பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.
அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.
இந்தக் குறிவைப்பில் ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, சில ஸ்கண்டிநேவிய நாடுகள் ஆகியவற்றில் ஒரு வலைப்பின்னலாக அந்தந்த நாடுகளின் அரச உதவிகளோடு இயங்கும் சில அமைப்புகள், குறிப்பாக சுவிற்சர்லாந்து நாட்டின் தூதரக அனுசரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை.
பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன.
இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது.
இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.
இந்த வகையில், இரண்டு கேள்விகள் இங்கு முக்கியமானவை.
2015 இல் நடந்தது என்ன, 2025 இல் நடக்கப் போவது என்ன என்ற கேள்விகளே அவை.
2015 இல் நடந்தது என்ன?
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 30/1 தீர்மானம் ஒக்ரோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இலங்கையில் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானமாக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானம் ஒரு புறம் நிறைவேற, மறுபுறம் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சில அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துச் செயற்படுவது என்றும், இன்னொரு புறத்தில் அமெரிக்க இராணுவத் தரப்போடு இலங்கை சில முக்கியமான உடன்படிக்கைகளை மேற்கொள்வது என்றும் திரைமறைவிலான உடன்பாடுகளோடு, மங்கள சமரவீரவுடன் சில புலம்பெயர்த் தமிழ்த் தரப்புகளையும் இணைத்து சமாந்தரமான நகர்வுகள் தொடுக்கப்பட்டிருந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.
ஆனால், இவற்றை ஆழமாகக் கிரகிக்கும் தன்மை பெருமளவுக்கு தமிழர் தரப்புகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.
ஏதோ மேற்குலகம் ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்துவிடும் என்ற மாயை பரவலாக தமிழர் தரப்பைப் பல முனைகளிலும் பீடித்திருந்தது.
இன அழிப்புப் போரைக் கடந்து ஆறு ஆண்டுகள் மாத்திரமே புரண்டோடியிருந்தன.
இருப்பினும், இன அழிப்புக்கான சர்வதேச நீதியை ஈழத்தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கோரத் தவறியிருந்தமையால், மாகாணசபைகளின் மக்களாணையைப் பயன்படுத்தியாவது அதைச் சாதிக்கலாமா என்பதாக மக்கள் தளத்தில் இயங்கிய அமைப்புகளதும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிலரதும் சிந்தனை இருந்தது.
குறிப்பாக, இது தொடர்பில் வட மாகாணசபை நோக்கி பல முனைகளில் இருந்து கருத்துருவாக்கம் ஏற்படலாயிற்று.
இன அழிப்பு என்ற பிரதான குற்றம் குறித்த சர்வதேச நீதியின் தேவை பற்றி மாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன் போன்றோர் தீவிரமாகக் குரல் எழுப்பிவந்தனர்.
ஆரம்பத்தில், அவர்களின் குரல் வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை.
இருப்பினும் விரைவில் அவரே அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்து நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.
விளைவாக, கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட 2015 ஜனவரிக்கும் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறவிருந்த அதே ஆண்டு ஒக்ரோபர் மாதத்திற்கும் இடையில், பெப்ரவரி மாதத்திலேயே விக்னேஸ்வரன் தலைமையில் இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரும் தீர்மானம் மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேறியது.
குறித்த தீர்மானத்தை இறுதிப்படுத்துவதில் அப்போது விக்னேஸ்வரனுக்கு ஆலோசகராகச் செயற்பட்ட நிமலன் கார்த்திகேயன் கனதியான பங்கை ஆற்றியிருந்தார்.
அவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் பெரும் போரையே தொடக்கியிருந்தார்.
ஒரு வகையில் சிவாஜிலிங்கத்தின் இடைவிடாத நகர்வுக்கு எதிராக சுமந்திரன் தொடக்கிய போரினால் ஏற்பட்ட எதிர்வினையாகவே விக்னேஸ்வரனும் நிமலனும் இந்தத் தீர்மானத்தைத் தமது கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டது எனலாம்.
இது உள்ளார்ந்த நிலை. வெளியில் நடந்தது என்ன?
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலரின் அயராத முயற்சியால் இந்தத் தீர்மானம் குறித்த அழுத்தம் வட மாகாண சபைக்குள் பாய்ச்சப்பட்டிருப்பதாக ஐரோப்பாவில் இருந்து இயங்கும் சில ஆழ்நிலைத் (Deep State) தரப்புகள் தகவல்களைத் திரட்டிக் கணிப்பீடுகளை மேற்கொண்டன.
ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, ஸ்கண்டிநேவிய நாடுகள் ஆகியவற்றில் இருந்து சூழ்ச்சித்தனமாக இயங்கும் ஆழ்நிலைத் தரப்புகளே இவை.
இவற்றுள் சில மேற்கத்தைய தன்னார்வ நிறுவனங்கள், சில பல்கலைக் கழகங்கள், சிலர் வெளிநாட்டு அமைச்சுகள் மற்றும் அபிவிருத்தித் திணைக்களங்களில் கடமை புரிந்தோர். இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த கொழும்புத் தூதரகங்களின் அதிகாரிகளும் உள்ளடங்கியதாக இந்த ஆழ்நிலைத் தரப்பு இயங்கியது.
வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அப்போது தமிழ் நட்டில் முதலைம்ச்சராக இருந்த மறைந்த செல்வி ஜெயலலிதா அவரகளின் உறுதியான நிலைப்பாட்டுக்குப் பலம் சேர்த்தது.
அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2013 இல் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து கருத்துத் தாக்கம் செலுத்தியிருந்த போதும், 2015 இல் ஈழத்தமிழர் நிலைப்பாட்டுக்கு முரணாக அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதை நேரடியாகவே ஜெயலலிதா சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஈழத்தமிழர் சார்பான பலச் சமநிலையை 2015 இல் தமிழக அரசு சரவதேச மட்டத்தில் உயர்த்தியிருந்தது.
விக்னேஸ்வரன் இன அழிப்புத் தீர்மானத்தை 2015 பெப்ரவரியில் கொண்டுவந்திருந்தாலும், அதே ஆண்டு ஒக்டோபரில் ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதையும் ஆதரித்தார். ஆனால், ஜெயலலிதா அம்மையார் அவ்வாறு விக்னேஸ்வரனைப்போல இரட்டைப் பேச்சுப் பேசவில்லை. தெளிவாக, அந்தத் தீர்மானத்தைக் கண்டித்தார் என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது.
இன அழிப்புக்கு நீதி கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தமை மட்டுமல்ல, இலங்கை அரசையும் அதற்குப் பின்னாலிருந்த சர்வதேச ஆழ்நிலைத் தரப்புகளுக்கும் சிக்கலாக வேறொரு விடயமும் அப்போது துருத்திக்கொண்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தோடு வட இந்திய பொருளாதார நிறுவனங்களிற் சிலவற்றையும் இணைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்க வடக்கு மாகாணத்துக்கு பெரும் அபிவிருத்தித்திட்டங்கள் என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்குக் குந்தகமான சில திட்டங்களை கொண்டு வர முயற்சித்தார். அவற்றின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக அவற்றை மறுதலித்திருந்தார்.
இதனால் ஆழ்நிலைத் தரப்புகளின் வில்லங்கம் இரட்டிப்பாகியது. திரைமறைவில் இரகசியமாகச் சில காய்நகர்த்தல்களை அவை மேற்கொண்டன.
விளைவாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதிகோரும் தீர்மானத்தை நிறைவேற்றிய நீதியரசர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது நோக்கி இவர்களின் கூட்டு நகர்வு 2017 ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.
இதன் விளைவாக மிகுந்த நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் ஓர் இளைஞர் படை முதலமைச்சருக்கு ஆதரவாகத் திரண்டதும், மக்கள் மத்தியில் உருவாகிய கருத்துருவாக்கத்தின் விளைவாக அவருக்கு எதிரான சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.
2025 இல் நடக்கவிருப்பது என்ன?
மேற்குறித்த நிறுவனங்கள் சமாந்தரமான பல நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளுகின்றன.
இவற்றில் ஒன்று இமாலயப் பிரகடனம்.
ஜேர்மனி, பின்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் இயங்கும் வேறுவேறுபட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இமாலயப் பிரகடனத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தின் கருத்துருவாக்கத்துக்கான வலையமைப்பின் பிரதான செயலகம் பின்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கு ஆதரவு வழங்குகிறது.
இமாலயப் பிரகடனம் பற்றிய பின்வரும் பரப்புரை வீடியோ அதன் நுட்பத்தை வெளிப்படுத்துகிறது:
ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் பேர்க் ஓவ் பௌண்டேசன் என்ற அமைப்பு புலம்பெயர் ஈழத்தமிழர்களை வளைத்துப் போட்டுத் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிப்பது போல அதை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளில் மிகவும் கைதேர்ந்த ஒரு அமைப்பு.
அதில் நீண்டநாட்களாக பணிபுரியும் தமிழ்ப் பெண் ஆய்வாளர் ஒருவரும் இன்னொருவருமாகச் சேர்ந்து Tradition- & Faith-Oriented Insider Mediators (TFIMs) என்ற ஆய்வை 2016 ஆம் ஆண்டில் மேற்கொண்டிருந்தனர்.இந்த ஆய்வில் இலங்கை தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. மியான்மார், தெற்கு தாய்லாந்து, லெபனான், கொலம்பியா, கென்யா, மாலி ஆகிய இடங்களில் மத நிறுவனங்களை எவ்வாறு அமைதிக் கட்டலுக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கான தரவுகளையும் முன்னோடிப் பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு குறித்த கருத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த TFIM கருத்திட்டமே இலங்கை தொடர்பான இமாலயப் பிரகடனமாக 2023 இல் வெளிப்பட்டுள்ளது. இதிலே பேர்க் ஓவ் பௌண்டேசனின் பின்னணி முழுமையாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
காரணம் என்னவெனில், ஏற்கனவே பௌத்த தீவிரவாத தரப்புகளுக்கு குறித்த நிறுவனம் மீது கடுமையான ஐயம் உள்ளமையாகும். அதுமட்டுமல்ல, குறித்த நிறுவனம் கொழும்பில் இயங்கத் தடைவிதிக்கப்பட்டு ஒருகாலத்தில் ராஜபக்ச அரசினால் வெளியேற்றப்பட்டதுமாகும்.
ஆதலால், குறித்த நகர்வுக்கான முகமூடியை சுவிஸ் பீஸ் என்ற அமைப்பு வழங்கி இமாலயப் பிரகடனம் இலங்கைக்குள் நுழைவிக்கப்பட்டது.
தற்போது, வேண்டிய நுழைவு உருவாக்கப்பட்டுவிட்டதால் தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சுவிஸ் தரப்பும் இது குறித்துக் கேள்வியெழுப்பும் தமிழ்ச் செயற்பாட்டளர்களுக்குத் தன்னிலை விளக்கம் அளித்துவருவதாகத் தெரியவருகிறது.
இருந்தபோதும், தமிழ்த் தேசியத் தரப்புகள் விழிப்படைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுவிடலாம் என்றும், இதற்கு விளங்கியோ விளங்காமலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தலைமை காரணமாகிவிடலாம் என்றும் கொழும்பின் தூதரக வட்டாரங்களிலும் மேற்குறித்த ஆழ்நிலைத் தரப்புகளிடமும் பயம் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நடைபெறும் தூதராலய சந்திப்புகள், வெளிநாட்டு விஜயங்கள் ஆகியவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது இது மேலும் தெளிவாகப் புரியும்.
ஆனால், விக்னேஸ்வரன் தனக்கு எதிராக மாகாணசபையில் தோற்றுவிக்கப்பட்ட 'ஆட்சி மாற்ற' முயற்சியை எதிர்கொண்டது போல தமிழரசுக் கட்சிக்குள் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள 'தலைமையைக் கையகப்படுத்தும்' ஆழ்நிலைத் தரப்புகளின் முயற்சியை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் சிறிதரனுக்கும் ஏனையோருக்கும் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி.
ஒருபுறம் இமாலயப் பிரகடனம் என்ற ஒரு முயற்சி, மறுபுறம் ஐ.நா. தீர்மானத்தின் அடுத்த கதி என்ன என்ற கேள்வி. இன்னொரு புறம் தமிழர் தரப்பு தேர்தல் அரசியலில் தானாகக் குட்டிச்சுவராகியுள்ள நிலைமை. இவற்றுக்கிடையில் மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழரசுக் கட்சிக்கு உள்ளே காணப்படும் போட்டிகளுக்குள்ளும் இழுபறிகளுக்குள்ளும் ஏற்கனவே மாகாணசபையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஈடுபட்டவர்கள், குறிப்பாக சி.வீ.கே சிவஞானம் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் இழுத்துவிடப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் வெளிச்சக்திகளின் தேவைக்கு ஏற்ப நேரடியாக இழுத்துவிடப்பட்டுள்ளதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. அவர்களுக்கே இது குறித்த தெளிவு இருப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும், ஆட்டுவிப்போர் வெளிச்சக்திகளால் இயக்கப்படுபவர்களாக இருந்தால், ஆட்டுவிக்கப்படுவோருக்கு முழுவிளக்கமும் இல்லாத நிலையிலேயே ஆட்டுவிக்கப்படுவார்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது.
இதற்குத் தக்க வகையிலேயே வெளிச்சக்திகளின் ஆழ்நிலைத் தரப்புகள் தமது திட்டங்களை நெறிப்படுத்துகின்றன.
ஆழ்நிலைத் தரப்புகளின் சூழ்நிலைக் கைதிகளாக தமிழரசுக் கட்சியின் உட்பூசற் கோமாளிகளிற் பெரும்பாலோர் மாறியுள்ளனர்.
இந்த நிலையைக் கையாள ஈழத்தமிழர்களிடையே வலுவான ஒரு மக்கள் இயக்கம் இல்லாதுள்ளது.
தான்தோன்றித்தனமாக தலைகீழாகச் செயற்பட்டு 'பொதுச்சபை', 'பொதுக்கட்டமைப்பு' ஆகியவை தமது பெயரைக் கெடுத்துள்ளன. இவற்றுக்குள் ஊடுருவியிருந்த ஆழ்நிலைத் தரப்புகளின் 'கையாட்கள்' எவரேனும் இதற்குக் காரணமாயினரா என்பது ஆராயப்படவேண்டிய கேள்வி.
கோட்டாபய ராஜபக்சவை ஓட விட்டுத் துரத்தியவர்கள், அதன் பின் தமக்கு விசுவாசமான அணி ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவர முயன்றபோது அதைத் தனது சந்தர்ப்பவாதத் தந்திரத்தால் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியானார்.
அந்தத் தற்காலிக ஜனாதிபதி ஊடாக மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்குள் தொழிற்படும் உலக வங்கியும் சர்வதேச நாணயநிதியமும் தமக்கேற்ற வகையில் கொழும்பைச் சிக்கவைத்து தமக்குத் தேவையான நாணயக் கயிற்றை அதற்கு மாட்டிவிட்டன.
அடுத்தபடியாக, தமது கடந்தகால அனுபவங்களில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் நிலையான ஓர் அரசாங்கம் தீவில் அமைந்தாற்தான் ஏதோ ஒரு வகையில் தனது பிடிக்குள் இலங்கைத் தீவு இருக்கும் என்று மேற்கின் சில தரப்புகள் கணிப்பிட்டன.
ஜே.வி.பியின் ஆட்சிமாற்றம் தான் இறுதிவழியாக அதைச் சாதிக்க வல்லது என்ற நடைமுறை முடிவுக்கு வந்ததன் விளைவாக இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வி பல மட்டங்களில் தொக்கு நிற்கும் கேள்வியாகியுள்ளது.
ஆகவே, எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் மாத மனித உரிமைப் பேரவையில் வாய்மூல அறிக்கை வெளியாகவுள்ளதை ஒட்டி, இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.
அடுத்ததாக, ஒக்ரோபர் மாத அமர்வில் முழுமையான எழுத்துமூல அறிக்கையிடலும், அடுத்த தீர்மானம் எவ்வாறு அமையவேண்டும் என்ற முக்கிய படிநிலையை எதிர்கொள்ளும் போது மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படும்.
இப்படியாக மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறும் கதை தொடரவுள்ளது.
2015 இல் நடந்த அதே கதை மீண்டும் அரங்கேறும் 2025 ஆம் ஆண்டுச் சூழலில் மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் பற்றி ஈழத்தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.
மாறாக, அநுர அரசு சீனாவுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்துவிடும் என்றும், இதனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கலான மேற்குலகம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இயங்க ஆரம்பிக்கும் என்றும் தப்புக்கணக்குப் போட்டுக்கொண்டிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.
இதற்காகத் தான் சிறிதரன் போன்றோரை கனடாவுக்கு அழைத்தனர் என்றெல்லாம் மாயைகளைக் கருத்துருவாக்கிகள் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்டு மக்களைத் தவறான புரிதலுக்குள் இட்டுச் செல்வது கற்றுக்குட்டித்தனமானது.
ஆகவே, விஞ்ஞானபூர்வமாக சர்வதேச அரசியல் எவ்வாறு ஈழத்தமிழர்களைக் குறிவைத்துள்ளது என்பது தொடர்பில் ஆழமான விழிப்புணர்வு அவசரமாகத் தேவைப்படுகிறது.
தாம் கட்டவிழ்த்து உருவாக்கிய மாயைகளைக் காலப்போக்கில் தாமே முழுமையாக நம்பி ஏமாரும் கட்டமைக்கப்பட்ட கனவுகளில் தமிழ்த் தேசியம் இனியும் பயணிக்கக் கூடாது.
இவ்வாறான மாயைகளுக்குள்ளும் அரசியல் மூடத்தனத்துக்குள்ளும் ஒட்டுமொத்த சமூகமும் மாட்டிக்கொண்டிருக்கும்போது 'ஊசி' விளைவுகளே சமூகத்துக்கு ஏற்படும்.
பின்னர் அதையும் நகைச்சுவை அவதாரமாகச் சித்தரிக்கும் கருத்துருவாக்கமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழர் தரப்பு செய்யவேண்டியது என்ன?
தமிழரசுக் கட்சியின் தலைமையைத் தவறான ஆழ்நிலைத் தரப்புகளின் கூலிகளும் கோமாளிகளும் கையகப்படுத்தாது பார்க்கவேண்டியது ஒருபுறம் நடைபெறவேண்டும்.
அதேவேளை சிறிதரன் போன்றோர் தம்மைச் சுற்றிப் போடப்பட்டுள்ள பொறிக்குள் இருந்து தப்புவதற்காக தவறான தரப்புகளுடன் சமரசம் செய்துகொள்ளாது ஒட்டுமொத்தத் தேசிய இனத்தின் விடுதலை அரசியலுக்கான நிலைப்பாடுகளுக்காகச் செயற்படும் நிலைக்கு பரந்துபட்ட மக்கள் சமூகத்தால் நிர்ப்பந்திக்கப்படவேண்டும்.
ஒரு பாடசாலை அதிபராகத் தனது கடந்த காலத்தில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கையாண்டது போல ஈழத் தமிழர் தேசிய அரசியலையும் தான் கையாண்டுவிடலாம் என்று சிறிதரன் சிந்தித்தால் அதுவே அவரின் நிரந்தர வீழ்ச்சிக்கான 'அக்கீலீஸ் ஹீல்' ஆகிவிடும்.
இவற்றுக்கு அப்பால், வடக்கு-கிழக்கில் ஈழத் தமிழர்களினதும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களதும் மக்களாணை சுயநிர்ணய உரிமை கொண்ட கூட்டாட்சிக் கோரிக்கைக்கே உள்ளது என்ற ஒன்றிணைந்த நிலைப்பாடு சர்வதேச ஆழ்நிலைத் தரப்புகளுக்கு ஐயம் திரிபற நிறுவப்பட்டு இடித்துரைக்கப்படவேண்டும்.
இல்லாவிடின், மேலும் நீர்த்துப்போகும் ஜெனீவாத் தீர்மானம் என்ற தலைவிதியை எதிர்கொள்ளவேண்டிவரும்.
புவிசார் அரசியலை எதிர்கொள்ளத் தேவையான வாய்ப்பாடு
'வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை' என்ற கணக்காக சீனா பக்கம் இலங்கை போனால் அமெரிக்கா ஈழத்தமிழர் பக்கம் வரும் என்று கணக்குப் போடுவதிலும், அல்லது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படும் புவிசார் அரசியல் போட்டியில் ஈழத்தமிழர் விடயத்தை இந்தியா கையில் எடுக்கும் என்று கணக்குப் போடுவதிலும் கனவுக் கோட்டைகளைக் கட்டுவது அடிப்படையில் தவறானது.
அகமது ஹூசைன் அல்-சாரா எனும் பயங்கரவாத அல்-கைடா அமைப்போடு தொடர்புபட்ட பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருகிறது.
சீனாவின் பிரமாண்டமான புவிசார் அபிவிருத்தித் திட்டமான 'பெல்ட் அன்ட் றோட்' முனனெடுப்பு மத்திய கிழக்கில் முடக்கப்பட பயங்கரவாதிகளோடு கைகுலுக்குகிறது அமெரிக்கா.
இவ்வாறு மத்திய கிழக்கில் பயங்கரவாதிகளோடு கூட்டுவைத்து ஆட்சி மாற்றம் செய்யும் அமெரிக்காவுக்கு இலங்கையில் ஜே.வி.பியோடு கூட்டுவைப்பதொன்றும் வில்லங்கமான விடயமே அல்ல.
இதை முதலில் சீனப் பூச்சாண்டிக் கதை அளப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இவர்களுக்கு மேலும் கசப்பான கதை என்னவென்றால், இந்தியா ரசியாவுடனும், ரசியா ஊடாகச் சீனாவுடனும் நெருக்கமான இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றிருக்கிறது என்பதாகும்.
அதாவது, நண்பர்களோ எதிரிகளோ அல்ல நலன்களே நிரந்தரமானவை என்ற உண்மைக்கு இந்தியா விதிவிலக்கு அல்ல என்பது வெளிப்படுகிறது.
அதேவேளை, சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல, ரசிய, சீன, இந்திய, பிறேசில் மற்றும் தென்னாபிரிக்க பொருளாதார அணியான பிரிக்ஸ் கூட்டுக்கு எதிராகப் பெரும் பொருண்மியப் போரைத் தான் புரியப் போவதாக அமெரிக்க ஜனாதிபதியாகவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்குள், சீனாவின் தென்மேற்கிலுள்ள திபெத் தன்னாட்சிப்பிரதேசத்தில் உலகின் பிரமாண்டமான பிரமபுத்திரா நீர்த்தேக்கத் திட்டத்தை அமைக்கும் திட்டத்தை சீனா அங்கீகரித்துள்ளது நெருக்கமடைந்துள்ள இந்திய-சீன உறவில் மீண்டும் நெருடலை ஏற்படுத்தலாம் என்ற அறிகுறியையும் வெளிப்படுத்துகிறது.இவ்வாறாக, அடிக்கடி தளம்பலடையும் புவிசார் அரசியல், குறிப்பாக பல்துருவ உலக ஒழுங்கின் மாற்றத்தில் தென்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இந்தியாவுக்கு திக் விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவுக்கு புதுதில்லியில் பெருத்த வரவேற்பும் வலைவீச்சும் காத்திருந்தன.
அடுத்ததாக அவர் சீனாவுக்குத் திக்விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தென்னாசியாவில் தனது கேந்திர நிலையை தமது மூலதனமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதும், அனைத்து வல்லாதிக்க சக்திகளும் அதனைக் கருத்தில் கொண்டு ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுப்பதும், அவ்வாறு முண்டுகொடுப்பதில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் தூக்கி வீசப்படுவதை இரு துருவ உலக ஒழுங்கும், அதன் பின்னான ஒரு துருவ உலக ஒழுங்கும் எமக்கு உணர்த்தியுள்ளன.
அமெரிக்காவால் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி வீசப்படும் கூர்திஷ் மக்களின் கதியும் ஈழத்தமிழர்களின் கதியைப் போன்றதே.
இந்தப் பட்டறிவில் இருந்து ஈழத்தமிழர்கள் பாடம் கற்றிருந்தால் மட்டுமே, பல்துருவ உலக ஒழுங்கில் எவ்வாறு எமது நிலைப்பாட்டை நாம் முன்கொண்டு செல்லவேண்டும் என்பதை உணரமுடியும்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் ஓர் ஒன்றிணைந்த பலத்துக்குரிய சக்தியாக ஈழத்தமிழர்கள் தம்மை நிறுவுவதும், அந்தப் பலத்துக்குத் தோளோடு தோள் கொடுக்கும் சக்தியாக தமிழ்நாட்டுடன் ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதும், உலகளாவிப் பரந்துள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பலப்பெருக்கத்தையும் ஒன்றிணைத்து நிறுவும் தன்மையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.
2015 இல் தமிழ் நாட்டின் முதலைச்சர் மேற்கொண்ட நிலைப்பாடு பற்றிய முழுமையான பதிவை இத்தருணத்தில் நோக்குவது வரலாற்றைத் திரும்பிப் பார்க்க உதவும்: