இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்

ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இந்திய எதிர்ப்பு

மின் சக்தி எரி சக்தித் திட்டத்தை அதானி குழுமத்திடம் கையளிப்பதற்குக் கடும் விமர்சனம்
பதிப்பு: 2022 ஜூன் 13 22:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 13:53
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் நலன்களைப் பெறும் திட்டங்களையே செயற்படுத்த முற்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கைத்தீவில் மின் சக்தி எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் கையளிக்கும் யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் அதானி நிறுவனம் தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சி முன்வைக்கும் விமர்சனம், இந்தியாவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியைப் பகிரங்கப்படுத்துகின்றது.


 

தமிழர் தாயகத்தின் மன்னார் மாவட்டம் மற்றும் யாழ் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் அதானி குழுமத்திடம் கற்றாலைத் திட்டத்தைக் கைளிக்கும் யோசனைக்கும் சிங்கள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன

சஜித் அணியோடு சேர்ந்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்தும், இந்தியா தொடர்பான அவதானத்தை மீள் பிரிசீலனை செய்ய வேண்டும் என்ற தொனியில் அமைந்திருந்தது. மின்சக்தித் திட்டங்கள் குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் பலர், அதானி நிறுவனம் தொடர்பான தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதொரு சூழலில், இந்தியா மாத்திரமே இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள செயற்திட்டத்தைச் செயற்படுத்த முன் வந்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். உரிய முறையில் மின் சக்தி எரிசக்தித் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்றால் முழு இலங்கையும் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்படும் என ரணில் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

ஆனாலும் அதானி நிறுவனத்துக்கு வழங்கிய ஐநூறு மெகாவோட்டிற்கும் அதிகமான அபிவிருத்தி செயற்திட்டம் விலைமனு கோரலுக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், விலைமனுக்கோராமலேயே அதானி நிறுவனத்திற்குக் கையளிக்க அரசாங்கம் இணங்கியிருப்பதாகவும் ஜே.வி.பி உறுப்பினர் விஜித கேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு வல்லரசு நாடுகள் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஜித கேரத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இச் சந்தேகங்களை ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். அத்துடன் விலைமனுக் கோரல் மூலம் இத் திட்டத்தைச் செயற்படுத்த முடியாது என்றும். அப்படியானால் அது தோல்வியடையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

ஆகவே இந்திய நிறுவனத்திடம் மின்சக்தி எரிசக்தித் திட்டத்தைக் கையளிக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்படுவதையே கடந்த ஒன்பதாம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் உலகத்துக்குப் பகிரங்கப்படுத்தியிருந்து.

இதன் பின்னணியிலேதான் புதன்கிழமை நள்ளிரவு முதல் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் அறிவித்திருந்தனர் போலும். ஆனால் புதன்கிழமை நள்ளிரவு முதல் மின்சார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.

அன்றிரவு அவசர அவசரமாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்க உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து உரையாடியிருந்தார். அதன் பின்னர் பணிப் பகிஸ்கரிப்பைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக சங்கமும் அறிவித்திருந்தது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பனிப் போர் மூண்டுள்ளது. ஆனாலும் ஈழத்தமிழர்களை மையப்படுத்திய இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே நிலைப்பாட்டில்தான் தொடர்ந்தும் செயற்படுகின்றன. அந்த நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்குச் சாதகமானதுமல்ல

இந்த நிலையில் வியாழக்கிழமை இடம்பெற்ற மின்சக்தி எரிசக்தித் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நிகழ்த்திய உரை இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

விலைமனுக் கோரல் தொடர்பான விதிமுறைகளுக்கு மாறாக இலங்கையில் நரேந்திர மோடிக்கு வழி சமைக்கும் வகையிலேயே அதானி நிறுவனத்துக்கு மின்சக்தி எரிசக்தித் திட்டம் வழங்கப்படுவதாக விஜித கேரத் வெளிப்படுத்திய கருத்து, இந்திய எதிர்ப்பை புடம்போட்டுக் காண்பித்துள்ளது.

பத்து மெகாவாட்டிற்குக் குறைவான மின் சக்தித் திட்டத்தை விலைமனுகோரல் இன்றி முன்னெடுக்கலாம். ஆனால் பாரிய திட்டத்தை விலை மனுகோரலுக்கு அமையவே முன்னெடுத்திருக்க வேண்டுமென்ற சஜித் பிரேமதாசாவின் கருத்தும், இந்திய எதிர்ப்பை மறைமுகமாகவே பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கொள்கையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்ததினாலேயே இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ற கருத்தை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு வருமானம் ஈட்டக்கூடிய அல்லது, செலவுகளைக் குறைக்கக்கூடிய உள்ளுர் திட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்ற பரிந்துரைகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

சர்வதேச நிதி நிறுவனங்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியா தவிர்ந்த வேறெந்தவொரு நாடுகளும் இலங்கைக்குத் தற்போதைய சூழலில் உதவியளிக்கத் தயாராக இல்லையென்று கூறுவதன் மூலம், அமெரிக்க - இந்திய புவிசார் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை ரணில் விக்கிரமசிங்க உள்வாங்குகிறார் என்றே பிரதான எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தனிக் கட்சியாகவும் புதிய கட்சியாகவும் செயற்பட்டாலும், அதன் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைய அங்கத்தவர்கள்.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஆளும் கட்சியாகப் பல தடவை இருந்தது. அப்போதெல்லாம் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு ஏற்பவே ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுமிருந்தது.

ஆக சஜித் பிரேமதாசாவின் தந்தையாரான பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவுக்கு எதிரான செயற் திட்டங்களில் ஈடுபட்டிருந்தது. குறிப்பாக 1990 இல் வடக்குக் கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றியது பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிதான்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க 1994 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்துக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றியிருந்தது. அதாவது இந்தியா ஊடான அமெரிக்கச் சார்புக் கொள்கை.

2002இல் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியேற்றபோது, நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதுகூட அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்திய வெளியுறவுக் கொள்கை ஒன்றையே ரணில் விக்கிரமசிங்க முன்னிலைப்படுத்தியிருந்தார்.

அவருடைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மிலிந்த மொறொகொட அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டுடன் செயற்பட்டுமிருந்தார். (தற்போது இலங்கைக்காக இந்தியத் தூதுவர்)

சமாதானப் பேச்சுக்காலத்தில் புதுடில்லிக்குச் சென்று சமதானத் தூதுவர் எரிக்சொல்கெயம் அனைத்து விடயங்களையும் விபரமாகக் கூறிய பின்னரே கொழும்புக்கும் வன்னிக்கும் வந்துசெல்வார். மீண்டும் புதுடில்லிக்குச் சென்று விளக்கமளித்த பின்னரே தனது நாடான நோர்வேக்குப் பயணம் செய்வார். எரிக்சொல்கெய்ம்.

1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதில் இருந்து இன்று வரை அந்த எதிர்ப்பு உணர்வு மாறுபடாத முறையிலும், 2009இன் பின்னரான ஈழத்தமிழர் விவகாரம் மற்றும் தற்போதைய இலங்கையை நோக்கிய புவிசார் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டும் அந்த எதிர்ப்பு உணர்வு வெளிக்கிளம்புகிறது

இந்த விடயத்தை அவரே சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சொல்கெய்ம் ஒழிவு மறைவின்றிச் சொல்லியுமிருந்தார்.

ஆனால் 2015இல் அமெரிக்க - இந்திய அரசுகளின் ஆதரவுடன் மீண்டும் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, புவிசார் அரசியல் நோக்கிலான அமெரிக்க இந்தியத் திட்டங்களுக்கு மாறாக சீனாவுடன் நல்லுறைவப் பேணியிருந்தார். குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 90 வருடங்களுக்குச் சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுத்தது ரணில்தான்.

அத்துடன் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை அபிவிருத்தித் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைச் செயற்படுத்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவுமில்லை. 2020 நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அந்த ஒப்பந்தத்தையே ரத்துச் செய்துமுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்தியா இலங்கைக்கு இரண்டு பில்லியன் நிதியுதவி வழங்கியிருந்தவொரு சூழலில், கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியினால் இதுவரை நானூற்றி ஐம்பது மில்லியன்கள் வரை எரிபொருளாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களாகவும் இலங்கைக்கு வழங்கியுள்ளன.

மேலும் இரண்டு பில்லியன்கள் வரை இந்தியா இலங்கைக்குக் கடன் வழங்கவுள்ளது. அதனைவிட மேலும் பல நன்கொடைகளும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படவுமுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணயில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மின்சக்தி எரிசக்தி உற்பத்திகளுக்கான அனுமதிக்கு எதிர்க்கட்சிகளும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியும் கடும் எதிர்ப்பு வெளியிடுகின்றன. ஆனால் இந்தக் கட்சிகளில் உள்ள குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மாத்திரமே தமது எதிர்ப்பை நாடாளுமன்ற விவாதத்தில் பகிரங்கமாகச் சொல்லியிருக்கின்றனர்.

ஆனாலும் இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும், அந்தக் கட்சிகளின் அனுபவமுள்ள மூத்த உறுப்பினர்களும் அதானி நிறுவனம் தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை. தங்கள் கட்சிகளின் உறுப்பினர்கள் அதானி நிறுவனம் தொடர்பாக வெளியிடும் கருத்துக்களை இவர்கள் மறுக்கவுமில்லை.

அதுவும் நாடாளுமன்ற விவாதத்தில் கூறிய இந்தக் கருத்துக்கள் முக்கியமானவை. ஆகவேதான் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சிங்கள அரசியல் கட்சி உறுப்பினர்களுடைய இந்திய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாகவே புலப்படுகின்றது.

1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதில் இருந்து இன்று வரை அந்த எதிர்ப்பு உணர்வு மாறுபடாத முறையிலும், 2009இன் பின்னரான ஈழத்தமிழர் விவகாரம் மற்றும் தற்போதைய இலங்கையை நோக்கிய புவிசார் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டும் அந்த எதிர்ப்பு உணர்வு வெளிக்கிளம்புகிறது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபில் தேசிய பெறுகை ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்து விலை மனுகோரல் முறைமை ஊடாக அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்ற யோசனை எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருப்பதுகூட இந்திய எதிர்ப்புணர்வு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்காகவே இந்த யோசனை என்று நியாயப்படுத்தினாலும், அதானி நிறுவனத்துக்கு மின்சக்தி எரிசக்தித் திட்டத்தை விலைமனுக் கோராமல் வழங்கப்பட்டதை எடுத்துக் காண்பித்தே தேசிய பெறுகை ஆணைக்குழு யோசனை முன்மொழியப்பட்டிருக்கின்றது என்பது கண்கூடு.

இந்தப் பின்புலத்திலேதான், ரசியாவிடமிருந்து எரிபொருட்களைப் பெறுவதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துத் தற்போது சுயாதீனமாகச் செயற்படும் ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி பிவித்துரு ஹெல உறுமய உட்பட ஒன்பது கட்சிகள் எரிபொருட்களை நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ரசியாவுடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

ரசியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயங்கினால் ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைப் பெற்று எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வை காணவேண்டும் என வற்புறுத்தி மக்களை திரட்டிப் போராட்டங்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் ஒன்பது கட்சிகளும் எச்சரிக்கை விடுத்துமுள்ளன.

ரசிய - உக்ரெய்ன் போர் நடைபெறும் நிலையிலும், ஐரோப்பிய நாடுகள் ரசியாவிடம் இருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஒன்பது சிங்களக் கட்சிகளின் தலைவர்களும், ரசியாவுடன் இலங்கை பேச்சு நடத்த வேண்டுமென வற்புறுத்தியுள்ளன

அதுவும் கடன் அடிப்படையில் இந்தியா தேவையான எரிபொருட்களை இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஒன்பது கட்சிகளும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமையானது இந்திய எதிர்ப்பை நேரடியாகவே வெளிப்படுத்துகின்றது.

எரிபொருட்களைப் பெறும் நோக்கில் இலங்கை விடுத்த கோரிக்கைக்கு ரசியா சாதகமாகப் பதிலளித்துள்ளதாக அறிந்துள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை எனவும் ஒன்பது கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றன.

ரசிய - உக்ரெய்ன் போர் நடைபெறும் நிலையிலும், ஐரோப்பிய நாடுகள் ரசியாவிடம் இருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஒன்பது சிங்களக் கட்சிகளின் தலைவர்களும், ரசியாவுடன் இலங்கை பேச்சு நடத்த வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளன.

ரசிய உக்ரெயன் போருக்கு முன்னரே ரசிய - இந்தியா உறவு மரபுரீதியானது. இந்த உறவின் மூலமே உக்ரெய்ன் போருக்குப் பின்னரான நிலையில் ரசியா ஊடாக சீனாவுடன் இந்தியா மறைமுகமாக நட்பைப் பேணவும் ஆரம்பித்துள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பனிப் போரும் மூண்டுள்ளது. ஆனாலும் ஈழத்தமிழர்களை மையப்படுத்திய இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே நிலைப்பாட்டில்தான் தொடர்ந்தும் செயற்படுகின்றன.

அந்த நிலைப்பாடு என்பது ஈழத்தமிழர்களுக்குச் சாதகமானதுமல்ல.

இருந்தாலும் அந்த அமெரிக்க- இந்திய நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்குச் சாதகமானது என்று கருதி அச்சமடையும் சிங்கள அரசியல் கட்சிகள், ஈழத்தமிழர் விவகாரத்தை மையப்படுத்தியே தமது இந்திய எதிர்ப்புணர்வைப் பஞ்சம், பசி போன்ற நெருக்கடிக்கு மத்தியிலும் பகிரங்கமாகவும் துணிவோடும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவே 2009 இற்குப் பின்னரான சூழலிலும் சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் மலையாக நம்பும் இந்தியா இதனைப் புரிந்துகொள்ளுமா?