புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம்

அமெரிக்க வியூகம்- ரசிய இந்திய உறவில் தாக்கம் செலுத்துமா?

ஈழத்தமிழர்களும் தமிழ்நாடும் செய்ய வேண்டியதென்ன?
பதிப்பு: 2022 டிச. 23 22:28
புதுப்பிப்பு: டிச. 29 18:09
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சீனாவுக்கு சார்பான பிறிக்ஸ் மற்றும் சங்காய் ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, தற்போது அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டுடனும் இந்தியா இயங்குகின்றது. குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்கின்றது. ஆனால் தற்போது பிரச்சினை என்னவென்றால், ஒரு நிலைப்பாட்டோடு செயற்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கடுமையான வேண்டுகோள். இந்தியாவைத் தமது தெற்காசிய நகா்வுக்குள் கொண்டுவரும் நோக்கிலேயே தற்போது பாகிஸ்தானுடன் பைடன் நிர்வாகம் நெருங்கிய உறவை ஆரம்பித்திருக்கிறது.
 
ஈழத்தமிழ் புதிய இளம் சந்ததிக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் புதிய சந்ததிக்கும் பொறுப்பு அதிகமாகவே உள்ளது என்பதை தெற்காசியாவை நோக்கிய ஏட்டிக்குப் போட்டியான அமெரிக்க- இந்தியக் காய் நகர்த்தல்கள் படிப்பினைகளாக அமைகின்றன

இரண்டு நாள் பணயத்தை பாகிஸ்தானுக்குக் கடந்த வாரம் மேற்கொண்ட அமெரிக்க மத்தியக் கட்டளைத் தலைவர் ஜெனரல் மைக்கேல் ஈ. குரில்லா பிராந்திய பாதுகாப்புக்குப் பகிரப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர் தொடர்ந்து செயற்படுவதாகப் பாராட்டினார் என்று பாக்கிஸ்தான் ருடே என்ற ஆங்கில நாளேடு சென்ற பதினேழாம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கடற்படையைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டமைக்கு ஏற்ப பாகிஸ்தானின் விமானப் படைக்கு F-16 என்ற அதி சக்தி வாய்ந்த போர் விமானத்தையும் அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.

நாநூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான F-16 போர் விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து இந்தியா கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் பாகிஸ்தானுக்கு அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புகள் செய்ய வேண்டும் என்று வோசிங்கடனில் கூறியுள்ளதாக அல்யசீரா செய்திச் சேவை (Aljazeera) தெரிவித்துள்ளது.

ஒக்ரோபர் இரண்டாம் திகதி முதல் நான்காம் திகதி வரை, பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் ப்ளோம், பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்று பெயரிடப்பட்ட மாநிலத்துக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணம் குறித்துத் தற்போது இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்க ஆரம்பித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்டும் பகுதி உட்பட முழு காஷ்மீர் பிரதேசத்தையும் இந்தியா உரிமை கோரி வரும் நிலையில் அமெரிக்கத் தூதுவர் அங்கு பயணம் செய்திருக்கின்றமை புதுடில்லிக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அமெரிக்க தூதுவர் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பிரதேசத்துக்குச் சென்று அங்கு பல சந்திப்புகளை நடத்தியமைக்குத் தற்போது கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியை ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டமை புதுடில்லிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. த வயர் டிப்ளமேசி என்ற இந்திய இணையம் (thewire.in diplomacy) இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் தெற்காசிய நாடுகளுடனான தனது உறவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, உணர்வுததிறன் வாய்ந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் மதிப்புமிக்க பங்காளியாக இருக்கும் போது, இந்தியா உலகளாவிய பங்காளியாக இருக்குமெனக் கூறியிருக்கிறது.

அரசியல் விடுதலை கோரி நிற்கும் அரசற்ற ஈழத்தமிழ்ச் சமூகம், சுயமரியாதையோடு வாழக்கூடிய ஏற்பாடுகளையும், எந்த ஒரு வெளிச் சக்கதிகளையும் கையாளக்கூடிய புவிசார் அரசியல் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலமிது

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க இந்திய உறவுகளுக்குரிய தொடர்புகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளதாக த பிறின்ற் என்ற இந்தியச் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஜீ 20 நாடுகளின் குழுவுக்கான புதிய தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதால் அதற்கு அமெரிக்கா பூரண ஆதரவு கொடுக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகின்றது. ஆனால் பாக்கிஸ்தானுடனான உறவைச் சமாளிக்க அமெரிக்க இதனைக் கூறுகின்றது போல் தெரிகின்றது.

இம்ரான்கான் சீனச்சார்புடன் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டிலேயே பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் அமெரிக்காதான் என்று இம்ரான்கான் தற்போது குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளார்.

புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எழுபது வயதான எதிர்க்கட்சித் தலைவர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அமெரிக்கச் சார்புடையவர் என்பதாலேயே அமெரிக்க - பாக்கிஸ்தான் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இம்ரான் கானின் குற்றச்சாட்டை அமெரிக்கா ஏற்கவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரும் புதிருமாக இருந்தாலும், ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் ரசியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இரு நாடுகளும் செயற்பட்டிருந்தன. இந்தியாவுக்குச் சீனாவுடன் பகைமை இருந்தாலும், ரசிய ஆதரவு மூலம் சீன எதிர்ப்பைத் தணிக்க இந்தியா முயன்றது. ஆனால் பாகிஸ்தான் முற்று முழுதான சீனச்சார்புடன் இயங்கியது.

இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் இந்தோ – பசுபிக் பிராந்தியம் உள்ளிட்ட தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா செல்வாக்கை இழக்க நேரிடும். இதன் காரணமாகவே பாகிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்கும் ஒருவகையான அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்து வருகின்றது எனலாம்.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்காக இந்தியா இன்றுவரை அமெரிக்காவை முழுமையாகப் பகைக்கவில்லை. அதேபோன்று இந்தியா, ரசிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் அமெரிக்காவும் முற்று முழுதாக இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை.

ஆனாலும் இப் பனிப்போர் பின்னணியில் அமெரிக்கா மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் இந்தியாவுக்கு பலமான அரசியல் அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்பதை புதுடில்லியின் சமீபகால அணுகுமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெப்ரவரி மாதம் ரசிய – உக்ரெயன் போர் ஆரம்பித்தபோது அமைதிகாத்த இந்தியா இரண்டு மாதங்களின் பின்னரே போரை இந்தியா ஆதரிக்கவில்லை என்று மாத்திரம் கூறியிருந்தது. அத்துடன் ரசியாவையும் இந்தியா நியாயப்படுத்தியிருந்தது.

இங்கு ஆரம்பித்த அமெரிக்கக் காய்நகர்த்தல்கள் ஏப்ரல் மாதம் பாக்கிஸ்தானில் இம்ரானின் அரசாங்கத்தைக் கவிழ்த்துப் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதற்கு அடுத்த ஏழு மாதங்களிற்குள் பாகிஸ்தானுடன் உறவைவும் அமெரிக்கா வளர்த்துக் கொண்டது.

கடந்த செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானின் தலைநகர் சமர்கண்டில் நடைபெற்ற சீனாவின் சங்காய் உச்சிமாநாட்டில் (State of the Shanghai Cooperation Organisation - SCO) இந்தியாவையும் பாகிஸ்தானையும் முரண்பாட்டில் உடன்பாடாகச் சேர்த்து வைக்கும் முயற்சியைச் சீனா முன்னெடுத்திருந்தது.

2020 இல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேரிட்ட சீன - இந்திய மோதல்களுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஜீ பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டதால் எல்லை மோதல்கள் தணிந்தன.

அதேநேரம் சவுதி அரேபியவுக்கும ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூடத் தீர்த்து வைக்கும் நகர்வை சங்காய் உச்சிமாநாட்டில் சீனா மேற்கொண்டது. ஆகவே தெற்காசியப் பிராந்தியத்தை மையப்படுத்திய சீன நகர்வுக்குள் எதிரும் புதிருமாக இருந்த இந்தியா பாக்கிஸ்தான், மற்றும் அரபு நாடுகளான சவுதி அரேபிய ஈரான் ஆகிய நாடுகளின் முரண்பாடுகளை குறைந்தபட்ச உடன்பாடாகச் சீனா சாதகமாக மாற்ற முற்பட்டதன் பின்னரான சூழலிலேயே, அமெரிக்கா பாக்கிஸ்தானைத் தன் வசப்படுத்தும் இந்த நகர்வைத் தீவிரமாக மேற்கொண்டது எனலாம்.

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவுடனும் வட இந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் ரசியாவுடன் கூட்டுச் சேர்ந்து சீனாவைக் கட்டுப்படுத்தும் புதுடில்லியின் இரட்டை அணுகுமுறை புவிசார் அரசியலில் ஒத்துவரக்கூடியதல்ல என்று அமெரிக்கா இந்தியாவுக்குப் போதனை செய்திருக்கின்றது போல் தெரிகின்றது.

அதாவது ரசிய ஆதரவைக் கைவிட்டு முழுமையாக அமெரிக்காவுடன் நின்றால் இந்தோ – பசுபிக் மற்றும் வட இந்தியப் பாதுகாப்பு விடயங்கள் உட்பட இந்தியாவுக்கு ஏற்ற அனைத்து விவகாரங்களிலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதைப் புதுடில்லிக்கு அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது.

சீன - இந்திய அரசியலைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு நினைத்தால் புதிய தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்கி தென்னிந்தியாவுக்கு ஏற்ற கொள்கை ஒன்றை வகுக்க முடியும். கேரளா கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கி இந்த மாநிலங்கள் மத்தியில் முரண்பாடுகளில் ஓர் உடன்பாடாகத் தென்னிந்தியக் கொள்கை ஒன்றை வகுக்கலாம்

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, ரசியா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் உள்ளிட்ட அரசியல் ரீதியான புவிசார் ஒத்துழைப்புகள் அனைத்தையும் சாதகமாக்கிக் கொண்டு பிராந்தியத்தில் தன்னைப் வல்லாதிக்கச் சக்தியாக மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற வேண்டுமென்பதிலும் இந்தியா அதீத அக்கறை கொண்டுள்ளது.

ரசியா மூலம் சீன உறவை மேற்படுத்தலாம் என்ற அணுகுமுறையை இந்தியா வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த செவ்வாயன்று சீன - இந்திய மெய்நிகர் எல்லையைச் சீன இராணுவம் கடக்க முற்பட்டதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவின் குற்றம் சுமத்தியுள்ளதாக சீ.என்.என் செய்திச் சேவை சென்ற பதின்மூன்றாம் திகதி கூறியுள்ளது.

தற்போது நிலமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும் சீன - இந்திய எல்லை மோதலில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்ற அமெரிக்கா உத்தரவாதம் எதிர்வரும் காலங்களில் இல்லாமல் போகலாம். அல்லது அமெரிக்க அழுத்தங்களுக்குப் புதுடில்லி இணங்க வேண்டுமென்ற நிலையும் உருவாகலாம்.

இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ரசிய உறவு, சீனாவுடனான மென்போக்கு, அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு என்ற பல்வகைத் தன்மைக் கொள்கையில் இருந்து இறங்கி வரவர வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே சீன - இந்திய அரசியலைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு நினைத்தால் புதிய தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்கி தென்னிந்தியாவுக்கு ஏற்ற கொள்கை ஒன்றை வகுக்க முடியும். கேரளா கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கி இந்த மாநிலங்கள் மத்தியில் முரண்பாடுகளில் ஓர் உடன்பாடாகத் தென்னிந்தியக் கொள்கை ஒன்றை வகுக்கலாம்.

ஆனால் திராவிடக் கட்சிகள் எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்று கூறமுடியாது. இருந்தாலும் சீன - இந்திய அரசியல் நிலைமையைச் சாதகமாக்கித் தமிழகத்தில் உள்ள முற்போக்குச் சக்திகள் ஆழமான அறிவுடன் மேற்படி நகர்வை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் இல்லாமலில்லை.

அவ்வாறு தென்னிந்தியக் கொள்கை வகுக்கப்படும் சூழலில், தமிழ்நாட்டுக்கு என்று அங்குள்ள அரசியல் சக்திகள் தமிழ்த்தேசியக் கொள்கையை வடிவமைக்க வேண்டும். அதற்கு வடக்குக் கிழக்கில் தமிழ்த்தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும் காலாவதியாகிவிட்டதால், புதிய மாற்றுச் சிந்தனைகளை புதிய இளம் சந்ததி வளா்த்துக் கொள்ள வேண்டிய காலம் கணிந்துள்ளது

தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும் காலாவதியாகிவிட்டதால், மேற்படி புதிய மாற்றுச் சிந்தனைகளை புதிய இளம் சந்ததி வளா்த்துக் கொள்ள வேண்டிய காலம் கணிந்துள்ளது.

வெளிச் சக்திகள்தான் தனது ஆட்சியைக் கவிழ்த்ததாக கோட்டாபய ராஜபக்சவும் கூறியிருந்தார். இம்ரான்கான் அமெரிக்காவை நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.

ஆகவே சில தெற்காசிய நாடுகள் வெளிச் சக்திகளினால் கையாளப்படு வருகின்றன என்பது பட்டவர்த்தனம்.

ஆனால் அரசியல் விடுதலை கோரி நிற்கும் அரசற்ற ஈழத்தமிழ்ச் சமூகம், சுயமரியாதையோடு வாழக்கூடிய ஏற்பாடுகளையும், எந்த ஒரு வெளிச் சக்கதிகளையும் கையாளக்கூடிய புவிசார் அரசியல் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலமிது.

குறிப்பாகத் ஈழத்தமிழ் புதிய இளம் சந்ததிக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் புதிய சந்ததிக்கும் இப் பொறுப்பு அதிகமாகவே உள்ளது என்பதை தெற்காசியாவை நோக்கிய ஏட்டிக்குப் போட்டியான அமெரிக்க- இந்தியக் காய்நகர்த்தல்கள் படிப்பினைகளாக அமைகின்றன.