இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு

தொடரப்போகும் நிதி நெருக்கடி - சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ள ரணில்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 08 21:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 10 16:58
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு நிதியுதவிகளைப் பெறக்கூடிய சூழல் அருகிக் கொண்டே செல்கின்றது. ரசிய - உக்ரெய்ன் போரினால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சர்வதேச நாடுகள் குறிப்பாக ரசியாவுக்கு எதிரான நாடுகள் உக்ரெய்ன் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ரசியாவுக்கு எதிரான போருக்கு உக்ரெய்ன் நாட்டுக்கு உதவியளிப்பதிலும் இந்த நாடுகளின் கவனம் மேலோங்கியுள்ளது.
 
ஓன்றுக்கொன்று தங்கி வாழும் பொருளாதார செயற்பாடுகளும், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ள நிலைமையில், எடுத்த எடுப்பிலேயே சீனா மற்றும் ரசிய ஆகிய நாடுகளுடன் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் மோதிவிட முடியாது என்பதே யதார்த்தம்

ரசியாவைப் பலவீனமாக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் போட்டியே இதற்குக் காரணம் எனலாம். உக்ரெயன், இலங்கைபோன்று பொருளாதார அபிவிருத்தியடையாத நாடு அல்ல. பணவீக்கம் அளவுக்கு அதிகமாக உயருகின்ற நாடும் அல்ல. ஆனால் ரசியா போர் தொடுத்த பின்னரான சூழலில் உக்ரெயன் பல வழிகளிலும் அழிவடைந்துள்ளது.

அதன் இராணுவக் கட்டமைப்புகளும் சிதைவடைந்துள்ளன.

இதனால் உக்ரெய்ன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கில் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் தற்போது திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன. பெருமளவு நிதிகளையும் இந்த நாடுகள் ஒதுக்குகின்றன. ஜி-7 மாநாட்டில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலும் உக்ரெயனுக்கு உதவியளிப்பது குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போதும் பொருளாதார நெருக்கடி தொடருவதால், இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ஆரம்பத்தில் பரிந்துரைத்த ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலிலும், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகளைக் காரணம் கூறி நிதி வழங்குவதை இழுத்தடிக்கின்றன.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை தமக்கேற்றவாறு முக்கியமான தளமாக இருக்க வேண்டுமென்பதே அமெரிக்கா - இந்தியா போன்ற நாடுகளின் நீண்டகால விருப்பம். அதற்காகவே 2009 இல் ஈழப்போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டது.

2009 இன் பின்னரான சூழலில், கொழும்பு போட் சிற்றித் திட்டம், அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி, மத்தள சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பேச்சுக்களை சீனா அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஆரம்பித்தது.

இதனால் சீனாவைக் கண்காணிப்பதற்காக அமெரிக்காவினால் 2017 இல் மீளக் கட்டமைக்கப்பட்ட குவாட் அமைப்புக்கு இலங்கை எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற விடயங்கள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு வந்தன.

அதாவது இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்கள் சீனாவுக்கான தளமாக மாறிவிடும் என்ற அச்சம் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு இருந்தன. இதன் காரணமாகவே இலங்கை மீது கூடுதல் கரிசனை கொண்டு பெருமளவு நிதிகளும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்தன.

இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியா சுமார் நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் பெருமளவு நிதியை வழங்கியதுடன் எதிர்காலத்திலும் நிதி வழங்குவது தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களை இலங்கையோடு நடத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே இலங்கைக்குத் தொடர்ச்சியாக நிதி வழங்குவது குறித்த சிக்கல் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. உக்ரெய்ன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஒரு மாதத்திற்கு முன்னர் ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் முடிவெடுத்திருந்தன. அத்துடன் ரசியாவுக்கு எதிரான போருக்காக உக்ரெய்ன் இராணுவத்துக்குப் பெருமள இராணுவத் தளபாடங்கள், தொழில் நுட்ப உதவிகளை மறைமுகமாக வழங்க வேண்டிய அவசியுமும் உண்டு.

இதனால், இலங்கைக்கு உதவி வழங்கும் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதைச் சர்வதேச நகர்வுகள் காண்பிக்கின்றன.

இலங்கைத்தீவில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கம்போடியாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.

ஆசியான் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சென்ற வியாழக்கிழமை கம்போடியாவில் உரையாடியுள்ளனர்.

இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளைச் சீனா தனக்குரிய தளமாக மாற்ற முற்படும் சூழலில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமான சவால்கள் இருப்பதை ஏற்றுக் கொண்ட இருவரும் இந்த விடயங்கள் குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் இணங்கியுள்ளனர்.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்துப் பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் கம்போடியாவில் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியுத்துடன் ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்க - இந்திய எதிர்ப்புச் சக்திகள் இடமளிக்குமா என்பதும் சந்தேகமே. உள்ளக வருமானங்களையும் ஏற்றுமதி வருமானங்களையும் அதிகரிக்கக்கூடிய சிங்கள இனவாதமற்ற பொருளாதார வலுவும், செயற்திறனும் இலங்கையிடம் இல்லை

இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க - இந்திய அரசுகள் தொடர்ந்து செயற்பட்டு வரும் நிலையில், இலங்கைக்குத் தொடர்ந்து நிதியுதவிகள் வழங்கும் விடயத்தில் இரு நாடுகளும் தயக்கம் காண்பிக்கின்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

ஏனெனில், உக்ரெய்ன் நாட்டை நோக்கிய கவனம் மற்றும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபகால நகர்வுகள், இலங்கைக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கும் விடயத்தில் அமெரிக்க இந்திய அரசுகளைக் கொஞ்சம் பின்வாங்க வைத்திருக்கின்றன போலும்.

அத்துடன் தாய்வான் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையும், அல் - குவைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் கொல்லப்பட்டதனால் அமெரிக்க மக்கள் இலக்குவைத்துத் தாக்கப்படும் ஆபத்துக்கள் இருக்கலாம் என்ற முன் எச்சரிக்கைகள் போன்ற காரணங்களும் மேற்கு நாடுகளின் இலங்கை மீதான கவனத்தைக் குறைத்துள்ளன.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்தான் அய்மான் அல் - ஜவாஹிரி. ஆகவே அவருடைய மரணத்தின் பின்னரான சூழலில் அமெரிக்கா மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கைகளை அமெரிக்கா தனது மக்களுக்கு சென்ற வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

எனவே இவ்வாறான நிலைமைகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவியளிப்பது பற்றிய சிந்தனைகள் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளுக்கு குறைவடைந்து வருகின்றமை பகிரங்கமாகவே தெரிகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரியும் தலிபான்கள் பாகிஸ்தான் ஊடாக வட இந்திய நிலப் பரப்புக்குள் ஊடுருவலாம் அல்லது தலிபான்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் வட இந்தியப் பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவும் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.

அத்துடன் ரசிய - உக்ரெயன் போரினால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவியளித்த பங்களாதேஸ் நாடு கூட சர்வதேச நாணய நிதியத்திடம்; நான்கு பில்லியன் டொலர்களை அவசர உதவியாகச் சில நாட்களுக்கு முன்னர் கோரியுள்ளது.

பாகிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் நிதிகளைக் கோரியுள்ளன. உலக வங்கியும் இந்த நாடுகளுக்கு உதவியளிப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருகின்றது. ஆகவே இதன் பின்புலத்தில், இலங்கைக்கு மாத்திரம் சர்வதேச நாணய நிதியமோ உலக வங்கியோ தேவையான நிதிகளை வழங்க முடியாதவொரு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி சர்வதேச நெருக்கடிகள், புவிசார் அரசியல் போட்டிகளில் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிக்குண்டுள்ள நிலையில், சீனா மற்றும் ரசியா போன்ற நாடுகளுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகளையும் அதன் மூலம் பெறப்படும் வருமானத்தின் அளவுகளையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயச் சூழலும் உருவாக்கியுள்ளது.

சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டாலும் அதாவது தாய்வான் மீதான சீன அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடன் அந்த நாடுகள் மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகளை முற்றுமுழுதாகத் துண்டித்துவிட முடியாது.

இதேபோன்று ரசியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரெய்ன் நாட்டைக் காப்பாற்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்பட்டாலும், ரசியாவுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகள், வர்த்தகப் பரிமாற்றங்கள் போன்றவற்றை முற்று முழுதாகத் துண்டித்துவிட முடியாது.

ஒன்றுக்கொன்று தங்கி வாழும் பொருளாதார செயற்பாடுகளும், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ள நிலைமையில், எடுத்த எடுப்பிலேயே சீனா மற்றும் ரசிய ஆகிய நாடுகளுடன் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் மோதிவிட முடியாது என்பதே யதார்த்தம்.

இந்த இடத்திலேதான் இந்தியா மூலம் இலங்கையைக் கையாண்டு வரும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள், இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கான உடனடித் தீர்வுக்குரிய நிதிகளை வழங்குவதிலும் கடந்த சில நாட்களாகப் புதியதொரு நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றன.

இதனாலேதான் இலங்கையோடு சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதற்குரியவாறு நிதிகளைப் பெற வேண்டுமென்ற ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத்தீவு மக்கள் உடனடியாக நன்மையைப் பெற்றாலும், எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் உண்டு.

ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்க - இந்திய எதிர்ப்புச் சக்திகள் இடமளிக்குமா என்பதும் சந்தேகமே. உள்ளக வருமானங்களையும் ஏற்றுமதி வருமானங்களையும் அதிகரிக்கக்கூடிய சிங்கள இனவாதமற்ற பொருளாதார வலுவும், செயற்திறனும் இலங்கையிடம் இல்லை.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்துப் பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் கம்போடியாவில் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்

ஆகவே ரசியா - சீனாவை நோக்கிய வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டிக்குள் இலங்கையைச் சிக்கவிடாமல் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜதந்திர உத்தியால் காப்பாற்றுவாரா என்ற கேள்விகளுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தப்பிக்க முடியாத ஆபத்துக்களே விஞ்சிக் காணப்படுகின்றன.

இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள இலங்கையின் கோரிக்கையால் கோபமடைந்த சீனா, திங்களன்று இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தது, பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்றும் சீனா கூறியுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான 'யுவான் வாங் 5' என்ற கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு பெய்ஜிங்கை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது. .

இந்தச் செய்திகளுக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், பெய்ஜிங் இந்த அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, "சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்வதாகவும் மூன்றாம் தரப்பினரைக் குறிவைக்கவில்லை என்றும் கூறியுள்ளர்.

பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று அவர் கூறினார்,

இந்த நிலையில், இலங்கை எந்தவொரு நாடுகளையும் பகைத்துக்கொள்ளாமல் பொருளாதார உதவிகளைப் பெறும் நோக்கில் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்குமென ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் ஏலவே கூறியிருந்தார்.