2009 இற்கு முன்னரும் அதன் பின்னரான சூழலிலும்

இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதை நுட்பமாகக் கையாளும் சிங்கள ஆட்சியாளர்கள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கையாளப்படும் சக்தியாக மாறிய நிலையில், ஐ.நா.வின் பங்களிப்பைக் கோரும் சம்பந்தன்
பதிப்பு: 2022 நவ. 16 09:36
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: நவ. 19 21:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது. ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் கேட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருகில் இருந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தாமல், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில், தற்போது ஐ.நாவை நாடுகிறார் சம்பந்தன்.
 
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளைப் பெற முடியும் என்ற எண்ணக்கரு சிங்கள ஆட்சியாளர்களினால் சர்வதேசத்துக்கு ஊட்டப்பட்ட ஒரு நிலையிலேதான் ஐ.நா. அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்திருக்கின்றார்

அதுவும் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து ஜெனிவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பலவீனப்படுத்திய நிலையில் ஐ.நா வின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார் சம்பந்தன்.

இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அதுவும் வடமாகாண உறுப்பினர்களை மாத்திரம்.

ஆகவே மகிந்த ராஜபக்ச 2006 இல் இலங்கை உயர் நீதிமன்றத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு மாகாணத்தைப் பிரித்ததை நியாயப்படுத்தியே ரணில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது பட்டவர்த்தனம்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்று மார்தட்டுகின்ற வடக்குக் கிழக்குத் தமிழ் கட்சிகள்--

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன

மாகாண சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு

நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமானம்

நாடாளுமன்றச் சிறப்புச் சலுகைகள்

இப்படி அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு இனப் பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐ.நா. பங்களிப்புச் செய்ய வேண்டுமெனச் சம்பந்தன் கோருவது எந்த அடிப்படையில்?

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னைய காலத்தில் அதாவது 70 களில் இருந்து 83 வரையான காலத்தில் எந்த வகையான அரசியலில் ஈடுபட்டார்களோ அதேபோன்ற அரசியல் நடைமுறைகளையே 2009 மே மாததிற்குப் பின்னரான சூழலிலும் தமிழரசுக் கட்சி கையாளுகின்றது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகியவையும் இதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளைப் பெற முடியும் என்ற எண்ணக்கரு சிங்கள ஆட்சியாளர்களினால் சர்வதேசத்துக்கு ஊட்டப்பட்ட ஒரு நிலையிலேதான் ஐ.நா. அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்திருக்கின்றார்.

இந்த நிலையில் ஐ.ந.வின் பங்களிப்பைச் சம்பந்தன் கோரியிருப்பது வேடிக்கை அரசியல்.

சிங்களக் கட்சிகளுடன் இணைந்து இணக்க அரசியலில் ஈடுபடும் டக்ளஸ், கருணா. வியஜகலா, அங்கஜன் போன்றவர்களைக் குற்றம் சுமத்த முடியாது. ஆனால் இவர்களின் அரசியல் ஏற்புடையதல்ல.

இருந்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் இதுதான் என்று பகிரங்கமாகச் சொல்கிறார்கள். அமைச்சர்களாகவும் பதவி வகித்திருக்கின்றனர். அவர்கள் தமிழ்த்தேசியம் பேசியதுமில்லை.

ஆனால் தமிழ்த்தேசியம் என்பதை மக்களின் வாழ்வியலாகவும் பண்பாடாகவும் மாற்ற விரும்பாமல் தேர்தல் காலத்தில் மாத்திரம் அதனைப் பயன்படுத்தும் மேற்படி தமிழ்த்தேசியக் கட்சிகள் அரசாங்கத்தோடு எந்த முகத்துடன் பேச்சுக்குச் செல்ல முடியும்?

சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மலிந்த மொறகொட, அமரர் மங்கள சமரவீர, மகிந்த சமரசிங்க, கோட்டாபய ஆகியோர் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் போருக்கு முன்னரும் போருக்குப் பின்னரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேசத்தைக் கையாள்வதில் ஒருமித்த குரலில் செயற்பட்டு வந்தனர். வருகின்றனர்

நினைவேந்தல்களுடன் மாத்திரம் தமிழ்த் தேசியத்தை மட்டுப்படுத்தி அதனைத் தேர்தல்கால வாக்குகளாக மாத்திரம் மாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் மதில்மேல் பூனை போன்றிருப்பதன் நோக்கம்?

ஆக தேர்தலில் போட்டியிடுவதற்கான முற்கூட்டிய தயாரிப்பு மாத்திரமே முன்னணியிடம் விஞ்சியுள்ளன.

சமகாலப் புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதாரச் சூழலில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற ஜனநாயக அரசியல் பண்பை மறுதலிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் முன்னணி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் மேற்படி தேர்தல்களில் போட்டியிடுவதில் மாத்திரமே குறியாகவுள்ளன. அதற்காகச் சாதாரண சிங்கள அரசியல்வாதிகள் போன்று பாதிக்கப்பட்ட தமிழர்களையும் ஏமாற்றுகின்றன.

ஆகவே--

தனித் தனிக் கட்சியாகச் செயற்பட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டாலும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் - தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்ற இரு அடிப்படை விடயங்களில் ஒருமித்த குரலில் செயற்படுதல் அவசியம்.

அதற்கேற்ப ஒவ்வொரு கட்சிகளிலும் பொது அமைப்புக்களில் இருந்தும் மொழி அறிவு மற்றும் தேசிய அரசியல் ஆற்றல் உள்ள குழு ஒன்றை அமைத்துக் கொழும்பு - சர்வதேசம் என்ற இரு அரசியல் பரப்பையும் கையாள வேண்டியது காலததின் கட்டாயம்.

இதனைச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

இப்படி இறுக்கமான ஒரு அமுக்கக் குழு ஒன்று (Pressure Group) தமிழர் தரப்பு ஒருமித்த குரலில் ஆரோக்கியமாக இயங்கினால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்கு ஐ.நா. அல்லது ஏதேனும சர்வதேச நாடுகள் அனுசரனைப் பணிக்கு வரும். அல்லது பங்களிப்புச் செய்யும்.

இருதரப்புப் பேச்சுவார்த்தை என்ற அந்தஸ்த்தைக்கூடப் பெற முடியும.

சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மலிந்த மொறகொட, அமரர் மங்கள சமரவீர, மகிந்த சமரசிங்க, கோட்டாபய ஆகியோர் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் போருக்கு முன்னரும் போருக்குப் பின்னரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேசத்தைக் கையாள்வதில் ஒருமித்த குரலில் செயற்பட்டு வந்தனர். வருகின்றனர்.

இவர்கள் சிங்களத் தேசியத்துக்காகச் சர்வதேசத்தைக் கையாளும் நுட்பமான இராஜதந்திரிகள்.

குறிப்பாகப் 2009 போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சில சமயங்களில் இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துவிடலாம் என்ற சந்தேகத்தில், மிலிந்த மொறொகொட மூவர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இந்தியாவைக் கையாண்டார்.

குறிப்பாகத் துரொய்க்கா (troika) எனப்படும் மூவர் கொண்ட உயர்மட்டக் குழுவை இலங்கை உருவாக்கியது. அதிலே பசில் ராஜபக்ச அங்கம் வகித்திருந்தார்.

இதனை மகிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பதவி வகித்திருந்த லலித் வீரதுங்க பிற்.எல்கே என்ற இணையத்தளத்துக்கு .வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்.

இன்றும் கூட இந்தியாவைச் சிங்கள ஆட்சியாளர்கள் இவ்வாறுதான் கையாளுகிறார்கள். குறிப்பாக மிலிந்த மொறகொட புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராகத் தற்போது பதவி வகிக்கிறார். மிலிந்த மொறகொடவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கிய தூதுவர் நியமனத்தை ரணில் விக்கிரமசிங்க நீடித்திருக்கிறார்.

அதாவது இந்தியா தமிழர்கள் பக்கம் சென்றுவிடக் கூடாதென்பதில் சிங்களம் இன்றுவரை குறியாகவே இருக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தியாவைக் கையாளாமல், இந்தியாவினால் கையாளப்படும் சக்தியாகவே மாறிவிட்டது. அமெரிக்கா சொல்வதையும் கேட்கிறது. அதனை முன்னணி ஒழிந்திருந்து வேடிக்கை பார்க்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தியாவைக் கையாளாமல், இந்தியாவினால் கையாளப்படும் சக்தியாகவே மாறிவிட்டது. அமெரிக்கா சொல்வதையும் கேட்கிறது. அதனை முன்னணி ஒழிந்திருந்து வேடிக்கை பார்க்கிறது

இந்த அரசியல் பின்புலத்தில் ரணிலுடனான பேச்சுக்கு ஐ.நா. பங்களிப்புச் செய்ய முடியுமா? சம்பந்தன் யாரை ஏமாற்றுகிறார்? கஜேந்திரகுமார் யாருக்காகத் தமிழ்த் தேசியத்தை அடைகாக்கிறார்?

குறிப்பு

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை முற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளது.

சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்புச் செய்ய வேண்டுமெனச் சம்பந்தன் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.