இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி

அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்ழுழ்கிக் கப்பல் வழங்கும் அமெரிக்கத் திட்டத்திற்கு இந்தியா அதிருப்தி
பதிப்பு: 2023 மார்ச் 19 06:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 26 09:36
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#us
#india
இலங்கைத்தீவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களும், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானைக் கைது செய்வதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதன் பின்னணியில் புவிசார் அரசியல் - பொருளாதாரக் காரணிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. சீனச் சார்புடைய இம்ரான்கானைக் கைது செய்ய பாகிஸ்தான் பொலிஸார் திட்டமிட்டதால் எழுந்த போராட்டங்கள், வன்முறைகள் போன்றவற்றுக்கு மத்தியிலேதான் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் புளோமி (Donald Blome) நான்கு தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். ஏனெனில் இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. ஆதரவுப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
 
இலங்கைத்தீவில் அமெரிக்கச்சார்பு ஆட்சி மாற்றங்களுக்கு ஒத்துழைப்பதைத் தவிர்த்து, ஈழத்தமிழர் அரசியல் விடுதலை உள்ளிட்ட இலங்கைத்தீவு குறித்த இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சமகாலப் புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணி இந்தியாவுக்கு உணர்த்தி நிற்கின்றது

இம்ரான்கானைக் கைது செய்ய பொலிஸார் அவருடைய இல்லத்தைச் சூழ்திருந்தபோது, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் பொலிஸாரின் அடக்குமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ருடே என்ற ஆங்கில நாளிதழ் புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. இம்ரான்கானுக்கு ஆதரவான போராட்டங்களின் பின்னால் சீனா நிற்பதாக பிரதமர் ஷெகிப்பாஷ் ஷெறீப்பின் (Shehbaz Sharif) பாகிஸ்தான் லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இக் குற்றச்சாட்டை போராட்டக்கார்கள் மறுத்திருக்கின்றனர்.

இலங்கையில் ரணில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் பின்னால் இடதுசாரிகள் இயங்குவது பகிரங்கம். ஆனால் எந்த வெளிச் சக்தி பின்னணியில் என்பதுதான் கேள்வி.

அமெரிக்காவில் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு யோ பைடனின் இடதுசாரிக் கட்சிதான் காரணம் என்று டொனால்ட் ட்ரம் அப்போது கூறியிருந்தார். அமெரிக்காவின் ஏனைய இடதுசாரி அமைப்புகள் மீதும் ட்ரம் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் யோ பைடனின் ஜனநாயக் கட்சியை இடதுசாரித் தன்மை கொண்ட கட்சியாகப் பார்க்க முடியாது. இருந்தாலும் தூய அமெரிக்கவாதத்தை டொனால்ட் ட்ரம் முன்வைப்பதால் யோ பைடனின் ஜனநாயக் கட்சி அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து, அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றுள்ள குடியேற்றவாசிகளையும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.

ஆகவே இடதுசாரித் தன்மை வெளிப்பட்டாலும் ட்ரம்பின் அமெரிக்கத் தேசியவாதக் கொள்கையின் சாயலோடுதான் யோ பைடனின் ஜனநாயக் கட்சியும் செயற்படுகின்றது என்பதே உண்மை.

இதன் பின்புலத்தில் ரணிலுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களுக்கு யோ பைடன் நிர்வாகம் அல்லது அமெரிக்கத் தேசியவாதத் தன்மை கொண்ட இடதுசாரி அமைப்புகள் ஆதரவு வழங்குகின்றதா என்ற சந்தேகிக்கங்களை முற்றாக நிராகரிக்க முடியாது.

ஏனெனில் ஜே.வி.பி, சோசலிச முன்னிலைக் கட்சி உட்பட இலங்கைத்தீவில் உள்ள சிங்கள இடதுசாரிகள், பௌத்த தேசியவாதச் சிந்தனையோடு இயங்குவதை அமெரிக்க இடதுசாரிகள் நன்கு அறிந்திருப்பர்.

2022 ஏப்ரலில் தனது அரசாங்கம் அமெரிக்கச் சதியினால் கவிழ்க்கப்பட்டதாக இம்ரான்கான் வெளிப்படையாக அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியிருந்தார். இலங்கைத்தீவில் 2022 யூலை மாதம் கோட்டாபாய ராஜபக்ச பதவி கவிழ்க்கப்பட்டன் பின்னணியிலும் வெளிச் சக்திகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனாலும் இம்ரான்கான் போன்று எந்த நாடு என்று பெயர் குறிப்பிட்டு கோட்டாபய குற்றம் சுமத்தவில்லை.

2015 இல் தனது ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் இந்தியாதான் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே கூறியிருந்தார். அமெரிக்காவும் பின்னணி என்று மகிந்தவுக்கு விசுவாசமான மூத்த அரசியல்வாதிகள் சிலரும் அன்று வெளிப்படுத்தியிருந்தனர்.

கோட்டா பதவி விலகிய பின்னர் 2022 யூலையில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில், மேற்குலகச் சார்புடையவர் என்ற கருத்து இருந்தது. ஆனால் சீனச் சார்புடையவர் என்பதற்கான அரசியல் அணுகுமுறையும் ரணிலிடம் வெளிப்படுகின்றது.

2015 இல் பிரதமராக இருந்தபோது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தொன்நூற்று ஒன்பது வருட குத்தகைக்குச் சீனாவுக்கு வழங்கியவரும் இந்த ரணில்தான்.

அமெரிக்க சீன அரசுகளுடன் சமாந்தரமான உறவைப் பேண வேண்டும் என்று 2015 இல் ரணில் பிரதமராக இருந்தபோது பகிரங்கமாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுமிருந்தார்.

இந்தியாவுடன் மாத்திரமல்ல அமெரிக்க - சின அரசுகளுடன் சமநிலையில் உறவைப் பேண வேண்டுமென்ற கருத்துக்களை தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராகப் பதவி வகிக்கும் ரணிலின் நெருங்கிய நண்பரான மிலிந்த மொறகொட பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் சீனாவின் செயற்பாட்டைக் கண்டித்து உரையாற்றிய போது குறுக்கிட்ட சஜித் பிஜரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, சீனாவை இலங்கை பகைக்க முடியாது என்றார். சாணக்கியனுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

எனவே இந்தியாவை விட அமெரிக்க – சீன வல்லரசுகள், சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தேவை என்பதும், அதற்கேற்ப ஆட்சி மாற்றங்களை இந்த இரு நாடுகளும் இலங்கை அரசியல் சூழலுக்கு ஏற்ப தமக்கு வசதியான தென் இலங்கைச் சக்திகள் மூலம் இயக்கி வருவதையும் அறிய முடிகின்றது.

இதனடிப்படையில் தற்போது இலங்கைத்தீவில் நடைபெறும் ரணிலுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இடதுசாரிகளைப் பயன்படுத்தும் வெளிச்சக்தி யார் என்பதை தற்போதைய கொழும்பு அரசியல் சூழலுக்கு ஏற்ப ஊகிக்க முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். வழமையாக அமெரிக்க - இந்திய தூதுவர்களைத் திட்டித் தீர்க்கும் இந்த இடதுசாரிகள், இம்முறை தூதுவரின் அறிக்கைக்கு எதிர்க் கருத்துக்கள் வெளியிடவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபடும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று. ஆகவே பிரதான வலதுசாரி எதிர்க்கட்சிகள் பாரியளவில் போராட்டங்களில் ஈடுபடாமல் இடதுசாரிக் கட்சிகள், தொழிற் சங்கங்கள் மூலமாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவை மாத்திரம் வழங்கிக் கொண்டு பார்வையாளராக இருப்பதன் பின்னணி குறித்தும் சந்தேங்கள் இல்லாமலில்லை.

2022 ஏப்ரலில் கோட்டாவுக்கு எதிராகச் சோசலிச முன்னிலைக் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் மற்றும் சில பொது அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தபோதும், வலதுசாரி எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை மாத்திரம் வழங்கி ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருந்தன.

இப் பின்புலத்தில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனச் செல்வாக்குகளைக் கட்டுப்படுத்தித் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்க - இந்திய அரசுகள் வகுக்கும் வியூகங்களில் இலங்கைத்தீவு முக்கியமான வகிபாகத்தில் இருப்பது புரிகிறது.

அதேநேரம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு வியூகம் என்பது, ரசிய - உக்ரெயன் போர் விவகாரத்தில் இந்தியா தம்மோடு நிற்பதற்கான கடும் அழுத்தம் கொடுக்கும் உத்தி.

அத்துடன் உக்ரெயன் போர் தீவிரமடையும் நிலையிலும், பாகிஸ்தான் - இலங்கை ஆகிய நாடுகளில் தொடராக இடம்பெற்று வரும் போராட்டங்களின் பின்னணியிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்கத் திட்டமிட்டுள்ள உத்தி பாரிய இராணுவ வியூகமாகும்.

அந்த வியூகத்துக்குள் இந்தியாவையும் தம் பக்கம் இழுக்கும் அமெரிக்க அணுகுமுறை பிரதானமாகத் தெரிகிறது. ஏனெனில் உக்ரெய்ன் போரில் இந்தியா, ரசிவுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதிப்பு. இதனை அமெரிக்கா உணருகின்றது.

உக்ரெயன் போர் தீவிரமடையும் நிலையிலும், பாகிஸ்தான் - இலங்கை ஆகிய நாடுகளில் தொடராக இடம்பெற்று வரும் போராட்டங்களின் பின்னணியிலும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்கத் திட்டமிட்டுள்ள உத்தி பாரிய இராணுவ வியூகமாகும்

அதேபோன்று பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு ஆதரவான போராட்டங்களைத் தூண்டி மீண்டும் சீன ஆதரவு ஆட்சியை உருவாக்க சீனாவும் வியூகங்களை வகுத்து வருகின்றமை பட்டவர்த்தனம்.

இப் பின்புலத்திலேதான் அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவை உள்ளடக்கிய அக்கியூஸ் ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்துகொள்ள வேண்டுமென பிரித்தானியா கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் புவிசார் அரசியல் - பொருளாதார நெருக்கடிச் சூழலில் இந்தியா இணைவது சாத்தியமற்றதாகத் தோன்றினால், அது 'கடுமையான நடவடிக்கையாக' இருக்கும் என்று நரேந்திரமோடிக்கு ஆதரவான என்.டி.ரீவி நியூஸ் விமர்சித்துள்ளது. ஆனால் மோடி அரசு இது பற்றி அதிகாரபூர்வமாகக் கருத்துக் கூறவில்லை.

இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்காக 2017 இல் உருவான குவாட் என்ற இராணுவக் கூட்டணியில் அமெரிக்க, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்திருக்கும் நிலையில், அக்கியூஸ் என்ற பாதுகாப்புக் கூட்டணியும் 2021 செப்ரெம்பரில் உருவாக்கப்பட்டுத் தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியாவுக்கு வழங்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் தவிர்த்துக் கைச்சாத்திடப்பட்ட அக்கியூஸ் ஒப்பந்தம் குறித்து இந்தியா ஆரம்பம் முதல் அதிருப்பதியை வெளியிட்டு வருகின்றது. பிரானஸ் பகிரங்கமாக எதிர்த்துள்ளது.

அக்கியூஸ் என்ற இந்தோ - பசுபிக் பாதுகாப்புக் கூட்டணி, குவாட் அமைப்புக்குச் சம்மந்தமானது அல்ல என்று இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்திருந்திருந்தார்.

இந்தியாவின் கவனத்தை அக்கியூஸ் என்ற பாதுகாப்புக் கூட்டணி சிதைத்துள்ளதாக 2021 செப்ரெம்பரில் ஒப்பந்தம் கைச்சாத்தானபோது சிஎப்ஆர்.ஓர்க் (cfr.org) என்ற ஆங்கில செய்தித் தளத்திற்கு ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா கூறியிருந்தார்.

அக்கியூஸ் கூட்டணியில் இந்தியா இணைந்தால் ரசியா என்ற நம்பகமான கூட்டாளியின் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று என்.டி.ரீவி உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் விமர்சித்திருந்தன.

2021 ஒக்ரோபர் பதினொராம் திகதி கைச்சாத்திடப்பட்ட அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த மாதம் பதின் நான்காம் திகதி செவ்வாய்க்கிழமை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ நகரில் பிரிட்டன், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் இணைந்து யோ பைடன், அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா, அரசியல் ரீதியாக ஆதரித்தாலும், புதுடில்லி அந்த ஒப்பந்தத்தில் சேர வாய்ப்பில்லை என்றும் இந்தியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுவதாகவும் இந்தியப் பாதுகாப்புத் தரப்புகளை மேற்கோள்காட்டி இந்தியன்ரீவி நியூஸ் (indiatvnews) செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரெயன் போரினால் சர்வதேச தடைகள் மற்றும் அழுத்தங்களை ரசியா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு நீர்ழுழ்கிக் கப்பல்கள் வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

ஆனால் அஸ்திரேலிய கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இயக்குவதை இந்தியா விரும்பவில்லை என்று த இந்து ஆங்கிலச் செய்தித் தளம் (thehindu.com) கூறுகின்றது.

ஆனால் இந்தோனேஷியா பகிரங்கமாக எதிர்த்தமை போன்று எதிர்ப்பு வெளியிடாமல், இந்தியா பார்வையாளராக மாத்திரம் உள்ளது. அதேநேரம் அக்கியூஸ் ஒப்பந்தம் மூலமான அவுஸ்திரேலிய அணுசக்தி நீர்முழு்கிக் கப்பல் திட்டத்தை ஜப்பான் ஆதரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு வியூகம் என்பது, ரசிய - உக்ரெயன் போர் விவகாரத்தில் இந்தியா தம்மோடு நிற்பதற்கான கடும் அழுத்தம் கொடுக்கும் உத்தி

ஆகவே அக்கியூஸ் ஒப்பந்தத்துக்கு எதிரான கருத்துடைய பிரான்ஸ் அரசுடன் பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேணி அதன் மூலம் பிரான்ஸ் ஆதரவு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று இந்தோ – பசுபிக் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தியாவுக்குத் தற்போது அவசியமாகவுள்ள அரசியல் வியூகமாகும்.

அதேபோன்று இலங்கைத்தீவில் அமெரிக்கச்சார்பு ஆட்சி மாற்றங்களுக்கு ஒத்துழைப்பதைத் தவிர்த்து, ஈழத்தமிழர் அரசியல் விடுதலை உள்ளிட்ட இலங்கைத்தீவு குறித்த இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சமகாலப் புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணி இந்தியாவுக்கு உணர்த்தி நிற்கின்றது.

இத் தந்திரோபாயத்தின் மூலமே இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். பிராந்தியச் செல்வாக்கும் உயரும்.

இந்தோ பசிபிக் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி பிரான்ஸ் - இந்தியா ஒருங்கிணைந்து நேர்மறையான பங்களிப்பை வழங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறினார் என்று மீடியான் செய்தித்தளம் (mediyaan.com) செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி இருநூற்று ஐம்பது பயணிகள் விமானத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட பின்னர் உரை நிகழ்த்தியபோதே மோடி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

2011 மே மாதம் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக பிரான்ஸ் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தமையும் இங்கே கவனிக்கத் தக்கது.