இருதரப்புப் பேச்சுக்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில்

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு

திருகோணமலைத்துறை முகத்தை மைய்யப்படுத்திய ஓகஸ்ட் மாத நிகழ்வுகள்
பதிப்பு: 2018 செப். 13 22:37
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 19:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.
 
பனாம நாட்டுக் கொடியுடன் கொழும்புத் துறை முகத்திற்கு கடந்த 2 ஆம் திகதி சனிக்கிழமை வருகை தந்த எண்ணெய்வள ஆய்வுக் கப்பல், தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் மூன்று கப்பல்கள் சென்ற வெள்ளிக்கிழமை திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தன.

இலங்கை அரசு. ஈழத்தமிழர் என்ற இருதரப்பு பேச்சுக்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேதான் சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லி சென்றிருந்ததையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கிரிச் (Kirch), சுமித்திரா (Sumitra), ஹோறா தேவ் (Cora Divh) என்ற மூன்று போர்க் கப்பல்களே சென்ற ஏழாம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை 13 ஆம் திகதி வரை தங்கி நின்று இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

ஆனால் இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்தமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்களில் செய்திகள் எதுவுமே வெளியாகவில்லை.

இந்தக் கப்பலின் வருகை தொடர்பாக இலங்கை அரசாங்கமோ இலங்கைப் பாதுகாப்பு அமைச்சோ அல்லது கொழும்பில் உள்ள இந்தியத் துாதரகமோ ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லை.

அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று கடந்த யூலை மாதம் இலங்கையின் கடற்படைக்கு பயிற்சியளித்திருந்தது.

அமெரிக்க இலங்கை கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனைப் பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் யூலை மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இடம்பெற்றதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியிருந்தது.

அதனையடுத்து அமெரிக்காவின் யுஎஸ்எஸ் அன்கோர்ஜ் (USS Anchorage) என்ற போர்க் கப்பல் ஒன்று கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்தது.

அதேவேளை, ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.

ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை கையளித்திருந்தார்.

இலங்கையில் அதிகரித்துள்ள சீன அரசின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவர் டிம்பேர்ன் (Tom Burn) தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு கடந்த வாரம் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்தமை இலங்கை மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் என அவதானிகள் கூறுகின்றனர்.

2002ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, ஜப்பான் அரசு, யசூசி அகாசி என்ற இராஜதந்திரியை இலங்கைக்குப் பல தடவைகள் அனுப்பி, சிங்களப் பிரதேசங்களையும் மையப்படுத்திய வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக பேச்சு நடத்தியிருந்தது.

இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்காவின் ஏற்பாட்டில் அன்று யசூசி அகாசி கொழும்புக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கும் வந்து சென்றது போன்று, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், சீன அரசின் இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறிக் கொண்டு, இந்தியாவின் ஆதரவுடன் ஜப்பான் அரசு மூலமாக பூகோள அரசியலை அமெரிக்கா இந்து மா சமுத்திரத்தில் முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நரரேந்தரமோடி அரசாங்கம் பயன்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம்தான் அமெரிக்கா. ஜப்பான். இந்தியா போன்ற நேச நாடுகளுக்கு முக்கியமானதாகவுள்ளது.

பூகோள அரசியலில் தமிழ் நாட்டில் உள்ள சென்னைத் துறைமுகமோ அல்லது இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள துறைமுகமோ இந்த நாடுகளுக்கு முக்கியமானதாக இல்லை.

ஆகவேதான் தமிழக அரசு தமக்கென வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழகத்துக்கென தனியானதொரு வெளியுறவுக் கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை.

இந்தியாவின் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட பாதி சமஸ்டி ஆட்சி முறையில் மாநில அரசுகள் வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாது.

ஆனால் தமிழகத்தில் உள்ள பிரதான இரு அரசியல் கட்சிகளும் பூகோள அரசியலில், ஈழத் தமிழர்களின் கடற்பரப்பு. துறைமுகங்கள் போன்றவற்றை இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுக்கப் பிரத்தியேகமான முறையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை மீதான சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு முல்லைத்தீவில் இருந்து கிழக்குக் கரைவரையான ஈழத் தமிழர்களின் கடலில், அமெரிக்கா மேற்கொள்ளும் எண்ணெய் வள ஆய்வுக்கு சீனாவின் நவீன வசதியுடைய ஆய்வுக் கப்பல் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே வருகின்றோம் என இந்த நாடுகள் கூறுவது பொய்யானது. இது ஈழத் தமிழர்களை மாத்திரமல்ல. தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல்.

எனவேதான் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னரான ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், தமிழக அரசு தமக்கெனத் தனியான வெளியுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையென அவதானிகள் கூறுகின்றனர்.

1990 ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து இந்திய இராணுவம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்ற போது அங்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலைஞர் கருணாநிதி பங்குகொள்ளவில்லை. அந்த நிழ்வுக்கு சர்வதேச முக்கியத்துவம் கொடுக்கப்படவுமில்லை.

அதேவேளை, 2009 ஆம் ஆண்டு மோ மாதத்தின் பின்னரான சூழலில் அதாவது 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஈழத் தமிழர் விவகாரத்தை மையப்படுத்தி சென்னையில் கலைஞர் கருணாநிதி டெசோ மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். தமிழ் ஈழத்தை நோக்கியதாக அந்த மாநாடு அமைந்திருந்தது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவராக அப்போது பதவி வகித்த மாவை சேனாதிராஜா கருணாநிதியைச் சந்தித்து டெசோ மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளதாகவும் உறுதியளித்திருந்தார். அவ்வாறே அந்த மாநாட்டிலும் பங்கொண்டிருந்தார் மாவை சேனாதிராஜா.

ஈழப் போரின் இறுதியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றது தமிழ் இன அழிப்புத்தான் என்று ஜெயலலிதா தமிழக சட்ட சபையில் 2015இல் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தார்.

ஆகவே, இந்த வரலாறுகளின் பின்னணியிலும் முள்ளிவாய்க்கால் ஒன்பது ஆண்டுகால நிறைவிலும் தமிழக அரசு தமது மாநிலத்துக்கான வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய அவசியத்தையே திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிய கடந்த ஓகஸ்ட் மாத நிகழ்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

ஈழத் தமிழர் விவகாரம் என்பது 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அழிவுடன் சம்மந்தப்பட்ட, மஹிந்த ராஜபக்சவுடன் மாத்திரம் தொடர்புடையதல்ல.

அது இலங்கையின் அரசு என்ற பௌத்த பேரினவாதக் கட்டமைப்புடன் சம்மந்தப்பட்டது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசியம் இயக்கம் பிளவுபட்டு 1921ஆம் ஆண்டு தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டது முதல், இன்று வரை தமிழர்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதற்கானது.

அது உரிமைப் போராட்டமும் அல்ல. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.

இந்த நிலையில் நடந்த விடயங்களை மூடி மறைக்க கட்சி வேறுபாடுகள் இன்றி சம்பந்தனையும் அழைத்துக் கொண்டு இலங்கைச் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான குழு சனிக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்தது. இந்தக் குழு, திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளது.

சந்திப்பில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பேசியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் திருகோணமலைத் துறைமுகத்தை பிரதானப்படுத்திய கடந்த ஓகஸ்ட் மாத நிகழ்வுகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயச் சூழலை தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசு. ஈழத் தமிழர் என்ற இருதரப்பு பேச்சுக்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேதான் சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லி சென்றிருந்ததையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச 11ஆம் திகதி புதுடில்லிக்குச் சென்றிருந்தார். அவருடைய பயணம் இந்திய அரசுடனான அவரது உறவுகள் மீண்டும் நெருக்கமடைவதை புலப்படுத்துகின்றது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆட்சியை 2009 ஆம் அண்டு முடிவிற்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் மகிந்த ராஜபக்ச என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.