இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம்

செம்ரெம்பர் அமர்வில் மேலும் கால அவகாசம் கோர ரணில் முயற்சி -ஜெனீவா குழு கொழும்பு வருகை
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 13 22:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 01:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமக்குரிய புவிசார் அரசியல் நகர்வுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தே, ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானங்களை முன்வைப்பர் என்பது வெளிப்படை.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து தமிழர்களையும் உள்ளடக்கிய புதிய பொறி முறையொன்றைத் தயாரிக்கும் பின்னணியிலேதான் கோட்டாபய ராஜபக்சவினால் சில புலம் பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை ரணில் நீக்கியுள்ளார்

குறிப்பாக இன அழிப்புப் பற்றிய விசாரணைக்கான கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் ஏற்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் சாத்தியம் உண்டெனெலாம்.

இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விதித்திருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கியுள்ளார் என்று கூறலாம்.

2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள், சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட அத்துமீறல் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தொடர் ஆவணமாகச் சமர்ப்பிக்கவேயில்லை.

குறிப்பிட்ட சில தமிழ்த் தேசியக் கட்சிகள் மூலம் ஆங்காங்கே சில குறிப்பேடுகளை ஜெனீவா மனித உரிமைச் சபை பெற்றுக் கொண்டாலும், இலங்கை அரசாங்கம் செயற்படுவது போன்று ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவா மனித உரிமைச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தமிழர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகள், திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பாகப் போரின் பக்க விளைவுகளுக்குக் கூட தீர்வுகள் முன் வைக்கப்படாமை போன்ற விவகாரங்கள் குறித்துத் தொடரான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆதாரங்களோடு சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆகவே புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதன் பின்புலத்தில் இலங்கைக்கு வரவுள்ள அழுத்தம் என்பது, புவிசார் அரசியலை நோக்கமாகக் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, ஈழத்தமிழர்கள் விவகாரம் பற்றிப் பேசுவதானால், 13 ஆவது திருத்தச் சட்டத்தோடு நின்றால் போதுமென்ற மன நிலை காணப்படுகின்றது.

ஆனால் இலங்கைக்கு இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்துத் தங்கள் பக்கம் இலங்கையை நிற்க வைப்பதற்கு இந்தியா கடும் பிரயத்தனத்தில் ஈடுபடுகின்றது.

இந்தியாவின் இந்த அணுகுமுறைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இந்த எதிர்பார்ப்போடுதான் இந்திய அணுகுமுறையை ஜெனீவாவில் ஈழத்தமிழர்கள் காணக்கூடியதாக இருக்குமே தவிர, வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சித் தீர்வுக்கோ அல்லது ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் இன அழிப்பு பற்றிய விசாரணைக்கோ அல்லது சர்வதேசத்தினால் முன்வைக்கப்படும் போர்க் குற்ற விசாரணைகளுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்காது என்பது கண்கூடு.

2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றிய நாள் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அரசியல் தீர்வுக்காக 13 பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதுவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது இந்தியா சில சமயங்களில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளியேறியும் இருக்கிறது.

ஆகவே இதன் பின்னணியிலேதான் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் கடும் நிலைப்பாடுகளை இந்தியாவோ அமெரிக்காவோ முன்வைக்குமென எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள யுவான் வாங் ஐந்து என்ற சீன ஆய்வு கப்பலின் வருகையை இந்தியா எதிர்ப்பதால், எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியா உதவியளிக்க வாய்ப்பில்லை என்றும், இதனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கூடுதல் கவனம் எடுத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் எனவும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

ஆனாலும் முடிந்தவரை இந்தியா இலங்கையோடு சேர்ந்து பயணிக்கவே முற்படும். அதாவது இலங்கைக்கு வேண்டிய மேலும் நிதியுதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான உதவிகள், தொழில் நுட்ப உதவிகள் என வேறு வகையான அணுகுமுறைகளைக் கையாண்டு இலங்கை விவகாரத்தை இந்தியா நகர்த்தக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

புவிசார் அரசியல் - பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இலங்கையின் சமீபகால போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதே ஜெனீவா அதிகாரிகள் குழுவின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் என்பதைப் பகிரங்கமாக அறிய முடிகின்றது

இந்த நிலையிலேதான் மனித உரிமைச் சபையின் பிரதான அதிகாரிகள் குழு ஒன்று செப்டம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளது. இலங்கை தொடர்பாகக் கடுமையான புதிய தீர்மானங்களை அந்த அதிகாரிகள் குழு முன்வைக்குமென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினர் இலங்கைப் பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இக் குழுவினர் சந்திக்கவுள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்திப்பதற்கான திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

சந்திப்புகளின் பின்னர் இக் குழுவினர் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பத்து ஒராவது அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே மனித உரிமைச் சபையின் ஆணையாளர் இலங்கை விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கையை வெளியிடவுள்ளதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் முக்கிய பிரதிநிதியாக ரொனிமுங்கொவன் காணப்படுவார். கொழும்பில் உள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் ரொனிமுங்கொவன் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆகவே புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இலங்கையின் சமீபகால போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதே இக் குழுவின் இலங்கை வருகையின் பிரதான நோக்கம் என்பதைப் பகிரங்கமாக அறிய முடிகின்றது.

அதாவது கோட்டாபய ராஜபக்ச வெளியேறிய பின்னரான இலங்கை அரசியல் சூழலில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக, ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கு ஏற்ப செயற்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் உள்ளடங்கியிருப்பதைக் காண முடிகின்றது.

குறிப்பாக சீனக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தருவதன் மூலம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் கடனுதவிகள் மேலும் தாமதமடையும் என்ற எச்சரிக்கை மேற்குலக வட்டாரங்களினால் இலங்கைக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த எச்சரிக்கையின் பின்னணியிலேயே ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு அனுசரணை, இணை அனுசரணை வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து இலங்கையின் சமீபகாலப் போக்குகள் பற்றிய புதிய விடயங்களை அறியும் நோக்கில் சில ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு செப்டம்பர் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நகர்வுகள் பற்றிய தகவல்கள் மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் இலங்கைக்கு வந்து செல்லவுள்ள பிரதிநிதிகளினால் கையளிக்கப்படும் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

மேற்படி குழு கையளிக்கவுள்ள அறிக்கையில் ஈழத்தமிழர் தொடர்பான விடயங்கள் பெரிய அளவில் உள்ளடங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையின் மீள் நல்லிணக்கம் பற்றியே மேற்படி குழு அதிகமாகவும் பேசுவதற்கான சந்தா்ப்பங்கள் உண்டு. மீள் நல்லிணக்கம் என்பது தனியே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் அல்ல. நல்லிணக்கம் என்ற சொல்லாடல் முழு இலங்கைத்தீவுக்கும் உரியதாகும். அதாவது சிங்கள அரசியல் கட்சிகள், தமிழ் முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஏனைய சமூகங்கள், சமயங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமை பற்றிய கதைதான் இந்த மீள் நல்லிணக்கம் என்பது.

சீனா விவகாரத்தினால் இந்தியா கோபமடைந்திருக்கிறது அமெரிக்கா ஆத்திரமடைந்திருக்கின்றது என்று சில தமிழ் ஆய்வாளர்கள் கூறி, மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதைவிட, இதனை எதிர்கொள்வதற்கான மாற்றுத் திட்டங்களே தமிழ்த் தரப்பின் இன்றைய அவசியத் தேவையாகும்

மேலும் கூறுவதானால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கள் அனைத்துச் சமூகங்களும் இணைந்து வாழும் ஏற்பாடுதான் ஜெனீவா மனித உரிமைச சபை முன்வைத்து வருகின்ற இந்த மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடல்.

இதன் பின்னணியிலேதான் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோர ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றது.

குறிப்பாக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக இலங்கையினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

சென்ற புதன்கிழமை அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் இரண்டு மணிநேரம் ஒன்றுகூடி நீதி அமைச்சின் கேட்போர் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகளை இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கள் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில அதிகாரங்களுடனும் மட்டுப்படுத்தி அதனை அரசியல் தீர்வாக ஜெனீவாவில் முன்வைக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து தமிழர்களையும் உள்ளடக்கிய புதிய பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டிருக்கின்றது.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரத்னம் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே.லேனகல, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான பியூமந்திர பீரிஸ், ஆர்.பீ.எஸ்.சமன் குமாரி, ரோஹண ஹப்புகஸ்வத்த, அமைதி, நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, அதன் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இப் பின்னணியிலேதான் கோட்டாபய ராஜபக்சவினால் சில புலம் பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி இதழ் ஊடாக நீக்கியுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

ஆகவே சீனா விவகாரத்தினால் இந்தியா கோபமடைந்திருக்கிறது அமெரிக்கா ஆத்திரமடைந்திருக்கின்றது என்று சில தமிழ் ஆய்வாளர்கள் கூறி, மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதைவிட, இதனை எதிர்கொள்வதற்கான மாற்றுத் திட்டங்களே தமிழ்த் தரப்பின் இன்றைய அவசியத் தேவையாகும்.