கள் மாத்திரமே.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் டொலர்களுக்கான பெறுமதியை அரசாங்கம் இறுக்கிப் பிடித்ததாலேயே 2021/22 ஆம் ஆண்டுகளில் டொலர்கள் இலங்கை வங்கிகளில் இல்லாமல் போனதாக தனியார் வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

ஏறத்தாழ ஏழு பில்லியன் டொலர் பணம் புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்றும் ஆனாலும் அரசாங்கத்தின் இன ரீதியான இறுக்கமான டொலர் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் தனியார் நிறுவனங்களில் அதிக விலைக்கு மக்கள் டெலர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதுவும் அரசாங்கம் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்குக் காரணம் என்றும் சில பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிதியைக் கையாளக்கூடிய சரியான இடங்களில் உரிய நிபுணர்கள் பதவிக்கு அமர்த்தப்படவில்லை என்றும் மேற்கோள் காண்பிக்கின்றனர்.

ஆகவே 1947 இல் இருந்து இனரீதியான பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் பின்னணியிலும், 2009 இற்குப் பின்னரான இன ரீதியான பொருளாதார அணுகுமுறையுமே ஏற்றுமதித் துறை சரிவடைந்தமைக்குப் பிரதான காரணம் என்பது கண்கூடு.

பொருளாதார நெருக்கடி இன்று பூதமாகக் கிளம்பியதற்கு இதுதான் உண்மைக் காரணியும்கூட.

கோட்டாபயவை மாத்திரம் மாற்றினால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் என்பதல்ல, மாறாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் விடுதலை, மலையகத் தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அதுவும் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசியல் தலைவர்கள் இனவாத நோக்கில் செயற்பட முடியத வகையில் இந்த சிங்கள அரச இயந்திரத்தில் மாற்றத்தைக் கோர வேண்டும்

ஆகவே கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல 1947 இல் இருந்து ஆட்சியமைத்த அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் பொருளாதார நெருக்கடிக்கும் விலைவாசி உயர்வுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பி ரணில், சஜித் அல்லது வேறொரு சிங்களத் தலைவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்- முஸ்லிம் மக்களின் நிலைமைகளில் மாற்றம் ஏற்படாது. ஆகவே சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களை ஓரமாக்கிச் செயற்படுத்தும் அரச கட்டமைப்பு (Unitary state constitution) மாற்றப்பட வேண்டும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் தமிழ் முஸ்லிம்கள் எவரும் உறுப்பினர்களாகவும் இல்லை. ஆலோசனைச் சபையிலும் இல்லை.

குறிப்பிட்டுச் சொல்வதானால் இனரீதியாகக் கையாள்வதெற்கென சிங்கள ஆட்சியாளர்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள உயர் அதிகாரிகளைக் கொண்ட அரச இயந்திரம் நீக்கம் செய்யப்பட்டு சிங்கள, தமிழ். முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் சிங்களப் புத்திஜீவிகளும் சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள இடதுசாரிகள் பலரும் இதனை ஏற்கத் தயாராக இல்லை. இனவாதத்தை மூலதனமாக்கி அரசியலில் ஈடுபடும் சிங்கள அரசியல்வாதிகளை விடவும் சிங்கள புத்திஜீவிகள் மிகவும் மோசமான மகாவம்ச மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறிய முடிகின்றது. சிங்கள சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் அதனைப் புடம் போட்டுக் காண்பிக்கின்றன.

வடக்குக் கிழக்கில் 2009 இன் பின்னரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு வேலைகள் ஒற்றையாட்சி அரச இயந்திரத்தினால் எப்படி செயற்படுத்தப்படுகின்றதோ, அதேபோன்று மலையகத் தமிழ் பிரதேசங்களிலும் கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.

தென்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தகங்கள் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்படுகின்றன. 2009 இறுதிப் போருக்குப் பின்னரான முஸ்லிம்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு அரங்கேறியது.

கொழும்பில் மலையகத் தமிழர்கள். ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பல வர்த்தக நிறுவனங்கள் சிங்கள முதலாளிகளினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பில் மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களின் வார்த்தக நடவடிக்கைகள் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஆகவே கோட்டாபயவை மாத்திரம் மாற்றினால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் என்பதல்ல, மாறாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் விடுதலை, மலையகத் தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அதுவும் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசியல் தலைவர்கள் இனவாத நோக்கில் செயற்பட முடியாத வகையில் இந்த சிங்கள அரச இயந்திரத்தில் மாற்றத்தைக் கோர வேண்டும்.

உண்மையில் மாற்றம் வேண்டுமென சிங்கள மக்கள் மனதார நினைத்தால் கோட்டாபயவை அல்ல, இலங்கை அரச கட்டமைப்பில் அரசியல் ரீதியான அதிகாரப் பங்கீட்டைச் செய்ய முன்வர வேண்டும்.

அதாவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முறையை மாற்றச் சிங்கள மக்கள் தயாராக வேண்டும். சிங்கள அரசியல் தலைவர்கள் தங்கள் மனட்சாட்சியைத் தொட்டு அரச கட்டமைப்பு மாற்றத்துக்கான நேர்மையான எண்ணக் கருவை வெளிப்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வளவு பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்னரும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பிரித்தெடுத்து யாருடைய கையில் ஒப்படைப்பது என்பது பற்றியே பௌத்த தேரர்களும், சிங்கள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் சிந்திக்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில் கோட்டாபயவின் அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் மாத்திரமே இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்கள முற்போக்குவாதிகள் எனப்படும் மிதவாதச் சிங்களவர்கள் பலரினாலும் முன்வைக்கப்படும் கற்பிதங்கள் தவறனானவை.

அதேநேரம் கோட்டாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கவும் முடியாது. ஆனால் இந்தப் போராட்டத்தின் மூலமே சிங்கள இனவாத நோக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சுட்டிக்காட்டி, அடிப்படையில் இருந்து மாற்றங்களைச் செய்யக்கூடிய அளவுக்கு குரல்கள் எழ வேண்டும்.

மாறாக கோட்டா வீட்டுக்குபோ என்ற வெறும் கோசத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் மலையகத் தமிழ்- முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றுவது சிங்களத் தேசியவாதத்தைப் பாதுகாக்க முற்படும் சிங்கள முற்போக்குவாதிகள், சிங்கள இடதுசாரிகளுக்கு செய்யும் உதவியாகவே மாறிவிடும்.

உண்மையில் மாற்றம் வேண்டுமென சிங்கள மக்கள் மனதார நினைத்தால் கோட்டாபயவை அல்ல, இலங்கை அரச கட்டமைப்பில் அரசியல் ரீதியான அதிகாரப் பங்கீட்டைச் செய்ய முன்வர வேண்டும்

இதே கருத்தை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உறுதிப்பட வலியுறுத்துகிறார்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருப்பதால் மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் அமைச்சுப் பதிவிகளில் இல்லை. ஏனெனில் 69 இலட்சம் பௌத்த சிங்கள வாக்குகளில் தெரிவு செய்யப்பட்டே பதவிக்கு வந்ததாக ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர் கூறுகின்றார்.

அத்துடன் வடக்குக் கிழக்குத் தமிழர்களோ, மலையகத் தமிழர்களோ ஏன் முஸ்லிம்களோ ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களிக்கவுமில்லை.

ஆகவே 69 இலட்சம் சிங்கள மக்களுமே கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்ப வீதிக்கு இறங்க வேண்டும்.

அப்படி சிங்கள அரச இயந்திரத்தை மாற்றுவதே சிங்கள மக்களின் எண்ணக்கருவாக இருக்குமானால், இப் போராட்டத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டுமெனப் பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும். அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுமானால் அதில் நூறுவீத நியாயம் இருக்கும்.

ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றுவோமென உறுதியளிப்பது ஏற்புடையதல்ல.

ஆனால் 1986 இல் இருந்து தேயிலை ஏற்றுமதி வருமானத்தை கீழ் இறக்கும் இனவாதத் திட்டமும், முப்பது வருட போரும் அதன் பின்னர் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள மற்றும் இராணுவ மயமாக்கலும் 2009 இன் பின்னரான முஸ்லீம்களின் வர்த்தகச் செயற்பாட்டைத் திட்டமிட்டு அழித்தமையுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை சிங்கள புத்திஜீவிகள் பலரும் சிங்கள அரசியல் கட்சிகளும் இன்றுவரை ஏற்கத் தாயராக இல்லை.

ஆகவே கோட்டாபயவைத் தள்ளிவிட்டு ஆட்சியமைக்கலாம் என்று கருதுகின்ற சிங்களக் கட்சிகள் அதன் மூலம் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் சில மலையக, முஸ்லிம் கட்சிகளின் சுய லாபங்களுக்கு இடமளிக்கும் கருவியாக மலையகத் தமிழ் இளைஞர்களும் முஸ்லிம் இளைஞர்களும் மாறிவிடக்கூடாது.

கோட்டாபய பதவி இறங்கினால் என்ன நடக்கும்? இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும் அந்த அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தைத் தவிர ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த பலரும் புதிய அரசாங்கத்திலும் அமைச்சராகப் பதவி வகிப்பர்.

மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சர் பிரதியமைச்சர் பதிவிகள் கிடைக்கும். இதுதான் புதிய மாற்றம் என்றால், இந்தப் பேராட்டம் யாருக்கானது?

இலங்கையின் தளம்பல் நிலைமையை அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் நோக்கில் தமக்குச் சாதகமாக வெவ்வேறு கோணங்களில் பயன்படுத்தும் என்பது வெளிப்படை. ஆகவே சிந்திக்க வேண்டியது தமிழ். முஸ்லிம் மக்களே.