உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன?

பேராயரின் சந்தேகமும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைகள் பற்றியும் எழும் விமர்சனங்கள்
பதிப்பு: 2022 ஏப். 23 20:53
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 25 00:07
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று இன்று 21 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையடுத்து இன்று நாடெங்கிலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பல ஆலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாக, நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று, ஓங்கி ஒலித்த நிலையில் மேற்படி கோஷங்கள் யாவும் தற்பொழுது வலுவிழந்து அநேகராலும் மறக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.
 
தாக்குதலுக்கு நீதி கோரி கத்தோலிக்க திருச்சபையும் பொது மக்களும் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு மறை மாவட்ட பேராயர் கலாநிதி கார்த்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்துகள் பொருத்தமானவை

இலங்கையில் ஈஸ்டர் தினத்தை மையமாக வைத்து பயங்கரவாதிகளினால், ஆலயங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய தற்கொலைத் குண்டுத்தாக்குதல்கள் காரணமாக ஆலயங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் பலர், உடல் சிதறி மரணத்தை தழுவினர்.

மனித இரத்தத்தையும் உடல் அவயங்களையும் ஆலயங்களில் சிதறச் செய்து ஆலயத்தின் புனித தன்மைக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊறு விளைவித்தனர். அத்துடன் அன்றைய தினம் கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டு அப்பாவிகள் பலரை கொன்றொழித்தனர்.

இந்த வகையில் மாபெரும் அவலம் நிகழ்ந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை.

எனினும் இலங்கை தீவின் மக்கள் கொவிட் -19 நோய் தொற்று காரணமாக தற்பொழுது முகம் கொடுத்துள்ள கடுமையான பொருளாதாரக் கஷ்டம், இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு, அதனைப் பெறுவதற்கு தற்பொழுது நாடெங்கும் ஏற்பட்டுள்ள வரிசை யுகம் மற்றும் இவை யாவற்றையும் காரணமாகக் கொண்டு அரசாங்கத்தினையும் ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரி தினம் தினம் மக்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்பாட்டங்கள் மற்றும் காலி முகத்திடல் போரட்டங்கள் ஆகியன ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை மறக்கடிக்கச் செய்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கைது செய்யப்படல் வேண்டும் எனும் உக்கிரமான கோரிக்கைகளையும் முற்றாக மழுங்கடிக்கச் செய்துள்ளது.

இலங்கையின் ஆளும் பொதுசன பெரமுன கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச ஊழியர்களின் தொழிற் சங்கங்கள் ஆகியன இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினையும், அவர் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி வீதி மறியல் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் சத்தியாக்கிரகம் ஆகியவற்றை தினமும் மேற்கொண்டுவரும் நிலையில், அதன் பரபரப்பிலும் களேபரத்திலும் முழு இலங்கையும் தற்போது ஆழ்ந்துள்ளது. இத்தகைய சூழலில் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபராகக் குற்றம்சாட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவது தாமதமாகி அவர் கைதாகுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன எனும் நாமம் தற்காலிகமாக மறக்கப்படுகின்றன. தற்போது நாட்டில் தலைவிரித்தாடும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மைத்திரி எனும் தனி மனிதனே பிரதான காரணகர்த்தா என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

கடந்த 2015இல் நல்லாட்சி மூலம் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்ற மைத்திரிபால, தனது பதவி காலத்தின் பின்னர் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு ஏதுவாக மேற்கொண்ட நயவஞ்சக அரசியல் நகர்வுகளே, இலங்கையின் இன்றைய மிக மோசமான அவல நிலைக்கு அதி மூலகாரணமாக அமைந்துள்ளதுடன் அவற்றுக்கு எதிராக நாட்டின் நலாபுறங்களிலும் போராட்டங்களும் வெடித்துள்ளதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

எனினும் இலங்கையில் தற்போது பெரும் முனைப்புடன் மேற்கொள்ளப்படும் மக்கள் புரட்சி சில சமயம் வெற்றியடைந்து ஆட்சி மாற்றம் ஒன்று நிகழுமாயின், தற்பொழுது தலைதூக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான தட்டுபாடு ஆகியன ஒரளவு நீங்கி, நாடு சாதாரண நிலைமைக்கு திரும்பும் சாத்தியம் ஒன்று ஏற்படும்.

இவ்வாறான நிலை ஒன்று இலங்கைத் தீவில் ஏற்படும் பட்சத்தில் நல்லாட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் மீண்டும் உருவெடுத்து "மைத்திரி கைது செய்யப்படல் வேண்டும்" எனும் கோஷங்கள் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் மீண்டும் உரத்து ஒலிக்கத் தொடங்கலாம்.

அத்துடன் புதிய அரசொன்று பதவிக்கு வரும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டால், குறித்த புதிய அரசும், மைத்திரியின் கைது தொடர்பாக அனைத்து தரப்பினராலும், பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படும் நிலை உருவாகும். இந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள் மைத்திரிக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் கோப்புகள் மீண்டும் வேக வேகமாகத் தூசு தட்டப்பட்டு, அவர் கைதாகி சிறைக்கு செல்லும் அபாயம் உள்ளது என தற்போதே கணிக்க கூடியதாகவுள்ளது.

இதற்கு கட்டியம் கூறும் வகையில் கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நகரில் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கத்தோலிக்க திருச்சபையும் பொது மக்களும் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு மறை மாவட்ட பேராயர் கலாநிதி கார்த்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்துகள் பொருத்தமாக அமைகிறது.

"இலங்கையில் நடந்த மிக மோசமான இரத்தம் சிந்துதலை எங்களால் என்றுமே மறக்க முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும், பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் கடந்த தேர்தலின் போது, இந்த சம்பவத்தை முழுமையாகப் பயன்படுத்தி அரசியல் பதவிகளைப் பெற்றதுடன் ஆட்சி பீடமும் ஏறினர்.

இந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளபட்ட பெரும் தாக்குதல்களில், மிகப் பெரும் சதி இருக்கலாம் என, அன்றே எமக்கு எண்ணத்தோன்றியது. தற்போது இச்சதிகாரர்கள் யார் என்பது நன்கு வெளிப்பட்டு வருகிறது. இந்த சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியும். எனினும் அவ்வாட்சியை பாதுகாக்க முடியாது.

இச் செயலை புரிந்தவர்கள் மீது கடவுளின் சாபம் கிடைத்தே தீரும். மேலும் ஈஸ்டர் தாக்குதல்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் சம்பந்தப்பட்டவர்கள் (மைத்திரி உட்பட மேலும் பலர்) மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தொடர்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.

எனினும் எமது கோரிக்கைகள் எவையும் இன்று வரை அரசாங்கத்தினால் செவி சாய்க்கப்படவில்லை" என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கலாநிதி கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் கடந்த வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நகரில் நடைபெற்ற மேற்படி ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளினால் நிகழ்த்தபட்ட ஈஸ்டர் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள், இலங்கை உட்பட முழு உலகயே அச்சமயம் உழுப்பியிருந்து. அத்துடன் குறித்த தாக்குதல்கள் கடந்த மைத்திரி - ரணில் நல்லாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதான காரணமாகவும் இருந்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே இத் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடந்த காலங்களில் கடுமையான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அத்துடன் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உட்பட அதி சிரேஷ்ட தரத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மீதும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், இலங்கையின் திருச்சபை உட்பட பலதரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இச்சம்பவத்தில் தற்கொலை குண்டுதாரிகளான முகம்மது ஹாசிம் முகம்மது சஹ்ரான், முகம்மத் இப்றாஹிம் இன்சாப் அஹமட் , முகம்மது இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகியோர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக முன்னாள் அமைச்சர் றிஸாட் பதீயூதீன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மீதும் பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் இச்சம்பவத்தில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் கைதாகி பல மாதங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர ஆகியோர் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு (சீ ஐ டி- CID ) பிரிவினரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

ஈஸ்டர் தாக்குதல்களில் முதன்மை குற்றவாளியாக அனைத்து தரப்பினராலும் தான் குற்றச்சாட்டப்படுவதை நன்கு உணர்ந்த மைத்திரிபால சிறிசேன அக்குற்றச்சாட்டில் இருந்து தன்னை தற்காத்துகொண்டு தன்னை நிரபராதியாக காட்டிக் கொள்வதற்காக, அன்றைய பொலிஸ் மா அதிபரை ஈஸ்டர் தாக்குதலில் சிக்கவைப்பதற்கான பகிரதப் பிரயானத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரை, அவரின் சேவையில் இருந்து கட்டாய ஒய்வு பெறச்செய்வதற்கான முயற்சிகளை மைத்திரி மேற்கொண்டார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை, பசி பட்டினி மற்றும் அமைச்சு மாற்றங்கள் அரசியல் ரீதியாக இலங்கை தீவு முழுதும் வியாபித்துள்ள தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக விசாரணைகள் மேலும் தாமதமாகின்றன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்பே பல உறுதியான புலனா‌ய்வுத் தகவல்கள் அரச உயர்மட்டத்தினருக்கு கிடைக்கப்பெற்றும், அதனை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் அனைத்திலும் கோட்டைவிட்டு, முழு தேசத்தின் பாதுகாப்பையும் கேலி கூத்தாகி மக்களின் பெரும் சீற்றத்திற்கு ஆளான ஜனாதிபதி மைத்திரி, எவ்வித குற்ற உணர்வும் இன்றி நயவஞ்சகமாக அன்றைய பொலிஸ் மா அதிபரும், அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே ஈஸ்டர் தினத்தற்கொலை தாக்குதல்கள் சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்த மைத்திரி, பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தின தாக்குதல்களை தனது அசிசிரத்தை மூலமாக தடுக்கமுடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீதவிற்கு பல சந்தர்ப்பங்களில் கடுமையான அழுத்தங்களையும் பிரயோகித்தார். இவ்வாறான பல நெருக்குவாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு வழங்கியதாக பின்னரான நாட்களில் முன்னாள் பொலிஸ் அதிபர் பூஜீத ஜெயசுந்தர கூறியிருந்தார.

"ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தன்னை அழைத்து, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுமையான பொறுப்புக் கூறலை ஏற்றுக்கொண்டால், சட்டரீதியாக எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தான் பரிகாரம் பெற்றுத் தந்து, பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து இளைப்பாறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மாதந்த ஒய்வூதியத்தையும், எவ்வித பங்கமின்றி பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக மைத்திரிபால தன்னிடம் தெரிவித்தார்" என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.

தனது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தால், வெளிநாடொன்றுக்கு இலங்கைக்கான தூதுவர் நியமனத்தை உடன் வழங்குவதாகவும், தன்னிடம் ஜனாதிபதி குறிப்பிட்டதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தன்னை பாதுகாத்து கொள்ள மைத்திரி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. இந்த நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர ஆகியோர்களை கைது செய்ய இலங்கை சட்ட மா அதிபருக்கும், பதில் பொலிஸ் மா அதிபருக்கும், ஜனாதிபதி உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்த நிலையிலேயே மேற்படி இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி மாதப் பகுதியில் பூஜீத மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய அதிகாரிகள் இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டமை, நீதியின் அடிப்படையில் சிறந்த தீர்ப்பு என்றாலும் அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டமையும் அச்சமயம் இலங்கை தீவு முழுதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திருந்தது.

மேற்படி இருவரும் ஈஸ்டர் தாக்குதல் வழக்குகளில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டமை குறித்து அண்மையில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்களும் தனது பலத்த கண்டனங்களை இலங்கை அரசிற்கு தெரிவித்திருந்தனர். அத்துடன் மேற்படி இருவரின் விடுதலைக்கு ஆட்சேபனை தெரிவித்து இலங்கை சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடந்த மார்ச் மாதப்பகுதியில் மேன் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி நிலவிய 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உரிய புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் அரச உயர் மட்டத்தினராலும், பொலிஸ் உயர் அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்சியாக முன்வைத்து வருகிறார்.

இத்தகைய நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியவும், விசாரணைகளை மேற்கொள்ளவும் இக்கட்டுரையின் பிரதான கதாநாயகனான அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் நீண்ட காலமாக பல விசாரணைகளை நடாத்தி, நூற்றுக்கணக்கான சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தது. அத்துடன் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தமது இறுதி அறிக்கையினையும், ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அளிக்கப்பட்ட பல சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. அதன் அடிப்படையில் தாக்குதல் காலத்தின்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழு தனது பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு முன்வைத்தது.

இவ்வாறான நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல்வேண்டும் என இலங்கையில் பல தரப்பினரும் தொடர்சியாக வலியுறுத்தி வந்தனர். எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை, பசி பட்டினி மற்றும் அமைச்சு மாற்றங்கள் அரசியல் ரீதியாக இலங்கை தீவு முழுதும் வியாபித்துள்ள தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக "மைத்திரிபால கைது செய்யப்படல் வேண்டும்" எனும் வேண்டுகோள்களும், கோஷங்களும் தற்பொழுது ஆழ்ந்த உறங்கு நிலைக்கு சென்றுள்ளது.

கடந்த வருடத்திலும் இவ்வருட ஆரம்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றபோது, இலங்கையில் தான் இருக்கவில்லை எனவும் சம்பவவேளை குடும்பம் சகிதம் தான் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாகவும், மைத்திரிபால தொடர்சியாகக் கூறிவருகின்றார்.

"எந்தவொரு தேவாலயத்தின் சிலுவையின் மீதும் சத்தியம் செய்து ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் தான் குற்றம் இழைக்கவில்லை என்பதனை நிருப்பிக்க தயார்" என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் சொந்த மாவட்டமான பொலநறுவையில் உள்ள ஆலயமொன்றில், அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றபோது, நான் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல் குறித்த தகவல்கள் எவையும் எனக்கு முன்கூட்டி கிடைக்கப்பெறவில்லை. அத்துடன் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் எனக்கு வழங்கப்படவும் இல்லை.

மேலும் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே எனக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் நான், எனது வெளிநாட்டு பயணத்தையே ரத்துச் செய்திருப்பேன்." என பொலநறுவை பகுதியில் உள்ள தேவாலய நிகழ்வில் உரையாற்றும் போது மைத்திரி தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல்கள் குறித்த தகவல்கள், சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளை தொலைபேசி மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டதாக, இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதையும் மைத்திரிபால இச்சந்தர்ப்பத்தில் மறுத்துள்ளார்.

சிங்கப்பூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எவரும் தொலைப்பேசியை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதனையும், இத்தகைய நிலையில் தாக்குதல்கள் தொடர்பாக எத்தகைய தகவலும் தொலைபேசி மூலம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதனையும், பெளத்த மதத்தவர் எனும் அடிப்படையில் புத்தரின் பாதங்களைத் தொழுது உறுதிப்படக் கூறுவதாகவும், சத்தியம் செய்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி பொலநறுவையில் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கையின் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தின தொடர் தாக்குதல் தொடர்பில் அதனை முன்கூட்டி அறிந்திருந்தும் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

மேலும் இவர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது குறித்து மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கை சட்ட மா அதிபருக்கு தமது வியாக்கியானங்களையும் முன்வைத்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே ஏலவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவரும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நிரபராதி என முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக தனக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தன்னால் புறக்குறிப்பிடு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினருக்கு, உரிய வேளையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பூஜீத ஜெயசுந்தர ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்

இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு சமயம் சாட்சியம் அளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத, குறித்த பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உட்பட இப்பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான அனைத்து அவலங்களுக்கும், அநர்த்தங்களுக்கும் அன்று ஜனாதிபதி பதவியில் இருந்த மைத்திரிபால சிறிசேனவே முழுமையான பொறுப்பை ஏற்றல்வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தனக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தன்னால் புறக்குறிப்பிடு (Endorsement) செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினருக்கு, உரிய வேளையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பூஜீத ஜெயசுந்தர ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த நல்லாட்சியின் ஆரம்ப கட்டத்தில் இலங்கையின் ஜனாதிபதியான மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர்களுக்கிடையிலான உறவு தேனும் பாலும் போன்று இனித்தது. எனினும் நாட்கள் செல்ல செல்ல மைத்திரி ரணில் உறவில் விரிசல் விழத்தொடங்கியது.

இருவருக்குமிடையிலான அரசியல் இழுபறிகள் உச்சம் தொட்ட நிலையில் இலங்கை தீவின் சட்டம் ஒழுங்கு நடைமுறையிலும் தளர்வு ஏற்பட்டது. இதனால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்புகள் தளர்வடைந்து ஆட்டங்கண்டது. தேசிய புலனாய்வு மற்றும் உளவு சேவைகளில் ஏற்பட்ட பலகீனம் மற்றும் தளர்வு நிலையினால் முகம்மது சஹ்ரான் தலைமையில் முஸ்லிம் தீவிரவாதிகள் தலையெடுக்க தொடங்கினர். அத்துடன் அவர்கள் இலங்கையில் மாபெரும் பயங்கரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை கச்சிதமாக வகுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பயங்கரவாத செயல்பாடுகளுக்கான நகர்வுகள் சஹ்ரான் குழுவினரால் மெல்ல மெல்ல நடந்தேற, மைத்திரி-ரணில் ஆகியோர்களுக்கு இடையிலான பனிப்போர் மேலும் கூர்மையடைந்தது. மேலும் அன்றைய நல்லாட்சியில் மைத்திரிபால சிறிசேன வெறுமனே இறப்பர் இலச்சினை போன்றே ரணிலால் பயன்படுத்தப்பட்டார்.

அரசாங்கத்தின் கடிவாளம் முற்றிலும் ரணில் வசமே இருந்து. இதனால் அரசின் பல முக்கிய அமைச்சுப் பொருப்புகளை ரணிலின் அழுத்தத்தினால் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கவேண்டிய நிர்பந்தம் மைத்திரிக்கு ஏற்பட்டது.

ரணிலின் செயற்பாடுகளுக்கு மைத்திரிபாலவினால் ஈடுகொடுக்கமுடியவில்லை. மிக நுட்பமான இரஜதந்திரியான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நகர்விற்கும், சானாக்கியத்திற்க்கும் சிங்களம் மொழி தவிர்ந்த வேறு எந்த மொழி ஆற்றலும் இல்லாத, மைத்திரிபாலவினால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இத்தகைய நிலையில் மைத்திரிபால வெகுண்டெழுந்து ரணிலை பழி வாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.

அதற்கான பொருத்தமான உகந்த நேரம் கனிந்து வரும் வரை காத்திருக்காத மைத்திரி தனக்கு சூழ்ச்சி நடவடிக்கைகளை உடன் ஆரம்பித்தார். அதற்கான பிரதான கருவியாக அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பயன்படுத்தி இலங்கை அரசியலமைப்பையே ஆட்டம் காணும் தேசத்துரோகச் செயல்பாடுகளை மேற்கொண்டார்.

இவ்வாறான அரசியல் சதி நடவடிக்கைகளை மேற்கொண்ட மைத்திரி தனக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசியல் அமைப்புக்கு விரோதமாக கடந்த 2018 அக்டோபர் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலங்கையின் புதிய பிரதமராக நியமனம் செய்து புதிய அமைச்சரவையை ஸ்தாப்பித்தார். மைத்திரியின், மேற்படி அரசியல் அமைப்புக்கு எதிரான செயல்பாடுகளால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டது.

மைத்திரியின் செயல்பாடுகளை கண்டித்து இலங்கை தீவும் முழுதும் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய நிலையில் தனது சூழ்ச்சியினால் மைத்திரிபால பெரும் அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரியின் அரசியல் அமைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக இலங்கை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பயனாக விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து. விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என இலங்கை உயர் நீதிமன்றம் (மீயுயர் நீதிமன்றம்) தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் இலங்கையில் 2019 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டபாய ராஜபக்ஸ பெரும் வெற்றி அடைந்ததை அடுத்த மைத்திரி - ரணில் நல்லாட்சி முடிவுக்கு வந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தினரால் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியுடன் மைத்திரிபால தேர்தல் ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவின் வெற்றிக்காக, அவரும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடுமையாக உழைத்தனர்.

2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள், பௌத்த பேரினவாதம் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியன தேர்தல் பிரசாரத்தின் அதி முக்கிய கோஷங்களாக சிங்கள மக்கள் மனதில் பதியச் செய்யப்பட்டது. இந்த செயல்பாடுகளை மைத்திரியும் அவரின் சுதந்திரக் கட்சியினரும் வெகு கச்சிதமாக மேற்கொண்டு ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடி கொண்டனர்.

அத்துடன் கோட்டபாய தலைமையில் அமையவுள்ள அரசில் முக்கிய பதவிகளில் அமர்வதற்காக தீயாக வேலை செய்தனர். அம்முயற்சியின் பயனாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றனர். இந்த நிலையில் தான் பேராயர் கார்த்தினால் மல்கம் ரஞ்சித்தும் தென் இலங்கை மக்களும் இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னனியில் மாபெரும் சூழ்ச்சியொன்று உள்ளதாகவும் ஆட்சியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சம்பவமே இது என தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் கூக்குரல்கள் வானத்தை நோக்கி முழக்கமிடுகின்றன. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும் என முழுமையான நம்புகிறேன்” என்று பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

21ஆம் திகதி வியாழன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டின் நிறைவு தொடர்பில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த நினைவேந்தல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.