ராஜீவ் காந்தி படுகொலைக் கைதிகள் ஆறுபேரின்

விடுதலையின் பின்னால் அரசியல் இல்லை- சட்டம் தன் வழி சென்றிருக்கிறது

வடக்குக் கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத் தரும் என்பதற்கான சமிக்ஞையுமல்ல
பதிப்பு: 2022 நவ. 13 09:24
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 23:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினமே நளினி உள்ளிட்ட ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தினால் வெள்ளிக்கிழமை ஆறுபேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் எந்தவொரு அரசியலும் இல்லை என்பது பகிரங்கம். இந்த விடுதலைக்கு மோடி அரசாங்கமோ, தமிழகத்தில் தி.மு.க.அரசாங்கமோ உரிமை கோரவும் முடியாது முப்பது ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தைச் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை மே மாதம் 18 ஆம் திகதி விடுதலை செய்தது.
 
ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில் உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப அணுகிச் செல்லக்கூடிய அரசியல் - பொருளாதாரச் சூழல் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பால் அதனை நுட்பமாகக் கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட பக்குவம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை

இவர்களின் விடுதலை தொடர்பாகச் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இன்றுவரை வாய் திறக்கவேயில்லை. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோதும் எதுவுமே பேசவில்லை.

பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்று 2011 ஆம் ஆண்டு இந்திய உயா் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுமிருந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.

ஆகவே இவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது பற்றி இந்திய அரசியல்வாதிகள் எவரும் வாயே திறக்கவுமில்லை.

இவர்களின் விடுதலைக்காகச் சட்டம் தன் வழி சென்றிருக்கிறது. அவ்வளவுதான்.

இப் பின்புலத்தில் மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப சிங்கள ஆட்சியாளர்களை அச்சுறுத்த ராஜீவ் காந்தி படுகொலைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என்றோ, அல்லது ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுப்பதற்கான சமிக்ஞை என்றோ இந்த விடுதலைக்கு அர்த்தம் கற்பித்துவிட முடியாது.

இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் அல்லது சொல்வதைச் செய்யக்கூடிய அணுகுமுறையில் கையாளும் நோக்கில் அமெரிக்க - இந்திய அரசுகள் சிங்கள ஆட்சியாளர்களுடன் தொடர்ந்தும் பேரம் பேசுகின்றன என்பது உண்மை.

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான கடந்த பதின்மூன்று வருடங்களில் சிங்கள ஆட்சியாளர்களுடன் மாத்திரம் பேசுகின்ற உத்திகள் கன கச்திதமாகக் கையாளப்பட்டு வந்தாலும், ரசிய உக்ரெயன் போர்க்காலச் சூழலில், வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை குறித்த பார்வை முக்கியம் பெறுகின்றது.

அதற்காக இந்த ஆறுபேரின் விடுதலையை அதனுடன் ஒப்புட்டு நோக்க முடியாது. விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்குமெனக் கருதுவதும் தவறானது.

இந்த இடத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கைத்தீவை சிங்களத் தேசியக் கோட்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு ஏற்ப, அமெரிக்க - இந்தியக் காய் நகர்த்தல்களையும் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூலம் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற தொனியில் கருத்துக்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன

அதாவது சிங்கள ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தாமல் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த நாடுகளிடம் உண்டு.

அதற்கேற்பவே தமிழ்த்தேசியக் கட்சிகளை இந்தியா கையாண்டும் வருகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே விதிவிலக்காகவுள்ளது. கடந்த யூன் மாதம் பத்தாம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்ற நோக்குடன் சிங்கள பௌத்த அமைப்புகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரான சூழலில் கொழும்பை மையமாகக் கொண்ட ஏனைய சிங்களப் பிரதேசங்களில் சிங்கள மக்கள் கொஞ்சம் அமைதி காத்தனர்.

முன்னாள் அமைச்சரும் சர்வதேச பௌத்த மகா சங்கம் மற்றும் கண்டி மகாநாயக்கத் தேரர்களிடம் சிறந்த பௌத்த காவலன் என்ற விருதைப் பெற்றவருமான கரு ஜயசூரிய இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்த வேண்டிய செயற்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றார்.

2018 ஆம் ஆண்டு கொழும்பில் கருஜயசூரியவினால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான குரல் என்ற அமைப்பு இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றது. சுபீட்சமான நாட்டுக்கான நல்லிணக்கம் என்ற தலைப்பில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இந்த அமைப்பு கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

தற்போதைய இலங்கை அரசியல் யாப்பின் மூலம் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற தொனியில் கருத்துக்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

கரு ஜயசூரியவின் அமைப்பு இந்தப் பிரதிநிதிகளின் மூளைகளைக் கழுவ முற்பட்டது. ஆனால் கலந்துரையாடலில் பங்கெடுத்த தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் மனசாட்சியுடன் பேசி, இலங்கை ஒற்றையாட்சி அமைப்பு மற்றும் இராணுவப் பிரசன்னங்களை வைத்துக்கொண்டு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாழ முடியாதென்ற கருத்தை இடித்துரைத்திருக்கின்றனர்.

இக் கருத்துக்கள் கருஜயசூரிய தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் அமைப்புக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆனாலும் இத் திட்டத்திற்குரிய நிதியை வல்லரசு நாடுகள் வழங்குகின்றதா என்ற சந்தேகங்களும் உண்டு.

சிங்கள ஆட்சியாளர்களை அச்சுறுத்த ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என்றோ, அல்லது நியாயமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக் கொடுப்பதற்கான சமிக்ஞை என்றோ இந்த விடுதலைக்கு அர்த்தம் கற்பித்துவிட முடியாது

ஏனெனில் மாறிக் கொண்டிருக்கும் உல அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமானால் எழுபது வருடங்களுக்கும் மேலாக அரசியல் விடுதலை கோரி நிற்கும் ஈழத்தமிழ்ச் சமூகத்தைத் திருப்திப்படுத்த வேண்டும்.

இதற்காகவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுத் தமிழர்களின் மூளையைக் கழுவும் செயற்திட்டங்கள் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. கரு ஜயசூரியவை மையப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்தச் சர்வதேச நாணய நிதியம் மிகப் பெரிய நிதி உதவி வழங்கும் எனக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் மிகப் பெரிய நிதியுதவி அடுத்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு பொருளாதார மீட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே இப் பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து வெளியேற்றும் போராட்டங்களுக்கு உதவியளித்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் வேலைத் திட்டங்களைப் பகிரங்கமாகவே முன்னெடுத்து வருகின்றன.

தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிப்பது போன்று காண்பித்தாலும், இத் திட்டத்திற்குப் பின்னால் செல்லக் கூடிய ஏது நிலைகளே விஞ்சிக் காணப்படுகின்றன. குறிப்பாக பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் போகக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலில்லை.

அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவே ரணில் விக்கிரமசிங்க ஆலோசிக்கிறார். ஆகவே மாகாண சபைத் தேர்தலோ அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டங்களோ தற்போதைக்கு இல்லை என்பதும் வெளிப்படை.

ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தற்போதும் அதன் ஆதரவுடன் செயற்படுகிறார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் பிரதமர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்குகள் குறைவடைந்துள்ளதால், அந்தக் குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவது உசிதமானதல்ல என்ற கருத்துக்கள் உள்ளகரீதியாக விதைக்கப்படுகின்றன.

இதனால் கருஜயசூரியவை பிரதமராக்கும் திட்டமும் ரணிலிடம் உண்டு என்றே ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது யானைச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லாமல், அன்னம் சின்னத்தை மையமாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பிலேயே போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டிக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி 2001 ஆம் ஆண்டு சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. 2001 டிசம்பர் ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருந்தார். பின்னர் 2002 பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டுப் பேச்சுவாத்தைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

ஆகவே தற்போதும் அதேமாதிரியான அணுகுமுறையை ரணில் கையாளுகின்றார். வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என்று ரணில் பத்தாம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமையும் அதன் பின்னணியிலேதான்.

ஆகவே ராஜபக்ச குடும்பத்தின் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியாகிப் பின்னர் முன்னாள் நண்பன் கரு ஜயசூரியவின் ஒத்துழைப்புடனும் அமெரிக்க இந்திய அரசுகளின் பரிந்துரைகளோடும் இயங்கப்பட்டு வரும் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான இலக்குகள் இரண்டு.

சிங்களத் தேசத்தைக் கட்டியெழுப்புதல். குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில், கட்சி அரசியல் செயற்பாடுகளைக் கைவிட்டுச் சிங்களத் தேசிய இயக்கமாகச் செயற்பட வேண்டும் என்ற பலமான கருத்துக்கள் புலமைசார்ந்த அமைப்புகளிடம் காணப்படுகின்றன

ஒன்று- ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள்ளேயே முடக்கி விடுவது. அத்துடன் சர்வதேச விசாரணை குறிப்பாக ஜெனீவாத் தீர்மானங்கள் போன்றவற்றை இல்லாமலே செய்து விடுவது.

இரண்டாவது- சிங்கள மக்களிடையே கட்சி அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைத்துத் தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற சிந்தனைகளை ஊக்குவித்து இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்துவது. இதன் மூலம் மலையகத் தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் கூட்டு ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவைகளும் எழாது.

இந்த இரண்டு பிரதான காரணிகளை ரணில் முன்னெடுபதற்குச் சர்வதேச ஆதரவுகளும் உண்டு. கடந்த சனிக்கிழமை கொழும்பு பத்தரமுல்லயில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் புலமைசார் அமைப்புகளின் வருடாந்தக் கூட்டத்தில், இத் திட்டம் பற்றிய தொனி வெளிப்பட்டது.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புதல். குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில், கட்சி அரசியல் செயற்பாடுகளைக் கைவிட்டுச் சிங்களத் தேசிய இயக்கமாகச் செயற்பட வேண்டும் என்ற பலமான கருத்துக்கள் புலமைசார்ந்த அமைப்புகளிடம் காணப்படுகின்றன.

இன ஒற்றுமை என்ற கோசத்தைச் சர்வதேசத்துக்குக் காண்பிக்கத் தேர்தல்களில் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒப்பாசாரத்துக்காக உள்ளடக்கிப் போட்டியிட வேண்டும் என்ற கருத்துக்களும் ரணிலுக்கு ஆதரவான பௌத்த குருமாரிடம் உண்டு.

குறிப்பாக இன அடையாளங்களை மையமாகக் கொண்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பெயர்கள் கூட எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பங்களும் புலமைசார் குழுவில் அங்கம் வகிக்கும் பௌத்த தேரர்களிடம் காணப்படுகின்றன.

அதற்கு ஏதுவாக மாகாண சபைகள் - உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றின் எல்லைகளை மீளாய்வு செய்யும் குழு தீர்மானிக்கக்கூடிய ஆபத்துக்களும் இத் திட்டங்களின பின்னால் ஒழிந்திருப்பதை மறுக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அணுகுமுறைகள் தொடர்பான ஆபத்துக்களை தமிழ்த்தேசியக் கட்சிகளும் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் புரிந்துகொண்டதாக இல்லை.

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் பொதுவாகவே சிங்களக் கட்சிகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளிட்ட அரசியல் நியமனப் பதவிகள் அனைத்தையும் முப்பது வருடங்களுக்கும் மேலாக அனுபவித்துப் பழகிப் போனவர்கள்.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் அவ்வாறில்லை. இருந்தாலும் ரணில் முன்னெடுக்கும் நகர்வுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. 2015 இல் இந்த அனுபவத்தைத் ஈழத் தமிழர்கள் பெற்றிருந்தனர். தற்போது ராஜீவ் காந்தி படுகொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவே சரணாகதி என்ற நிலையில் கூட்டமைப்புச் செல்லக்கூடிய ஆபத்துகளும் உண்டு.

இன அடையாளங்களை மையமாகக் கொண்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பெயர்கள் கூட எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பங்களும் புலமைசார் குழுவில் அங்கம் வகிக்கும் பௌத்த தேரர்களிடம் காணப்படுகின்றன

ஆகவே சமகாலப் புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதாரத்துக்கு ஏற்ப இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களை ஏட்டிக்குப் போட்டியாக அமெரிக்க - இந்திய மற்றும் சீன அரசுகள் கையாளப் பயன்படுத்தும் உத்திகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கட்சி அரசியலுக்கு அப்பால் சிங்களத் தேசமாகச் சிந்திக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் போன்று, தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களின் அணுகுமுறைகள் இல்லை.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப அணுகிச் செல்லக்கூடிய அரசியல்- பொருளாதாரச் சூழல் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பால் அதனை நுட்பமாகக் கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட பக்குவம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை.

வெளிச் சக்திகளினால் கையாளப்படும் சுமந்திரனை மன்னிக்கலாம். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசிய அரசியலை நினைவேந்தல்களோடு மாத்திரம் மட்டுப்படுத்தி அதனை சாதாரண கட்சி அரசியல் வாக்குகளுக்கான இலவச மூலதனமாகச் சம்பாதிக்கிறாரே தவிர, தமிழ்த்தேச விடுதலை உணர்வு என்பது அவருக்கோ முன்னணிக்கோ இல்லை என்பது பட்டவர்த்தனம்.