மாறி வரும் உல அரசியல் ஒழுங்கில்

சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது

மேற்கின் அணுகுமுறையில் பகைமை நாடுகளான இந்தியா -பாக்கிஸ்தான், ஈரான் - சவுதியை இணைக்கும் சீன உத்தி
பதிப்பு: 2022 ஒக். 22 11:01
புதுப்பிப்பு: நவ. 07 09:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் (State of the Shanghai Cooperation Organisation - SCO) சீனாவின் நுட்பமான அணுகுமுறை வெளிப்பட்டுள்ளது. ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலினால், மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கை மேலும் தனக்குச் சாதகமாக வகைப்படுத்த இம் மாநாட்டைச் சீனா கன கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளதெனலாம்.
 
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரமே புவிசார் அரசியல் சூழல் பற்றிய நல்ல புரிதல் உண்டு. ஆனால் அவர்களும் அந்த இடைவெளியை நிரப்பத் தவறுகின்றனர். சம்மந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை மன்னிக்கலாம். ஏனெனில் இவர்கள் வல்லரசு நாடுகளினால் கையாளப்படும் சக்திகள்

இம் முறை இடம்பெற்ற மாநாட்டின் மூலம், எதிரும் புதிருமாக இருக்கின்ற இந்தியாவையும் பாகிஸ்தானயும் ஒருமைப்படுத்தும் திட்டங்களைச் சீனா நகர்த்தியுள்ளது. உக்ரெய்ன் போர் சூழல் சாதகமான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது.

2020 - 2021 ஆம் ஆண்டுகளில் சீனா - இந்தியா இடையே கடும் எல்லை பிரச்சனை இருந்தது. அப்போதும்கூட இந்த எஸ்.சி. ஓ மாநாடு அந்தப் பிரச்சனையின் சூட்டைத் தணிக்க முக்கிய காரணமாக இருந்தது.

சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திற்கும் பாகிஸ்தானின் கவாதார் துறைமுகத்துக்கும் இடையே கப்பல் பாதையொன்றை அமைப்பதற்கும் 2013 யூலை மாதம் உடன்படிக்கை கைச்சாத்தாகியது. உலக எண்ணெய்க் கப்பல்களுக்கு முக்கியமான வழியாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியும் அமைந்துள்ளது.

இந்த நீரிணைக்குச் சீனா செல்வதற்கும் நேரடிப் பாதையாக இப் பாதை அமைந்துள்ளது. இப் பாதை இந்தியாவின் காஸ்மீர் பகுதிக்கு அருகாகவே செல்கிறது. இதன் காரணமாகவே ஐம்முகாஸ்மீர் பிரிக்கப்பட்டது.

ஆகவே ரசிய - உக்ரெய்ன் போர்ச் சூழலில் நடத்தப்பட்ட எஸ்.சி. ஓ மாநாட்டின் மூலம் இந்திய - பாகிஸ்தான் மோதலை முரண்பாட்டில் உடன்பாடாக அணுகிச் செல்லும் ஏற்பாட்டுக்குச் சீனா வழி சமைத்துள்ளமை பட்டவர்த்தனம்.

இந்த மாநாட்டில் எஸ்.சி. ஓ தலைவர்கள் முதன் முறையாக ஒரு மெய்நிகர் சந்திப்புகளுக்குப் பின்னர் நேரில் ஒன்று சேர்ந்தனர். சீன ரசிய ஜனாதிபதிகளும் இந்தியப் பிரதமரும் மண்டபத்தில் பொதுவாகச் சந்தித்துக் கொண்டனர். ஆனால் தனித்தனிச் சந்திப்புகள் தவிர்க்கப்பட்டன.

இந்த இடத்தில் சீனாவோடும் அமெரிக்காவோடும் உறவைப் பேணிக் கொண்டு தமது நலனைப் பெற்றுக்கொள்வதே இந்தியாவின் இரட்டைத் தன்மை என்பது உலகத்துக்கு வெளிச்சமாகிறது.

சீனாவின் நம்பிக்கைக்குரிய நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமையத்தில் உறுப்பு நாடுகளாக இணைத்து, மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வியூகத்துக்கு எதிராக திட்டம் வகுக்கும் சீன இராஜதந்திரத்துக்குள் இந்தியாவும் பங்களிப்புச் செய்கின்றது.

சீனா இந்தியாவை அரசியல் எதிரியாகவே கருதும் சூழலில், இந்தியா சீனாவுடன் இணைந்து செயற்படுகின்றது. இதுதான் இந்திய இராஜதந்திர இரட்டைத்தன்மை. அதாவது மேற்கு நாடுகளுக்கு ஈடாகத் தன்னை வளத்த்துக் கொண்டு வரும் சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்காவுடன் சேர்ந்தும். அதேநேரம் சீனாவுக்கு ஈடாகவும் இந்தியா தன்னைக் காண்பிக்க முனைகிறது.

இந்த மகாநாட்டில் பேசிய பிரதமர் நாரேந்திரமோடி. போரினால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாதென்றார். அதாவது மறைமுகமாக ரசியாவுக்கு இடித்துரைக்கிறார். ஆனால் சீனா ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை. மாறாகச் சீன – ரசிய உறவு எல்லையற்றது என்று மாத்திரமே கூறினார்.

இருந்தாலும் உக்ரெய்ன் போருக்குச் சீனா இதுவரை ரசியாவுக்கு எந்த ஒரு ஆயுதங்களையும் வழங்கவில்லை. ஈரான், ரோன் போன்ற ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஈரான் மறுக்கிறது. இருந்தாலும் அமெரிக்கப் புலனாய்வு ஈரான் ஆயுதம் வழங்கியதைக் கண்டுபிடித்திருக்கிறது.

இந்த நிலையில் ரசியாவுடன் நெருங்கிய உறவைப் பேணிவரும் சீனா எந்த ஒரு ஆயுதங்களையும் வழங்காமல் மிக அவதானமாக ரசிய - உக்ரெய்ன் போர் விவகாரத்தைக் கையாண்டு வருகின்றது.

மியன்மார் அரசினால் இன அழிப்புக்கு உள்ளாகும் முஸ்லீம் மக்களுக்காகவும் இந்திய அரசால் ஒடுக்கப்படுகின்ற காஸ்மீர் மக்களுக்காகவும் பல நாடுகள் உண்டு. சீனாவில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் உய்ர்குர் முஸ்லீம்களுக்காக வல்லரசு நாடுகள் பேசுகின்றன. பாலஸ்தீன மக்கள் இன்றுவரை தங்கள் கோரிக்கையில் பலமாகவும் ஒருமித்த குரலோடும் நிற்க்கின்றனர். அவர்களுக்காக வல்லரசு நாடுகளின் ஆதரவும் உண்டு

ஆனால் இந்தியா இரட்டைதன்மைக் கொள்கையோடு எல்லா இடங்களிலும் மூக்கை நுழைத்தும் ஏட்டிக்கு போட்டியான வல்லரசுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கண்பித்துக் கொண்டும், தனது புவிசார் அரசியல் பலவீனங்களையே வெளிப்படுத்தி வருகின்றது.

சங்காய் ஒத்துழைப்பு அமையத்தில் ஈரான் உறுப்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், உலக அரசியல் ஒழுங்கில் பாரிய மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது எண்ணெய் வளம் உள்ள நாடுகளான சீனா, ரசிய அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைப்பொன்றில் ஈரான் இணைவது உலக ஒழுங்கில் முக்கியமானதாகும்.

சவுதி அரேபியாவும் சங்கய் ஒத்துழைப்பு அமையத்தில் இணையவுள்ளது. ஆனால் ஈரான் சவுதியரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் கடுமையான முரண்பாட்டைக் கொண்டவை. அதேபோன்று இந்தியா – பாகிஸ்தான் கடும் பகைமை கொண்ட நாடுகள்.

ஆனால் இந்த நாடுகளின் முரண்பாடுகளைக் களைந்து அல்லது அதனைச் சமாளித்துத் தனது சங்கய் ஒத்துழைப்பு அமையத்துக்குள் இணைத்துள்ளமை சீனா இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஒருகாலத்தில் சவுதியரேபியா அமெரிக்காவின் நுனி விரலாக இருந்தது. ஆனால் தற்போது எஸ்.சி. ஓவில் இணைய விரும்பம் தெரிவித்துள்ளமை உலக அரசியல் ஒழங்கின் மற்றுமோர் மாற்றத்தையே காண்பிக்கின்றது.

தனது புவிசார் அரசியலுக்குள் முரண்பாடான நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்தும். ஒன்று மனித உரிமை மீறல். இரண்டாவது, பொருளாதாரத் தடை.

ஆனால் இந்தத் தடைகளில் இருந்து ஈரான் தப்பிவிட்டது. ரசியாவை மேற்கும் ஐரோப்பிய நாடுகளும் தனிமைப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை ஒன்றுதிரட்டிச் சீனா தனது எஸ்.சி. ஓ வில் இணைத்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் மேற்படி இரண்டு ஆயுதங்களையும் பயன்படுத்தித் தனது புவிசார் அரசியல் நலன்களுக்குள் கொண்டுவரும் அமெரிக்க இராஜதந்திரம் எதிர்வரும் காலங்களில் சாதகமான விளைவைத் தோற்றுவிக்குமெனக் கூற முடியாது. அமெரிக்க நட்பு நாடுகளும் எஸ்.சி. ஓ வில் இணைய வாய்ப்புகள் உள்ளன.

சவுதியரேபியாவுக்குத் தற்போது எஸ்.சி. ஓ வில் அவதானிப்பாளர் பதவி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முற்றாக இணைய முடியும்.

ஆகவே ரசிய- உக்ரெய்ன் போர்ச் சூழலில் சீன வியூகத்துக்கு அமைவான உலக அரசியல் ஒழங்கு மாற்றத்தில் இந்தியாவும் தன்னைத் தனிப் பெரும் நாடாகக் காண்பிக்கவே எஸ்.சி. ஓ வின் பிரதான பங்காளியாக்கிச் சீனாவின் காய்நகர்த்தல்களில் தனக்கும் பங்கிருப்பதாகக் காட்ட முனைகிறது.

இதன் மூலம் இந்தியாவின் இரட்டைத் தன்மை உறுதியாகியுள்ளது. முன்னொரு காலத்தில் அணிசேராக் கொள்கை என்று கூறிக் கொண்டு, சோவியத் யூனியன் நாட்டுடன் இணைந்து செயற்பட்டது இந்தியா.

தற்போதும் அணிசேராக் கொள்கை என்று சொல்லிக் கொண்டு அமெரிக்கா சீனா போன்ற அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஒவ்வொரு வேலைத் திட்டங்களுக்காகச் செயற்பட்டு வருகின்றது இந்தியா.

இப் பின்னணியில் அமெரிக்க – சீனா போன்ற வல்லாதிக்க நாடுகளைக் கடந்து இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் கூட மாற்றுத் தளம் ஒன்றை தனித்துச் சுயமாக அமைக்க இந்தியா இராஜதந்திரத்தால் முடியவில்லை.

உலக அரசியல் ஒழுங்கு மாறி வரும் சூழலில் சீனாவில் எஸ்.சி. ஓ அமைப்பில் மாலைதீவும் இணைய விரும்பம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்திய அயல் நாடுகளான பாக்கிஸ்தான் மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகள் சீனா அணிக்குள் இணையும் நிலையில், சீனாவுடனான இந்திய அரசின் மோதல் என்பது நீடிக்கக்கூடியதல்ல. சீனாவுக்கு இந்தியா ஒரு போட்டி நாடுமல்ல என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.

இந்தியாவைவிடச் சீனா தென்னாசியாவில் பெரும் சக்தியாக மாறி வருகின்றது. இதில் இந்தியா சுதாகரித்துக்குக் கொண்டு தன்னைப் பெரிய சக்தியாகக் காட்ட முற்படுகின்றது. அனைத்து நாடுகளோடும் சேர்ந்து செயற்படுகின்ற முறைகளும் புதுடில்லியின் பலவீனங்களே

ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்க அமெரிக்காவை வலிந்து இழுந்து, வடஇந்திய நிலப்பரப்புகளைப் பாதுகாக்க ரசியாவுடன் உறவைப் பேணி, வர்த்தக நலன் சார்ந்து சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்து இந்தியா, தனது சுய மரியாதையை இழந்து வருகின்றது.

இந்த நகர்வை தமது மூலோபாயம் என்று புதுடில்லி கற்பிதம் செய்யலாம். ஆனால் பேரரசாக இந்தியாவைக் கருத முடியாத அரசியல் பின்னணி ரசிய உக்ரெயன் போர் சூழலில் உருவாகி வருகின்றது.

குறிப்பாக இந்தியாவைவிடச் சீனா தென்னாசியாவில் பெரும் சக்தியாக மாறி வருகின்றது. இதில் இந்தியா சுதாகரித்துக்குக் கொண்டு தன்னைப் பெரிய சக்தியாகக் காட்ட முற்படுவதும் எல்லா நாடுகளுடனும் சேர்ந்து செயற்படுகின்ற முறைகளும் டில்லியின் பலவீனங்கள் என்பது கண்கூடு.

தற்போது அமெரிக்காவும் சீனாவுமே பெரிய சக்திகள். ஆகவே புவிசார் அரசியல்தான் புவிசார் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றது என்பதை உக்ரெய்ன் போர்ச் சூழலும், சீன அணுகுமுறைகளும் காண்பிக்கின்றன.

இப் பின்புலத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் விடுதலையை உறுதிப்படுத்தத் தற்போதைய உலக அரசியல் ஒழுங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தியாவை மாத்திரம் நம்புவதில் பயனில்லை.

மியன்மார் அரசினால் இன அழிப்புக்கு உள்ளாகும் முஸ்லீம் மக்களுக்காகவும் இந்திய அரசால் ஒடுக்கப்படுகின்ற காஸ்மீர் மக்களுக்காகவும் பல நாடுகள் உண்டு. சீனாவில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் உய்ர்குர் முஸ்லீம்களுக்காக வல்லரசு நாடுகள் பேசுகின்றன. பாலஸ்தீன மக்கள் இன்றுவரை தங்கள் கோரிக்கையில் பலமாகவும் ஒருமித்த குரலோடும் நிற்க்கின்றனர். அவர்களுக்காக வல்லரசு நாடுகளின் ஆதரவும் உண்டு

ஆனால் இவர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற அத்தனை நாடுகளும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தோடு மாத்திரமே பேசுகின்றன. ஈழத்தமிழர்கள் பக்கம் நின்று இந்த நாடுகள் ஒருபோதும் பேசியதே கிடையாது. இதற்கு இந்தியாவே பிரதான காரணி.

ஆகவே சர்வதேசப் புவிசார் அரசியலைப் புரிந்து கொண்டும் அதன் போக்குகளை அறிந்தும் பேரம் பேசுதல் அல்லது இணக்க அரசியலைக்கூட முன்னெடுக்க ஈழத்தமிழர்கள் மத்தியில் எவருமே இல்லை.

2009 இற்குப் பின்னரான சூழலில் காற்றுள்ளபோதே தூற்றுக் கொள்ளல் என்ற அணுகுமுறை தவறவிடப்பட்டுள்ளது. தமிழ் நாடு ஈழத்தமிழர் பிரச்சினையை வெறும் அனுதாபமாகப் பார்க்கிறதே தவிர, அறிவுசார்ந்தும் புவிசார் அரசியல் மாற்றங்களோடும் இணைத்து அவதானிக்கவில்லை.

இதனால் ஈழத்தமிழர்கள் கையாளப்படும் சக்திகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களுக்காகப் பேசுவது போல அமெரிக்க போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் காண்பித்தாலும், தங்கள் நலன்சார்ந்து, தமிழ்த்தேசியக் கட்சிகளைப் பயன்படுத்தியுள்ளன.

சில தமிழ்ப் புலம்பெயர் அமைப்புகளும் இந்த நாடுகளினால் கையாளப்பட்டு வருகின்றன.

இந்த இடத்திலேதான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குப் புவிசார் அரசியல் சூழல் பற்றிய நல்ல புரிதல் உண்டு. ஆனால் அவர்களும் அந்த இடைவெளியை நிரப்பத் தவறுகின்றனர்.

சம்மந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை மன்னிக்கலாம். ஏனெனில் இவர்கள் வல்லரசு நாடுகளினால் கையாளப்படும் சக்திகள். இவர்கள் இந்தியாவுக்கு அஞ்சி சீனத் தூதுவரை ஒப்பாசாரத்துக்கேனும் சந்திக்கத் தயங்குகின்றனர்.

ஆனால் முன்னணியை இந்தியாவோ அமெரிக்காவோ ஏன் சீனாவோ கையாளவே முடியாது. இருந்தாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் இருந்தால் மாத்திரமே சர்வதேச நகர்வுகளை முன்னெடுக்க முடியுமென முன்னணி கூறுவதை ஏற்க முடியாது.

ஆகவே சர்வதேச அரசியல் பார்வையை மக்களிடம் திறந்துவிடும் இடங்களில், தியாகி தீலிபன் நினைவேந்தல் விவகாரங்களில் உள்ளக முரண்பாடுகள் பற்றி விமர்சிக்கும் ஆட்களாக மாத்திரமே முன்னணி மாறிவிட்டது.

சம்மந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவுக்கு அஞ்சி சீனத் தூதுவரை ஒப்பாசாரத்துக்கேனும் சந்திக்கத் தயங்குகின்றனர்

சர்வதேச அரசியல் புரிதல்களோடு உருவாகி வரும் புதிய இளம் தலைமுறையை முன்னணி தமது கட்சிக்குரிய செயற்பாட்டாளர்களாக மாத்திரம் மாற்றி வருகின்றது.

அதேநேரம் புலம்பெயர் தமிழர்களும் இப்படியான அணி வகுப்பில் நிற்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்காக உக்ரெய்ன் ஆதரவாளர்கள் என்றும் ஒரு குழு புலம்பெயர் நாடுகளில் புறப்பட்டுள்ளது. சீனச் சார்புத் தமிழ்க் குழு உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குறிப்பு- எஸ்.சி. ஓ.எனப்படும் சங்கய் ஒத்துழைப்பு அமையம் 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை மையமாகக் கொண்டு எட்டு உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

சீனா, இந்தியா, ரசிய. கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பாக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாகவும், ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாகவும், ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி ஆகியவை உரையாடல் பங்காளிகளாகவும் உள்ளன. ஈரன் விரைவில் உறுப்பு நாடாக இணையவுள்ளது.