புதுடில்லியின் இராஜதந்திரம்

இலங்கையின் அரசியலமைப்பை மீறிய சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு- மைத்திரி- ரணிலின் எதிர்வினை என்ன?

அமெரிக்கா, ஜப்பான். இந்தியா ஒரே நேர்கோட்டில் பயணம்
பதிப்பு: 2018 செப். 11 10:42
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 11 12:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி எனவும் அவர் தனது ருவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். புதுடில்லியில் ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்தர மோடியை நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவும் புதுடில்லியில் தங்கியுள்ளார். ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் உரையாற்றுவதற்கான அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார்.
 
2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான அரசியல் சூழலில் இந்தியா குறித்த தனது நிலைப்பாட்டை மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் ஓகஸ்ட் மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்தன.

இந்த நிலையில், நரேந்திர மோடி அரசும் மைத்திரி- ரணில் அரசாங்கம் உள்ளிட்ட சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொள்ளும் இராஜதந்திர உறவுகளில் மாற்றங்களைச் செய்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.

சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள், தமக்கு ஏற்ற பூகோள அரசியல் நகர்வை அரங்கேற்றி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தரப்பின் பலவீனமான அரசியல் செயற்பாடுகளும், இந்த நாடுகளின் இவ்வாறான அரசியல் நகர்வுகளுக்கு வழிசமைத்துள்ளன.

ஜப்பான் போர்க் கப்பல் ஒன்றும் திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த மாத இறுதியில் வந்து சென்றிருந்தது.

கிரிச் (Kirch), சுமித்திரா (Sumitra), ஹோறா தேவ் (Cora Divh) என்ற மூன்று இந்தியப் போர்க் கப்பல்களும் திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழைமை வருகை தந்துள்ளன.

இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்களும் செப்ரெம்பர் 13 ஆம் திகதி வரை தங்கி நின்று இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுமுள்ளன.

ஆகவே, இலங்கை சீனாவுடன் ஏற்படுத்தியுள்ள நெருக்கமான உறவுகள் தமது பூகோள அரசியலுக்கு ஆபத்து என்ற அடிப்படையில் அமெரிக்காவின் ஏற்பாட்டில் ஜப்பான், இந்தியா அகிய நாடுகள் இலங்கை விவகாரத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளதையே இந்த நகர்வுகள் கோடிட்டுக் காண்பிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தப் பயணம் ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, முழு இலங்கைத் தீவின் இறைமைக்கும் பேராபத்து என்பதை சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள மறுப்பதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாதெனத் தெரிந்தும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்று, புதுடில்லியில் வைத்து மஹிந்த ராஜபக்சவைப் பார்த்து சுப்பிரமணியன் சுவாமி எவ்வாறு கூறினார் எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

அடுத்த ஆண்டு முற்பகுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுப்பிரமணியன் சுவாமி அவ்வாறு கூறியுள்ளமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனவே, இந்து மா சமுத்திரத்தில் பூகோள அரசியலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் இலங்கையில் கட்சி அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி அமெரிக்கா, ஜப்பான். இந்தியா போன்ற நாடுகள் அரசியல் நகர்வுகளைச் செய்து வருவதாவே அவதானிகள் கூறுகின்றனர்.

சம்பந்தனை உள்ளிடக்கிய இலங்கை நாடாளுமன்றக்குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்து இலங்கையின் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், இந்து மா சமுத்திரத்தை மையப்படுத்திய பாதுகாப்பு அரசியல் குறித்து பேசியுள்ளனர்.

சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதாக அல்லது தடுப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள், இந்த அரசியல் நகர்வை அரங்கேற்றி வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தரப்பின் பலவீனமான அரசியல் செயற்பாடுகளும், இந்த நாடுகளின் இவ்வாறான அரசியல் நகர்வுகளுக்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளன.