இலங்கை ஒற்றையாட்சி அரசின்

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை, இலங்கையின் நல்லிணக்கமாக மாற்றியவர்
பதிப்பு: 2022 ஜூலை 21 22:51
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 01:19
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
 
மிதவாதியாகக் காண்பித்துக் கொண்டு பௌத்த தேசியத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பையும் பாதுகாப்பதற்குரிய மூளையாக இயங்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை, 2022 யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான சூழலிலேயே சிங்கள மக்களில் அனேநகமானோர் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பர்

ஏனைய சமயத் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை. புதன்கிழமை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதும், நாடாளுமன்றத்தில் இருந்து நேரடியாகக் களனி கங்காரம விகாரைக்குச் சென்றிருந்தார் ரணில்.

கோட்டாபாய ராஜபக்சவைப் பதவியில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யூலை ஒன்பதாம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தைப் பௌத்த தேசிய எழுச்சியாக மடைமாற்றிய ஓமல்பே சோபித தேரர், கொழும்பில் பன்னிரென்டாம் திகதி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ராஜபக்ச குடும்பம் பௌத்ததேசிய சக்தியை இழந்துவிட்டதால் துரத்தப்பட்டதாகவும் பெருமையோடு புகழ்பாடியிருந்தார்.

ஆனால் ஓமல்பே சோபித தேரர் கூறிய இந்தக் கருத்துக்குக் காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் இதுவரையும் மறுப்பு வெளியிடவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஏனைய சிங்களப் பொது அமைப்புகளோ, சிங்கள அரசியல் தலைவர்களோ, எவருமே ஓமல்பே சோபித தேரர் கூறிய அந்தக் கருத்தைக் கண்டிக்கவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில், ஈழத்தமிழ் மக்களின் விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகின்றார் என்பதற்கு அவருடைய கடந்த காலச் செயற்பாடுகள் முன் உதாரணமாகின்றன.

அந்தச் செயற்பாடுகள் எதுவுமே ரகசியமானதுமல்ல.

2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சமர்ப்பித்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகல் யோசனையை, நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்து தீயிட்டவர் ரணில். இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குச் சந்திரிகாவின் இந்த நகல் யோசனை ஆபத்தானது என்று பகிரங்கமாகக் கூறியே ரணில் அதற்குத் தீயிட்டிருந்தார்.

ஆனால் சந்திரிகா சமர்ப்பித்த அந்த நகல் யோசனைகூட, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவானதாகவே இருந்தன. அப்போது தமிழ்த் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையிலும்கூட, இலங்கையின் இறைமைக்கு ஆபத்து என்று திரிபுபடுத்தி ரணில் விக்கிரமசிங்க, அந்த நகல் யோசனையை இலங்கை நாடாளுமன்றத்தில் தீயிட்டிருக்கிறார்.

இவ்வாறான பின்னிணியிலேதான் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியாக ஏனைய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்திருந்தது.

பிரதமராக ரணில் பதவியேற்றார்.

MR
ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை முற்பகல் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைதித்திரிபால சிறிசேன ஆகியோர் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம். நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவிப் பிரமானம் இடம்பெற்றது.
அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தார்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், நோர்வேயின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சை ரணில் ஆரம்பித்திருந்தார். வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு ஒன்றையும் ரணில் அமைத்திருந்தார்.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கங்களை நடைமுறைப்படுத்த ரணில் தலைமையிலான அரசாங்கம் அப்போது தயங்கியது. சந்திரிகா தடுப்பதாகக் குற்றம் சுமத்தித் தனக்குரிய பொறுப்புக்களை ரணில் தவிர்த்துக் கொண்டார்.

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர் நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்களை ஏற்க மறுத்ததோடு, புலிகள் மீதும் ரணில் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச வலைப் பின்னல்களில் சிக்கவைக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க என்பது அன்று பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருந்த கதை.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அமைத்த அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றும் திட்டத்தைக் கன கச்சிதமாகக் கையாண்டிருந்தார்.

அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீரகூட சர்வதேச விசாரணைக்கு இணங்கியபோதும், அதனை உள்ளக விசாரனையாக மாற்ற ஆலோசனை வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பையும், அதன் சட்ட ஏற்பாடுகளையும், அதன் ஊடான இலங்கையின் இறைமை - தன் ஆதிக்கம் போன்றவற்றைப் பாதுகாப்பதே தனது நோக்கம் என்று, 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி பிரதமராகப் பதவியேற்றபோது கூறியிருந்த ரணில் விக்கிரமசிங்க, 2017 ஆம் ஆண்டு முன்வைத்திருந்த தீர்வுத் திட்டத்தில்கூட இலங்கை ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரச்சினைகளை அணுகியிருந்தார்.

2009 இற்கு முன்னரும் 2009 இற்குப் பின்னரும் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த காணி அபகரிப்பு நடவடிக்கைகளை, 2015 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பை மையப்படுத்திய காணி அபிவிருத்தித் திணைக்களம், தொல்பொருள் ஆராட்சித் திணைக்களம், வன இலாகாத் திணைக்களம், போன்ற அரச திணைக்களங்கள் மூலமாகவும், இலங்கை ஒற்றையாட்சி அரச சட்டத்திற்கு ஏற்பவும் மாற்றியமைத்திருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை என்ற சொல்லாடலை, சர்வதேசத்தின் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் என்ற சொற் பிரயோகமாகவும் மாற்றியமைத்தவர்.

அது மாத்திரமல்ல, போர்க்குற்ற விசாரணை மற்றும் இன அழிப்புக் கோரிக்கைகள் போன்றவற்றையும், இலங்கை மக்களின் ஒட்டுமொத்த மனித உரிமைப் பிரச்சினையாகவும், வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பதைத் தனியே வடக்குப் பிரச்சினையாகவும் மாற்றியவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க.

கிழக்கு மாகாணத்தைத் தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்கள் வாழும் சமாதானப் பிரதேசமாகவும் ரணில் விக்கிரமசிங்க காண்பிக்க முற்பட்டவர்.

அதற்காக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அதிகளவு வாக்குகளைப் பெற்று இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 15 ஆசனங்களுடன் இருந்த சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தன் வசப்படுத்தியிருந்தார் இந்த ரணில் விக்கிரமசிங்க.

அதாவது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்து கொண்டு 2009 இல் போரை இல்லாதொழித்தார்கள். இருந்தாலும் 2009 இற்குப் பின்னரான சூழலில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்கள் விவகாரம் கொதி நிலையாக நீட்சியடைந்து கொண்டேயிருக்கிறது.

2015 இல் பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, அந்தக் கொதி நிலையைத் தணித்து ஈழத்தமிழர் பிரச்சினைகளை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றியிருந்தார்.

இந்தப் பின்புலத்திலேதான் கோட்டாபாய ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக முன்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியிருந்தாா் என்பது வெளிச்சமாகிறது.

கோட்டாபயவின் வெளியேற்றத்தின் பின்னர், ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமைகூட இப் பின்னணிதான் என்பதும் கண்கூடு.

ஆகவே மிதவாதியாகக் காண்பித்துக் கொண்டு பௌத்த தேசியத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பையும் பாதுகாப்பதற்குரிய மூளையாக இயங்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை, 2022 யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான சூழலிலேயே சிங்கள மக்களில் அனேநகமானோர் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பர்.

ஆனால் புலம்பெயர் தேசத்திலும். புலத்திலும் உள்ள சில தமிழ்த்தரப்பினர், ரணில் விக்கிரமசிங்கவை மிதவாதியாகவும், அவருடன் பேரம் பேசி எதனையும் சாதிக்கலாமென்றும் தவறான கற்பிதங்களைச் செய்ய விளைகின்றனர்.

ரணில் வியாழக்கிழமை ஜனாதிபதியாக் பதவிப் பிரமானம் செய்தபோது, வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சில தமிழ் இளைஞர்கள் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்தமைக்குப் பின்னாலும். தவறான கற்பிதங்களை மேற்கொள்ளும் சிலர் இருந்துள்ளனர் என்பதும் வெளிச்சம்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் போராட்டம் பற்றிய நியாப்பாடுகளைச் சா்வதேசத்தை நோக்கித் திருப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய சக்திகளுக்கு மேலும் அதிகரித்துள்ளன

2002/2015 ஆம் ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தமிழர் தரப்புக்குள்ளும், தமிழ் - முஸ்லிம் மக்களையும் பிரித்தாளக் கையாண்ட தந்திரம், இன்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிலையில் அது வேறு வடிவங்களாக மாறக்கூடிய ஆபத்துக்களே விஞ்சியுள்ளன.

இதனைத் தந்திரோபாயமாக எதிர்கொள்ளக்கூடிய இராஜதந்திரம் தமிழ் தரப்புக்கு அவசியமாகிறது.

அத்துடன் எழுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் போராட்டம் பற்றிய நியாயப்பாடுகளைச் சா்வதேசத்தை நோக்கித் திருப்ப வேண்டிய பொறுப்பும் தமிழ்த்தேசிய சக்திகளுக்கு மேலும் அதிகரித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடத் தனித் தனிக் கட்சிகளாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள், இந்த விடயத்தில் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டிய காலகட்டம் இது என்பதை, ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரான அரசியல் சூழல் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் அதன் மூலமான மக்கள் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், இலங்கைத்தேசியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எப்படிச் சிங்கள அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் ஒன்றிணைந்தார்களோ, அதேபோன்று கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலில் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்க வேண்டிய தருணம் இது.