ரசிய - உக்ரெயன் போரின் விளைவு,

அமெரிக்க - இந்திய அரசுகளிடையேயான பனிப்போர் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தவில்லை

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஒற்றையாட்சி அரசை மீளெழுப்ப முயற்சிக்கும் புவிசார் அரசியல் போட்டி
பதிப்பு: 2022 ஜூலை 11 11:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 11 23:10
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#us
ரசிய- உக்ரெய்ன் போரினால் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் ஒரே புள்ளியில் நின்றுதான் செயற்படுகின்றன என்பதைக் கூர்மைச் செய்தித் தளம் பல தடவை கூறியிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கச் சார்புடையவர் என்பதும், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகூட அமெரிக்காவுக்கும் விருப்பமான நகர்வுதான் என்பதும் வெளிப்படை. சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
 
போராட்டங்களினால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாகக் கோடிகாட்டுகின்றன

சிங்கள ஆட்சியாளர்களின் அமெரிக்க - இந்தியச் சார்பு நிலை என்பது 2009 இற்கு முன்னரும் அதற்குப் பின்னரான சூழலிலும் தொடருவதையே இங்கு அவதானிக்க முடியும்.

இந்த நகா்வின் மூலமே ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் 2009 இல் இல்லாதொழிக்கப்பட்டது. ஆகவே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் அமெரிக்க அணுகுமுறை என்பது இந்திய நலன்களுக்கு அமைவானது என்பதை 2009 போர் நிரூபித்துமிருந்தது.

ஆனாலும் 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதில் இருந்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரசிய - உக்ரெயன் போர் ஆகிய காரணங்களினால், இந்தோ - பசுபிக் உள்ளிட்ட இராணுவ மற்றும் பொருளாதார நகர்வுகளில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே எழுந்துள்ள பனிப்போர், ஈழத்தமிழர் விவகாரத்தையோ அல்லது இலங்கையைக் கையாளும் விடயத்திலோ பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இலங்கை அரசாங்கத்தைக் கையாளுதல், ஈழத்தமிழர் விவகாரம் என்ற இரு புள்ளிகளிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரே வகையான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. ஆனாலும் ரசிய - உக்ரெய்ன் போருக்குப் பின்னரான சூழலில், இலங்கையைக் கையாளும் விடயத்தில் அமெரிக்கா சற்று மாறுபட்ட பார்வை கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியபோது இந்த மாறுபட்ட பார்வை அமெரிக்காவுக்கு உண்டென்பதை அறிய முடிந்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினை உள்ளிட்ட சமகால புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்துத் தூதுவர் கொழும்பில் செய்தியாளர்களுடன் உரையாடியிருக்கிறார்.

ரசியாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது என அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் செய்தியாளர்களிடம் விபரித்திருக்கிறார்.

சர்வதேச நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பாக அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் தூதுவர் அடித்துக் கூறியிருக்கிறார்.

ரசிய - உக்ரெய்ன் போர் காரணமாக ரசியக் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது ஆனால் அது மூன்றாம் தரப்பு நாடுகளை பாதிக்காது என்று தூதுவர் கூறியிருப்பது இந்திய - ரசிய உறவுகள் பற்றிய அமெரிக்காவின் கசப்புணர்வையும் வெளிப்படுத்தியிருந்தது.

ரசியவிடம் எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய இலங்கை எடுத்த தீர்மானம் என்பது இந்திய அறிவுறுத்தல்களுடன் அமைந்தது என்பதை அமெரிக்கா அறியாததல்ல

அதாவது ரசியவிடம் எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய இலங்கை எடுத்த தீர்மானம் என்பது இந்திய அறிவுறுத்தல்களுடன் அமைந்தது என்பதை அமெரிக்கா அறியாததல்ல.

இலங்கையைக் கையாளுதல் என்பதில் அமெரிக்காவையும் தாண்டி இந்தியா தற்போது சில முடிவுகளைத் தனித்து எடுப்பதற்குக் காரணம் ரசிய - உக்ரெய்ன் போர் என்பது வெளிப்படையாகத் தெரிந்த பின்னணியில், அமெரிக்கா இலங்கையோடு நிதானமாகப் பயணிக்க முற்படுவதையே தூதுவரின் விளக்கம் சித்தரிக்கின்றது.

அதாவது இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத மற்றும் இலங்கையைக் கையாளுதல் என்பதில் அமெரிக்க - இந்திய அணுகுமுறைகள் தொடர வேண்டுமென்ற நோக்கிலும் அமெரிக்கா தற்போது நிதானமாகச் செயற்படுகின்றது என்பதை தூதுவரின் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அமெரிக்கா ரசியாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்காவில் மாத்திரமே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்றும் ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்வது என்ற மூன்றாம் தரப்பினரின் முடிவு, அந்த நாடுகளின் விருப்பத்துக்குரியது எனவும் தூதுவர் கூறியதன் மூலம். இந்தியாவை அமெரிக்கா பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதாகவே தெரிகிறது.

இந்தோ - பசுபிக் விகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவுக்குத் தற்போது முரண்பாடுகள் இருந்தாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்திய உதவி அமெரிக்காவுக்கு அவசியம் என்ற பின்னணியிலேயே இந்தியாவுடன் நேரடியான பகமைக்குள் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை என்பது வெளிப்படையாகின்றன.

ரசிய - உக்ரெய்ன் போர் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வுகள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட கருத்துக்களை மையமாக் கொண்டு சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அதனை ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாகக் கருதுகின்றன.

US
இலங்கைத்தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் ரசியாவிடம் இருந்து இலங்கைத்தீவு எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய எடுக்கும் முயற்சி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்துக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் செய்திகளர்கள் சிலரைச் சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படம் இது.
அதாவது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பனிப்போரினால், இந்தியாவைக் கடந்து அமெரிக்கா ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்குமென்றும், அதனால் தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைகள், நிரந்த அரசியல் தீர்வு போன்றவற்றில் இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுக்கும் எனவும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நம்புகின்றன.

ஆனால் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய கருத்தின் தொனி, இலங்கையைக் கையாளும் விடயத்தில் இந்தியாவை அமெரிக்கா ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது அல்லது இந்திய நலன்களுக்கு மாறாக அமெரிக்கா எந்தவொரு முடிவுகளையும் எடுக்காது என்பதே.

ஆகவே ரசியாவிடம் இலங்கை எரிபொருட்களைக் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதால், அமெரிக்கா இலங்கை மீது கோபம் கொள்ளும் எனவும் அதானல் இந்தியாவைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா தலையை நீட்டும் எனவும் சில தமிழ் அமைப்புகள் கனவு காண்பது அடிப்படையில் தவறு.

உக்ரெய்ன் போரின் பின்னரான சூழலில் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க - இந்திய பனிப்போர் இலங்கையுடனான அணுகுமுறைகளில் முரண்பாட்டில் உடன்பாடாகச் சில விட்டுக் கொடுப்புகளை அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கொள்ளலாம். ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்க - இந்திய அரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் இருக்காது என்பதே யதார்த்தம்.

அதுவும் நிரந்த அரசியல் தீர்வு குறித்த விவகாரத்தில் இந்தியாவுடன் பேசியே ஈழத்தமிழர்கள் முடிவெடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தன்னகத்தே வைத்திருக்கின்றது.

இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருட் தட்டுப்பாடுப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டுமென்பதில் அமெரிக்க இந்திய அரசுககள் உறுதியாகவுள்ளன.

இதே நிலைப்பாட்டோடுதான் சீனாவும் இருக்கிறது. இலங்கைக்கான இந்தியாவின் நான்கு பில்லியன் நிதியுதவியைச் சீனா பாராட்டியதன் மூலம், இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனச் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன என்பதையே அது காண்பிக்கின்றன.

தமது புவிசார் அரசியல் நோக்கில் கணிசமான பேரம் பேசுதல்களை அமெரிக்க இந்திய அரசுகள் முறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்கொண்டு வருகின்றன என்பது கண்கூடு. குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை மையப்படுத்திய வளங்கள் மற்றும் நிலங்களை இந்தியா கோருகின்றது. இந்தியாவின் இக் கோரிக்கைக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கின்றது.

அதேபோன்று கொழும்புத் துறைமுகங்களை மையப்படுத்திய மற்றும் இலங்கைக்கான எரிசக்தி திட்டங்களைக் கையாளுதல் உள்ளிட்ட அமெரிக்கப் பேரம் பேசுதல்களை இந்தியாவும் ஆதரிக்கின்றது. ஏனெனில், சீன ஆதிக்கம் இலங்கையில் நிரந்தரமாகிவிடக் கூடாது என்பதில் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரே புள்ளியில் நன்கு அவதானமாக இருக்கின்றன.

இந்த இடத்திலேதான் உக்ரெயன் போரினால் எழுந்துள்ள அமெரிக்க - இந்தியப் பனிப்போர் ஈழத்தமிழர் விவகாரத்தில் சாதகமாக மாறும் என்று கதை சொல்வது, ஈழத்தமிழர்களைத் தவறாக வழி நடத்தும் என்பதை உணர வேண்டும்.

ரசியாவிடம் இருந்து எரிபொருட்களை இலங்கை கொள்வனவு செய்வதால், அமெரிக்காவுக்குச் சிறிய கவலை இருக்கலாம் ஆனால் அதன் மூலம் இலங்கையை அமெரிக்கா பழிவாங்கும் என்றோ அல்லது ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையெடுத்து இலங்கையை அச்சறுத்தும் என்றோ கருத இடமில்லை.

கொழும்புத் துறைமுகங்களை மையப்படுத்திய மற்றும் இலங்கைக்கான எரிசக்தித் திட்டங்களைக் கையாளுதல் உள்ளிட்ட அமெரிக்கப் பேரம் பேசுதல்களை இந்தியாவும் ஆதரிக்கின்றது. ஏனெனில், சீன ஆதிக்கம் இலங்கையில் நிரந்தரமாகிவிடக் கூடாது என்பதில் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரே புள்ளியில் நன்கு அவதானமாக இருக்கின்றன

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவைச் சந்தித்த காரணங்களைக்கூட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என்ற அடிப்படையில் ஜே.வி.பியையும் சந்தித்தாகத் தூதுவர் கூறுகிறார். ஜே.வி.பி நல்ல புரிதல் உள்ள கட்சி என்றும் தூதுவர் பாராட்டியிருக்கிறார். ஆகவே இலங்கை அரசாங்கத்துடனோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளுடனோ அமெரிக்கா பகைத்துகொள்ள விரும்பாது என்பதையே இந்த நகர்வுகள் எடுத்தக் காண்பிக்கின்றன.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம்கூட அமெரிக்க - இந்திய புவிசார் அரசியல் நலன்களுக்கானதே. அதற்காக ஈழத்தமிழர்களின் விவகாரம் ஆயுதமாகக் கையாளப்பட்டதையும் இப் பத்தியில் ஏலவே வெளிப்படுத்தியிருக்கிறோம்.

ஆகவே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையை மேலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பனிப்போர் கால முரண்பாடுகளில் உடன்பாடாக அமெரிக்க - இந்திய அரசுகள் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு மத்தியில், ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கச் சிங்கள அரசியல் தலைவர்கள் தமது கட்சி அரசியலுக்கு அப்பால் மேற்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகள் வெற்றியளித்து வருவதை அவதானிக்கலாம்.

அதாவது இலங்கை மீதான அமெரிக்க - இந்திய அரசுகளின் பேரம் பேசுதல்களுக்கு உடன்படும் சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குச் சாதகமாகப் பல நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளனர். அந்த நிபந்தனைகளை அமெரிக்க இந்திய அரசுகளும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய புவிசார் அரசியல் சூழலும் உண்டு.

நல்லிணக்க விவகாரத்தில் சா்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளுடன், இலங்கை சமர்ப்பித்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரம் நீக்கம் செய்யப்படுகின்றது என்ற உண்மை தெரிகிறது.

இனப்பிரச்சினைத் தீர்வு அல்லது நிரந்தர அரசியல் தீர்வு என்ற சொல்லாடல்கள், தற்போது சர்வதேச சமூகத்தினால் நல்லிணக்கம் (Reconciliation) என்ற சொல்லாடலுக்குள் புதைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று போர்க்குற்ற விசாரணை, இன அழிப்புக் கோரிக்கை எல்லாமே இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான வாதப் பிரதிவாதங்களாக மடைமாற்றப்பட்டுள்ளன.

வடக்குக் கிழக்கில் உள்ள விவசாயக் காணிகள், கடல் வளங்கள் போன்றவற்றை இலங்கை இராணுவத்தின் உதவியுடன் அபகரித்தல், தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்களை மோதவிட்டுப் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாளுதல் போன்ற இனப்பாகுபாட்டு அணுகுமுறைகள் தமிழ்த்தரப்பினால் பகிரங்கப்படுத்தப்படவில்லை

ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை தமது ஒற்றையாட்சித் தத்துவத்தை நிலை நிறுத்தக் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதைத் தமிழத்தேசியக் கட்சிகளும் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் வேடிக்கை பார்ப்பதோடு நின்று விடுகின்றன.

இலங்கைத்தீவு குறிப்பாகச் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலுக்கான மூல காரணம் (Root Cause) முப்பது ஆண்டுகாலப் போரும், 2009 மே மாதத்தின் பின்னரான பதின்மூன்று வருடங்களில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ முகாம் விரிவாக்கங்களுமே காரணம் என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள், சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி போன்ற நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு ஆவணங்களாகச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளன.

சில உதாரணங்கள்--

வடக்குக் கிழக்கில் உள்ள விவசாயக் காணிகள், கடல் வளங்கள் போன்றவற்றை இலங்கை இராணுவத்தின் உதவியுடன் அபகரித்தல், தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்களை மோதவிட்டுப் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாளுதல் போன்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் இனப்பாகுபாட்டு அணுகுமுறைகளினால் வருமானம் பெறக்கூடிய வளங்கள் பயனற்றுப் போகின்றமை தொடர்பான ஆதாரங்களைத் தமிழ்த்தரப்பு பகிரங்கப்படுத்தவில்லை.