கலகத்தை அடக்க இராணுவத்தை கட்டவிழ்த்துவிடுவாரா காத்திருக்கும் கோட்டாபய?

வன்முறையாளரைத் துணைக்கழைத்த ஆளுங்கட்சியின் கலகம் அரசியல்வாதிகளின் தற்கொலை அவலத்தில் முடிவு

தீக்கிரையாகின ராஜபக்ஷ குடும்பத்தின் வீடுகள்
பதிப்பு: 2022 மே 09 22:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 11 23:06
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாட்களில் ஈழத்தமிழ்த் தேசம் மீது இன அழிப்புப் போரை நடாத்தியதாக ஈழத்தமிழர் தரப்புகளால் குற்றஞ்சுமத்தப்படும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத்தை அன்று வழிநடாத்திய பாதுகாப்புச் செயலரும் தற்போது முப்படைகளின் கட்டளைத் தளபதியாகவுமுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதே இராணுவத்தை, இன்று பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் உருவாகியுள்ள கலகத்தை அடக்குவதற்கு கட்டவிழ்த்து விடுவது எப்போது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கலகம் அவலமாகியதன் உடனடி விளைவு மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி துறப்பாகியது. மொட்டுக்கட்சியினரின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.
 
இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிடத் தயங்கத் தயங்க, மொட்டுக்கட்சியின் அரசியல்வாதிகள் மக்களால் விரட்டியடிக்கப்படுவதும், அதிலிருந்து கேவலமான சாவைத் தவிர்க்க தாமே தம்மைக் கொன்று இறக்கும் நிலையும் அவலங்களாக விரியும் நிலை தென்னிலங்கையில் உருவாகியுள்ளது

அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ஷவின் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு வெளியேறிய அவரது ஆதரவாளர்கள் 'மகிந்த வீட்டுக்குப் போ' என்று மாளிகைக்கு அருகில் இருந்த போராட்டக்காரர்களோடு கலகத்தில் ஈடுபட்டு, பின்னர் 'கோட்டா வீட்டுக்குப் போ' போராட்டத்தைக் குறி வைத்தபோதே கலகம் பெரிதாக வெடித்து அவலமாகியது.

வன்முறையாளர்கள் போராட்டக்காரர்கள் கையில் அகப்பட்டு அவலங்களைச் சந்தித்துள்ளனர். 'கோட்டா வீட்டுக்குப் போ' என்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொட்டகைகளும் குண்டர் குழுவினால் எரிக்கபட்டன. ஆனால், எதிர்வினை பாரதூரமாக இருந்தது.

ராஜபக்ஷ அரசியல்வாதிகள் போராடும் தென்னிலங்கைத் தரப்புகளைக் குறிவைத்து தெற்கில் இருந்து தருவிக்கப்பட்ட சீருடை அணியாத வன்முறைக்குழுக்களைக் களமிறக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு காற்றுத்தீ போலத் தென்னிலங்கை எங்கும் பரவியது. இதைத் தொடர்ந்தே வீடுகள் தீக்கிரையானதும், அரசியல்வாதிகள் குறிவைக்கப்பட்டதுமாகப் பல சம்பவங்கள் விரைவாக நடந்தேறின.

எனினும், 1971 ஆம் ஆண்டும் 1989 ஆம் ஆண்டும் தென்னிலங்கை கண்ட கலகங்களைப் போன்ற கடும் நிலை இன்னும் ஏற்படவில்லை. அந்தக் காலங்களில் இராணுவமும் காவற்துறையும் சிங்கள மக்களுக்கு எதிராக மிகக் கடுமையாக நடந்து, பல கொலைகள் ஊடாக, ஆட்சியாளரைக் காப்பாற்றியிருந்தன.

தற்போது, தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தை வளர்த்து, வடக்கு கிழக்கில் அடக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் கட்டவிழ்த்துவிட்ட அனுபவத்துடன் இருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது இருப்பைப் பாதுகாப்பதற்கு இறுதி வழியாக இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிடுவதா அல்லது மாற்றங்களுக்கு உடன்படுவதா என்ற விஷப்பரீட்சையை எதிர்கொள்கிறார்.

போராட்டக்காரர் மீது குண்டர்களைக் கட்டவிழ்த்து விட்டால் பதிலுக்கு அவலமே விளையும் என்பதைத் திங்களன்று நடந்தேறியுள்ள சம்பவங்கள் நிரூபித்துள்ளன.

குண்டர்களுக்குப் பதிலாக, சிங்கள இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டால், அதற்கு முன்னால் இருக்கும் விஷப்பரீட்சைத் தெரிவு, மீண்டும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதா, அன்றேல் தமது இன மக்களோடு இணைந்து ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அவர்களை அண்டிய அரசியல்வாதிகளை விரட்டுவதா என்பதே.

மேலும் கலகங்கள் ஏற்பட்டால், அத்தருணத்தில் சிங்களப் பெரும்பான்மை இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட கோட்டாபய தயங்கினால், மொட்டுக்கட்சியின் அரசியல்வாதிகள் மக்களால் விரட்டியடிக்கப்படுவதும், அதிலிருந்து கேவலமான சாவைத் தவிர்க்க தாமே தம்மைக் கொன்று இறக்கும் நிலையும் அவலங்களாக விரியும் நிலை தென்னிலங்கையில் மேலும் எழலாம்.

திங்களன்று நடைபெற்ற கலகத்தினால் முழு உலகமும், உக்ரெயுனுக்கும் ரஷியாவுக்கும் அடுத்ததாக இலங்கையை உற்று நோக்கும் சூழல் தோன்றியுள்ளது.

உலகசக்திகளின் உடந்தையோடு பதின்மூன்று வருடங்களுக்கு முன் தமிழர் தரப்பைத் துவம்சம் செய்த கோட்டாபய இன்று அதே இராணுவத்தின் துணையோடு ஆட்சியில் நீடிப்பதா அல்லது தனது ஆதரவாளர்களோடு இணைந்து தானும் விரட்டியடிக்கப்படுவதா என்ற தெரிவுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்
ஆக, உலகசக்திகளின் உடந்தையோடு பதின்மூன்று வருடங்களுக்கு முன் தமிழர் தரப்பைத் துவம்சம் செய்த கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதே இராணுவத்தின் துணையோடு ஆட்சியில் நீடிப்பதா அல்லது தனது ஆதரவாளர்களோடு இணைந்து தானும் விரட்டியடிக்கப்படுவதா என்ற தெரிவுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்.

இலங்கையைக் கையாள விழையும் உலக சக்திகள், குறிப்பாக மேற்குலகமும் இந்தியாவும், தமது கட்டை மீறி நிலைமை போய்விடக்கூடாது என்ற பார்வையில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கும் அதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களைக் கோர வைக்கும் யதார்த்த அரசியலையே போராட்டக்காரர்கள் குறித்து முன்வைத்துவருகின்றன.

திங்களன்று ஏற்பட்ட கலகத்தையும் அவலத்தையும் அவதானித்தபின், தீவில் தாம் கண்காணித்து இயங்கும் வேகத்துக்கும் அப்பால் நிலைமை கட்டுக்கு அடங்காமற் செல்லும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து, அடுத்ததாக எந்தத் தெரிவுகளை அவை மேற்கொள்ளவுள்ளன என்பதை விரைவாக வெளிப்படுத்தவேண்டிய சூழ் நிலையும் உலக மற்றும் பிராந்திய வல்லாதிக்கங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா தனியாகவா, அல்லது முன்போலவே மேற்கோடு இணைந்தா இலங்கை தொடர்பான தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்பது மேலும் தெளிவாக விரைவில் தெரியவரும்.

அதேவேளை, ஈழத்தமிழர்கள் 13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர்கள் ஒன்றிணைந்து தென்னிலங்கைக்கு முன்வைக்கும் நிபந்தனைகள் என்ன, உலகப் பரப்புக்குச் சொல்லும் செய்தி என்ன என்பது இந்தத் தருணத்தில் முக்கியமாகிறது.

இதற்கிடையில், மொட்டுக் குழாத்தின் நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் வீடுகள் சூறையாடப்படும் நிலை தோன்றிவிட்டது. ராஜபக்ஷ குடும்பத்தின் பழம்பெரும் வீடுகள் அம்பாந்தோட்டையிலும் குருணாகலையிலும் தீக்கிரையாகின.

ராஜபக்ஷ குடும்பத்தின் நட்பு அரசியல்வாதிகள் விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லவிடாது தடுக்கும் காவல் நிலைகளைக் கூட போராட்டக்காரர்கள் திங்கட்கிழமை நிறுவினார்கள். இந்த நிலையிலேயே மட்டுப்படுத்தப்பட்ட இராணுவக் குவிப்பை கோட்டபாய ராஜபக்ஷ திங்கள் இரவு மேற்கொண்டிருப்பது தெரிகிறது.

அவல நிலைமை தோன்றினாலும், நிலைமை கட்டுக்கடங்காது போய்விடவில்லை என்பதையே கோட்டபாய மேற்கொண்டிருக்கும் தெரிவு திங்கள் இரவு வரை சொல்லிநிற்கும் செய்தி.

சிங்கள இராணுவமாக விளங்கும் இலங்கைப் படைகளுக்கு இருக்கும் விஷப்பரீட்சை, 1971 இலும் 1989 இலும் ஒற்றையாட்சியைக் காப்பாற்றிக்கொடுத்த சேவையை அவை மீண்டும் செய்துகொடுக்குமா என்பதே.

இலங்கைத்தீவில் விரியும் ஒவ்வொரு சம்பவத்தையும் விடுப்புச் செய்தியாகப் பார்ப்பதற்கு அப்பால், தற்போதைய களநிலைமை தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன என்பதை பதின்மூன்று வருட அசைபோடல் ஊடாக சீரணமாக்கி ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை விரியவேண்டும்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை மெதமுன பிரதேசத்தில் உள்ள பாராம்பரிய வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வீட்டை எரிப்பதற்குற் சென்ற இஞைர்குழுக்களை பொலிஸாரால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ குடும்பம் கொழும்பில் தங்கியிருக்கும் நிலையில் பாரம்பரிய வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள வீடும் எரியூட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, டி.பி சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத், ரமேஷ் பத்திரண, திஸ்ஸ குட்டியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாந்த பண்டார, அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகளும் அவர்களின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏறத்தாழ முப்பத்தைந்து பேரின் வீடுகள் தீக்கிரையானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரே அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் துரத்திச் சென்றபோதே அவர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கொழும்பு காலிமுகத்திடலில் திங்கள் நள்ளிரவு முதல் இராணுவம் குவிக்கக்பட்டு சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தீவு தழுவிய ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் மாலை மீண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை மீள ஆரம்பித்திருந்த நிலையில், இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழர்கள் அதிமாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்பிட்டி மற்றும் தெகிவளைப் பிரதேசங்களில் பொலிஸாரும் இரரணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொள்பிட்டியில் உள்ள அலரி மாளிகை முன்பாகவுள்ள காலிவீதியில் திங்கள் நள்ளிரவு வரை போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அலரி மாளிகைக்குள் இருந்த கட்டம் ஒன்றிலும் தீ பற்றியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உரிய முறையில் பொலிஸார் ஊடகங்களுக்குக் கருத்துக்கூறத் தயங்குவதாகக் கொழும்பில் உள்ள செய்தியாளர்கள் கூறியிருந்தனர்.