பொருண்மிய நெருக்கடி, அந்நியச் செலாவணி சிக்கலால் அத்தியாவசிய மருந்துக்கையிருப்பில் பெரும் பின்னடைவு

இந்தியத் தூதரக, புலம்பெயர் உதவியின் மத்தியிலும் யாழ் வைத்தியசாலையின் மருந்துக்கையிருப்பு ஊசலாட்டம்

நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுமென பணிப்பாளர் உருக்கமான வேண்டுகோள்
பதிப்பு: 2022 ஜூன் 09 10:59
புதுப்பிப்பு: ஜூன் 09 18:33
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத் தீவைக் கடுமையாகத் தாக்கியுள்ள பொருண்மிய நெருக்கடிக்குள், குறிப்பாக மருந்துக்கொள்வனவுக்கான அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டின் மத்தியில், இந்திய தூதரகத்தின் ஊடான உதவியூடாக ஓரளவு மருந்துவகைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையோடும், புலம்பெயர்ந்துவாழும் கொடைக்குணமுள்ளோரின் உதவியோடு தீவுக்குள்ளேயே அடிப்படைத் தேவைக்கான கையிருப்புகளைக் கொள்வனவு செய்தும், தனது அடிப்படை மருந்துக் கையிருப்பை யாழ் போதனா வைத்தியசாலை மயிரிழையில் சமாளித்துவருகிறது. மாத அடிப்படையில் அன்றி வாராந்த அடிப்படையில் கையிருப்பை இதுவரை நுட்பமாகக் கையாண்டு வந்த போதிலும் பெருத்த சவாலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரை கூர்மை தொடர்பு கொண்டபோது அவர் விரிவாக எடுத்தியம்பினார்.
 
Nanthakumar
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே நந்தகுமார்
இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சு ஊடாகவே பணிப்பாளர் நந்தகுமார் தனது தொடர்புகளைக் கையாண்டபோதும், அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் ஆட்சியினர் என்று அனைத்து மட்டங்களுக்கும் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கும் அவ்வப்போது நிலைமைகள் நேரடியாக அறிவிக்கப்பட்டுவருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூர்மை ஆசிரியபீடத்திற்கு ஏற்கனவே தெரிவித்திருந்த சூழலிலேயே பணிப்பாளருடன் கூர்மை தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசின் சுகாதார அமைச்சின் பொறுப்பு என்ன என்பதற்கு அப்பால், ஈழத்தமிழர் அரசியற் தரப்புகள், மற்றும் சமூக மட்டத்திலான முன்னெடுப்புகள், புலம்பெயர் வட்டார நடவடிக்கைகள், குறிப்பாக எண்பது மில்லியன் தமிழர்கள் கொண்ட தமிழ்நாடு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வாறுள்ளன என்பவற்றை ஈழத்தமிழர் ஊடக வட்டாரங்கள் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன.

பணிப்பாளர் நந்தகுமாரின் கட்டளைக்குக் கீழ் இயங்கும் மூன்று துறை சார் சிறப்பு வைத்திய நிபுணர்கள் அவசர மருந்துக் கையிருப்புத் தொடர்பாக அமைச்சுக்கும் அப்பால், மக்கள் சமூகத்தின் உதவியையும் நாடியுள்ளார்கள்.

இந்தியாவிலிருக்கும் சில முக்கியமான மருந்துக் கொள்வனவு நிறுவனங்கள் ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை அனுப்பிவைக்கும் உரிமையைப் பெற்றிருப்பதாகவும், இதனால் தமிழ்நாடு உள்ளடங்கலாக இந்தியாவிலிருக்கும் எந்த நன்கொடைத் தரப்பு முன்வந்தாலும் பணத்தை அங்குள்ள கொள்வனவு நிலையத்துக்கு நேரடியாகவே நன்கொடையாக வைப்பிலிட்டால் வேண்டிய மருந்துகள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எதுவித இராஜதந்திர தடங்கலோ தாமதமோ இன்றி வந்தடைய வாய்ப்பு உள்ளதாகத் தமிழ் அரசியற் தரப்புகளுக்கு வைத்தியசாலை வட்டாரங்கள் முற்கூட்டியே அறிவுறுத்தியிருந்தன.

இதற்கு இந்தியத் தூதரகம் வேண்டிய ஒழுங்குகளை இலங்கை அமைச்சினூடாக ஏற்படுத்தித் தந்திருப்பதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரியப்படுத்தியிருந்தன. இருந்தபோதும், இந்தியாவிலிருந்து எந்தவித தனியார் நன்கொடையும் இதுவரை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவரவில்லை.

எனினும், பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரைக் கூர்மை நேரடியாகத் தொடர்பு கொண்ட போது, இந்தியத் தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கையூடாக சில அடிப்படை மருந்துக்கையிருப்புகள் பொருளாதார நெருக்கடிகாலத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

Akshayapatra
இரண்டு ட்ரக் வாகனங்களில் 05 ஆம் திகதியன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட இந்திய மருத்துவ உதவியை வட மாகாணத்துக்கான "அக்ஷயபாத்ர" உதவி என இந்திய துணைத் தூதரகம் விபரித்துள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தவற விடப்படாத இந்தியக் கொடியைக் காண்க.

அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் நிலைமையை அறியத்தந்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்திய அதேவேளை, அரசியல் மற்றும் சமூக மட்டத்திலான முன்னெடுப்புகள் பற்றி அவர் எதையும் சிலாகித்துச் சொல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள சில நன்கொடையாளரின் முயற்சியைப் பற்றியும் இந்தியத் தூதரகத்தின் ஊடாகக் கிடைத்த உதவி பற்றியும் அவர் குறிப்பிட்டார். தென்னிலங்கை வைத்தியசாலைகள் தமது வைத்தியசாலைக்கு சில அவசர மருந்துகளை அவ்வப்போது பங்கிட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

India's Akshayapatra medical assistance to North
இந்திய வடமொழி "அக்ஷயபாத்ர" உதவி வடமாகாணம் நோக்கியும், இலங்கை முழுவதை நோக்கிய தமிழ் நாடு அரசின் உதவி உணவுப்பொதிகளில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக, ஒட்டுமொத்த "இந்திய உதவிப் பரப்புரை" ஆக்கியுள்ள விந்தையில் ஒரு சமூகவலைத்தளச் செய்திக்காட்சி
''ஒரு மாதத்துக்குரிய அத்தியாவசிய மருந்துக் கையிருப்புக்கான ஒழுங்குகளைச் செய்து தருமாறு இந்திய உயர் ஸ்தானிகத்தின் உதவியை நாடியிருந்தோம். இந்த வகையில் சில மருந்துகளை அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவை வந்தடைந்துள்ளன. இருப்பினும் தேவைக்குரிய அளவு தொடர்ச்சியாக அவை அமைச்சின் ஊடாக வழங்கப்படுமா என்ற விபரங்கள் எமக்குத் தெரியவில்லை,'' என்றார் அவர்.

அமைச்சின் பட்டியலில் மருந்துகள் தீர்ந்துபோயுள்ளன. இருப்பவற்றை மாற்றிப் பிரித்துக்கொடுப்பதற்கு அமைச்சு தன்னால் இயன்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

வடமாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர மற்றும் அடிப்படைச் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், இறுதிக்கட்டத்தில் நோயாளர்கள் மாற்றம் செய்யப்படும் நிலையமாக, யாழ். போதனா வைத்தியசாலையே விளங்குகிறது.

திங்களன்று நாய்கடி மருந்து தீர்ந்துவிட்ட நிலையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ஒரு குறிப்பிட்ட வகை மருந்தைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அந்த மருந்தின்றி அவர் காப்பாற்றப்படுவது சிரமம் என்ற நிலையில் உடனடியாக அமைச்சுடன் தொடர்புகொண்டபோது, பொலநறுவைக்கு ஆம்புலன்ஸ் வண்டியை அனுப்பி அந்த மருந்தைப் பெறுவதற்கான நகர்வு மேற்கொள்ளப்பட்டு, செவ்வாயன்று குறித்த மருந்து விரைவாகக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Indo-Sri Lanka Friendship
"இந்திய-இலங்கை நட்புறவு" குறியீட்டு வெளிப்படுத்தலை, கைகளை விட்டுக் கத்தியை நோக்கினால், ''வரலாற்றைப் புரியாத புனைவாகவும்'' விளக்கம் கொள்ளலாம்.
''ரேபிஸ் தொற்று உடலில் பரவினால் இறப்பு நிச்சயம் என்பது போன்ற சூழலில், இவ்வாறு உயிர்காக்கும் மருந்துகள் கூட தட்டுப்பாடான நிலைக்கு வரும் சூழல் தோன்றியுள்ளது. ஏற்கனவே குருநாகல் வைத்தியசாலையில் இருந்தும் பெற்றுக்கொண்டிருந்தோம். இவ்வாறு, கையிருப்பை நாங்கள் கையாண்டு வந்தபோதும் திங்களன்று கையிருப்பு முடியும் நிலை ஏற்பட்டது. அந்த வைத்தியசாலைகளும் தமது குறைந்த பட்சக் கையிருப்பை உறுதிப்படுத்திய பின்னரே எமக்கும் தந்துதவ இயலும்.''

இதுவரை எவரும் மருந்துத் தட்டுப்பாட்டினால் உயிரிழக்காது நிர்வாகம் தன்னாலியன்ற முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.

இருந்தபோதும், விசர் நாய்க்கடி போன்ற நிலைமையைத் தவிர்ப்பதற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையும் விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் தற்போது ஏற்படவேண்டும் என்றார் யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர்.

ஏற்பட்டிருக்கும் மருந்துக் கையிருப்புச் சவாலைச் சமாளிப்பதற்கு உரிய உயர்மட்ட ஒழுங்குகள் சீர்செய்யப்படும் வரை மாதாந்த வாரியாக கையாளப்படும் மருந்துக் கையிருப்புகளைத் தற்போது வாராந்த அடிப்படையில் நுட்பமாகக் கையாளப்படவேண்டிய நிலை தமது நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளதாக நந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

Tamil Nadu relief supplies
தமிழ்நாட்டு மக்களின் உதவி இலங்கைத் தீவு முழுவதற்குமான ஒரு குறியீட்டு உதவி ஆகியது
மருந்துகளின் கையிருப்பு பெரும் சவாலாக இருப்பதால், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் நன்கொடையாளர்களின் உதவியோடு சில மருந்துகளை தீவுக்குள்ளேயே வேறிடங்களில் இருந்து கொள்வனவு செய்யவேண்டியுள்ளது.

''வெளிநாடுகளில் இருந்து தீவுக்கு வந்துள்ள சிலர் மனமுவந்து மருந்துகளை வாங்க முயன்றாலும் அவ்வுதவிகள் மூலம் வைத்தியசாலையின் தேவைக்குரிய அளவு கையிருப்பை தீவுக்கு உள்ளிருந்தவாறு சீர்செய்வது இயலாது,'' என்றார் அவர். எனினும், அவ்வாறான உதவிகள் தமது கையிருப்பை ஓரளவுக்காவது உறுதிப்படுத்த இதுவரை உதவியாக இருந்ததைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினர்.

எல்லாவிதமான தடுப்பூசிகளையும் வெளியே பெற்றுக்கொள்ள இயலாது. சில தடுப்பூசிகளைப் பேணுவதற்கான முறை தனியார் நிறுவனங்களிடம் இருக்காது. இவ்வாறு பலவிதமான சிக்கல்கள் உண்டு. இதனால், அமைச்சின் ஊடாகவே சில அடிப்படை மருந்துகளின் கையிருப்பு சீர்செய்யப்படவேண்டும்.

தீவு முழுவதும் ஒரே விதமான நெருக்கடியே நிலவுவதால் அவ்வாறு சமூக ரீதியிலான உதவிகள் ஊடாகக் கொள்வனவு செய்வது இயலாத கைங்கரியமாகிவிட்டால், நிலைமை மேலும் கவலைக்கிடமாகும் என்ற அச்சத்தையும் பணிப்பாளர் நந்தகுமார் கூர்மை செய்தித்தளத்துக்கு வெளியிட்டார்.

Tamil Nadu relief supplies
"தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்," என்று இந்திய அரசு ஊடாக இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கியுள்ள உணவுப்பொருட்பொதிகளில் தமிழ்நாடு மாநில அரசின் இலச்சினையும் இந்திய அரச இலச்சினையும் பொறிக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் எங்கிருந்து வரும் பொதி என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கும் மேல் இந்தியக் கொடியையும் சேர்த்துப் பொறித்த கடதாசித் துண்டுகளும் ஒட்டப்பட்டுள்ளன.

''இதுவரை கிடைத்துள்ளவற்றுக்கு அப்பால், எவை தேவையோ அவற்றைப் பெறுவதற்கான மீளாய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.''

போதனா வைத்தியசாலையின் சிகிச்சையகத்தில் (clinic) வெளிநோயாளர்களுக்கு பொதுவாக இரண்டு மாதங்களுக்குரிய மருந்துகளை வழங்குவது வழக்கம் என்றும், தற்போது அந்த வழங்கலை ஒரு மாதமாக மட்டுப்படுத்தவேண்டிய நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''அனைவருக்கும் ஓரளவாவது மருந்துகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது செயற்படவேண்டியுள்ளது.''

மருந்துகளுக்கு அப்பாலும் சிக்கல்கள் உண்டு.

இதுவரை நோயாளர்களுக்கான உணவு விநியோகத்தில் குறைப்புகள் மேற்கொள்ளப்படாது அமைச்சின் வழங்கல் அமைந்திருக்கிறது. எனினும், எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்கனவே தமது நிர்வாகம் உணர்ந்திருப்பதாக நந்தகுமார் தெரிவித்தார். மிகுந்த சவால்களின் மத்தியிலேயே பணியாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து செல்கிறார்கள் என்பதையும் அவர் குறிப்பாக நினைவூட்டினார்.

அவசர சத்திர சிகிச்சைகளுக்கான மருந்து வகைகள், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, வயிற்றோட்டம், வலிப்பு நோய் மற்றும் வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான மருந்து வகைகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வலி நிவாரண மருந்துகள், ரேபிஸ் போன்ற உயிர் ஆபத்து ஏற்படுத்தும் நோய்களுக்கான தடுப்பூசிகள், மற்றும் உயிர் காக்கும் அவசர மருந்து வகைகள் ஆகியன தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் யாழ் போதனா வைத்தியசாலையின் சில செயல்பாடுகள் முற்றாகச் செயலிழக்கும் அபாய நிலை உருவாகும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் யாழ் போதனா வைத்தியசாலை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வட மாகாணத்தில் உள்ள அதியுயர் போதனா வைத்தியசாலையாகும்.

நாளாந்தம் எண்ணூறு தொடக்கம் ஆயிரம் பேர் வரை இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு சிகிச்சைக்காக வருகை தரும் நிலையில், வட மாகாணத்தில் வேறு வைத்தியசாலைகளில் இல்லாத நவீன வைத்திய வசதிகள் இந்த வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ளன.

நாற்பது நோயாளர் விடுதிகளைக் கொண்ட குறித்த வைத்தியசாலை ஆயிரத்து முந்நூறு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் உள்ள நாற்பது விடுதிகளிலும், எவ்வேளையும் சராசரி தொளாயிரம் பேரில் இருந்து ஆயிரம் வரையான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தற்பொழுது தலைதூக்கியுள்ள மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்களுக்கான பற்றாக்குறை அங்கு வருகை தரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான செயற்பாடுகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை உட்பட இலங்கையின் முன்னனி வைத்தியசாலைகளுக்குத் தேவையான அனைத்து மருந்து வகைகளும், வைத்திய உபகரணங்களும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலையில் இருந்தே இதுவரை காலமும் அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் இன்மை காரணமாக இலங்கை வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை சுகாதார அமைச்சினால் இறக்குமதி செய்து கொழும்பில் உள்ள தமது பிரதான களஞ்சியசாலை ஊடாக விநியோகிக்க முடியாத கையறு நிலையை ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவினால் நடாத்தப்படும் குறித்த களஞ்சியசாலையில் போதிய மருந்து வகைகள் இல்லாததினால் யாழ்ப்பாணம் போன்று அதிக மக்கள் வாழும் பெரும் நகரங்களில் இயங்கிவரும் பல போதனா வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து வகைகளைச் சரிவர விநியோகிக்க முடியாது இலங்கை அரசின் சுகாதார அமைச்சு திணறி வருவதாக கொழும்புத் தகவல்கள் கூர்மைக்கு தெரிவிக்கின்றன.

இவ்வாறான தருணத்திலேயே இலங்கையின் தமிழர் பகுதியான வட மாகாணத்தின் மிகப் பெரும் வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையானது வரலாற்றில் முதல் தடவையாக பாரிய மருந்து தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளதை அவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.