தென் இலங்கையின் மகாவம்ச சிந்தனையினால் உந்தப்படுகின்ற

சிங்கள பௌத்த தேசத்துக்குள் எழும் மோதல்கள், ஒற்றையாட்சி மரபின் தொடர்ச்சிக்கு உரமூட்டுகின்றன

ஈழத்தமிழர் விவகாரத்தைத் திசை திருப்ப காலத்துக்குக் காலம் சந்தர்ப்பங்களைப் பன்படுத்தும் தலைவர்கள்
பதிப்பு: 2022 மே 13 13:57
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 09:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் அதிகளவு பேசப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், சிங்கள பௌத்த தேசம் ஏதோவொரு வகையில் தன்னை மீளக் கட்டமைக்கின்றது. பௌத்த தேசிய அரசியல் தலைவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் விடயத்தில் உடன்பாடாகிவிடுகின்றனர் என்பதற்கு கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்றமை மாத்திரம் உதாரணமல்ல. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமான காலத்தில் இருந்து அந்த உதாரணங்களைக் காணலாம்.
 
சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்கள் தீவிரமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அல்லது சர்வதேச அரங்கில் சூடு பிடிக்கவுள்ள நிலையில், தமக்குள் மோதுப்பட்டுப் பின்னர் ஒரு புள்ளிக்கு வந்துவிடுவர்

இலங்கைத்தீவில் காலத்துக்குக் காலம் எழுகின்ற அரசியல் - பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வுகளுக்கு எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையே மூல காரணம்.

ஆனால் இந்த மூல காரணம் ஏற்க மறுக்கப்பட்டு, இலங்கை மக்களின் ஜனநாயகப் பிரச்சினை, மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரங்களாகச் சுருக்கப்பட்டுப் பின்னர் பௌத்த தேசியவாதத்தை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டு விடுகின்றமை வரலாறு.

கோட்டாபய வீட்டுக்குப் போ என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்களில் கண்டியை மையப்படுத்திய மூன்று மகாநாயக்க தேரர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பிய கடித்தில்கூட கோட்டாபய பதவி விலக வேண்டுமெனக் கோரப்படவில்லை.

மாறாகப் பொருளாதார நெருக்கடிக்கு இணைந்து தீர்வைக் காணுங்கள் என்றே கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆகவே அதனடிப்படையிலேயே, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.

மகாநாயக்க தேரர்களின் கடிதத்தின் அடிப்படையிலேயே இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பரிந்துரை ஒன்றை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் தயாரித்திருந்தது.

அந்தப் பரிந்துரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எதுவுமே முன் மொழியப்படவில்லை. மாறாக ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குரிய பரிந்துரைகள் மாத்திரமே விதந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆகவே 1958 இல் கொழும்பில் ஈழத்தமிழின அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், 2009 இறுதிப் போரும், அந்தப் போரின் பின்னரான பதின்மூன்று வருட கால அரசியல் சூழலிலும், சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்குள் அவ்வப்போது ஏற்படுகின்ற மோதல்கள், தமக்கெதிரான சிங்கள மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்குள் சிக்குப்பட்டாலும், மகாநாயக்க தேரர்கள் அனுப்பும் ஒரு கடிதத்தோடு முரண்பாட்டில் உடன்பாடாக இணக்க அரசியலுக்குள் வந்துவிடுவர்.

அந்த முரண்பாட்டில் ஓர் உடன்பாட்டு அரசியல்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றமை. அத்துடன் அமெரிக்க - இந்திய மற்றும் சீனப் புவிசார் அரசியல் போட்டிகளும் பௌத்த தேசியவாத அரசியல் சிந்தனைகளின் போக்குக்கு ஏற்பவே, ஆதரவை வழங்கித் தமக்குரிய தேவைகளையும் பெற்றுக் கொள்ளுகின்றன.

கோட்டாவுக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஜனநாயகப் போராட்டங்களை அடக்க முற்படக்கூடாது என்றே அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டது. கண்டனமும் வெளியிட்டது.

இந்தப் போக்கிலேயே தமிழ் தன்னார்வ நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் சில தமிழர்களும், வடக்குக் கிழக்கில் உள்ள புவிசார் சமூகங்களுக்குப் போதனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

மக்களின் எண்ண ஓட்டங்களை மையமாக் கொண்டு அதனைத் தனக்குச் சாதகமாக்கி வெற்றி பெறுகின்ற சிங்கள ஆட்சியாளர் ஒருவர், தான் வெற்றிபெற்ற பின்னர், மக்களின் கோபத்துக்கு உள்ளாகித் தோல்வி கண்ட ஆட்சியாளரை விசாரணை என்ற போர்வையில் காப்பாற்றி விடுகின்றார்

ஆனால் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்றொரு வார்த்தை தூதரக அறிக்கைகளில் இல்லை. ஏனெனில் சிங்கள ஆட்சியாளர்கள், தமது உள்ளக மோதல்களை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனத் தூதரகங்கள் காத்திருப்பரே தவிர, தமது புவிசார் அரசியல் - பொருளாதாரத் தேவைகளை எப்படியும் எந்தவொரு சிங்களத் தலைவரிடமும் பெற்றுவிடலாமென அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இலகுவாக நம்புகின்றன.

அவர்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவை சிங்கள இராமன் ஆண்டாலென்ன, சிங்கள இராவணன் ஆண்டாலென்ன எல்லாமே ஒன்றுதான்.

மக்களின் எண்ண ஓட்டங்களை மையமாக் கொண்டு அதனைத் தனக்குச் சாதகமாக்கி வெற்றி பெறுகின்ற சிங்கள ஆட்சியாளர் ஒருவர், தான் வெற்றிபெற்ற பின்னர், மக்களின் கோபத்துக்கு உள்ளாகித் தோல்வி கண்ட ஆட்சியாளரை விசாரணை என்ற போர்வையில் காப்பாற்றி விடுகின்றார்.

17 வருட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள், ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவற்றை விசாரணை செய்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று மார்தட்டி 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரிகா, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்றும் உறுதியளித்திருந்தார்.

ஆனால் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்று, ஆறு மாதங்களில் மீண்டும் போர் ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட படுகொலைகள், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேயில்லை.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடனேயே மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான பதினொரு ஆண்டுகால ஆட்சியில் சந்திரிகா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தவேயில்லை.

மாறாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது, இன அழிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. யாழ் செம்மணியில் அறுநூற்றுக்கும் அதிகமான தமிழ், இளைஞர்கள், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர். நவாலித் தேவாலயத்தில் விமானக் குண்டு வீசப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கிழக்கில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரங்கேறின. அங்கு கொலைகளும் நடந்தன.

இதுதான் வரலாறு. பின்னர் அடுத்த அரசியல் சுற்று எப்படி ஆரம்பித்தது என்றால், ஐக்கிய தேசியக் கட்சி தன்னை மீளவும் புதுப்பித்துத் தமிழ் மக்களின் மீட்பராகவும், சிங்கள மக்களின் புதிய ஆட்சியாளர்களாகவும் தன்னை வெளிப்படுத்தியது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்துச் சிறிய கட்சிகளையும் உள்ளடக்கி ஐக்கிய தேசிய முன்னணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக மாறியது.

ஆனால் சந்திரிகா தொடர்ந்தும் ஐனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார். நோர்வேயின் சமாதான ஏற்பாட்டு முயற்சி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோதுதான் 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே நோர்வேயின் ஏற்பாட்டுடன் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.

கொழும்பில் சிங்கள பௌத்ததேசிய இனவாத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகள், முரண்பாடுகள், இழுபறிகள் போன்றவற்றுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடைக்கால நிர்வாகத்துக்கான பரிந்துரை ஒன்றை 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் கையளித்திருந்தனர்.

அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்து பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை சந்திரிகா தன்வசப்படுத்திக் கொழும்பில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால் ரணில் அரசாங்கம் கவிழும் நிலைமைக்கு வந்தது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் பொதுத் தேர்தல நடத்தப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

இலங்கைத்தீவில் காலத்துக்குக் காலம் எழுகின்ற அரசியல் - பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வுகளுக்கு எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையே மூல காரணம். ஆனால் இந்த மூல காரணம் ஏற்க மறுக்கப்பட்டு, இலங்கை மக்களின் ஜனநாயகப் பிரச்சினை, மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரங்களாகச் சுருக்கப்படுகின்றன

ஆனால் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக மாறியது. சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.

நோர்வேயின் ஏற்பாட்டுடன் பேச்சுவர்த்தை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் கரையோர மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழர் தாயகப் பகுதிகளில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நோர்வே முயற்சி எடுத்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் அந்தப் பொதுக் கட்டமைப்புக்கு உதவியளிக்க முன்வந்தன.

ஆனால் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட சிங்கள அரசியல் கட்சிகள், பௌத்த குருமார் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் எதிர்ப்பைக் காரணம் காண்பித்துச் சந்திரிகாவும் பொதுக் கட்டமைப்புச் செயற்படுத்த மறுத்துவிட்டார். அதற்கு முன்னரே நிதி வழங்கும் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதும், பௌத்த இனவாதச் செயற்பாடுகள் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் மேலும் சூடுபிடித்தன.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் பின்னரான சூழலில், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், போரில் ஈடுபட்டு இன அழிப்புக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இது பௌத்த தேசியவாதத்தை இன அழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து சர்வதேச அரங்கில் காப்பாற்றும் செயலாகவே அன்று ஈழத்தமிழர்களினால் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் விரும்பியோ விரும்பாமலோ சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஒன்றும் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்பட்டது.

2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெதுச் செயலாளராகப பதவி வகித்தவரும், இறுதிப் போர்க்காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றார்கள்.

இதே ஆண்டுதான் ஜெனிவா மனித உரிமைச் சபையில், ஈழத்தமிழர்கள் பற்றிய இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானத்துக்கு இலங்கை அனுசரணை வழங்கியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியது. அதாவது இன அழிப்புப் பற்றிய பேச்சுகள் சர்வதேச அரங்கில் இருந்து நீக்கம் செய்யும் சூழ்ச்சிகள் இடம்பெற்றன. ஈழத்தமிழர் விவகாரம் இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக மட்டும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி எவருக்குமே தெரியாமல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்குப் பிரதமர் பதவியை வழங்கினார் மைத்திரிபால சிறிசேன. அந்த அரசியல் நெருக்கடி இழுபறி 52 நாட்கள் சென்றன. இதனால் ஈழத்தமிழர்களின் நிரந்த அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் எதுவும் கலந்துரையாடப்படவில்லை.

மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்ற உணர்வோடு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக்க அவரோ, 2018 இல் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அழைத்துப் பிரதமர் பதவி கொடுத்து பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார்.

இச் செயற்பாடுகள்தான், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கோட்டாபய ராஜபசக்ச வெற்றிபெற வசதியாகவும் அமைந்தது. ஜனாதிபதியாக அனுராதபுரம் விகாரையில் கோட்டாபய பதவியேற்றார்.

பாதுகாப்புச் செயலாளராக இருந்து போரை நடத்தித் தமிழர்களை வெற்றி கொண்டவர் என்ற பிரச்சாரத்துடன், 69 இலட்சம் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் எவருக்குமே அமைச்சுப் பதவியை வழங்கவில்லை.

இந்தவொரு சூழலில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்மைபச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதற்கு முன்னதாக ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடிக்குக கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு 13 தீர்வல்ல என்று வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்கனவே நிராகரித்தபோதும், அது பற்றிக்கூட எதுவுமே பேசாதவொரு நிலையில். தமிழ்த்தேசியக் கூட்டமைமைப்புடனான சந்திப்பு முடிவடைந்து ஒரு வாரத்துக்குள் பொருளாதார நெருக்கடிப் பிரச்சினைகள் எழுந்தன.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய நட்புடையவர்

மக்கள் போராட்டம் ஆரம்பமானது. மகிந்த ராஜபக்ச பதவி விலகியதொரு நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்கள் தீவிரமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அல்லது சர்வதேச அரங்கில் சூடு பிடிக்கவுள்ள நிலையில், தமக்குள் மோதுப்பட்டுப் பின்னர் ஒரு புள்ளிக்கு வந்துவிடுவர்.

இவர்கள் மோதுப்படும் காலத்தில் ஈழத்தமிழர் விவாகரம் திட்டமிட்டுத் திசை திருப்பப்படுகின்றன. மூடிமறைக்கப்படுகின்றன. பௌத்ததேசிய அரசியல் பின்னணிக்குள் அவ்வப்போது எழுகின்ற முரண்பாடுகள், மோதல்கள் ஆகியவற்றின் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பாதுகாப்பும் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய நட்புடையவர். அமெரிக்க - இந்தியா -சீன போன்ற நாடுகளைச் சமமாகக் கையாள வேண்டுமென 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி எனக்கூறப்பட்ட அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.