புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி

தேசமாகச் சிந்திக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் - ரணில் கையாளும் நகர்வு

சந்தர்ப்பங்கள் இருந்தும் நுட்பமாக அணுகக்கூடிய தலைமையற்ற சமூகமாகத் தமிழ்த்தரப்பு
பதிப்பு: 2022 நவ. 27 12:13
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 30 19:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் கொள்கையைத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கையாளுகிறார் என்பதைவிட, சிங்கள ஆட்சியாளர்களின் கொள்கைதான் அது என்பதை ஜே.வி.பி நிரூபித்து வருகிறது. சென்ற புதன்கிழமை கொழும்பில் ஜே.வி.பி தமிழ் மக்களுடன் நடத்திய சந்திப்பில் அது வெளிப்பட்டுள்ளது. இது பௌத்த சிங்கள நாடு என்பதுதான் ஜே.வி.பியின் கொள்கை. அதன் உறுப்பினர்களுடைய நாடாளுமன்ற உரைகளில் இருந்து இக் கொள்கை ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் மூலம் மேலும் அது பட்டவர்த்தனமாகியுள்ளது.
 
2009 மே மாதம் போரை மகிந்த வெற்றிகொண்டது போன்று, 2023 மார்ச் மாதம் ரணில் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தரப்பை வெற்றி கொள்வார் என்பது கசிந்துள்ளது. சர்வதேசம் ரணிலைக் கையாளும் முறைகளும், ரணில் சர்வதேசத்தை அணுகும் விதமும் அதனை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் கோட்டாபய ராஜபக்சவைத் துரத்திய சிங்களவர்களின் வாய்களும் மூடப்படும்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியா மூலம் ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொண்டது என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய ஜே.வி.பி தலைவர் அனுரகுமர திஸாநாயக்கா, தனிப்பட்ட முறையில் 13 ஐ தான் நிராகரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த அரசியல் தீர்வுக்கோ அல்லது இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதிலோ அனுரகுமார திஸாநாயக்க தெளிவுடன் இல்லை என்று சந்திப்பில் பங்குபற்றிய தமிழ்ச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறினார்.

அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் அல்லது இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமென்ற தொனியும் வலுவாகத் தென்பட்டது என்றும் அந்தச் செய்தியாளர் கூறியிருக்கிறார்.

2006 இல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வடக்குக் கிழக்கு மாகாணத்தை இரண்டாகப் பிரித்தவர்கள்தான் இந்த ஜே.வி.பி. ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் உருவாகியுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலை என்பதைத் தமக்குச் சாதகமாக்கினாலும், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது ஜே.வி.பிக்கு நன்கு தெரியும்.

ஆனால் தமது ஆசனங்களை அதிகரித்துப் பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்கும்போது ஆதரவு கொடுத்து ஆட்சியில் பங்கெடுக்கவும் ஜே.வி.பி விரும்புகின்றது.

அப்படி இல்லையேல் பலமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் ஜே.வி.பியிடம் உண்டு. அதற்கேற்பவே ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நகர்வுகளும் அமைந்திருக்கின்றன.

குறிப்பாக சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைப் பலவீனமாக்கிப் பலமான எதிர்க்கட்சி இல்லாத அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க ரணில் முற்படுகின்றார். ஜே.வி.பியை ஒருபோதும் தனது அணிக்குள் அல்லது தனது அரசாங்கத்துடன் குறைந்த பட்சம் ஒத்துழைத்துச் செயற்பட ஜே.வி.பி விரும்பாது என்பது ரணிலுக்குத் தெரியாததல்ல.

ஆகவே சஜித் அணியைத் தனிமைப்படுத்திப் பலவீனமாக்கி அல்லது சஜித் அணியைத் தனது அரசியல் நகர்வுக்குள், அதாவது அன்னம் சின்னத்துக்குள் உள்வாங்கிச் செயற்பட ரணில் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் சில சமயங்களில் வெற்றியளித்தால், அனுரகுமார திஸாநாயக்கா விரும்புவது போன்று பிரதான எதிர்க்கட்சியாக வரக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

டளஸ் அழகபெரும தலைமையில் இயங்கும் முன்னாள் பெதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களின் அணி ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த ஒரு தேர்தல்களிலும் பெருமளவு ஆசனங்களைப் பெறக்கூடிய நிலைமை இல்லை. ஜே.வி.பி இணைந்து போட்டியிட்டால் கூட அது சாத்தியமாகக் கூடிய தன்மைகள் மிகக் குறைவு.

சஜித் - டளஸ் கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட வெற்றி சாத்தியமா என்பதும் கேள்விக்குரியதுதான்.

சம்பந்தன் அல்லாத சூழலில் வடக்குக் கிழக்குத் தமிழ்க் கட்சிகளிடம் எதிர்க்கட்சிப் பதவி சென்றுவிட்டால், மீண்டுமொரு பிரிவினைவாதம் அல்லது இனப்பிரச்சினை சர்வதேசமயப்படுதல் போன்ற காரண காரியங்களுக்கு அது வசதியாக அமைந்துவிடும் என்ற ஒரு அச்சம் சிங்கள தலைவர்களிடம் உண்டு

ஆகவே தற்போது ரணில் மேற்கொண்டு வரும் நகர்வின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியை மீளச் செயற்படுத்தி, அதன் அன்னம் சின்னத்தில் ஜே.வி.பி தவிர்ந்த அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கித் தேர்தலில் போட்டியிட எடுக்கும் முயற்சிதான் முன்னிலை வகிக்கிறது என்பது தற்போது கண்கூடு.

அன்னம் சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன உள்ளிட்ட ஏனைய சிறிய சிங்களக் கட்சிகள் குறிப்பாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் இடதுசாரிக் கட்சி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீவங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றை இணைக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.

அத்துடன் சரத் பொன்சேகா, பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆகியோரைக் கூட இணைக்கும் முயற்சியும் உண்டு. அப்படி இவர்கள் இணையாவிட்டால் ரணிலுக்கு அது பெரிய பிரச்சினையாக இருக்கவும் வாய்ப்பில்லை.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ரணிலுடன் மிக நெருக்கமாக செயற்பட்டவர். 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைக்கச் சந்திரிகா முன்நின்று செயற்பட்டுமிருந்தார்.

ஆனால் பொருளாதார நெருக்கடியின் பின்னரான அரசியல் சூழலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கின் பிரகாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதால், ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் ஆதரவைத் தவிர்த்துவிட்டுச் செயற்பட முடியாத சிக்கல் உண்டு.

இதனால் சந்திரிகா ரணிலோடு இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் அரிதாகிவிட்டன. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கைப்பற்றவும் முடியாது. அதனால் சந்திரிகா தற்போதைய அரசியல் சூழலில் தீவிர முயற்சி எடுத்தாலும் ரணில் - மகிந்த கூட்டை உடைக்கவே முடியாது.

ரணிலின் மேற்படி நகர்வுக்கு மாற்றீடான காய் நகர்த்தல்களையும் சந்திரிகா முன்னெடுக்க முடியாத அரசியல் பின்னணிகளே அதிகம்.

அத்துடன் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சந்திரிகாவினால் பலப்படுத்தவும் முடியாது. அப்படியென்றால், டளஸ் தலைமையிலான அணியும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் சஜித் அணியோடு கூட்டுச் சேர வேண்டும். ஆனால் அது இலகுவான காரியம் அல்ல. இந்த அணியோடு ஜே.வி.பியும் கூட்டுச் சேரக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

ஆகவே இன்று வரைக்கும் ரணில் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் முன்னேறிச் செல்வதையே அவதானிக்க முடியும். சென்ற செவ்யாக்கிழமை கொழும்பில் ரணில், மகிந்த மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் சந்திப்புகள் இடம்பெற்றிருக்கிறன.

அன்னம் சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியாகச் செயற்படுவது குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காய் நகர்த்தல்களை மகிந்த ராஜபக்ச இச் சந்திப்பில் ஏற்றிருக்கிறார்.

அத்துடன் ஏனைய சிறிய சிங்களக் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ் - முஸ்லிம் கட்சிகள், வடக்குக் கிழக்கில் இருந்து சிங்களக் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் போன்றவற்றையும் இணைக்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் ஆசனம் குறைவடையும் என்ற சமிக்ஞை தற்போதிருந்தே வெளிப்படுகின்றன. இரு ஆசனங்களில் இருந்து ஒரு ஆசனமாகக் குறையக் கூடிய ஆபத்துக்களே முன்னணிக்கு உண்டு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் ஆசனம் குறைவடையும் என்ற சமிக்ஞை தற்போதிருந்தே வெளிப்படுகின்றன. இரு ஆசனங்களில் இருந்து ஒரு ஆசனமாகக் குறையக் கூடிய ஆபத்துக்களே முன்னணிக்கு உண்டு.

அத்துடன் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் இம்முறை கூடுதல் ஆசனங்களை அல்லது கூட்டமைப்பு - முன்னணி ஆகியவற்றின் வாக்குகளைச் சிதறடிக்கும் அளவுக்குப் பலம் பெற்று வருகின்றனர் என்பதும் தெரிகிறது.

ஆகவே இப் பின்னணியில் மேற்படி ரணில் விக்கிரமசிங்கவின் அன்னம் சின்னத்தில் அனைத்துச் சிங்களக் கட்சிகளும் போட்டியிடுவது என்ற உத்தி வெற்றியளிக்குமானால், ஜே.வி.பி பிரதான எதிர்க்கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்துடன் ஜே.வி.பி பிரதான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமென ரணில் - சஜித் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் பௌத்த குருமாரும் விரும்புவர்.

ஏனெனில் சம்பந்தன் அல்லாத சூழலில் வடக்குக் கிழக்குத் தமிழ்க் கட்சிகளிடம் எதிர்க்கட்சிப் பதவி சென்றுவிட்டால், மீண்டுமொரு பிரிவினைவாதம் அல்லது இனப்பிரச்சினை சர்வதேசமயப்படுதல் போன்ற காரண காரியங்களுக்கு அது வசதியாக அமைந்துவிடும் என்ற ஒரு மிகைப்படுத்தப்படட அச்சம் சிங்கள தலைவர்களிடம் உண்டு.

ஆகவே இப் பின்புலத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு ஜே.வி.பியிடம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் எனலாம். இந்த நகர்வுகளை அவதானித்தே, ஜே.வி.பி தமிழ் மக்களை அணைத்துச் செல்வது போன்ற ஒரு அணுகுமுறையைக் கையாள முற்படுகின்றது.

சென்ற புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் தமிழர்கள் அழைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னணியும், ஆனால் இலங்கை ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பை விட்டுவிட முடியாத தமது அரசியல் நிலைப்பாட்டையும் ஜே.வி.பி தம்மைச் சந்தித்த தமிழர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆகவே இந்த இடத்தில் வடக்குக் கிழக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? அதுவும் எழுபது ஆண்டுகள் அரசியல் போராட்டம் நடத்தி இன்று பாதுகாப்பற்ற அரசியல் சமூகமாகவும், அரசற்ற மற்றும் அரசியல் அதிகாரமற்ற சமூகமாகவும் இருக்கும் நிலையில் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் என்ன?

பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் சிதைவடைந்து வெவ்வேறாகப் பிரிந்துள்ள நிலையில், மீண்டும் தம்மை ஒரு அணியாகவும் ஒருமித்த குரலிலும் செயற்படும் உத்திகளை கையாள முற்படும் இச் சூழலில், தமிழ்த்தேசியக் கட்சிகள் வெறுமனே கைகட்டி அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

அல்லது பேச்சுக்கு வாருங்கள் என்ற ரணிலின் அழைப்புத் தொடர்பாகத் தங்களுக்குள் முட்டிமோதிக் கொண்டும், அது பற்றிக் கூடிய ஆராய்ந்தும் காலத்தைக் கடத்தப் போகின்றனரா?

அப்படிக் காலத்தைக் கடத்தும் உத்தியாகவே ரணிலும் பேச்சுக்கான அழைப்பை விடுத்திருக்கவும் கூடும். ஏனெனில் அன்னம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வரும் வேளையில், அதுவும் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர முற்படும் நிலையில் பேச்சுக்கான அழைப்பு என்பது, காலத்தைக் கடத்தும் செயற்பாடுதான் என்பது வெளிச்சமாகிறது.

அத்தோடு தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தையும திசை திருப்பித் தமது இலங்கை ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பைப் பலப்படுத்தும் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாக ரணில் முன்னெடுக்கிறார் என்பதும் ஏற்கனவே தெரிந்து கொண்ட காரியம்.

டளஸ் அழகபெரும தலைமையில் இயங்கும் முன்னாள் பெதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களின் அணி ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த ஒரு தேர்தல்களிலும் பெருமளவு ஆசனங்களைப் பெறக்கூடிய நிலைமை இல்லை. ஜே.வி.பி இணைந்து போட்டியிட்டால் கூட அது சாத்தியமாகக் கூடிய தன்மைகள் மிகக் குறைவு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்க இந்திய அரசுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் இருந்து பெருமளவு நிதியைப் பெறும் நோக்கிலும் மேற்படி உத்திகளைக் கையாண்டு, இலங்கையின் இறைமையை, 2009 இல் இழந்த சர்வதேச ஆதரவுகளையும் ரணில் மீளக் கட்டியெழுப்புகிறார்.

2009 இற்குப் பின்னரான பதின்மூன்று வருடங்களிலும் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் செயற்படவில்லை. ஆனால் இனிமேலாவது ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும் என்ற அவசியத்தை ரணில் மேற்கொள்ளும் மேற்படி நகர்வுகள் உணர்த்துகின்றன.

ஆனால் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியும் அது பற்றிப் புரிந்துகொள்வதாக இல்லை. அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஏதாவது ஒரு தேர்தல் வரும் என்பதை ரணிலின் மேற்படி நகர்வுகள் கோடி காட்டுகின்றன.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழல், அதனால் மாறிக் கொண்டிருக்கும் உலக அரசியல் ஒழுங்குகள், அதனை மையமாகக் கொண்ட வல்லரசு நாடுகளின் பனிப்போர் ஆகியவற்றை மிக நுட்பமாக அறிந்து, இலங்கையின் முக்கியத்துவத்தை ரணில் உயர்த்துகிறார்.

அதற்கேற்ப அமெரிக்க - இந்திய அரசுகளும் ஒத்துழைக்கின்றன. சீனாவிடம் இருந்து பெறும் பெருளாதார உதவிகள் இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமெரிக்க இந்தியா அரசுகளைப் பாதிக்காத தன்மையோடு ரணில் காய் நகர்த்துகிறார்.

இச் சூழலைப் பயன்படுத்தித் தன்னைப் பிரதான எதிர்க்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஜே.வி.பி கையாளும் உத்திகளைக் கூடத் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை படிக்கவில்லை.

இப் பின்னணியில் 2009 மே மாதம் போரை மகிந்த வெற்றிகொண்டது போன்று, 2023 மார்ச் மாதம் ரணில் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தரப்பை வெற்றி கொள்வார் என்பது கசிந்துள்ளது.

சர்வதேசம் ரணிலைக் கையாளும் முறைகளும், ரணில் சர்வதேசத்தை அணுகும் விதமும் அதனை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் கோட்டாபய ராஜபக்சவைத் துரத்திய சிங்களவர்களின் வாய்களும் மூடப்படும்.

இந்த நுட்பமான அணுகுமுறைதான், தேசம் என்ற நோக்கில் ஒருமித்த குரலில் செயற்படுதல் என்பதைக் குறிக்கும்.

ஒற்றை மனிதனாக நின்று ரணில் கையாண்டு வரும் நுட்பமான அணுகுமுறையை 2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த் தரப்பு கையாண்டிருக்க இருக்க வேண்டும்.

வெறுமனே தேர்தல் அரசியலுக்குள் முடங்கியதால் உள்ளக முரண்பாடுகளை மாத்திரமே வளர்த்துக் கொள்ள முடிந்தது. ஆனாலும் சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன. நுட்பமாகக் கையாள ஒழுங்கான தலைமைதான் இல்லை.